வியாழன், 14 பிப்ரவரி, 2013

இரத்தக் களத்தில் பதித்த முத்திரை -டெக்ஸ் வில்லர்

                இனிய காமிக்ஸ் காதலர்களே! காதலர் தின நல்வாழ்த்துக்கள்! காதல் மிக்க உங்கள் கனவுகளுக்கு வண்ணங்கள் சேர்க்க நம்மாலான ஒரு சின்ன பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! நண்பர் சௌந்தர் அவர்கள் அதிரடியாக இன்று காதலுக்கு மரியாதை செய்யும் விதத்தில் திருமணம் புரிந்து காதலர் தினத்தை கௌரவத்து இருக்கிறார்! அவரை வாழ்த்திடுவோம்! வாழ்க நண்பா!
லயன் ப்ளாக்கில் திரு விஜயன் அவர்களின் வைரவரிகளில் வாழ்த்துக்கள்!!
"நம் சிவகாசி நண்பரும், காமிக்ஸ் பதிவருமான சௌந்தரின் காமிக்ஸ் காதலைப் பற்றி நாம் அறிவோம் ! ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது !! உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே !!! லக்கி லுக்கும், ஜாலி ஜம்பரும் போல் ; லார்கோவும், சைமனும் போல் ; மாயாவியும், இரும்புக்கரமும் போல் - என்றும் இணை பிரியாது சகல நலன்களோடும் புதுத் தம்பதியினர் வாழ்ந்திட நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகுக !" 

அனைத்து காமிக்ஸ் காதலர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் நண்பா! வாழ்க தலை! 




இந்த புத்தகம் நண்பர் சிபி அவர்களுடைய சேமிப்பில் உள்ள மிக முக்கிய புத்தகமாகும்! படிக்க உதவிய நண்பர்கள் சிபி அவர்களுக்கும், நாகராஜ் சாந்தன் அவர்களுக்கும் நன்றிகள் பல! பக்கங்கள் மிகவும் பழமை வாய்ந்தவையாக இருந்ததால் ஒரு சில பக்கங்கள் மட்டும் உங்கள் காதல் மிகு இதயங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன!
இது லயன் தீபாவளி மலர் ரத்த முத்திரை வெளியீடு -56
இதனுடன் வந்த இணைப்பு கதைகள்
கதை 1.எத்தனுக்கு எத்தன் – இரட்டை வேட்டையர்
ஒரு கைதி வசம் அதி முக்கிய தகவல்கள் இருப்பதால் அவனைக் கடத்தி வர, வேற்று நாட்டில் உள்ள, சிறை சாலைக்குள் அத்து மீறிப் பிரவேசிக்கின்றனர் இரட்டை வேட்டையர். அக்கைதிக்கு தர பணம் கொண்டு சென்று வெளியில் உள்ள வாகனத்தினுள் வைத்து விட்டு பல சிரமங்களுக்கு இடையே சிறையினுள் புகுந்து கைதியை மீட்டுக் கொண்டு வருகின்றனர். நன்றி மறந்த அவனோ பணத்தையும் வாகனத்தையும் பறித்து கொண்டு பறந்து விடுகிறான். வெறுத்து போய் தங்கள் தலைமையகம் திரும்பிடும் இரட்டை வேட்டையர்களை புன்னகை முகத்துடன் எதிர்கொள்கிறார் அவர்களது துறைத் தலைவர். விஷயம் இதுதான்!! அவர்கள் கொண்டு சென்ற பணம் போலி! கைதி வேறோரிடத்தில் பணப்பெட்டியை திறந்து பார்த்து அதிர்வதோடு கதை முற்றுப் பெறுகிறது!  
கதை 2. விசித்திர விடுமுறை – அதிரடிப்படையினர்
விடுப்பிலுள்ள அதிரடிப்படையினர் விடுப்பின்போதும் தங்கள் அதிரடிகளால் அலப்பறை செய்த பின்னர் விடுப்பு முடித்து திரும்புவதாக கதை முடிகிறது.


சோக்கா கழட்டிக்கிறார் பாருங்க!  



சேட்டைதானே ??? 
கதை 3. கெக் தீவு மன்னன் – சிறுவன் பீட்டர்
சிறுவன் பீட்டர் அநாதை இல்லத்தின் கொடுமை தாளாது தவித்து கொண்டு இருக்கையில் அற்புதமானதொரு வாய்ப்பு வருகிறது. அவனது உறவினரது கடல் கோட்டை அவன் பெயருக்கு எழுதப் பட்டதாக வந்துள்ள செய்தியை தெரிந்து கொண்டு தன நண்பர்களுடன் தப்பி அங்கே சென்று விடுகிறான்! அனாதை இல்ல நிர்வாகி ஒரு பேராசை பேய்! அவன் காப்பாளர் என்ற முறையில் இந்த கோட்டையை கைப்பற்ற சாம தான பேத தண்ட முறைகளை பயன்படுத்துகிறான்! காவல் துறைக்கும் சிறுவனின் பாதுகாப்பில் உள்ள அக்கறை அவனது கோட்டை வாழ்வில் சோதனையாக வர எப்படி தனது உரிமையை நிலை நாட்டுகிறான் என்று செல்கிறது கதை!
இனி,
1. இரத்த முத்திரை – டெக்ஸ் வில்லர்
 
   டெக்ஸ் தனது ஆருயிர் தோழர் கார்சனுடன் ஸ்டாக்டன் கோட்டைக்கும் கமான்சே மலை தொடருக்கும் இடையில் பிரயாணம் செய்யும்போது தொலைவில் ஒரு பண்ணை வீடு தாக்குதலுக்கு உள்ளாவதையும் அந்த பண்ணையிலிருந்து வெளியேறும் தந்தை மகன் இருவரும் கயவர்களால் சுட்டு வீழ்த்த படுவதையும் காண்கின்றனர். தடுக்க முயற்சிக்கும்போது இரு சமூக விரோதிகள் சுடப்பட்டு இறக்கிறார்கள். மற்ற விரோதிகள் தப்பி ஓடுகின்றனர். இறந்து போன நால்வரது சடலங்களையும் ஒரு வாகனில் ஏற்றி கார்சன் அருகில் இருக்கும் டெல்மர் நகரை நோக்கி செல்கிறார். வில்லர் முன்னதாக குதிரையில் பயணித்து தகவலை தெரிவிக்க சென்று கொண்டிருக்கையில், கயவர் கூட்டம் அந்த சடலங்கள் மிக முக்கிய தடயங்கள் என்று உணர்ந்து ஜெட் என்பவன் தலைமையில்  மீண்டும் தாக்க முயல்கிறது. முதலில் கார்சன் தாக்கப்படுகிறார். உடனே அவர் தனது குதிரைக்கு தாவுகிறார். வண்டி மெதுவாக செல்லும் என்பது வெளிப்படை. அவரது குதிரை சுடப்படுகிறது. மீண்டும் வண்டிக்கு ஓடி ஏறி கொள்கிறார். சில மைல்கள் தொலைவில் இருந்த டெக்ஸ் திரும்ப வர ஜெட் அவரை எதிர் கொள்கிறான். அவனை தாக்கியதும் அவரது குறி தவறாமல் சுடும் திறனை கண்டு மிரண்டு ஜெட் பின் வாங்க, நாம மட்டும் என்ன இளிச்ச வாயர்களா? என அவனது கூட்டம் தெறித்து ஓடுகிறது.
டெல்மரில் தொல்லை      
ஹம்மர் பண்ணை முதலாளிதான் இதன் பின்னணியில் இருக்கிறார். டெல்மர் நகரின் செரிப்பும் அவரது கைப்பாவை. முதலாளி, இறந்த தனது தொழிலாளிகள் இருவரும் அதற்கு முன்னரே தனது பண்ணையில் இருந்து பணத்தை கொள்ளை அடித்து கொண்டு ஓடி போய்விட்டதாக பொய் புகாரினை ஷெரீப் வசம் கொடுத்து வர ஜெட்டை அனுப்பி வைக்கிறார். “இதுமாதிரி தகிடுதத்தம் செய்யத் தெரியாதவன் சீக்கிரமே அழிந்து போவான் என்பது அவரது பொன்மொழி!! பர்குஸ் மற்றும் அவரது மகனது சடலங்களை கண்டு கொதித்தெழும் மக்களால் விபரீதம் சம்பவிக்கும் முன்னதாக ஜெட் வந்து சேர்கிறான். அவனது கருத்துக்கு ஷெரீப் செவி சாய்ப்பதை கண்ட டெக்ஸ் “என்னிடம் வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவேன் என எச்சரித்து தங்க விடுதிக்கு செல்கிறார். கோபம் கொண்ட ஷெரீப் டெக்ஸ் உடனே அழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஜெட் அந்த ஊரின் லேவாதேவி மன்னன் பிக் பென் பெர்ரி மற்றும் அவரது ஊழியன் ஜிம்முடன் சதி திட்டம் தீட்டுகிறான். அதன்படி ஒற்றைக்கு ஒற்றை போட்டி டெக்ஸ், ஜெட் இடையில் நடக்கும்போது மேலே கூரையில் இருந்து ஜிம் டெக்ஸ்-இ னை சுட்டு கொள்ள வேண்டும். அந்த ஊரில் மைரா என்கிற கணவனை இழந்த பெண்ணொருத்தி வசித்து வருகிறாள். அவளிடம் ஜெட் தகராறு செய்ய டெக்ஸ் குறுக்கிட, மோதல் வெடிக்கிறது. கார்சன், ஜிம் செய்யும் நரித்தனத்தை கண்டு அவனை சுட முயல அவனது துப்பாக்கி தெறித்து விடுகிறது. ஜெட் நேரடியாக மோதியதில் டெக்ஸ் தோட்டா பட்டு கைகள் ஓட்டையாகின்றன.
பள்ளத்தாக்கில் பயங்கரம்   
ஷெரீப் வந்து டெக்ஸ் இருபத்து நாலு மணி நேரத்திற்குள் டெல்மர் நகரை விட்டு வெளியேற வேண்டுமென எச்சரிக்கிறார். டெக்ஸ் விடும் குத்தினை வாங்கி கொண்டு போகிறார். “அவரை தூக்கிகொண்டு உள்ளே போங்க! விழித்து எழுந்ததும் நூறு மைல்களுக்கு அப்பால் சென்று புழுதியை துடைத்துக் கொள்ள சொல்லுங்கள்     
பின்னர் எவரெட் (மைரா) வினை சந்திக்கிறார் டெக்ஸ். தன் கணவர் வைரஸ் காய்ச்சலில் இறந்து விட்டதாகவும் தான்தான் வறுமையின் காரணமாக விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக வதந்தி பரவி விட்டதாகவும் தனது பண்ணையை நிர்வகிக்க முடியாதவாறு ராக் ஹாம்மர் தொந்தரவு செய்து வருவதாகவும் தன் தொழிலாளிகள் அனைவரையும் தன் வசமாக ஈர்த்து கொண்டு விட்டதாகவும் மைரா கூறுகிறாள். டெக்ஸ் அவசர வேலைகளை முடித்து கொண்டு பண்ணைக்கு வருவதாக உறுதி அளித்து பின்பு லேவாதேவி பிக் பென் வீட்டுக்கு சென்று தன்னை குறி வைத்த நபரை குறித்து கேட்கிறார்.
 அவர் கேட்ட விதம் அச்சம் தரும் விதத்தில் இருந்ததால் தான் மாட்டிக் கொண்டு விடுவோமோ என பயந்து ஒரு விசையை அழுத்த டெக்ஸ், கார்சன் நிலவறையில் வீழ்கின்றனர்.
 ஜிம் தன் பங்குக்கு சில குண்டுகளை நிலவறைக்கு அனுப்பி அவர்களது அத்தியாயத்தை முடிக்க முயல்கிறான். டெக்ஸ் பூட்டின் முள் பட்டு விளக்கு அணைந்து விட்டதால் அவனது பார்வையில் படாமல் தப்பி விடுகின்றனர் டெக்ஸ் & கோ.
வெளியேறும் வழி
“உன் மண்டையோடு உறுதியான எக்கினால் ஆனது, இல்லையேல் இந்நேரம் நீ போய் சித்திர குப்தன் எதிரே நின்று கொண்டிருப்பாய் உன் பாவ புண்ணிய வரவு செலவு கணக்கு முடிக்க!! _கார்சன்

எமனுக்கும் பாய்ச்சல்
தப்பிக்க எலிகளை விரட்ட தீப்பந்தம் பயன்படுகிறது. தீச்சுவாலை வலப்பக்கம் சாய்வதால் ( யுக்தி! நண்பர் திரு. ராஜ் முத்து குமார் அவர்களது கவனத்திற்கு) இடப்பக்கம் காற்று வருகிறது என யோசித்து அந்த பக்கம் போகின்றனர். உண்மையில் அது ஒரு பாழடைந்த சுரங்கம். இதனிடையே எவரெட்டை ஒழித்து கட்ட ஒரு படையை ஷெரீப், ஜெட் இருவரும் ராக ஹாம்மர் பண்ணையில் திரட்டுகின்றனர். டெக்ஸ் & கோ பாதாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையை கடக்க ஆனமட்டும் முயன்று பார்த்து விட்டு பின்னர் நீரோட்டத்தின் போக்கிலேயே செல்கின்றனர். 

பாறைகள் இடித்து தள்ள வேதனையுடனே செல்லும் இவர்கள் நீர் வீழ்ச்சி ஒன்றில் சிக்கி திக்கு முக்காடி, தட்டு தடுமாறி வெளியேறும்போது கண்ணில் வெளிச்சம் தென்படுகிறது. வெளிச்சம் வந்த குகை வழியே வெளியேறினால் டெல்மர் நகருக்கு ஒன்றரை மைல் தொலைவில் வந்துள்ளது தெரிகிறது. அங்கே எவரெட் ஓய்வெடுத்து கொண்டு இருக்கிறாள்.
“காக்டஸ் அணை இது! என்னுடைய பண்ணைக்கு செல்லும் பாதையில் இருந்து அரை மைல் விலகி இருக்கிறது- மைரா
பண்ணையில் குடிகார அண்ணன் கடுப்புடன் காத்திருக்கிறான். அவனை டெக்ஸ் புரட்டி எடுத்த பின்னர் ஒரு நிலைக்கு வருகிறான். 
இதனிடையே ராக் ஹாம்மர் தனது திட்டத்தை விவரிக்கிறான்.
“டெல்மருக்கு வடக்கே உள்ள நிலங்களை பிக் பெர்ரி வாங்கிய பின்னர் மொத்தமாக தனியார் இரயில்வே நிறுவனத்திற்கு விற்று விடுவதே திட்டம். அதற்கு உதவ ஹாம்மர் தனது படையினை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்! விற்பனை முடிந்த பின்னர் கணிசமாக ஒரு தொகை தங்களுக்கு வந்து சேரும்.  மெக்ஸிகோவில்   ஒரு பண்ணையை பிக்பென் வாங்கி இருப்பதால் அங்கே தங்கள் சேட்டையை தொடரலாம் என்று சொல்ல கயவர் கும்பல் கூத்தாடுகிறது. பின் கிளம்புகிறது எவரெட் பண்ணையை நோக்கி வெறியுடன், ஷெரீப் உடன் போகிறார்.
மரண இரவு
பெர்ரிக்கு நிலங்களை விற்பனை செய்த நபர்கள் பின்னர் காணாமல் போய் விடுவதை எவரெட் ஊர்ஜிதம் செய்கிறாள். அது பாதாள அறையில் இருந்த எலும்பு கூடுகளின் காரணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பணம் தராமலேயே மரணத்தினை பரிசளித்து இருக்கிறார் பிக்பென். பாவி!!!
“தானும் கூட வருவதாக கார்சன் எவ்வளவோ வேண்டியும், மறுத்து மைராவோடு இருந்து பாதுகாப்பு வழங்குமாறு சொல்லி விட்டு (ஹி ஹி ஹி நம்ம உட்டாலங்கடி கற்பனை!!!) தனியே கிளம்பினார் டெக்ஸ்! சூரியன் மலை வாயினுள் இறங்கி கொண்டிருந்தான்
எவரெட் பண்ணையை அளிக்கும் நோக்கத்துடன் செல்லும் ஷெரீப் குழு நேரடியாக தாக்குதலில் ஈடுபட கார்சனின் தாக்குதலில் பலரை இழக்கின்றனர்!
 
எனவே உள்ளே இருப்பவர்களை வெளியேற்ற பண்ணைக்கு நெருப்பு வைக்கின்றனர். 








இதனிடையில் டெக்ஸ் ஒட்டு கேட்டு எவரெட் பண்ணை தாக்குதலுக்கு உள்ளாவதை அறிந்து நேரடியாக முகமூடியுடன் உள்ளே சென்று ஹாம்மர் மற்றும் ஜெட் இருவரையும் சிறை பிடித்து எவரெட் பண்ணைக்கு கொண்டு வருகிறார். 
முன்னதாக பர்குசின் பண்ணையில் புரிந்த அட்டூழியத்துக்கு பழி வாங்கும் விதமாக ஹாம்மரின் பண்ணையை தீக்கிறையாக்குகிறார் டெக்ஸ்! “அடேய் பணத்தாசை பிடித்த சுயநல பேய்களா! இப்போதே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அங்கே எவரெட் பண்ணையில் இருப்பவர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டு இருந்தால் உங்கள் இருவரையும் உயிரோடு தோலை உரித்து விடுவேன்! ஜாக்கிரதை!
 அவர் கைது செய்து கொண்டு வந்த வாகனை ஹாம்மர் அடியாட்களே தோட்டாக்களால் துளைத்து எடுத்து விடுகின்றனர். அதில் இருந்த ஜெட் & ஹாம்மர் பலியாகின்றனர். “தன் வினை தன்னை சுடுது
நீதிக்கு வெற்றி
எவரெட்டின் அண்ணன் பலியாகி பரலோகம் நோக்கி சென்றிட, ஷெரீப் நரகலோகம் நோக்கி பயணிக்கிறார்! 
தப்பி பிழைக்கும் ஊழியனின் தயவால் நடந்ததை அறிந்து கொள்ளும் பிக்பென் ஜிம்மை கொன்றுவிட்டு மெக்ஸிகோ நோக்கி பயணிக்கிறார்! 





அதற்குள் டெக்ஸ் & கோ வந்து விட வண்டியை வேகமாக திருப்ப வண்டியின் சக்கர அச்சு மார்பில் விழுந்து அழுத்த செத்து மடிகிறார்! மாட்டி இருந்தால் பாதாள குகையில் மாட்டி சித்ரவதை அனுபவித்து இருக்க நேரிட்டு இருக்கும்!


பின்னர் “நீதிக்கும் நியாயத்திற்கும் துணை நிற்கும் அந்த இரு தீரர்களும் தங்களது அடுத்த பணிக்காக தலைமையகத்துக்கு புறப்பட்டனர்! அவ்ளோதான் நண்பர்களே! நீண்ட பதிவாக அமைந்ததால் நீண்ட நாட்களை எடுத்து கொள்ள வேண்டி நேரிட்டது! தடங்கலுக்கு வருந்துகிறேன்! மகிழ்ச்சி மட்டுமே சொந்தமாக இறைவனிடம் வேண்டுகிறேன். 
லக்கி வர்றார் தயாரா இருங்க! மதியில்லா மந்திரியின் கலர் மற்றும் கலரில்லா காமிக்ஸ்களும் புதுமையாக படிக்க கிடைக்க இருக்கின்றன! சந்தா கட்ட மறந்து விடாதீர்கள் காதலர்களே! 
உங்களில் ஒருவன் காமிக்ஸ் காதலன்!!
அப்புறம்??? அப்புறமே!!! வாழ்த்துக்களுடன்!! AGAIN HAPPY VALENTINE'S DAY FOLKS!