புதன், 30 செப்டம்பர், 2015

நல்லவன்@கெட்டவன்

இவன் நல்லவன் என்று
மற்றோர் உரைக்கையில்
புனிதர் கிரீடத்தைத்
தலையில் சுமந்து
எளிமையின் முகமூடியை
முகத்தில் அழுத்திக் கொண்டு
அய்யோ பாவம் அப்பாவி
ஒருவனின் புகழ்ச்சி இது
என்னுமோர் எண்ணம்
நொடியின் கீற்றுப்
பொழுதினில் தோன்றி
மறைவதைப் புன்னகைப்
புதைகுழியில் பிடித்துத்
தள்ளி மிதித்து மூடிப்
புன்முறுவல் வழிக்கிறேன்
யான்! ஆழ்ந்த என்  
மனதின் இருளிலோ
என் மிருகம்
பிரியாணி கிடைத்தது
போன்று என்னுள்ளே

இளித்துச் சிரிக்கிறது! 



செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 072-73_ A Rare Srilankan Tamil Comics!

வணக்கம் தோழமை உள்ளங்களே!
வாழ்ந்தது போதுமா? வின் 10.01.1973 புதன் கிழமை வெளியான எழுபதாவது அத்தியாயம் இங்கு தொடர்வது வெள்ளிக்கிழமை எழுபத்து இரண்டாவது பாகத்தில் இருந்து. அந்த 11.01.1973 வியாழன் கிழமை வெளியான  எழுபத்து ஒன்றாவது பாகம் கிடைக்கப் பெறவில்லை. வீர கேசரியிலும் இது குறித்து தகவல் சேகரிக்கும் பணியை நண்பர் திரு. அபிஷேக் அவர்கள் மேற்கொண்டார். ஒருவேளை எதிர்காலத்தில் யாரிடமாவது இருந்து கிடைத்தால் நாங்கள் பகிர்கிறோம். இந்த அரிய முயற்சியில் உங்கள் தேடல் பங்கும் தேவை தோழர்களே. 
நாம் ஆவணப் படுத்துவது நம்மோடு நில்லாமல் எதிர்காலத்துக்குக் கொண்டு செல்லும் புனிதமான பணியாகவே இதனை மேற்கொண்டு வருகிறோம். ஒருவேளை உங்கள் வசம் அந்த இழந்த பாகம் கிடைத்தால் கொடுங்கள் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

 எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தில் நம் சிங்  ஜெயஸ்ரீயிடம் அவளது மர்மத்தலைவன் யார் என்று கேட்டிருப்பான். அப்போது மறைவிடத்தில் நடந்தது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மர்மத்தலைவன் தன்னை வெளிப்படுத்தி சிங்கை அதிர வைத்திருப்பான். அதிர்ச்சி அடைந்த சிங் அதிர்ச்சி மிக்க விழிகளால் யார் நீ என்று கேட்க, கதை தொடர்கிறது. 

என்றும் அதே அன்புடன் சீக்கிரமே கேசரி கிண்டும் முயற்சியில் உங்கள் இனிய நண்பன் ஸ்பைடர் மேன் ஹி ஹி ஹி அவனது இரசிகன் ஜானி!  

யாரறிவார்?



வளைந்து நெளிந்து
வித்தைகள் பல காட்டி
மற்றோரை அச்சுறுத்திப்
பெற்றோரைப் பயமுறுத்தி


எங்கோ ஓர் விபத்தில் சிக்கிக்
கல்லறை செல்லும் வரை 
அடங்குவதேயில்லை -சில
இருசக்கர வேகப் பிரியர்கள்.  

ஒருவேளை இவர்தம் 
கல்லறைக்குள்ளும் 
வேகப்போட்டியைத் 
தொடர்கிறார்களோ? 
யாரறிவார்? 

இவண், இன்னுமோர் இதயம் தொலைத்தவன்!

இயந்திர உலகில்
இதய  மிக்கோர்
இல்லையென
இடித்துரைப்போர்
இங்குண்டு!
இதே இயந்திர
உலகினில்
இதயம் தொலைத்து
இவரும் ஈண்டு
இருப்பதை மறந்து...

இனியோரையும்
இகழ்ந்துரைத்தல்
இதுவும் இன்னொரு
இன்பமே
இவர்தமக்கு
இதுவன்றோ
இந் நகர மாந்தரின்
இருதய எண்ணம்
இதுவன்றோ
இவர்தம் காட்சிப் பிழை
இவருமே இதில்
இரண்டறக் கலந்து
இயைந்திருப்பதை
இனியுமா  உணர்வார்

இவர்?

முரண்...!

குறையொன்றும் இல்லை
என்று பாடிக் கொண்டே
தெருத்தெருவாய்த் திரிகிறான்,
ஒரு பார்வையில்லாப்
பிச்சைக் காரன்.

புதன், 9 செப்டம்பர், 2015

ஆசை....


விண்ணாய் விரிந்திடத்தான் 
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின் 
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஏதோ தோன்றியது....


கவிதை எழுத நினைக்கிறேன்
குழப்பம் வந்து இடைமறிக்க
கலக்கம் என்னில் எதிரொலிக்க
சிக்கல் என்னில் சிறகடிக்க
கவலை வந்து கதவடைக்கக்
கண்ணீர் முட்டிக் கண் பூக்க
எதைக் குறித்து எழுதுவது
என்னும் ஒரு சிந்தனைப்
பிரளயம் என்னில் பிரவாகமெடுக்க
உணர்வுகளைக் காலடியில் போட்டு
நசுக்கிவிட்டுப் பேனாவை
மூடி உள்ளே வைத்தேன்

நான் வெறுமையாய்....