அவளின் விரல் நகத்தில் உரசிய கோலமாவின் துகள்களும் வைரத் துண்டுகளாய் மாறி ஒளிவீசிடும் மாயமென்னவோ...!
விதவிதமான வண்ணங்களில் ஒவ்வொருநாளும் அலங்காரமாகிறது அவளின் பாதம் நடனமாடியபடியே வரைந்திட்ட வாசல் கோலம்..
சாலையின் சிறுவர் குழாம் ஆர்ப்பரித்து அருவிபோல ஓடிக் கலையும் கோலத்தின் சிதறல்கள் கூட தரையில் மெருகாகிப் பளிச்சென சிதறுகிறது..
தினம்தினம் இன்றென்ன கோலம் என்னை முக்திப் பேரின்பமயமாக்கிடும் என்றெண்ணியே உதிக்கும்போதே வெட்கம் பூக்க தலையை எட்டிப் பார்க்கிறான் கதிரவன்..
இருள் கவிழும் போதினில் அன்றிட்ட கோலம் மண்ணோடு மண்ணாய் மாயமானாலும் வானின் நட்சத்திரங்கள் தம்மோடு கோலத் துகள்களை விண்ணுக்கிழுத்து இணைத்துக் கொண்டு விட்டதாகவே பிரமை தட்டுகிறது..
#கவியதிகாரம் #கோலஅதிகாரம் #jscjohny #ஜானி #ஜானிசின்னப்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக