வெள்ளி, 15 ஜனவரி, 2016

அபாய இருள்_பொங்கல் திருவிழா நல்வாழ்த்துகள்!

வணக்கங்கள் தமிழ் கூறும் நல்லுலகோரே!
அனைவரையும் அரவணைக்கும் ஆதவனின் திருநாளில், இன்பப் பெருநாளில் பொங்கலிட்டுக் குலவையிட்டு, வெல்லப் பாகின் இன்பம் வெள்ளமெனப் பாய்ந்தோட, கரும்பின் தீஞ்சுவைத் தேனை ருசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
இம்முறை எங்கள் சார்பில் சித்திரக் கதையாக அபாய இருளை அன்பளித்து உங்கள் சித்திர மனதில் சிறிதேனும் ஒட்டிக் கொள்ளும் ஆசையில் இருக்கிறோம். இதோ உங்களது பொங்கல் பரிசு:


அபாய இருள்: கதை என்ன என்றால் உலகை நாம் மட்டுமே ஆண்டு கொண்டிருக்கிறோம் என்கிற அடிப்படை மனதின் கர்வத்தில் எத்தனையோ மானுடர்கள் புவியை குத்திக் குதறி தட்பவெப்பம் பாதிக்க வைத்து அழிவை அவ்வப்போது வெள்ளம், புயல், சுனாமி என்று அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அழிவிற்குத் தப்பிப்பது சாத்தியம் இல்லை என்பதைப் பார்க்கக் கூட அவர்களது அறிவியல் மனம் ஒப்புக் கொள்வதில்லை.
இவர்கள் அனைவருமே கண் கெட்ட பின்னரே சூரியனுக்குத் தங்கள் விழித் திரையை விலக்குவார்கள் போல் இருக்கிறது. அந்நிய கிரகங்களில் ஆளரவமே இல்லாத நிலையில் இன்னும் அவர்கள் தேடிக் கொண்டிருப்பது பூமிக்கு மாற்று கிடைக்காதா என்னும் நப்பாசையில்தான். அப்படிக் கிடைத்து விட்டால் மட்டும் என்ன வாழுமாம்? அதையும் ஆக்கிரமித்து, அதன் வளங்களைச் சுரண்டி அங்கும் அழிவை மட்டுமே நிலை நாட்டுவதில் வல்லவர்கள் இவர்கள். இது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு "புனிதப் பணியாகவே" அவர்கள் வரையில் அமையப் போகிறது. அப்படி அவர்கள் திருந்தினாலும் அதனை அடிப்படையில் இருந்தே சரி செய்து கொள்ளத் துவங்க வேண்டும். அதை ஏன் இப்போதே துவக்கக் கூடாது? வெள்ளம் வந்து ஒரு பாடம் கற்பித்துப் போகிறது, புயல் ஒரு பாடம் கற்பித்துப் போகிறது, சுனாமி ஒரு பாடம் கற்பித்துப் போகிறது. ஆனால், அன்பே சிவம் எனும் வாழ்வு மலர இவர்கள் மனதில் ஆதிக்கப் பனி மறைந்து அரவணைப்பின் சூரியன் மலர இன்னும் எத்தனை யுகங்கள் காத்திருக்க வேண்டுமோ? இந்த சிந்தனையுடன் இந்தக் கதைக்குள் புகுகிறேன்.

இந்தப் பூமிக்கோர் எதிரி வேறொரு விண்வெளிக் கிரகத்தில் இருந்து வருகிறான்.அவன் பூமியை அழிக்க ஒரு திட்டம் தீட்டுகிறான். என்ன திட்டம் அது? அதுதான் பூமியை இருளடைய செய்வது. அவன் தான் தீட்டிய திட்டத்தில் வெற்றி அடைந்தானா? அவனது சதித் திட்டம் சாத்தியமானதா? என்பதை இந்த சித்திரக் கதை விவரிக்கிறது. இந்தக் கதையைப் படிக்க ஆர்வம் கொண்டுள்ளீர்களா? எங்கள் Tamil Comics Times முக நூல் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து விட்டால் போதும். இது ஒரு இலவச சித்திரக் கதை. விற்பனைக்கல்ல. இதன் படைப்பாளர்களுக்கும், இதன் ஓவியருக்கும் நாம் அனைவருமே  நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்களுக்கு நமது Credits.

வேறு என்ன நண்பர்களே? பால் பொங்கியாச்சா?
என்றும் அதே அன்புடன்_உங்கள் இனிய நண்பன்_ஜானி சின்னப்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...