புதன், 11 செப்டம்பர், 2019

உதிர்ந்த மலரே..என்நண்பா..!


முன்குறிப்பு:வணக்கங்கள் வாசக உள்ளங்களே...இது என் நண்பனைக் குறித்த என் கவிதை. மது அரக்கனை அரவணைத்துப் பாழும் நரகத்தில் விழுந்துபோன ஒரு நட்பைக் குறித்த கவிதை..)

உதிர்ந்துபோன மலரே என் நண்பா..
மொட்டாக்கி மலர்க்காம்பில் உனையமர்த்த முயற்சித்த மூடன் நான்..

திரும்புமா மலராய் நீ பூத்துக் குலுங்கிய நற்காலம்..
போய்விட்ட வசந்தத்தை வடம்பிடித்து இழுத்திடல்தான் சாத்தியமோ?

வீசிச் சென்ற தென்றலை
மீண்டும் என்மீது வீசென்று
கட்டளை நீ இட்டுவிடத்தான் முடியுமோ?

இழந்த என்நட்பை புதுப்பித்துக் கொள்ளல் மட்டும் சாத்தியமானதேனோ?

என் பாசமழை  எத்தனையெத்தனைமுறை உனை
அன்போடு நனைத்ததென நீ மறந்துபோன மாயமென்ன?

திருந்துவாய்  மாறிடுவாய் என பறவைக் குஞ்சின் ஏக்கத்தோடு திறந்த வாயாய் என் இதயம் துடித்திருந்ததே..

வாழ்வின் வசந்தத்தை மீட்டுக்கொள்வாய் அமைதி
உன் நெஞ்சில் குடியமருமென நம்பித் தொலைத்திருந்தேனே...

உன்பால் நம்பிக்கையைக் கைவிட்ட கடைசி நண்பனின் அறிவுரையை காதில் வாங்கியும் கைவிடாதிருந்தேனே..

இனியும் வருவாய் மதுவென்னை வென்றதென புலம்புவாய்..அப்பாவி முகமூடி கொண்டு பாவமென நிற்பாய்..

எல்லாவற்றையும் முற்றிலும் மறந்து என் மனம் உன்னை வரவேற்றிடும்.. என் இல்லாளும் இல்லாத அதிசயமாய் பாவங்க அவரை விரட்டாதீங்க என்பாள்..

உன்னோடு பழகிப் புளித்துப் போன என் அன்புத் தம்பியோ திருந்தமாட்டான்  அவனை விட்டொழியேன்  என்பான்..

இதோ இன்னொரு முறை நீ வந்து நிற்பாய் என் வாசலில் அத்தனையும்
இன்னும் ஒருமுறை அரங்கேறும்..ஆனால்..ஆனால்..

நீ இழந்த மறைந்த உன் காதலும் மனைவி பிள்ளைகளுமாய் அந்த வாழ்வும் சந்தோஷமும்  திரும்பி அமையாதா ஒருமுறை..

ஒவ்வொரு நொடியும் என் முழு ஆன்மாவும் உனக்காக இறைவனிடம் தவிப்பதை நீ அறியமாட்டாய்தான்..
வா உன்னை தவிர்க்க முயற்சிக்கிறேன் இம்முறையாவது..

(முன் அனுமதியின்றி பிற தளங்களில் பகிர வேண்டாம் நண்பர்களே.. விரைவில் ஒரு பத்திரிக்கையில் பிரசுரமாகவிருக்கிறது. நன்றி..)

இந்த பதிவுக்கு
நண்பர் திரு.நீதிதாஸ், திருவண்ணாமலை அவர்களது கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்..
எனக்கும் ஒரு நண்பர் இருந்தார் காவலரே.புத்தகப்பிரியர்.செயல்வீரர்.அரசின் நற்பதவி.இத்தனை இருந்தும் போதையின் பாதையில் சென்றார்.உரமான உடலை மது ஒழித்தது.போதைப்பாக்கெனும் பொல்லாவழக்கத்தால் மரணமெனும் நாகம் அவர் வாயில் புற்றிட்டுக் குடியேறியது.என்புதோல் போர்த்த உடம்பாய் உயிரற்ற கூடாய்க் கிடத்திவைத்திருந்தனர்.வாய்விட்டு அழுதேன்.அடைக்க நினைத்தாலும் கண்ணீர் ஆறாக ஓடியது.ஓலமிட்ட என்னைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டனர் யாரோ நண்பனாம் என்று.இரு சிறுமிகளை அணைத்தபடி அவர் மனைவி சுருண்டு அழுதுகொண்டிருந்தார்.அவர் தாயும் தந்தையும் தம்பியும் என்னைப் பார்த்து அழுதனர்.அவர்களின் முகம் பார்க்க முடியாமல் தலைகுனிந்தேன்.எத்தனையோ சொன்னேனே கேட்கவில்லையென்று எப்படிச்சொல்வேன்? கூடிக்குடித்தவர்களும் வாங்கிக்கொடுத்தவர்களும்கூட வந்திருந்தனர் சாவிற்கு.அடுத்த இருமாதங்கள் தனிமையில் அவர் குரல் கேட்டு எழுந்த இரவுகள் ஏராளம்.என்னைத் தேடிவந்தாரா? என்ன சொல்ல வந்தார்? இன்றுமுதல் தெரியவில்லை.அவரைப்போல யாரையேனும் பார்த்துவிட்டால் மனம் கலங்கும்.கண்கசியும்.
நன்றி சார்.. 

3 கருத்துகள்:

  1. நண்பன் விழுங்கிய போதை
    நட்பை விழுங்கிய கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஆனால் நட்பே வென்று கொண்டுள்ளது சார். இன்றுவரை.

      நீக்கு

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...