வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

ஜானி டைனமைட்_அறிமுகம்

 

அநீதிகள் அலறியோடும்.. அக்கிரமங்கள் வாலை சுருட்டிக் கொள்ளும்..
இலக்கொன்று மனதில் கொண்டு இவன் குதிரையிலேறிப் பறந்தாலே..
திக்கெட்டும் தெறித்திடுமே கொள்ளைக் கும்பல்..
வந்தானே ஒரு வெகுமதி வேட்டையனே.. 
சீறும் இவன் தோட்டா முன்
நில்லாதே!!!
ஓடு..ஓடு..ஓடு..
செவ்விந்தியர் சேனைக்குள்ளும் புகுவான்..
அமெரிக்காவின் இராணுவத்திலும் பாய்வான்..
பொதுமக்கள் நிம்மதியை 
மூச்சுக் காற்றென எண்ணுவான்..
அற்பப் பதர்களை அடி வேரோடு பிடுங்கியெறிவான்..
இவன் பார்வைக்குப் பின்னால்
பல நூறு டைனமைட் வெடிகள்..
இவன் அசைவுக்கு முன்னால்
பிதுங்கிடும் பலரது விழிகள்..
அர்கன்சாஸ் அலற அலற
டெக்ஸாஸ் மிரள மிரள
கலிபோர்னியா கதற கதற
இல்லினாய்ஸூம்
கென்டக்கியும்
இன்னபிற ஏரியாக்களும் பதற பதற
பலி கொள்வான் தீயோரை..
காத்திடுவான் நல்லோரை..
இவன் பெயர்..
ஜானி டைனமைட்
தயாராகுங்கள்..

புத்தம்புது புரட்சிக்கு..

கதை எண்-001. வங்கிக் கொள்ளையர்

அந்த மரத்தின் இருள் போர்வைக்குள்ளே தன்னை ஒளித்துக் கொண்டு வெகுநேரமாகக் காத்திருந்தது அந்த உருவம்.. வெகுதூரத்தில் மெல்லியதாக துவங்கிய அதிர்வுகள் நெருக்கத்தில் தடக்..தடக். தடக் என பலமாக அதிரத் துவங்கின.. அந்த நான்கு குதிரையிலும் நான்கு முகமூடிகள்.. எங்கோ கொள்ளையடித்திருந்த பணக் குவியலோடு பாய்ந்து வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தில் வேகம் குறைத்து பயணிக்க எத்தனித்த வேளையில்  திடீரென்று அவர்கள் முன்னே குதித்தெழும்பியது அந்த உருவம். குதிரைகள் ஹீஹீயென ஓசையெழுப்பி கலவரமடைய ககுதிரைகளைக் கட்டுப்படுத்தி நிறுத்திய நால்வர் முன் தன் இரு கரங்களிலும் துப்பாக்கியை ஏந்திய வண்ணம் புன்முறுவலை முகத்தில் தரித்து நின்றான் அந்த வீரன். யாரடா நீ..உயிர் ஆசை இல்லையா உனக்கு..வழியை விட்டு ஒதுங்கடா! அடாவடிக் குரலுடன் குதிரையிலிருந்தவன் உறுமினான். நீ யாரென எனக்கு நன்றாகவே தெரியும்.. பிரபல பேங்க் கொள்ளையன்  ஸ்டான் வில்சன்தானே? மரியாதையாக வங்கிக் கொள்ளைப் பணத்தை ஒப்படைத்து சரணடையுங்கள்.. இல்லையென்றால்..டுமீல்.. குதிரையிலிருந்த ஒருவன் அப்படியே சாய்ந்து விழுந்தான். இது வெறும் பேச்சல்ல. என் ஆணை.. ஒழுங்கு மரியாதையாக சரணடையுங்கள்.. 

கலவரமடைந்த கொள்ளைக் கும்பல் மிரட்டலுக்குப் பணிந்தது. தங்கள் வசமிருந்த பேங்க் பணத்தை ஒப்படைப்பதாகக் கூறி பையைத் தூக்கி வீச விலகி சிரித்தான் ஜானி டைனமைட். ஹெஹெ..இந்த பழைய காலத்து டெக்னிக்குக்கெல்லாம் ஏமாறுவேன் என நினைத்தீர்களா என்றவன் சடசடசடவென தன் தோட்டாக்களை உமிழ்ந்து அத்தனை பேரின் பெல்ட்டிலும் தோட்டாக்கள் உரசிப் போகுமாறு செய்ய மூன்று கொள்ளையர்களும் சரணடைந்தனர்.. அவர்களைத் துரத்தி வந்து கொண்டிருந்த ஷெரீப் டைசனின் படையினரின் குதிரைக் குளம்புகள் எழுப்பும் ஓசை தொலைவில் எழும்போது இங்கே பணத்துடன் குதிரைகளில் பிணைக்கப்பட்ட மூவரும் அவர்களின் பார்வைக்குத் தென்பட ஜானி டைனமைட் அப்படியே மாயமானான்.

ஷெரீப் தலைவனின் நெஞ்சில் குத்தியிருந்த காகிதத் துணுக்கை எடுத்து படித்தார். 

டியர் ஷெரீப் டைசன்..

இந்த பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அப்படியே ரிவார்டு தொகையை என் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுங்கள்.

 என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி டைனமைட்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...