வெள்ளி, 29 ஏப்ரல், 2022

திகில் கிராமம்-The Village_வெப் சீரிஸாக..அமேஸான் ப்ரைமில்..

 முன்னை நீ செய்த பிழையொன்று பெரும் பூத உருக் கொண்டதே...

பூதமாய்ப் பிறவியெடுத்துன் வாழ்வைக் கவ்வியதே..

தீயெனில் சுடும் விரல் உணர்ந்தோரில்

சுட்டும் புத்தி கெட்டோரை 

ஒழித்திடும் வேளை பிறக்குமே..

அந்நாளில் காண்போர் கதிகலங்கும்..மாண்டோரும் மீள்வார்..தீமை கொடும் பேயுருவெடுத்து ஆடித் தீர்த்திடுமே.. பயம் கொள்வாய் மானிடா.. கும்பர கும்பர கும்பாலே...

விரைவில்..திகில் கிராமம் வெப் சீரிஸாய் அனல் கக்கக் காத்திருக்கிறது...


திகில் பயணத்தை விரைவில் லைவ்வாகக் காணத் தயாராகுங்கள்.. பாதிப்புக்குள்ளாகும் எளியவர்களின் உணர்ச்சிப் பிழம்பான போராட்டமே இந்த "தி வில்லேஜ்.." தமிழ்நாட்டில் நிகழும் ஒரு கிராபிக் ஆடுகளமே திரையுரு பெற்று ஆர்யாவின் அசத்தல் நடிப்பிலும் ஜான் கொக்கனின் படுபயங்கர நடிப்பிலும் மிரட்டக் காத்திருக்கிறது. தமிழ் காமிக்ஸ் டைம்ஸின் மகிழ்ச்சியான தருணம் இது என்பேன். லோன் உல்ப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு பட்டையைக் கிளப்பி வரும் வேளையில் யாளி ட்ரீம்ஸ் மெகா கூட்டணியில் பிரம்மாண்டமான திரைவடிவில் நெற்றிக் கண் புகழ் இயக்குநர் Milind Rau அவர்களின் செதுக்கலில் அதகளம் புரியக் காத்திருக்கிறது.. Asvin Srivatsangam அவர்களது மாபெரும் முயற்சியில் Amazon prime web series மூலம் உங்களை மிரட்டப்போகும் கதையினை தமிழ்நாட்டை தரிசித்தேயிராமல் கற்பனைக் களம் அமைத்து புகுந்து விளையாடியிருக்கிறார் கதாசிரியர் Shamik Dasgupta .. ஓவியங்களில் மெர்சல் செய்திருக்கிறார் Gaurav Shrivastav..அதனை திரையில் கண்டு மகிழ காத்திருக்கும் காமிக்ஸ் காதலர்களுடன் தமிழக திரை இரசிகர்களுக்கும் விறுவிறுப்பான விருந்து காத்திருக்கிறது....😍😍😍😍



செவ்வாய், 19 ஏப்ரல், 2022

030_மக்கபேயர்கள்_பகுதி_02_விவிலிய சித்திரக்கதை வரிசை

 

வணக்கங்கள் வாசக, வாசகியரே.. தங்கள் பலத்த ஆதரவுடன் இந்த விவிலிய சித்திரக்கதைகள் வரிசை தனது முப்பதாவது நூலில் ஆதியாகமம் முழுவதையும் நிறைவு செய்திருக்கிறது. இந்த பயணத்தில் எனது பக்கபலமாக துணை நின்று உதவிய திரு. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், விவிலிய கதைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதில் ஆர்வம் காட்டிய திரு. ஸ்ரீராம் லக்ஷ்மணன், திரு. குமார், திருப்பூர்  மற்றும் திரு. அலெக்சாண்டர் வாஸ் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 
வாசகர்கள் தங்கள் கிறிஸ்தவ தோழர்களுடன் இந்த நூல்களை ஷேர் செய்தால் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும்  மிகுந்த பயனளிக்கக்கூடிய வரிசைதான் இந்த விவிலிய சித்திரக்கதை வரிசை. இந்த நூல் மக்கபேயர்கள் வரலாற்றினை எடுத்துக் கூறுகிறது. வழக்கம்போல பிடிஎப் இணைப்பை பதிவின் முடிவில் இணைத்திருக்கிறேன். விரும்புபவர்கள் நேரடியாக அங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி. 








தரவிறக்க சுட்டி.. 




if this will published in colour... 

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் 
ஜானி v. சின்னப்பன் 




சனி, 16 ஏப்ரல், 2022

029_மக்கபேயர்கள்_பகுதி_01_விவிலிய சித்திரக்கதை வரிசை

அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு இந்த விவிலிய சித்திரக்கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். 
அனைவருக்கும் ஹேப்பி ஈஸ்டர்.. 
காமிக்ஸ் ஏலம் என்கிற மாய வலைகளில் ஆங்காங்கே சிறுசிறு நல்லவைகளும் இருக்கும். உங்கள் கனவு நூல்கள் கிடைக்கும். உங்கள் மனத்துக்குக் கடிவாளம் போட்டுக் கொண்டு உண்மையிலேயே ஏதேனும் ஒரு புத்தகம் வேண்டுமா? அது உங்கள் வாழ்க்கையில் அத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றா என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து நாலா பக்கங்களிலும் நன்கு விசாரித்தறிந்து கொண்டு புதிதாக வரும் அத்தனை காமிக்ஸ்களுக்கும் உங்கள் ஆதரவை நல்கி பின்னரே உங்கள் கனவு புத்தகத்தை மாத்திரம் தேடி செல்லுங்கள். அதுவே உங்கள் பணத்துக்கும், மனத்துக்கும் நல்லது என்பதனை மாத்திரம் இப்போது இருக்கும் சூழலில் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.. 
சம்பவம்:001. என் 2005-2006 களில் அப்போதெல்லாம் இணையத்தில் முத்தமிழ் மன்றம் அண்ணன் ரத்தினகிரியார் மற்றும்  முத்து டிரை பாட் புகழ் முத்து விசிறியார் ஆகியோரின் பங்களிப்புகளும், கிரவுன் காமிக்ஸ் எனும் இணைய தளத்தில் சில ஸ்கான்களும் (ராணி காமிக்ஸ் இரத்தக் காட்டேறி_007) போன்றவைகளும்தான் எனக்கான ரிலாக்ஸ் டைம்ஸ்.. 
முகநூல் நட்பாக மலர்ந்த முதல் நட்பு அன்பு நண்பர் ஸ்ரீராமுடையது. அவர் உதவியுடன்தான் சித்திரக்கதையின் மாயவலை குறித்து அனைத்தையும் நான் அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் என் நட்பு வட்டத்தில் ஓசி புக் படிக்கும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் எல்லோரும் காமிக்ஸ் என்னும் கனவினை சிறு வயதிலேயே கைகழுவி விட்டவர்கள்தான். என்னை பலமாகக் கலாய்த்த பலரும் ஒரு கட்டம் வரை பார்த்து விட்டு இது திருந்தாது என்று தலையில் அடித்துக் கொண்டு  விலகியவர்களே.. 
சம்பவம்:002. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் என்ற நண்பர் முகநூலில் தைரியமாக தனது கருத்துக்களை சொல்ல ஆரம்பித்த வேளை. அவரைக் கலாய்க்கிறேன் பேர்வழி என்று ஒரு சிலர் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்த வேளை.. சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். தனது இல்லத்துக்கே வரவழைத்து உபசரித்தார். அது மாத்திரமல்ல நண்பர்களே.. நான் கனவு கண்டு கொண்டிருந்த என் தேடல் இதழான முதல் ராணி காமிக்ஸ் இதழ் அழகியைத் தேடி.. அதனை அன்பளிப்பாக எடுத்துக் கொடுத்தே விட்டார். 
சம்பவங்கள் 003 தொடங்கி -இன்பினிட்டி(கால எல்லை கடந்தது)
எத்தனை எத்தனை நண்பர்கள்.. எத்தனை எத்தனை புத்தங்கங்கள்? காமிக்ஸ்கள்? நல்ல மனங்கள்? நிஜமாகவே காமிக்ஸ் குறித்து நான் சிலாகிப்பது என்னவென்றால் எனக்குக் கிட்டிய ஒவ்வொரு நட்பும் எனக்கு இறைவன் கொடுத்த வரமே.. எஸ்.. இதனைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் எனக்குக் கிட்டியதோர் அரிய வரமே..  மறக்க இயலாத நல்ல, நேர்மறையாளர்கள் நிறைந்த இடம் காமிக்ஸ் வட்டாரம். மற்றவை உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பார்த்துப் பழகி மகிழுங்கள். 
நன்றியுடன் நான்..     
இனி புத்தகத்துக்குள் புகலாம் வாருங்கள்.. 
உங்கள் நன்மைக்காக இறுதியில் வழக்கம்போல பிடிஎப் லிங்க் கொடுத்திருக்கிறேன்..  







இந்த நூலை பிடிஎப் வடிவில் வாசிக்க:

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 



வியாழன், 14 ஏப்ரல், 2022

கறுப்பு முகமூடி_மலர் காமிக்ஸ்_தமிழ் புத்தாண்டுப் பரிசு-2022

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை வாழத்தான். தொடர்ச்சியாக நம்மில் பலர் மறைந்தாலும் நாமும் ஒருநாள் மறைவது நிச்சயம் என்றாலும் எங்கே இருந்தாலும் வாழ்க்கையை சோகம் கடந்து மகிழ்ச்சியை மனதில் அமர்ந்து கொள்ள இடமளித்தால் வாழ்க்கையே வரமாகி விடும். இந்த சிந்தனைகளுடன் இந்த பதிவுக்குள் கடந்து செல்வோம். 

கறுப்பு முகமூடி: நமது முகமூடி வேதாளர் என்னும் பிரம்மாண்ட கதா நாயகரை மனதில் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை மனதில் கொஞ்சம் தாண்டி வந்து விட்டால் இந்த கதை நன்றாகவே இருக்கிறது. நாயகர் தனது உளவு நெட்வொர்க் மூலமாக ஒரு அரசு அலுவலகம் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்று சதிகாரர்களின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட முயல்கிறார். ஏகப்பட்ட மோதல்.. முகமூடி தாக்கப்பட்டு கொள்ளையர்களின் இடத்துக்கு   கொண்டு செல்லப்படுகிறார். ஐயகோ.. அவரை ஒரு கூண்டுக்குள் போட்டு இருபுறத்திலும் இரும்பு சுவர் கொண்டு நசுக்க முற்படுகிறார்கள் கடத்தல்காரர்கள்.. அதிலிருந்து எப்படித் தப்புகிறார்? எதிரிகள் வீழ்ந்தனரா என்பதை பரபரப்பான காட்சிகளாக நம் முன் விருந்து படைத்திருக்கிறார்கள் மலர் காமிக்ஸ் நிறுவனத்தினர். பதிப்பாசிரியர் திரு. கே.பாண்டிமணி அவர்களை பிரதானமாகக் கொண்டு மதுரை, வெண்கலக் கடைத்தெருவில் முன்னர் இயங்கிய மலர் பப்ளிகேஷனின் படைப்பினை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர இந்த அபூர்வமான புத்தகம் ஸ்கேன் ஆகும்போது ஏதும் கிழித்துக் கொள்ளுமோ, எதிர்காலத்தில் நல்ல விலைக்கு அபூர்வமான புத்தகம் ஐயா என்று சொல்லி நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பில் ஏதும் பிரச்சினை எழுமோ என்கிற எந்த பிரச்சினையையும் நினைத்துப் பார்க்காமல் உங்கள் அன்பும் அக்கறையும் இந்த காமிக்ஸ் வாசக உலகிற்கு தேவை என்று தானே முன்வந்து புத்தகங்களை ரிஸ்க் எடுத்து அனுப்பி வைத்த அன்புத் தம்பி  டெக்ஸ் சம்பத் அவர்களை இந்த நேரத்தில் மகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த புத்தகம் டிஜிட்டல் மயமாக பல ஆண்டுகள் முன்னரே ஸ்கேன் செய்வதற்கு கொடுத்து உதவிய நல்ல உள்ளத்துக்கு என் நன்றிகள். இந்த புத்தகத்தை வாசிப்பதுடன் தங்கள் மேலான கருத்துக்களையும் பதிவு செய்து தங்களிடம் இதுபோன்ற அபூர்வ காமிக்ஸ்கள் இருப்பின் அவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் தயக்கம் எதுவும் தேவையில்லை. அதே சமயம் உங்கள் நூல்களை டிஜிட்டல் மயமாக்க விரும்பினால் காமிக்ஸ் நண்பர்கள் உதவ எப்போது காத்திருக்கிறார்கள். இலவசமாகப் பெற்றேன் இலவசமாகவே கொடுப்பேன் என்கிற எனது கொள்கை உங்களிடமும் இருந்தால் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம். இது ஒரு தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் டிஜிட்டல் முயற்சி.. (முக நூலில் Tamil comics Times என்கிற காமிக்ஸ் குழுவிலும் இயங்கி வருவதால் அவ்வப்போது அதனையும் சுட்டிக்காட்டுவது என் வழக்கமுங்க!)   

















தமிழ்ப் புத்தாண்டில் இந்த அரிய அபூர்வமான கலைப் பொக்கிஷத்தை உங்களுக்குப் பரிசளித்து நாங்களும் மகிழ்கிறோம்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும். குட்டீஸ்களுக்கும் இந்த நூலினை இலவசமாகக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. நிற்க.. தயவு செய்து நேரம் ஒதுக்கி கொஞ்சம் நூல்களை வாசிக்கவும் செய்யுங்கள். கணினி, கைபேசி யுகத்தில் புத்தக வாசிப்புக்கும் சற்றே நேரம் ஒதுக்குங்கள்.. 
இந்த நூலை தரவிறக்கம் செய்து கொள்ள: 

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி


திங்கள், 11 ஏப்ரல், 2022

புதைந்த நீதி_ரங் லீ காமிக்ஸ் ஏப்ரல் வெளியீடு

 

ரங் லீ  காமிக்ஸின் இந்த ஏப்ரல் 2022 மாத வெளியீடாக மலர்ந்திருக்கிறது புதைந்த நீதி. மொத்தம் ஆறு கதைகள். வண்ணத்தில் முப்பத்து ஆறு பக்கங்களில் திகில் விருந்து படைத்திருக்கிறது இந்த மாத காமிக்ஸ்.





-புதைந்த நீதி

-ரத்தக் காட்டேரியாகிய நான்

-மெழுகு மனிதன்

-குருதி மழை

-ஊசி வாயில் மரணம்

-நிஜமா? பிரமையா?

என்ற ஆறு தலைப்புகளும் ஆர்வமூட்டுவதுடன் கதைக்குள் நம்மை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு விடுகின்றன..



கண்ணீரோடு கொலைக்கரங்கள் நீள துவங்கும் கதைக் கொத்துக்கள் இறுதியில் மரணமடைந்தும் தனது காப்பியத்தைப் பூரணமடைய செய்த ஆன்மாவின் நிம்மதியுடன் முடிவடைகின்றன.. அத்தனை கதைகளிலும் வித்தியாசமான, அமானுஷ்யமான, மர்மமான, திகிலான அனைத்து விதமான உணர்வுகளையும் வண்ணங்களை தெறிக்க விட்டுப் பரிமாறி இருக்கின்றனர் ரங் லீ பதிப்பகத்தார்.



நமது காமிக்ஸ் வாசக வட்டாரத்தை அதிர வைத்த தோழர் பழனி வேலின் மறைவு.. அவரது குடும்ப நலத்திற்காக இந்த மாத வெளியீடான இந்த புதைந்த நீதி புத்தகத்தின் வருமானம் மொத்தத்தையுமே அப்படியே தரவிருக்கிறார்கள் ரங் லீ காமிக்ஸ். வாங்கி வாசிக்கும் நம் வாசகர்களுக்கும் மன நிறைவு கொடுக்கும் அருமையான விஷயம் இது.  

 


நம்மாலான ஆதரவாக காமிக்ஸ் வாங்கி வாசிப்போம். பிள்ளைகளுக்கும் காமிக்ஸ் வாசிப்பை கற்றுத்தருவோம். அவர்கள் அழகான உலகில் சித்திரக்கதைகளுக்கும் இடம் உண்டாக்கித்தருவோம். 
என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...