வியாழன், 21 ஜூலை, 2022

பித்தன் இவன் பிதற்றுகிறேன்_ஜானி சின்னப்பன்

 உன்னை நினைத்து நினைத்தே எழுத்துக்குள் சிக்குண்டு தள்ளாடித் திரிந்து சாய்ந்தே கிடக்கிறது என் பேனா..


உற்சாகம் நீ..

உத்வேகம் நீ..

என் வேதம் நீ..

என் சுவாசம் நீ..


தேடித்திரியும் கண்கள்..

நின்று துவங்கும் மூச்சு..

துடிக்க மறக்கும் இதயம்..

தளும்பக் காத்திருக்கும் கண்ணீர்..


உன் அண்மைகள் உற்சாகத்தைக் கொடுத்தன..

உன் இன்மைகள்

உறங்கா விழிகளை 

பரிசளித்தது..


நீயின்றி நீங்கட்டும் இந்த உயிரும் உடலும்..


நீதானே என் இனிமைமிக்க இறந்த. காலம்..


நீயே என் எதிர்காலமென்றால் எத்தனை இன்பம் என் உள்ளம் புகும்.. சாகாப்  பெருவாழ்வல்லவா கிட்டும்..?!?

#கவியதிகாரம்

#விஜயா மைந்தன்

#ஜானி சின்னப்பன்

வியாழன், 14 ஜூலை, 2022

இதைக் கேளேன் கண்மணி_ஜானி சின்னப்பன்

 ஏய் பெண்ணெனும் மாயக் கன்னியே..

ஆரவாரமில்லாப் பேரழகியே..

ஆர்க்கும் இல்லாத அக்கறை அடியவனுக்கு ஏனடி உன்மேல்..

நீறுபூத்த நெருப்பாய் நெஞ்சம் கதகதப்பை உணர்வது உன் அண்மை சாத்தியப்படாத நினைவுகளில்தான்..


அண்டி வந்தால் எம்பிப் பறக்கும் சின்னஞ்சிறு தும்பி நீ..

பின்தொடர்வதிலே

சித்தத்தில் பித்தனென நான்.. 


காலங்கள் உருண்டோடட்டும்..

கல்லறைக்குள்ளும் அடங்காத

ஆன்ம ஈர்ப்பை எப்போது எங்கே எப்படி விதை போட்டு செடி வளர்த்து ஆலமரமாய் ஆக்கினேன் நான்? 

யோசித்ததில் தலைவலியே மிச்சமாய்.. 

என் எஞ்சிய எண்ணங்களின் எச்சத்தில் மனக்கூட்டுக்குள் அடைந்து கொள்கிறேன் சிறு பறவை போல்..

#விஜயாமைந்தன் #ஜானிசின்னப்பன் #கவியதிகாரம் #ActionChapter