ஒரு மாட்டை வளர்த்திருக்கிறீர்களா? அதன் கழுத்தின் கீழே தடவிக் கொடுத்திருக்கிறிர்களா? நாய் மட்டுமா பாசம் காட்டும்? பசுக்களும், கன்றுகளும், காளைகளும் குடும்பத்தில் ஒருவராகப் புழங்கும். என் தந்தையார் பால் கறக்க அமர்வார் அருகில் போய் அமர்ந்து காம்பைத் திருகிப் பால் கறப்பதை வேடிக்கை பார்ப்போம். அது போல் அமர்ந்து பார்த்ததுண்டா நீங்கள்? மாட்டுப் பொங்கல் சமயம் காளை வைத்திருப்போர் கொம்புகளை உப்புத்தாள் வைத்துத் தேய்த்து வண்ணம் தீட்டி மகிழ்வர். பசு வைத்து இருந்த நாங்கள் கிறிஸ்தவரெனினும் பசுவுக்கும் கன்றுக்கும் குளியல் போட வைத்து தோட்டத்து மலர்களை மாலையாகக் கட்டி மாலையிட்டு, அலங்கரித்து குங்குமமும் மஞ்சளும் சேர்ந்த பொட்டு வைத்து சந்தனத் தூளைத் தண்ணீர் கலந்து தெளித்து கற்பூரம் கொளுத்தித் தீபம் காட்டி எமக்கு உன் இரத்தத்தைப் பாலாக ஆண்டு முழுவதும் தந்து உதவுவதற்கு நன்றி தாயே என வணங்கி ஆக்கி வைத்தப் பொங்கலை ஊட்டி மகிழ்வோம். தாய்க்குப் பின் பாலைத் தரும் பசுக்களுக்கு எம் பகுதிகளில் ஆதரவு அதிகம். காளைகள் பொதுவாக ஒரு வயதுக்குப் பின்னர் உழவுப் பணிகளுக்கும், பிற மாநில உணவுத் தேவைகளுக்கும் அதிக நாட்கள் தங்காது விற்பனைக்கு அனுப்பப்பட்டு விடும். பொதுவாக நமது தமிழக மாடு வகை இனங்கள் போதிய ஆதரவின்றி அழியும் நிலை தொடர்கிறதென்றால் அடிப்படையான விவசாயம் படுத்து விட்டதே காரணம். இது சல்லிக்கட்டு தொடர்பான சங்கதி மட்டுமல்ல. விவசாயிகளின் நல்வாழ்வும் அது தொடர்பான சங்கதியும் கூட..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக