"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள்
உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி! சாலைகள் இருந்தன. கோழி முட்டை
வடிவத்தில்வாகனங்கள் அல்ட்ரா சானிக் வேகத்தில் மிதந்து கொண்டிருந்தன. ஒழுங்கீனமான
அகல உயரங்களில் செம்பழுப்பு நிற கட்டிடங்கள் ஆங்காங்கே தென்பட்டன. போரா என்கிற
அவன் தன்னுடைய கை கால் உடம்பை தனி தனியாக கழட்டி போட்டு இளஞ்சூடான திரவத்தில் ஊற
வைத்து செல்ப் மசாஜ் எடுத்துகொண்டிருந்த அந்த மைக்ரோ வினாடியில் – அவனுக்கான ஏர்
பாக்கெட் தகவல் வந்தது."
அன்பின் பிளாட்டின நண்பர்களே! வணக்கமுங்கோவ்!
நல்லா இருக்கீயளா! நான் இங்கே சுகம்தாங்க!
சித்திரங்களில் நனைந்து எழுவது என்பது நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு கை வந்த கலைதான். ஆனால் சில சமயங்களில் வரைய பட்டுள்ள ஓவியம் பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு. ஆனால் என்றும் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாக நமது மனவெளி இருப்பதால் நாவல்கள் படிக்க கற்பனை வெளி நமதாக அமைந்து மிக உற்சாகத்தை தூண்டும் விதத்தில் இருப்பது என்பது நாவல் உலகில் மட்டுமே சாத்தியம். ஒரு சில நாவல்கள் பல காலம் தாண்டியும் படிக்கும் மனதில் வெவ்வேறு வித வண்ண கலவைகளை குழைத்து வண்ணம் தீட்டுகின்றன. அதுதான் நாவல் உலகின் சிறப்பம்சம். மேலே கண்ட வரிகள் உங்கள் மனதில் தீட்டிய வண்ணத்தை என் மனதில் தீட்டும்போது அது என் மன வானில் வேறு வண்ணமாகதானே அமைந்து கலக்கும்?
என்னடா
இது இவன் ஒருவேளை எழுத்தாளர் ஆகி தொலைத்து விட்டானா என்று பார்க்க வேண்டாம். சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் காமிக்ஸ் பற்றி பல
விதமான கருத்துகள் வெளியானது. அறிவியல் சிந்தனைகள் நிறைந்த எதிர்காலம் தொக்கி
நிற்கும் கதைகளின் வரவேற்பு குறித்து, மற்றும் கதைகளின் பல கோணங்கள் பற்றியும்
நிறைய சிந்தனை மலிந்து கிடக்கின்றன. வெளி நாட்டவர் சிந்தனைகள் எப்போதும்
எதிர்காலம் பற்றியதாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் பழைய காலம் குறித்தும்
காமிக்ஸில் கதைகள் சொல்லியே வருகின்றனர். அதாவது இறந்த காலம், எதிர்காலம் இரண்டு
கோணத்திலும் கதைகள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன.
அப்புறம் இந்த வார பதிவுக்கு உங்களை வருக வருக வருகவென வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்!
மேலே கண்ட வைர வரிகள் கிரைம் நாவல் இதழில்
182 வது வெளியீடாக கடந்த 10/2002 அன்று வெளியிட பட்ட அன்பு அண்ணன் திரு ராஜேஷ்
குமார் அவர்களது சிந்தனை சிகரத்தில் உதித்த “ஒரு கோடி ராத்திரிகள்” என்கிற நாவலின் வரிகள். கதைப் படி ஒரு
வேற்று கிரகத்தில் இருந்து பூமியை பிடிக்க வரும் அயல் கிரக மனிதர்கள் – அவர்களை
தனது ஆறாம் அறிவினால் உணரும் ஒரு பெண் – சிலர் விசித்திரமான முறையில்
பலியாகிறார்கள் – கடைசியில் அந்த கிரகம் குறித்த அனைத்தும் மனோ வசிய நிலையில் அந்த
பெண்ணுக்கு ஏற்றப்பட்ட தகவல் என தெரிய குற்றவாளி சிக்குகிறார். இதை எழுதிய பிரபல
நாவல் ஆசிரியர் திரு ராஜேஷ் குமார் அவர்கள் – கோவை வாசி – தனது மிக சிறந்த கற்பனை
படைப்புகளால் தமிழக உலகை ஆட்டி வைத்திருப்பவர் ஆவார். கின்னஸ் சாதனை நூலில் இடம்
பெற இவரது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களின் அணிவரிசை காத்திருக்கிறது.
ராஜேஷ் குமார் – தமிழ் பத்திரிக்கை உலகில்
தனக்கென ஒரு ராஜ பாட்டையை அமைத்து கொண்டவர். ஆயிரத்து ஐநூறு நாவல்களை நோக்கி
எழுதிகொண்டு இருக்கும் இவரின் இந்த நாவல் கிரைம் நாவல் இதழில் வெளிவரும் 275 வது
நாவல். இவரது வெற்றியின் ரகசியம், இன்றைய விஞ்ஞான யுக மக்கள் எதை தேடுகிறார்கள்
என்று அறிந்து அதை தனது நாவல்களில் எளிமையான வரிகளில் மக்கள் மனதில் நன்கு பதியும்
வண்ணம் எளிய நடையில் தருவதுதான். சுமார் இருபது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல
பத்திரிக்கை குமுதத்தின் சிறப்பு நிருபர் திரு.ரஜத் ஒரு கேள்வி கேட்டார் –வருங்கால
விஞ்ஞான வளர்ச்சியில் எது மக்களிடம் வரவேற்பை பெரும் என்ற கேள்வி அது! அண்ணன்
ராஜேஷ் குமார் அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? விடை காண கீழே போங்க!
அன்பு அண்ணன் ஆசிரியர் அசோகன் அவர்கள். மனம்
நிறைந்த சிரிப்பு என்றும் மாறா முகம் கொண்டு கிரைம் நாவல் உலகை ஆண்டுவரும் அதிரடி
அரசன் அவர். நிறைய ஆலோசனைகள். அறிவுரைகள், அவரது குடும்ப நாவல் பதிப்பில் இருந்து
கிரைம் நாவலில் பதிப்பிப்பார். அண்ணன் ராஜேஷ்குமார் அவர்களிடம் அவ்வப்போது வாங்கி
கட்டிக்கொண்டு நிறைய மாற்றங்களையும், தொடர் சாதனைகளையும் புரிந்து வருகிறார்.
அவருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நான் நேரடியாக பார்க்கவோ பேசவோ முடியா
விட்டாலும் நான் ஒரு கிரைம் கதை தீவிர ரசிகன் என்பதனை இங்கே பதிவிட நினைத்து
அதனால் விளைந்ததே இந்த பதிவு.
ஒரு நாவல் எழுதவே நிறைய அறிவையும் ஆழமான
அனுபவத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். அண்ணன் ராஜேஷ் குமார் அவர்கள் எழுதி
அதுவும் கிரைம் நாவலில் மட்டுமே தொடர்ந்து எழுதி சாதனை படைத்த 275 ஆவது தங்க தாமரை
நாவலே கருப்பு தாமரை மற்றும் எல்லாம் பொய் ஆகிய இரட்டை நாவல்கள்.
ராஜேஷ் குமாரிடம் கேளுங்கள் என்ற பகுதியில்
ரசிகர்கள் கேள்விக்கு அண்ணன் நிறைய ருசிகரமான பதில்கள் சொல்வார்.
உதாரணத்திற்கு ஒரு கேள்வி பதில்
*லஞ்சம் குறைய என்ன செய்ய வேண்டும்?
*கொஞ்சமாய் கொடுக்க வேண்டும்!
இது போன்ற பல சுவாரசியமான பதில்களில் உங்களை
கட்டி போட்டு விடுவார்.
நாவலில் சில பகுதிகள்
-எந்த ஒரு வினாடியிலும் சூரியனை பிரசவிக்க
தயாராக இருந்தது கிழக்கு திசை!
-உடம்பு முழுவதும் தீ பற்றிக்கொண்ட மாதிரியான
ஒரு ஆத்திரம் குபீரென்று பரவ...அவளுடைய கழுத்தை பிடித்தான்.
-மூளைக்குள் நிறைய கரப்பான் பூச்சிகள்
-இருபது அடிக்கு பார்த்தீனிய செடிகள் ஒடிந்து
வழி காட்ட, ஆங்காங்கே உறைந்து போன ரத்த துளிகள்..
விலை ரூபாய் முப்பதில் வெளியாகி பட்டையை
கிளப்பி வரும் இந்த நாவலை வாங்கி நாவல் உலகம் மலர நிறைய பூக்கள் வாசனை வீச
செய்வீர் அன்பான உள்ளங்களே!
ஆமாம் நண்பா! அவர் சொன்ன பதில் “செல்போன்”. உண்மையான அறிவு வளர்ச்சிக்கும் ஆக்க பூர்வ
சிந்தனைகளுக்கும் நம்ம ராஜேஷ் குமார் அவர்கள் எப்போதுமே மிகுந்த இடம் அளித்து
எழுதுவார். எனக்கு நேரடியாக எப்போதுமே பாராட்டி எழுதி பழக்கம் இல்லை. அதற்கான
சூழலும் இல்லை. ஆனால் எனக்கு பிடித்த மிக மிக ஆச்சரியமடைய செய்த கதை மன்னன்
திரு.ராஜேஷ் குமார் அவர்களை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே இதனை
கருதுகிறேன். மீண்டும் வேறு ஒரு நாளில் சிந்திப்போம்.
இனிய கார்த்திகை நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
முக நூல் முகவரி யாரோ ஒரு விசிறி செய்துள்ளார்!
http://www.facebook.com/pages/Writer-Rajesh-Kumar/142649689159833