Wednesday, 15 October 2014

மலை மேல் மர்மம்_தினமணி கதிர் காமிக்ஸ்!!!

வணக்கம் வாசக நண்பர் படைகளே!
பட்டாஸ் வாங்கிட்டீங்களா? எல்லா தீபாவளி சிறப்பிதழும் வாங்கிக் குவிச்சிட்டிங்களா? தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பாகவும், என் வலைப்பூ சார்பிலும் தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஹாப்பி தீப ஒளி நல்வாழ்த்துக்கள்! வெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட தீபமேற்றுவதற்கு முதலிடம் கொடுங்களேன். நரகாசுரன் என்கிற அரக்கன் மானிடரையும், தேவரையும், முனிவர் பெருமக்களையும் வாட்டி வதைத்த போது விஷ்ணு அவதரித்து அரக்கர் படையினை நசுக்கி நரகாசுரனை அழித்த போது தனது நினைவாக இந்த திருவிழாவினைக் கொண்டாட அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அவனது அழிவினை தீபம் ஏற்றி, வெடி வெடித்துக் கொண்டாடுவதாக ஐதீகம்.

     

      இந்த வருடம் டமால் டுமீல் எல்லாம் அருமை நண்பர்களது புண்ணியத்தில் முக நூல் பக்கங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. தீண்டத் தீண்ட இனிக்கும் தீந்தமிழின் பொடினியின் முத்தம், பொன்னால் இழைத்த வேலின் பொடியன் பென்னி, அயல் நாட்டு காமிக்ஸ் காதலர்களின் பாரகுடா, ஆர்பிட்டல் என தமிழுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிற கதைகளை அடையாளம் காட்டும் முயற்சியாக பல கதைகள் புதுப்புது பாணியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நண்பர் ரஞ்சித் அவர் பாணியில் தாறுமாறான அப்லோடுகளால் தன் பக்கத்தினை சூடாக வைத்துக் கொண்டிருக்கிறார். (பார்த்து சாமி, திகட்டி விடும் போலிருக்கிறது உங்களது பந்திப் பரிமாறும் பாணி!)
அப்புறம், ஒரு சின்ன நீதிக்கதை!
ஒருவனுக்கு பொன் முட்டையிடும் வாத்து கிடைத்ததாம். அவனுக்கு தினம் ஒரு முட்டை இட்டுத்தருமாம் அந்த வாத்து. அந்த வருமானத்திலேயே அவன் பெரிய பணக்காரனான பின்னரும், பண ஆசை அவனை விட்டுப் போகாமல், ஒரு நாள் அந்த வாத்தை அறுத்து வயிற்றில் இருக்கும் அத்தனை முட்டையையும் எடுத்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு அந்த வாத்தைக் கொன்றுவிட, அதன் வயிற்றில் இருந்த ஒரே முட்டை அவனைப் பார்த்துக் கண்ணடித்ததாம்! அந்த கதையாக நம்ம தினமணி கதிரில் வெளியான அருமையான சித்திரக் கதைதான் இந்த “மலை மேல் மர்மம்!
கல்பலதா அவர்களது எண்ணத்தில் உதித்து, ஓவியர் செல்லம் அவர்களது தூரிகையின் மையில், வெள்ளைத் தாளையே வெள்ளித்திரை எனக் கொண்டு வெளியாகிய கதை - இந்த “மலை மேல் மர்மம்!
சந்தியா என்கிற அழகி ஒரு புது பணக்காரி! அவளுக்கு ஒரு காதலன். ஒரு தோழி. இந்த மூவருக்குமிடையேயான பந்தத்தை வலியுறுத்தி சொல்வதுதான் இந்த “மலை மேல் மர்மம்!
காதல், நட்பு, துரோகம் என்கிற நேர்க்கோட்டில் பயணமாகி இறுதியில் சத்தியம் மட்டும்தான் சாதிக்கும் என்பதை எடுத்துக் காட்டி நிற்கும் நீதிக் கதைதான் இந்த “மலை மேல் மர்மம்!
இனி கதை கீழே!
கதைப்படி, சந்தியா ஒரு புத்தம்புது பணக்காரி. தான் வாங்கிய கார் பழுதடைந்து விபத்தில் சிக்கி தனது நடக்கும் ஆற்றலை இழந்து தனது எதிர்காலத்தை சக்கர நாற்காலியில் சுழற்றிட வேண்டிய அவலம். அவளது காதலன் ஆதரிப்பானா என்கிற சந்தேகம் அவளைத் துரத்த, அவள் தனது தோழியிடம் அடைக்கலமாகிறாள். தனது தோழியினை கோவையில் இருந்து வரவழைத்து அவளுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்து விடுகிறாள். இந்த நிலையில் தனது காதலன் என்ன செய்கிறான் என்பதனை அதிரடி திருப்பங்களுடன் வழங்கியிருக்கிறது தினமணி கதிர் இதழ்!  
படித்து மகிழுங்கள்! உங்களுக்கு மகிழ்வை இந்தக் கதை தந்தால் அதற்கான முழுப் பெருமையும் தினமணி கதிர் இதழுக்கும், கதாசிரியர் கல்பலதா மற்றும் ஓவியர் செல்லம் அவர்களையே சாரும்! நன்றிகள்! 
முகமறியா நண்பர்களையும் முகநூல் முன்னணியில் நின்று உருவாக்கி வருகிறது என்பதற்கு சான்றாக, கோவில்பட்டியில் இருந்து அருமை நண்பர் ராஜசேகர் வேதா அவர்கள் தனது அரிய சேகரிப்பில் இருந்து "யார் இந்த மனிதர் இயேசு?" என்கிற நூலினை அன்பளிப்பாக அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்தினார். நன்றி நண்பரே! சென்னை வந்தால் சந்திக்க மறவாதீர்.   


அப்புறம் ஒரு விஷயம்! பத்திரிகை உலகில் புதுப்புது இதழ்கள் வெளியாகி வருவது தாங்கள் அறிந்ததே! சில சாம்பிள் இதழ்கள் அவ்வப்போது எங்கள் காவல் நிலையத்தினை வந்தடைவது உண்டு. என் கண்ணில் அவ்வாறு படும் ஒரு சில இதழ்கள் குறித்து அவ்வப்போது பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். அவ்வகையில் என்னைக் கவர்ந்த புதிய ஒரு இதழ் இந்த "ஒரே நாடு!"
முன் பக்கம், தொடர்பு கொள்ள...போன்ற பக்கங்களை இங்கே பகிருகிறேன். ஆர்வமிருப்போர் நேரடியாக அவர்களைத் தொடர்பு கொள்ளுங்களேன்.  
படித்து மகிழுங்கள்! உங்களுக்கு மகிழ்வை இந்த "மலை மேல் மர்மம்" கதை தந்தால் அதற்கான முழுப் பெருமையும் தினமணி கதிர் இதழுக்கும், கதாசிரியர் கல்பலதா மற்றும் ஓவியர் செல்லம் அவர்களையே சாரும்! நன்றிகள்! அட்வான்ஸ் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்_Suresh Chand

for pdf hit link below: IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்