ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

சீறும் என் தோட்டா_ஜானி டைனமைட்

 சீக்கிரம்.. இராணுவத்தினர் வந்து விடப் போகிறார்கள். கிளம்புங்கள்.. உத்தரவு பறந்து வந்து காற்றை நிறைத்ததும் வானளாவ எரிந்து கொண்டிருந்த பண்ணை வீட்டை விட்டுப் புயலெனப் பாய்ந்து விரைந்தது அந்த எழுவர் அணி. 

கொடூரர் படை அது. அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்பில் இவர்கள் செல்லும் இடமெல்லாம் வெறியாட்டம் போடத் தவறுவதேயில்லை. அப்பாவி பண்ணை நிலதாரர்களும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ந்து தாக்குண்டு தீக்கிரையாகிக் கொண்டிருந்த கொடூர காலக் கட்டம். 

கணவாயை இலக்காக வைத்து விரைந்து போய்க் கொண்டிருந்த முதலாமவன் குதிரை தலைகுப்புறக் கவிழ்ந்தது.. கீழே விழுந்தவனை அப்படியே ஒரு மறைக்கப்பட்ட பள்ளம் காவு வாங்கியது. உள்ளே குத்தீட்டி போன்று நடப்பட்டிருந்த மர ஈட்டிகள். எழுவர் அறுவராக அவர்களுக்கு முன்னே அடர்ந்த காடு கனத்த அமைதியுடன்.. சரக்கென கத்தியொன்று பாய்ந்து இன்னொருவன் கழுத்தில் ஊன்றி நிற்க சப்தம் எழாமல் பரலோகம் போனான். அறுவரில் ஒருவன் காலி. மிரண்ட ஐவரும் தத்தம் ரிவால்வரை சகட்டு மேனிக்கு எட்டுத் திசைக்கும் சுட்டு தோட்டா மழை பொழிய மெல்லிய ஓசையாகக் கிளம்பி திடீரென ரொய்ய்ய்ங்ங்ங் என்று அதிகரித்த ஓசை தேனீக்களின் மரண ராகத்தை இசைக்கத் தொடங்கியது. தேனீக்களின் கொடுக்குககள் ஆங்காங்கே பொத்தல்களைப் போட இருவர் அங்கேயே சுருண்டு விழுந்தனர். குதிரைகள் மற்ற மூவரையும் தள்ளிப் பாய்ந்தோடி விட காட்டின் பாறைகளுக்கு மத்தியில் மறைவிடம் நாடி ஓடத் தொடங்கினர் ஆளுக்கொரு திசையில்.. விஷ்க்கென்ற ஓசையுடன் ஒருவனின் காலில் தைத்தது அம்பொன்று. ஐயோ அம்மாவென்று கதறியபடியே கீழே விழுந்தவனின் கழுத்தில் அடுத்த அம்பு தைத்தது.  செவ்விந்திய அபாச்சே இறகுகள்..

அடர்வனத்தில் சேர்ந்தவாறே ஓடிக் கொண்டிருந்தவனின் முதுகில் சதக்கென குத்திப் பிளந்தது கோடரியொன்று. கடையொருவன் விதிர்விதிர்த்துப் போனான். 

யார்டா எங்களைக் கொல்றது. தைரியமிருந்தால் முன்னே வா. நான் இந்தக் கூட்டத்தின் தலைவன் டேவி லார்சன். என்னைக் கொன்றால் உனக்கேதும் லாபமில்லை. வெளியே வா..கூப்பாடாகவும் இல்லாமல் கெஞ்சலாகவும் இல்லாமல் மிரட்டலாகவும் இல்லாமல் அப்படியொரு குரல். 

முதலில் வடக்கேயிருந்து ஊளைபோல ஆரம்பித்து ஏதோ குரல்கள் அவனை தைரியமிழக்க செய்தது. பின்னர் வடக்கே துவங்கி அவனை சுற்றிச்சுற்றி ஒரு குரல் பேசியது. 

அடேய் லார்சன்..

நான்தானடா 

ஜானி டைனமைட்..

எத்தனை கொலைகளும் கற்ழிப்புகளும் கொள்ளைகளும் நிகழ்த்தியிருப்பாய். இன்று என் வதைபடலத்தில் சிக்கிச் சிதறுகிறாயே. முட்டாள். நீ செய்த பெரிய தப்பு  என் நண்பன் மெக்கின்ஸியின் பண்ணையைத் தாக்கியது. அங்கே நீ விட்டுப் போன தடயங்களை வைத்து வெகு நாட்களாக உன்னைப் பிடித்து விட அலைந்து கொண்டிருந்தேன். இத்தனை நாட்களாக கழுவும் தண்ணீரில் நழுவும் மீனாக நீயிருந்தாய். இப்போதோ  உன் எழுவர் அணியின் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டி விட்டேன். இதோ பாரடா என்று குரலின் சுற்று நெருக்கத்தில் கேட்க.. முதுகில் பலத்த உதை விழுந்து தடுமாறி விழுந்தான் லார்சன். துப்பாக்கியை உருவ எத்தனித்தவனின் கையை பூட்ஸ் கால் நசுக்கியது.. 


போய் சேரடா நரகத்திற்கு..   என்றவனின் கண்களின் இடுக்கத்தில் கொடூரமும் கொஞ்சம் அப்பிக் கிடந்தது. அவனது பிஸ்டல் டுமீல்ல்..என ஒற்றைத் தோட்டாவை உமிழ்ந்தது..




1 கருத்து: