*ராண்டாகையின் கேஸ்புக்*
அந்த காலத்தில் நடைபெற்ற குற்றங்களையும், அவற்றின் பின்னணியைப் பற்றியும் ஆராய்ந்து மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார். ஓவியர் ஸ்யாம் சங்கரின் ஓவியங்களும், அனைத்து அத்தியாயங்களை மெருகூட்டுகின்றன. அதில், தமிழ் நாட்டை உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கைப் பற்றி கடைசி அத்தியாயத்தில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த வழக்கு மூலம் ‘சூப்பர் ஸ்டார்’ தியாகராஜ பாகவதர் வீழ்ந்த கதை நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது.
லட்சுமி காந்தனுக்கு பள்ளிப்படிப்பு முடித்ததும் சட்டம் படித்து வக்கீலாகவேண்டும் என்கிற கனவு இருந்திருக்கிறது. வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. என்றாலும், தானே சட்டப்புத்தகங்களை வாங்கிப் படித்து அதன் நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறான். பொதுமக்களுக்கு உயில் எழுதுவது, அடமானப் பத்திரம் எழுதுவது, போர்ஜரி கையெழுத்து போடுவது போன்ற பல வேலைகளைச் செய்து மக்களையும், வக்கீலையும் இணைக்கும் சட்டத்தரகர் வேலையும் செய்திருக்கிறான். அவன் அகராதியில் நியாயம், தர்மம் என்கிற வார்த்தைகளுக்கு இடம் இருந்ததாகத் தெரியவில்லை. யாருக்கும், எதற்காகவும் பயந்த மாதிரியான சுபாவமும் கிடையாது. பிறரை ஏமாற்றுவது, பித்தலாட்டம் செய்வது, பணம் பறிப்பது இவைதான் முக்கியத் தொழிலாக இருந்து வந்திருக்கிறது.
வழக்கில் இருந்த ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையை வாங்குவது சம்பந்தமாக, அவன் தாக்கல் செய்த பிராமாணப் பத்திரத்தில் வேறொருவர் கையெழுத்தை அவன் போர்ஜரி செய்து போட்டிருந்ததைக் கிரிமினல் செஷன்ஸ் நீதிபதி கண்டு பிடித்தார். அவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு ராஜமுந்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ரயிலில் போகும் வழியில், போலீஸ்காரர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் நேரம், சினிமாவில் வரும் சம்பவத்தைப் போல கையில் விலங்குடன் கிருஷ்ணா ஆற்றில் குதித்து தப்பியிருக்கிறான். அதன் பிறகு பலத்த முயற்சிகளுக்கு இடையே அவனைத் தேடிப் பிடித்து அந்தமான் தீவில் இருக்கும் ஜெயிலில் கொண்டு போய் அடைத்தார்கள்.
இரண்டாம் உலகப் போரின் காரணமாக கைதிகள் எல்லாம் விடுவிக்கப்பட்டனர். சுதந்திரப் பறவையான லட்சுமி காந்தன், 1943 ல் ‘சினிமா தூது’ என்னும் பத்திரிக்கையை நடத்தினான். அதில் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எழுதியன் மூலமாக அவர்களைப் ப்ளாக் மெயில் செய்து மூட்டை, மூட்டையாகப் பணம் சம்பாதித்தான். அவனது அட்டூழிங்களைப் பொறுக்க இயலாத தியாகராஜா பாகவதர், அந்தப் பத்திரிக்கையின் லைசென்ஸை ரத்து செய்யக் கோரி டில்லி மத்திய அரசுக்கு அப்பீல் செய்தார், ஆனால், லட்சுமி காந்தனே டில்லிக்கு சென்று அரசாங்கத்தின் போலி லட்டர் பேடைத் தானே அச்சடித்து, போர்ஜரி செய்து பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தினான். சீக்கிரமே குட்டு வெளிப்பட்டு விடவே, தன் வன மாலி பிரஸ்ஸை ஆட்களை வைத்து அடித்து நொறுக்கி எதிரிகள் செய்து விட்டார்கள் என்று பழி போட்டு, பொதுமக்களிடம் இரக்கத்தைச் சம்பாரித்தான்.
இந்த நேரம், ‘இந்து நேசன்’ பத்திரிக்கையை தகிடு தத்தம் செய்து வாங்கி நடத்த ஆரம்பித்தான். அதில் தியாகராஜ பாகவதருக்கு என்று வாரா வாரம் சீரியலையே துவங்கிவிட்டான். பிரபலங்களின் பெயரை நேரடியாக எழுதாமல் பட்டப் பெயர் வைப்பான். உதாரணமாக பாகவதருக்கு ‘ஆசாரிப் பயல்’ என்கிற அடை மொழியில் எழுதுவான். ஆரம்பத்திலேயே பாகவதர் அவனுக்கு பணம் தருவதாகச் சொன்னாலும், அதை வாங்க மறுத்துவிட்டான். பொன் முட்டையிடும் வாத்திடம் இருந்து முதலிலேயே பணம் வாங்கிவிட்டால், அதற்குப் பிறகு லாபம் பார்க்க முடியாது என்பதுதான் அவனது கணக்கு. அவனது செய்கைகளுக்கு ஒரு அடிப்படை நியாயத்தைக் கற்பித்து தனது பத்திரிக்கையில் எழுதியிருந்தான். கண்ணகி பிறந்த நாட்டில், சினிமா நடிகைகள் விபச்சாரிகளையும் விட மோசமாகத் தவறுகள் செய்கிறார்கள். அதற்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் துணை போகிறார்கள். அந்தத் தவறுகளைக் களையெடுத்து, நாட்டைத் துப்புரவு படுத்தவே இந்தப் பணியைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வேவு பார்ப்பதில் இந்தக் காலத்தைப் போல், அந்தக் காலத்திலும் மக்கள் இருந்திருக்கிறார்கள்! அதனால் பொதுமக்களின் அமோக ஆதரவும் லட்சுமி காந்தனுக்கு இருந்திருக்கிறது.
அந்த சமயத்தில், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வடிவேலு என்பவனுடன் சண்டை மூண்டதால், அவனைப் பற்றிப் புகார் கொடுக்க சென்னை கோர்ட்டுக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் கத்தியால் குத்தப்பட்டான். அந்த நிலையிலும் ஆஸ்பத்திரிக்குச் செல்லாமல், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்திருக்கிறான். பிழைத்து வந்து விடுவான் என்று எல்லோரும் நினைத்த நிலையில் அவன் இறந்து போனது பல சர்ச்சைகளுக்கும், சந்தேகங்களுக்கும் இடம் அளிப்பதாக இருந்தது. எந்த ஆதாரமும் இல்லாமல் தியாகராஜ பாகவதரையும், என். எஸ். கிருஷ்ணனையும், லட்சுமி காந்தனுடன் பழகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். வழக்கு நடக்கும் போது, அரசாங்கத் தரப்பில் இருந்த பல தில்லு முல்லுகள், குளறுபடிகள் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. ஆனால், ஏன்? எதற்காக? யாருக்காக? என்கிற விவரங்கள் யாருக்கும் தெரியாது. சென்னை உயர்நீதி மன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்ததது. அதன் பிறகு, லண்டன் பிரிவியூ கவுன்சிலுக்கு அப்ளை செய்து அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் பாகவதர் உட்பட அனைவரும் விடுதலை ஆயினர்.
லட்சுமி காந்தனுக்குப் பல எதிரிகள் இருந்தனர். அதனால், அவனைக் கொலை செய்தது யார் என்பது இன்று வரை தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த வழக்கிற்கு செலவழித்ததன் மூலமாக, பாகவதர் தன் சொத்துக்கள் முழுவதையும் இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். சில வருடங்களில் இறந்தும் போனார்.
லட்சுமி காந்தன், தான் இறந்து பிறகும் கூட பலரின் வாழ்க்கையை அழித்து விட்டுச் சென்றது மிகவும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம் ஆகும்.
*ராண்டார்கையின் கேஸ் புக்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக