ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வாழ்ந்தது போதுமா? _நிறைவின் வாயிலில்..!_vazhnthathu pothuma_a comics series from veerakesari magazine! final episode.

வணக்கங்கள் மற்றும் வந்தனங்கள் தோழமை நெஞ்சங்களே!
கடந்த பத்து மாத காலங்களாகக் கிண்டிக் கிளறி இறக்கி ஆற வைத்துப் பரிமாறும் இந்த அரிய புத்தகம்தான் இன்றைய பதிவு.
வீரத்தைக் கேசரியாகக் கிண்டிக் கிளறிப் பரிமாறி வெறுமே வாழ்ந்தது போதுமா? காமிக்ஸ் சுவையைக் கொஞ்சமே கொஞ்சமாகக் கூட சேர்த்து வாழ்வின் ருசியை உணருங்களேன் என்கிற கோரிக்கையுடன் பத்து மாதங்களாகச் சுமந்து திரிந்து கொண்டிருந்த சித்திரக்கதை இந்த "வாழ்ந்தது போதுமா?"
முதல் பதிவு:
http://johny-johnsimon.blogspot.in/2015/01/001-vazhnthathu-pothumaa-comics-series.html

ஒரு தொடரைத் தொடர் போன்றே வெளியிட்டால் நம் உடனடி உணவுப் பிரியர்களின் காலக்கட்டத்தில் எத்தனைப் பேர் தாக்குப் பிடித்து வாசிப்பார்கள் என்கிற ஆராய்ச்சியின் (ஹி ஹி உங்கள் பொறுமையை பொறித்து வறுத்து எடுத்து) விளைவாகத்தான் இந்த வாழ்ந்தது போதுமா சித்திரத் தொடரை சித்திர வடிவாகவே வெளியிடும் (கிறுக்கு?) யோசனை என்னுள் உதயமானது.
பத்து மாதங்கள் கருவாகச் சுமந்து, தமிழ்-ஈழத் தமிழ் சுவையைக் கலந்து உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த நாட்கள் என் வாழ்வில் விசேடமானவை. இந்த நாட்களில் யாரும் சீக்கிரம் முடியுங்கள் என்று அன்புத்தொல்லை விடுக்க மாட்டார்களா? என்கிற கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் திரு. பாலாஜி சுந்தர் அவர்கள். இந்தக் கதையை ஆர்வத்துடன் வாசித்து வந்திருந்தால் மட்டுமே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க முடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
இதற்கு மேலும் உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பாமல் இன்றைய நிறைவுப் பகுதிக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன். வாசித்து விட்டு வாருங்கள்!

















* ஒரு கதையின் நிறைவுப் பகுதியின் பலூனில் கதையின் தலைப்பு வருவது என்பது வித்தியாசம்தானே? "ஊரையும், உலகையும், ஏமாற்றி நீங்கள் வாழ்ந்தது போதுமா?"

*இந்தக் கதையின் நாயகன் இன்ஸ்பெக்டர் குமார் என்கிற முத்துவைக்
கவனித்தீர்களா?
இப்போது கீழே பாருங்கள்.


நம் மனம் கவர்ந்த நாயகன் முத்து ராமன். அல்லவா? இருவரது உருவ ஒற்றுமையையும் , கதாசிரியர் மற்றும் ஓவியர் திரு சந்ரா அவர்கள் காட்சிப்படுத்தியுள்ள விதம் கூடத் தனித்துவம் வாய்ந்ததுதானே? நம் நண்பர்கள் இந்தத் தொடர் வந்த பத்து மாதங்களும் ஒரு முறை கூட ஒற்றுமையை உணரவில்லையா?
இதை ஏன் இந்தத் தொடர் முடியும் தருணத்தில் கேட்கிறேன் என்றால் நம் நண்பர்கள் இப்போதெல்லாம் மேம்போக்கான வாசிப்பு என்கிற தளத்துக்கு நகர்ந்து வருவது ஒரு வாசகனாக எனக்குக் கவலை அளிப்பதாகவே இருக்கிறது. இன்னும் உணர்ந்து கதையுடன் ஒன்றும் கலையை மீண்டும் தூசு தட்டி எடுக்க வேண்டிய நேரம் இது தோழமை உள்ளங்களே.
நிறைய ஓவியக் கண்காட்சிகள் ஓவியரது தூரிகை ஜாலங்களைக் காட்சிப் படுத்துகின்றன. வெறும் ஒற்றை ஓவியமே ஓராயிரம் இதயங்களைக் கவர்ந்து விடுகிறது. அதிலும் நமக்குப் பிடித்த நாயகனை மையமிட்டு வரையப்பட்ட சித்திரங்கள் பலத்த வரவேற்பைப் பெறுவதைக் காண்கிறோம்.
சித்திரக் கதைகளும் தங்கள் வரையில் தனித்துவம் மிக்கவையே தோழர்களே. ஒவ்வொரு பிரேமுக்கும் உயிர் கொடுத்து, அடுத்த பிரேமுக்குள் தொடர்ச்சி விடுபடாமல் வரைவது என்பது நிச்சயம் ஒரு ஆழ்ந்த தியானமே என்பது என் தாழ்மையான கருத்து. அவசரப் போக்கில் அள்ளித் தெளித்து விட்டுப் போகும் கதைகளுக்கு நடுவில் இந்த வாழ்ந்தது போதுமா தொடர் கதை தனித்து நிற்கிறது. எங்கோ இலங்கை மண்ணில், நம் தமிழ் மொழிக்கு அழகு சேர்க்கும் விதத்தில், தமிழ் மண்ணின் நாயகனை மாடலாக வைத்து வரையப்பட்டு, எங்கும் பொருந்துமாறு கதையோட்டத்தை நீரோடை போன்று தெளிவாக ஒரு திரைக்காவியம் போன்ற திருப்பங்களுடன் வழங்கிய சந்ரா அவர்களுக்கும், அந்த சித்திரக்கதையினைப் பிரசுரித்துத் தமிழ் மண்ணின் மக்களைப் பெருமைப்படுத்திய வீர கேசரி இதழுக்கும், காணவே கிடைக்கா எத்தனையோ கதைகள் நம் தமிழ் நாட்டிலேயே எங்கெங்கோ ஒளிந்தும், தொலைந்து, அழிந்தும் வந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் என்றோ தனது சேமிப்பில் குருவி சேர்ப்பதைப் போல் சேர்த்து வைத்து உரிய காலம் வந்ததும் எடுத்து வெளிக்காட்டி, இதனை வெளியிடுவதை ஊக்குவித்து, எங்கும் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்ப்பிக்கும் விதமாகத் தன் சேமிப்பில் இருந்து எடுத்துக் கொடுத்த அருமை சகோதரர் திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், தொழில் நுட்ப உதவி அளித்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், திரு.சந்ரா அவர்கள் குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு.அபிஷேக் அவர்களுக்கும், திரு. பிரதீப் சுந்தரேஸ்வரன் அவர்களுக்கும், இதுவரை வாசித்தும், நேசித்தும் வந்த அனைத்து வாசக செல்வங்களுக்கும், இந்த நேரத்தில் என் அன்பினையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக-

அன்னாரது நினைவுகள் என்றும் வாழும் -இந்த வாழ்ந்தது போதுமா கதையும்.
என்றும் அதே அன்புடனும், நெகிழ்வுடனும் உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் இனிய நண்பன் ஜானி.  

வியாழன், 8 அக்டோபர், 2015

யெகோவா கிதியோனைத் திடம் பண்ணுகிறார்...!

வணக்கங்கள் இறைவனின் அன்பிற்குப் பாத்திரமானவர்களே.
இன்று நாம் வாசிக்கவிருக்கும் சித்திரக்கதை யெகோவாவின் சபையினரது உருவாக்கத்தில் வெளியாகி உள்ள சரித்திரக் கதை. அவர்களது குழுவினருக்கு நன்றியும், அன்பும். 

கிதியோன் ஒரு சாதாரண மனிதன். திடீரென்று இறைவனிடத்தில் இருந்து வரும் அழைப்பை மறுக்காமல் ஏற்று அதன்படி நடந்து வெற்றியை ஈட்டுகிறார். விவிலியம் உரைக்கும் மனிதர்கள் வரிசையில் இவருக்கு ஒரு அருமையான  இடம் உண்டு. அவரைத் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு நியாதிபதியாக மாற்றினார். இறைவனின் திருச்சித்தத்தின்படி நடக்கிறவர்கள், பேறு பெற்றவர்கள்.

வாசிக்கப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.




இறை நம்பிக்கையும், விசுவாசமும் இருந்தால் எப்படிப்பட்ட பெரும்படையினையும் அஞ்சி ஓடச் செய்து விடலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமே இந்தக் கதை. 
வாசித்து மகிழ்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.

திங்கள், 5 அக்டோபர், 2015

ஒரு பிரியாணியின் கதை...

திகட்டத் திகட்டத் தின்று
உறங்கினேன் சிக்கன்
பிரியாணி, நேற்றிரவு
காலை எழுப்பியது
எங்கோ ஒரு  சேவலின்
கொக்கொரக்கோ கூவல்
மனதின் உள்ளே ஒரு

உதறல் –அடடா.

சனி, 3 அக்டோபர், 2015

வீரகேசரி - ஒரு வித்தியாசமிகு விளம்பரம்.

வணக்கம் வாசக நெஞ்சங்களே.
இந்த விளம்பரத்தை ஏற்கனவே நமது வலைப்பூவில் அளித்துள்ளேன். இத்தனை காலமாக இந்தத் தொடரைத் தொடர் போன்றே கொண்டு வர எண்ணி இருந்தாலும் நேரமும் காலமும் சிறிதே சிறிது நீட்டி விட்டது, தாங்கள் அறிந்ததே. ஆனால் இந்த விளம்பரம் கூறும் செய்திகளை யாரெல்லாம் உற்று நோக்கி இருக்கிறீர்கள்?

*முதல் விளம்பரம் ராஜ ஸீமா என்று ஒரு தியேட்டர் இருப்பதாகவும் அங்கு சிவாஜி - ஜெயலலிதா நடித்த பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படம் விரைவில் திரையிடப்பட விருப்பதாகவும் என்றோ ஒரு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து இரண்டுகளில் ஒரு அக்டோபர் மாத வியாழனில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

*சற்று கீழே உற்று நோக்கினீர்கள் என்றால் நமது சித்திரக்கதை நாயகர்களில் குறிப்பிடத்தக்க பாத்திரமான டேஞ்சர் டயபோலிக்கின் ஆங்கில வண்ணப்படம் காலை பத்தரை மணிக்கு மட்டும் ராஜ ஸீமாவில் திரையிடப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கவனித்தீர்களா? இது மிகவும் அரிதான ஒரு செய்திதானே? நமது நாயகன் அபாய மனிதன் டயபோலிக் நம் மண்ணையும் தொட்டுவிட்டுத்தான் இலங்கை சென்று இருப்பான் இல்லையா? அதன் பின்னரே லயன் காமிக்ஸ் மூலமாக 1987 வாக்கில், நாற்பத்து நான்காவது வெளியீடாக
வெளியாகி நம்மை இன்பக்கடலில் ஆழ்த்தி ஒரேயொரு முத்தான கதையுடன் வெகுகாலம் காக்க வைத்துப் பின்னர் இப்போது லயனின் புத்தம்புது அவதாரத்தில் அடிக்கடி சந்திக்கத் துவங்கி இருக்கிறான். 

*உடனடி  உலகில் அவசர அவசரமாக அள்ளி விழுங்கி அலுவலகத்துக்கு மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடிடும் இயந்திரத்தனம் நிறைந்த காலத்தில் வாசிப்பு என்பதும் வெறுமே இயந்திரத்தனமாக மென்று விழுங்கும் ஒரு சங்கதியாக மாறிக்கொண்டே வருகிறது.  எனவே வாசகர்களின் இரசிப்புத் தன்மையும்  -உடனடி வாசிப்பாகத் தேய்ந்து மறைந்து கொண்டே வருகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்டவே இதனை இங்கு குறிப்பிடுகிறேன். யாரையும் கலாட்டா செய்வதற்காக இல்லை. நமக்குத் தெரிந்த ஒரு நாயகனைக் குறித்து இதுவரை யாருமே மூச்சு விடவில்லையே நண்பர்களே? வாசிப்புத் தன்மை சாதாரண வாசகர்களிடம் இருக்கலாம். ஆனால் சித்திரக்கதை வாசிப்பு என்பது அதைவிட ஆழமானதொரு அனுபவம்தானே? அதன் முத்துக்களைக் கண்டெடுத்தவர்கள் இன்னுமின்னும் மின்னுவார்கள் என்பதுதான் நாம் காண்பது. அதனை மீண்டும் வளமாக்கிக் கொள்ள வேண்டுமாக நம் திசை இருக்க வேண்டும். உற்றுப் பார்த்துப் படிங்க மக்கா. ஹீ ஹீ ஹீ.

*அப்புறம் அந்த சிவாஜி-பத்மினி நடித்த படம் என்ன என்று யூகியுங்களேன்?

*வவுனியா போலீஸ் -வவுனியா காவல் நிலையத்துக்கு எதிரில் ஒரு கட்டிடம் விற்பனை விளம்பரம்.
*கொழும்பு மாநகர சபையின் வரி செலுத்தும் அறிவிப்பு என்று இந்தப் பக்கமே நிறைய தகவல்களைக் கொட்டுகிறதுதானே?

என்றும் அதே அன்புடன்-உங்கள் இனிய நண்பன் ஜானி.

   

வெள்ளி, 2 அக்டோபர், 2015

வாழ்ந்தது போதுமா? சில துளிகள்....

“வாழ்ந்தது போதுமா” என்கிற இந்த சித்திரக் கதை 19.10.1972 – 15.02.1973 வரையிலான காலக்கட்டத்தில் வீர கேசரி நாளிதழின் ஒரு பகுதியாக வெளியாகியுள்ளது.




வாழ்ந்தது போதுமா கதாசிரியர் மற்றும் ஓவியர் திரு.சந்ரா அவர்கள் தொண்ணூற்று ஏழு அத்தியாயங்களில் இந்தக் கதையினை செதுக்கி இருக்கிறார்.  

தொடர் தொடர்ந்து வெளியான காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பது நிச்சயம்.
இந்தக் கதையின் ஆசிரியர் இதனை வடிவமைத்த விதமே அலாதியானது. எந்த இடத்திலும் ஊர்ப் பெயரோ, இடத்தின் பெயரோ குறிப்பிடப் படாமல் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இதனை தங்கள் நாட்டில் (இந்திய, இலங்கை) நடைபெறும் கதையாகவே எண்ணிப் படித்து இன்புற முடியும்.
கதையில் இரண்டு பெயர்களை சூடிக் கொண்டு அலையும் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கது. குமார் என்கிற முத்து, சிங் என்கிற சிங்காரம், ஜெயஸ்ரீ என்கிற நந்தினி  என்று இரண்டு பேரிட்டு அழைக்கும்படியாக கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு.
இக்கதையில் மெல்லியதாக ஓடும் ஈழத் தமிழ் உச்சரிப்பு இதன் தனிச்சிறப்பு. இது போன்று வேறு ஒரு ஈழத் தொடர்புடைய சித்திரக்கதை கிடைக்கும் வரை இது ஒன்றுதான் நம் வசமுள்ள ஈழத் தமிழர்களின் அடையாளம் மிகு கதை என்று சொல்லலாம். வீர கேசரியில் வேறு ஏதேனும் கதைகள் கிடைக்குமா என்று இன்று வரை முயற்சி மேற்கொண்டு வரும் தோழர்களுக்கு என் நன்றிகள்.



கதைச் சுருக்கம் பின்வருமாறு,
கதை எதிர்மறையில்  இருந்து துவங்குகிறது, முதலில் சிங்காரம் எப்படி சிறையில் கிடைத்த உதவியுடன் தப்பிச் சென்று தாஸ், ஜெயஸ்ரீ கூட்டணியில் இணைந்து சிங் அவதாரம் எடுக்கிறான் என்பதை முதல் பகுதி விளக்குகிறது.
தாஸுடன் கடத்தல் தொழிலில் சிங் ஜெயஸ்ரீயின் ஆலோசனைப்படி இணைந்து பணிபுரிகிறான்.   
தாஸ், ஜெயஸ்ரீயைக் காதலித்து அதனால் உயிரைப் பறிகொடுக்க, அவன் இடத்துக்கு சிங் நகர்கிறான். தாஸிடம் கடத்தல் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அவனுக்கு தாஸ் இறந்ததால் உண்டான அச்சத்தில் கடத்தல் பொருளுடன் தப்பிக்க எத்தனித்தும் ஜெயஸ்ரீயின் குறுக்கீடு காரணமாக தப்பிக்க முடியாமல் போகிறது.
ஒரு நாள் ஒரு கொலைக்காரியிடம் இருந்து ஒரு பெண்ணைக் காக்கிறான் தாஸ். அந்தப் பெண் தன்னைத் துரத்தியவள் யார் என்று தெரிந்து கொண்டவர்களை எல்லாம் கொன்றுவிடும் குணாதிசயம் படைத்தவள் என்கிறாள். கிட்டத்தட்ட கறுப்பு விதவை சிலந்தி போன்று. அவள் பெயர் நந்தினி என்றும் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவள் நடிகையாக இருந்தபோது கோடீஸ்வரர் செல்வரத்தினம் என்பவரைக் கொலை செய்தவள் என்றும் கொலைக்கு சாட்சியாக இருந்தவர்களையும், வழக்கை விசாரித்த நீதிபதியையும் கொலை செய்து விட்டு எங்கோ வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை. அவள் உள்ளூரில்தான் இருக்கிறாள். அவளுடைய முகம் தீயில் கருகி அடையாளமே தெரியாமல் ஆகிவிட்டது. அதனை செய்தது தான்தான் என்றும் அதற்காகவே தன்னைக் கொலை செய்யத் துரத்துகிறாள் என்றும் அப்பெண் கூறுகிறாள். அவள் தன்னுடைய சகோதரியும் கூட என்று அதிர்ச்சியளிக்கிறாள்.

அவளைத் தன்னுடனேயே தன் மறைவிடத்துக்கு அழைத்து வருகிறான் சிங்.  
ஜெயஸ்ரீ இது கண்டு கோபம் கொள்கிறாள். அவள் ஒரு இரகசிய உளவாளி என்று திட்டமாகக் கூறுகிறாள். எனவே அவளைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் சிங் அவளைத் தேடிட அவளோ காவல் நிலையத்துக்கு சிங்கின் காரினை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறாள். அங்கு இன்ஸ்பெக்டர் குமார் என்பவரை சந்திக்கிறாள். தொடர்ந்து வரும் சிங் காவல் நிலையத்திலேயே அவளை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்புகிறான்.

ஆனால், அவனது கார் காவல் நிலையத்திலேயே இருக்கிறது. அதனைக் கொண்டு அவனைப் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சும் அவனை ஜெயஸ்ரீ கவலைகொள்ள வேண்டாம் என்கிறாள். அவளது கண்களும் ஏனோ கலங்குகிறது.
இதற்கிடையே, அந்தக் காரின் உரிமையாளரை சந்திக்கும் இன்ஸ்பெக்டர் குமாரிடம் ஏற்கனவே தொலைந்து போன தன்னுடைய கார்தான் அது என்று கோடீஸ்வரர் அஸ்கார் ஜி கூறுகிறார். கார் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் கடத்தல், கொலை தொழில்களின் மையப் புள்ளியே அவர்தான். சிங்குக்கு உதவியாக இன்னொரு மரணதண்டனைக் கைதியைத் தப்பிக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இம்முறை ஆக்சிஜன் சிலிண்டர் ஒரு சிறைக்காவலர் மூலமாக உள்ளே போகிறது. அதன் வாயுவைப் பயன்படுத்தி கம்பியை உருக்கி கைதி ஒருவன் தப்பிக்கிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஜெயஸ்ரீ (அவள் கண்ணாடி அணிந்திருப்பது இந்த அத்தியாயத்தின் விசேடம்) இடம் சிங் தன் சந்தேகத்தை வெளியிடுகிறான். வந்திருப்பவன் இன்ஸ்பெக்டர் குமார் ஜாடையில் இருப்பதாகக் கூறவே குமார் இவன் இல்லை என்று உறுதிப்படுத்த அவனைக் கொன்று விடும் எண்ணத்துடன் செல்லும் சிங்குடன், முத்துவையும் அனுப்பி வைக்கிறாள் ஜெயஸ்ரீ.


விமான நிலையத்தில் வைத்து அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற கிளம்பிக் கொண்டிருக்கும் குமாரை சுட்டுக் கொல்கிறார்கள். முத்து, சிங்குடன் அதன் பின்னர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறான். ஒரு நாள் சிங்கின் ஆசையைத் தெரிந்து கொண்ட முத்து ஜெயஸ்ரீயை அவனுடன் இணைத்து வைக்கிறான். இடையே அவளது அலுவல் அறையை முத்து திருட்டுத்தனமாக சோதித்துக் கொண்டிருக்கும்போது ஒரு அடியாளிடம் சிக்கிக் கொள்கிறான். அந்த அடியாளை மடக்குகிறான். அடியாளின் பெயர் ஆனந்தன். அவனை மற்றவர்கள் தேடத் துவங்குமுன்னர் முத்து சிறையில் அடைக்கிறான். மற்றவர்களது விவரங்களை முழுமையாக சேகரித்த பின்னர் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் முத்து வடிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் குமார்.

ஆனந்தன் சிறையில் இருக்கும் செய்தி தெரிந்த ஜெயஸ்ரீ அவனைக் கொன்றுவிட்டு வர முத்துவிடம் கூறுகிறாள். அவளது இரகசியத் தலைவனுக்குத் தொலைபேசும் முத்து ஆனந்தனை ஜெயஸ்ரீ சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், சிங்கும் அவளும் காதலிப்பதாகவும் வலையை விரிக்கிறான்.
இரகசியத் தலைவன் அஸ்கார் ஜி கோபமாகி நேரில் வந்து நிலைமையை அறிந்து ஜெயஸ்ரீயின் சுயரூபத்தை சிங்கிடம் காட்டுமாறு உத்தரவிடுகிறான். வழக்கமாக தன் சுய ரூபத்தை அறிந்தவர்களைக் கொன்று விடுவது ஜெயஸ்ரீ என்கிற நந்தினியின் குணம். அதன்படியே தன் சுயரூபத்தை வெளிக்காட்டிய பிளாக் விடோ சிலந்தி ஜெயஸ்ரீ, சிங்கைக் கொலை செய்யத் துரத்த அவனை விளக்குகளை அணைத்து முத்து என்கிற இன்ஸ்பெக்டர் குமார் காப்பாற்றுகிறார்.
அவனுக்கு உதவுவதாகக் காட்டிக் கொண்டு டேப் ரிக்கார்டரில் அவனது வாக்குமூலத்தை இரகசியமாகப் பதிவு செய்து விடுகிறார். பின்னர் அவனைக் காவலர்களிடம் ஒப்படைக்கிறார்.
சிங் காவலர்களிடம் சரணடைந்து விட்டதாக நினைக்கும் அஸ்கார் ஜி, தன் சொத்துக்களை விற்று எடுத்துக் கொண்டு ஜெயஸ்ரீயையும் ஒழித்து விடத் திட்டமிடுகிறான். இதனை இன்ஸ்பெக்டர் குமார் ஜெயஸ்ரீக்கு தெரிவித்து விடுகிறார். கூட்டணியில் குழப்பம் ஏற்படுகிறது.
விமானத்தில் தப்பிக்க முயலும் கடத்தல் கும்பல் மொத்தமும் இன்ஸ்பெக்டர் குமாரால் மடக்கப்படுவதுடன் இக்கதையானது நிறைவை எட்டுகிறது.
விரைவில் நமது வலைப்பூவிலும் நிறைந்து, திசை எங்கிலும் மணம்பரப்பி,  உலகெங்கிலும் தமிழ் பேசும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி நீண்டதொரு விடை கொடுத்து அனுப்பப் போவது நிச்சயம். இந்த தருணத்தில் திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கு என் நன்றிகளைக் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அய்யா அவர்கள் ஒரு சிவில் என்ஜினியர். அன்னாரது சித்திரக்கதைகளின் மீதான தீவிரத் தேடலும் தாகமுமே இன்று உங்கள் முன்பு வாசமிகு மலராக மலர்ந்துள்ளது. 

அவருக்கு என் இதயப் பூர்வமான நன்றிகள். தொழில்நுட்ப ஆதரவை அளித்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களுக்கும், இடையறாத பணிகளுக்கிடையே இந்தக் கதையை வாசித்து ரசித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொண்ணூற்று ஏழு அத்தியாயங்களில் நிகழும் இந்தக் கதைக்களம் தொடர்ச்சியாகப் பதிவிடப்படாமல் நிறைய இடைவெளி எடுத்துக் கொண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இடையே என் வாழ்விலும், பணியிலும் நிறைய மாற்றங்கள், சவால்கள். தொடர்ந்து ஆதரவளித்து “அந்தக் கேசரியை எப்போது கிண்டி முடிப்பீர்கள்? “ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்ட நண்பர்கள் எனக்கு இருப்பதாலேயே என் உலகம் சந்தோஷத்தால் நிறைந்து வழிந்து ஓடுகிறது. நீங்கள் இல்லாமல் இது அருமையான முடிவுரையைக் கண்டிருக்காது தோழர் படைகளே. விரைவிலேயே கிண்டி முடித்து விடுகிறேன், நீங்கள் கவலையே படாதீங்கோ பாலாஜி, வினோ ஜி. நீங்க கேட்டது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிங்க. யாருமே கேட்காமலேயே இருக்கிறார்களே என்றொரு வருத்தம் இருந்ததுங்க. ஒருவேளை பிரியலையோ? என்கிற சந்தேகமும் இருந்துதுங்க. அதுதாங்க இந்தப் பதிவு. 

நிற்க, 
இது போன்று இன்னும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவை நம் தமிழ் மக்களின் அடையாளங்கள்.

 என்றும் வென்று நிற்கும் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சித்திரக்கதைப் பூக்களின் அணியில் இன்னும் ஒரு மலரைத் தொடுத்து எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி அர்ப்பணிக்கிறேன் நம் தமிழ் நெஞ்சங்கள் சார்பாக....என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.



ஸ்ப்லாஷி_ஒரு ப்ளாடிபஸ்_அறிமுகம்_சிறார் காமிக்ஸ்!

 இனியவர் இயேசு பிறப்பின் கொண்டாட்ட நிகழ்வான  கிறிஸ்துமஸ் தின நன்னாள் வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே.. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும்.. ...