ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

புதையல் தீவு மர்மம்_முத்து மினி காமிக்ஸ்_003


வணக்கங்கள் அருமை தோழமைகளே! நமது முத்து காமிக்ஸின் பெருமை மிகு படைப்பான புதையல் தீவு மர்மம் கதை குறித்துக் கதைக்க வந்திருக்கிறேன். இது அறுபதே காசுகள் விலையில் பிப்ரவரி மாதம் 1975 ஆம் ஆண்டு மாணாக்கர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு பலத்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நூலாகும். ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டோர் தி சேகர் லித்தோ வொர்க்ஸ், தபால் பெட்டி எண் 62, சிவகாசி -626123. இந்த நூலைத் தபாலில் பெற 75 பைசா மணியார்டரில் அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மையக் கதையைத் தவிர வால்ட் டிஸ்னியின் பிராணிகள் உலகம், மூன்று முட்டாள்கள் என்கிற சிறுகதை, பீர்பால் துணுக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கதாபாத்திரங்கள்: புத்தகப் பிரியன் பிரபு.

கல்லூரி மாணவனான பிரபுவுக்குப் புத்தகங்கள் மீது கொள்ளைப் பிரியம். அவன் பம்பாய் (மும்பை) நகரின் ஒரு நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தான். அவனது தோழர்கள் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் சிறுவர்களே. இதுதான் அவன் உலகம். அவனும், அவன் தோழர்களும் செய்யும் சாகசங்கள் ராம் வாயீர்க்கரின் ஓவியங்களில், பாரா பாக்வத் அவர்களில் கதை சொல்லலில் நமக்கு சித்திரக் கதைப் பொக்கிஷங்களாக அமைந்துள்ளன. நண்பர்கள் தவற விடவே கூடாத சாகசங்கள் இவனுடையவை.

ராஜூ... 

மீனா...

சாம் டெக் க்ரூஸ்...

க்ரூப்.. 
ஜேம்ஸ்..
இந்தக் கதையின் முக்கிய மையக் கதாபாத்திரம் கீழே  காணப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்தான். அவரது தியாகத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது. 
போராட்டக் குழுத் தலைவர் திரு.தேசாய். 


கதையின் சாராம்சம்: 

     நம் கதாநாயகன் புத்தக நேசன் பிரபுவுக்கு சாலையோரக் கடையில் கிடைத்த புதையல் தீவு என்ற கதைப் புத்தகத்தின் உள்ளே ஒரு வரைபடம் வெகுகாலமாகத் துயில் பயின்று வருவது தற்செயலாக தெரிய வருகிறது.
கஜூலியில் 1917ல் வாழ்ந்து வந்த தினேஷ் தேசாய் என்பவரது உடமையாக இருந்த புத்தகம் அது. பிரபுவின் தோழன் டெக் க்ரூஸின் தந்தையார் காவல் துறை அதிகாரியாக அந்தப் பகுதியில் பணியில் இருப்பதால் விசாரணை முடுக்கி விடப்படுகிறது. தேசாய் என்கிற குடும்பப் பெயர் உள்ளவர்கள் குறித்து நடந்த விசாரணையில் கைதியாக இருந்து இறந்து போன ஒருவர் பெயரும், பொக்கிஷ விவகாரமும் ஒரே கோட்டில் வருகிறது. இதை உணரும் பிரபுவும் அவனது தோழர்கள் ராஜூ, மீனா ஆகியோரும் மேற்கொண்டு உண்மைகளை அறிய நேரில் தோழன் சாம் டெக் க்ரூஸின் இல்லத்துக்கு சென்று தங்குகையில் சாமின் ஓட்டுனர் ஜேம்ஸ் அந்த புதையல் வரைபடத்தைத் திருட்டுத்தனமாக நகல் எடுத்து விடுகிறான்.
     கஜூலியில் உள்ள தினேஷ் தேசாயின் மகன் பிகாஜி தேசாய்  என்பவர் தினேஷின் வீர சரிதத்தைக் கூறுகிறார். 1917ல் போர்த்துக்கீசிய அரசுக்கெதிராக வீரர்களைத் திரட்டிப் போராடி வந்த மாவீரர் தினேஷ். கோட்டை போன்ற வீடு. திரண்ட செல்வ வளம். மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், போராட்டக்காரர்களுக்குத் தலைமை ஏற்று அவர்களுக்காக நிதியைத் திரட்டி, அதனைப் பாதுகாத்து, திட்டங்கள் பல தீட்டி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் மாவீரன் தேசாய். இந்தியத் திருநாடு இவர்களைப் போன்றோரின் தியாகத்திலும், எண்ணற்ற வீரர் தம் உயிரைக் கொடுத்துப் போராடியமையாலும் மட்டுமே நாம் இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு அதே இந்திய மண்ணில் இருந்து பல சாதனைகள் படைத்து வருகிறோம். தேச ஒற்றுமை, வேற்றுமைகள் பல என்றாலும் ஒரே குடும்பமாக இணைந்து நிற்கிறோம் என்றால் அதற்கு இந்த தேசாய் போன்ற எத்தனையோ வீரர்தம் தியாகமே அதற்கு முக்கியக் காரணம். அப்படிப்பட்ட வீரர்களின் வாழ்வு பட்டு மெத்தை மேலான உல்லாசமான வாழ்வு கிடையாது. அது முள் படுக்கை மீதான உறக்கமாகவே இருந்தது. நமது நாயகன் போராட்டக் குழுவின் தலைவர் தினேஷின் நடவடிக்கைகளைக் கவனித்து வரும் போர்த்துக்கீசியப் படை அவரைக் கைது செய்கிறது. அவரது திரண்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவரது செல்வவளம் மிக்க குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. அவர் போராட்டத்துக்காக சேர்த்த நிதி, தங்கம் எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என்று கேட்டு சித்திரவதை பல மாதங்கள் தொடர்கின்றன. இறுதிவரை அனைத்துக் கொடுமைகளையும் மவுனமாகத் தாங்கிக் கொள்கிறார். அடுத்த வருடம் தான் இறக்கும் வரையிலும் இரகசியத்தை ஒருவரிடமும் வெளியிடவில்லை. ஆனால், அவருக்கு சிறையில் சில மாதங்களுக்குப் பின் வழக்கமாக அவரது குடும்பத்தாரிடம்  புத்தகங்கள் வாசிக்க அனுமதி கிடைத்ததால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் வாசித்த புதையல் தீவு எனும் நூலில் வரைபடம் வைத்து அனுப்பி விடுகிறார். ஆனால், விதியின் வலிமையால் அந்த நிதி யாரிடமும் சிக்காமல் அந்த வரைபடம் இருந்த புத்தகமும் எங்கெங்கோ சென்று இறுதியாக நமது பிரபுவின் கரங்களுக்கு வந்து தஞ்சமடைகிறது.
     நியாயமான நமது நாயகன் வடிவில் தேசாயின் மகன் திரு.பிகாஜி தேசாயின் வாசலுக்கே வந்து கதவைத் தட்டுகிறது. பிகாஜி தேசாய் அப்படி ஏதும் பொக்கிஷம் கிடைத்தால் இந்திய அரசுக்கே கொடுத்து விடுமாறு தெரிவிக்கிறார். கொடுத்து சிவந்த கைகளுக்குரிய குடும்பத்தார் ஆயிற்றே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற முதுமொழிக்கிணங்க தான் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தாலும், தன் தந்தையாரின் முயற்சிகள் வீணாகாத திருப்தி மட்டுமே செல்வமெனக் கருதி இந்திய  தேசத்துக்கே அந்தப் புதையலை கொடுக்குமாறு கூறி விடுகிறார்.   
     இதனிடையில் டெக் க்ரூஸின் முன்னாள் ஓட்டுனர் ஜேம்ஸ் தன் போக்கிரி நண்பன் க்ரூப்புடன் இணைந்து தீவை சென்று அடைகிறான். இருவரும் புதையல் தீவின் பூதங்களென பிரபு குழுவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கேயே சமாதி கட்டுவது திட்டம். இதிலும் ஒரு உள்ளடி வேலை. ஜேம்சுக்குத் தெரியாமல் க்ரூப் ஒரு விமானப் பயணச் சீட்டு எடுத்திருப்பதை வைத்து அவன் தன்னையும் இங்கேயே அழித்து விடத் தீர்மானித்து விட்டான் என்பதை ஜேம்ஸ் அறிய நேர்கிறது. க்ரூப்பை ஒழித்துக் கட்ட தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறான். புதையல் தீவின் வரைபடத்தை யாரோ நகல் எடுத்ததற்கும், சாமின் ஓட்டுனர் காணாமல் போனதற்கும் உள்ள தொடர்பை அறிகிறார்கள் பிரபு குழுவினர். சாமின் தந்தையாரிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிற வேளையில் பிரபுவும் நண்பர்களும் தீவை சென்றடைந்து இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடலை மேற்கொள்கிறார்கள். இரண்டு குழுக்களும் ஜேம்ஸ் மற்றும் க்ரூப் வசம் சிக்குகின்றனர். அவர்களைக் குகையில் அடைத்து விட்டு ஜேம்ஸ் க்ரூப்பை சுட்டுக் கொன்று விட்டுத் தப்ப எத்தனிக்கையில் சாமின் தந்தையாரால் முடுக்கப்பட்டிருந்த காவல் துறையினர் குறுக்கிட, அனைவரும் மீட்கப்பட, சுபம். 
இந்த கதையில் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை சரிவிகிதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசத்தைத் தன் பெருமை மிகு படைப்புகளால் அலங்கரித்த பாரா பாக்வத், ராம் வாயீர்க்கரின் அட்டகாசங்களை நீங்கள் வாங்கி இந்திய தேசத்தில் உருவான சுதேசி சித்திரக் கதையை ஆதரித்தீர்களானால் இது போன்று உருவான சிறந்த தேச பக்திக் கதைகள் இப்போது உள்ள தலைமுறையினரையும் சென்றடையும். இந்தப் புத்தகம் தொலை நோக்குப் பார்வையுடன் அன்றே திரு.சவுந்திர பாண்டியன் ஐயா அவர்களால் முத்து மினி காமிக்ஸ் என்ற குடையின் கீழ் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. புத்தகம் மறு வெளியீடாக ஒரு சில அட்டகாசங்களுக்குப் பின்னர் பலத்த கரவோசைகளுக்கிடையே நமது இனிய ஆசிரியப் பெருந்தகை திரு.எஸ். விஜயன் அவர்களால் மறுபதிப்பு செய்யப்படவிருக்கும் பொன்னான தருணத்தின் விளிம்பில் நிற்கிறோம். புத்தகம் 20 ரூபாய் விலையிடப்பட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக வெகு குறைவான பிரதிகளே அச்சிடப்பட்டு வரும் மாதத்தில் சிங்கப் பாய்ச்சல் நிகழ்த்தப்படவிருக்கிறது.
இந்த நூலை வாசிக்கக் கொடுத்து உதவிய முதலைப் பட்டாளத்தார் திரு.கலீல் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்_ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக