செவ்வாய், 15 ஜூன், 2021

மாய வனம்_ஜானி சின்னப்பன்

 

மாயக்கிழவியின் 

மந்திர விரல்களாய் 

என்னுள் உன் நினைவுகள் 

சுருண்டு கிடந்தன..  

தேகம் முழுவதும் 

இளமை கடந்து 

இதயம் இழந்து 

நத்தைக்கூட்டின் 

சின்னஞ்சிறு இருள் அறையாய் சுருக்கிக் கொண்டேன் 

எப்போதோ எனைநான்.. 

வெகுகாலம்  முன்பே 

வலிகளால்  வறண்டுபோன காடாய் மாறிப் போனதென் நெஞ்சம்..  

இரத்த ஓட்டம் நின்று போய் தசையும் கூடக் கருவாடாகித் தேய்ந்தே போனேன் நான்..  

எதிர்பாரா ஒரு பகலில்... 

உன் முகம் ஒரு எண்ணெய் அகலில் யாரோ ஏற்றிய சிறு தீபத்தின் ஒளியில் அசைவாடுவதாய் பிரமை தட்டிற்று ஒரு வினாடி என் கானகப் பாலைவெளியில்... 

திடுமென விழித்தது என் இருப்பு.. சட்டென உயிர்த்தது என் இன்னுயிர்.. கனமாய்த் திரண்டது புது நம்பிக்கை.. உன் வரவு நிச்சயம் என்று  உறுதி செய்தது எங்கோ ஒரு குயிலின் கீதம்.. என் கானகத்தில் இப்போது உதிக்கும் சூரியன் காண்பான் எங்கும்  பச்சைப் பரப்பினை.. 

மறு உயிர்த்தெழுதல் நிகழ்ந்த அதிசயம் உன் நிழலின் பிம்பத்தால் மாத்திரமே.. 

அறிந்தவன் ஆழ்கிறேன் ஆழ்தவத்தில் மீள... _ஜானிசின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக