சனி, 2 மே, 2020

அவன்தான் ஜானி..

அவன் ஒரு சின்னஞ்சிறுவன்..அவன் கனவுகள் வானளாவியவை..அவன் கற்றுக் கொண்டது காமிக்ஸ் முதலாய்..அவன் அறிந்த உலகம் சித்திரங்களின் உலகம்..அவன் பெற்றோர் அயல்நாட்டுக்கு இராணுவப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட வேறு வழியின்றி யுத்த பூமிக்கு செல்லும் சூழலில் தங்கள் மகனை தாத்தா பாட்டியிடம் விட்டு செல்லும் சூழல்.. மூன்றே வயதான தன் பாலகனை ஒரு இரயில் நிலையத்தில் கண் கலங்க தன் தாயிடம் பிய்த்தெடுத்து கொடுத்தனுப்பினாள் அவன் தாய்..

அவனது பாட்டியின் அரவணைப்பில் தமிழைக் கற்றுத் தேர்ந்ததெல்லாம் சித்திரக்கதை நூல்களிலேயே.. குறிப்பாக அவனது போலீஸ் தாத்தா அவ்வப்போது அவனை சுமந்துசெல்லும் அவன் ஊரின் டீக்கடை தினமலர் சிறுவர் மலரின்பால் அவன் அத்தனை பிரியம் கொண்டிருந்தான்.. அப்படியே ராணி காமிக்ஸ் அறிமுகமானது.. அகிலமே வசப்பட்டது போன்ற மகிழ்ச்சியோடு அவன் துள்ளித் திரிந்து வாசிப்பில் ஆர்வம் காட்டுவதைக் கண்ட அவனது தாத்தா பாட்டி தொடர்ச்சியாக புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தனர். அவன் பெரியப்பாக வரித்துக் கொண்ட திரு.கணபதி-செல்வாம்பாள் தம்பதியினர் அவர்களது இல்லத்தில் எப்போதும் வரும் தினமலர் நாளிதழை அவன் வாசித்து காண்பிக்க அவரும் அவரது குடும்பமும் சுதா, சுமதி, அண்ணன் ரவி,  குணா உட்பட அத்தனை மகிழ்வார்கள்.. அண்ணன் விஜயகாந்த்தின் பரம இரசிகர்.. நாணயங்களை விஜயகாந்த் ஓவியத்தை சுற்றிலும் ஒட்டி அழகுற மாட்டி வைத்திருப்பார்..
 சற்றேறக்குறைய அவனது மூன்றாம் வகுப்பு முடியும் தருவாயில் மீண்டும் நாடு திரும்பியது அவன் குடும்பம்.. குடும்பத்தோடிணைந்த மகிழ்ச்சியும் நெடுநாள் நீடிக்கவில்லை.. அவன் தந்தைக்கு தேசத்தின் தலைநகரில் பணி.. அவரோடு குடும்பமும் கிளம்ப வேண்டிய தருணத்தில் மகனின் படிப்பை மனதில் கொண்டு கடலூரில் போர்டிங்கில் தங்கிப் படிக்க தூய வளனார் பள்ளியில் அவனை சேர்த்து விட அவனது வாழ்வும் வாசிப்பும் கடும் நெருக்கடியில் சிக்கியது.. நல்ல வாழ்க்கையை தடதடவென இரயில் ட்ராக்  மாறுவதுபோல் மாற்றிக் கொண்டேயிருப்பதன் சிக்கல்.. ஊரின் பள்ளிக்கும் கடலூர் பள்ளிக்கும் இமாலய வேறுபாடிருந்தது.. கூடவே கைப்பிடித்து நடத்தி செல்லும் குடும்பத்தாரும், அரவணைத்துப் போகும் அன்பான ஆசிரியர்களும் பார்த்துப் பழகியவனுக்கு நகரத்து ஸ்பீட் லைப் பிடிபட வெகு நாட்களாயிற்று.. அதிலும் அதிகாலையிலேயே எழுப்பி விட்டு படிப்பதற்காக மணிக்கணக்கில் நேரமொதுக்கித் தருவார்கள்.. அமைதியாக பாட நூலையே உற்றுப் பார்த்து பித்துப் பிடித்து விடும் சின்னஞ்சிறு வயதினோர்க்கு.. இயந்திர அமைப்புக்குள் மனம் சிக்க மறுத்து வெளியே தாவிக் குதித்துக் கொண்டே இருக்கும்.. நோட்டை எடுப்பான்..கடகடவென கதையை எழுதித் தள்ளுவான்.. அவன் கதைக்குள்ளே மிருகங்களின் சாம்ராஜ்யமே விரியும்.. வெறிக்க தலையை மேலே உயர்த்தி சுவரைப் பார்ப்பான்.. கடலாக இந்த ரூமே மாறி சுறாக்களும் திமிங்கலங்களும் நீந்தித் தாக்க எதிர்த்துத் தாக்கும் சூழல்களை அவன் மனது வாழ்ந்து அழித்து வாழ்ந்து அழித்துக் கொண்டேயிருக்கும்..அவன் இரசித்த சித்திரக்கதைகளைப் போன்றே அவனது பாத்திரங்களும் அமையும்.. ஸ்கூல் டூர் போவதாகவும் தன் கார், ஏரோப்ளேன் பொம்மைகளை அங்கே எடுத்துப் போவதாகவும் உருப்பெருக்கும் கருவியை வைத்து தனது காரை பெரிதாக்கி அதில் ஊரையும்..ப்ளேனைப் பெரிதாக்கி அதில் வானையும் வலம் வருவதாக அவன் கற்பனைகள் நீளும்..
அப்படியே அவனது கற்பனைகளுள் அவன் லயிக்க விட்டுவிடுவோம்..
நிற்க..

சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவன் கற்பனை லயிப்பினை யொத்த ஒரு ஓவியத்தை தீட்டியிருந்தார்கள்..அது இதோ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக