சனி, 30 ஏப்ரல், 2016

தபால் தலை மர்மம் முத்து மினி வெளியீடு எண்- 006


வணக்கம் தோழமை உள்ளங்களே!
        காமிக்ஸ் சேகரிப்பிற்காக காதை அறுத்துக் கொள்ளக் கூடத் தயங்காத நம் நண்பர்கள் கொண்டிருப்பது ஒரு வகையான பொழுதுபோக்கு. அதே போன்றதொரு தீவிரமான ஈர்ப்புடைய பொழுதுபோக்குகளுள் ஒன்றுதான் தபால்தலை சேகரிப்பு என்பதும்.
     
        நம் குட்டிப் பையன் ராஜூவுக்கும் அது ஒரு பொழுதுபோக்காக அமையவே தனக்கு எப்போதும் உதவும் புத்தகங்களின் காதலன்-ப்ரியன் பிரபுவுடன் புத்தக சேகரிப்புக்காக ராம்ஜியின் கடைக்கு சென்றபோது கிடைத்த புத்தகத்தினுள் இருந்த விக்டோரியா மகாராணியின் உருவம் கொண்ட தபால் தலை திவாரி என்பவனால் திருடப்படுகிறது.
     தபால் தலையைப் பறிகொடுத்த ராஜூவின் மன வருத்தத்தைப் போக்க தபால் தலைகள் குறித்த ஆராய்ச்சியாளரும் தனது நண்பருமான சதீஷிடம் அவனைப் பிரபு அழைத்துப் போகிறான். அங்கு ராஜூ இழந்த தபால் தலையின் மதிப்பு 1,50,000 என்று தெரிந்து அதிர்ச்சியடைகிறார்கள்.
     அதிர்ஷ்டவசமாக தபால்தலையின் உண்மையான மதிப்பினைத் தெரிந்து கொள்வதற்காக திருடிய திவாரியும் சதீஷின் அலுவலகத்துக்கே வருகிறான்.
     கதை இதற்கு மேல் இருவரது தனிப்பட்ட பார்வையில் விரிகிறது. உதாரணமாக விருமாண்டி திரைப்படத்தில் கமல்ஹாசனும், பசுபதியும் தத்தம் பார்வையில் சம்பவங்களை விவரிப்பது போன்று காட்சிகள் அணிவகுக்கின்றன. இறுதியில் திவாரி பிடிபட புத்தகப்பிரியன் பிரபு வெல்கிறான்.
சதீஷ் மூலமாக அயல் நாட்டுக்கு தகவல் அளித்து தபால் தலையை விற்பதற்கான முயற்சிகள் துவங்குகிறது.
ஸ்டாம்பை வாங்க வரும் நபர்கள் போலி என்பதைப் பிரபு கண்டறிகிறான்.
அவர்களைக் கைது செய்கிறது காவல் துறை. உண்மையான நபர் தபால் தலையைப் பெற்றுக் கொண்டு 1,50,000 ரூபாய் கொடுக்கிறார்.
     1847 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த மொரீஷியஸ் தேசத்தில் பென்னி நாணயங்கள், தபால் தலைகள் வெளியிட அப்போதைய அரசாங்கம் முடிவெடுக்கிறது. தபால் தலை வடிவமைக்கும் நபர் அவசரத்தில் போஸ்ட் பெய்ட் என்பதற்கு பதிலாக போஸ்ட் ஆபீஸ் என்று அமைத்து விடுகிறார். 17 ஆண்டுகளுக்குப் பின்னரே அந்தப் பிழை கண்டறியப்பட்டு சரி செய்யப்படுகிறது.
     அது போன்ற பிழையுடன் வரும் தபால் தலைகள், ரூபாய்  நோட்டுகள், நாணயங்கள், காமிக்ஸ்கள், இன்ன பிற பொருட்கள் அனைத்துக்கும் சேகரிப்பாளர்கள் மத்தியில் எப்போதுமே பெருமதிப்பு உண்டு. அவை அதன் பழமையைப் பறை சாற்றுவதுதான் காரணம். முத்து மினி காமிக்ஸ் மொத்தமும் 35,000 ரூபாய்க்கு விலை வைத்து விற்கப்பட்டதும் அதனால்தான்.

     அப்படிப்பட்ட தபால் தலை ஒன்று வியாபாரி ஒருவரிடம் கிடைக்கிறது. அவர் தொழில் நலிந்து குடும்பத்துடன் இந்தியா திரும்புகிறார். மகன் காலத்தில் சொத்துக்கள் கரைந்த நிலையில் புற்று நோய் பீடித்து அவரது மனைவி அவருக்கு சிகிச்சையளிக்கத் திண்டாடி வருகிறாள். வறுமை வாட்டுகிறது என்பதால் தன் மாமனாருடைய புத்தகங்களை நமது நாயகன் புத்தகப் பிரியன் பிரபு வழக்கமாக சென்று வரும் ராம்ஜி புத்தகக் கடையில் விற்று விடுகிறாள். அதன் தொடர்ச்சியே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள். அந்தப் பெண்மணியைத் தேடிப் பிடிக்கின்றனர் பிரபு குழுவினர். அந்த அம்மணி தனது வறுமை நிலையிலும் உபசரிப்பை மறந்தாளில்லை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே  என்பதற்கிணங்க விருந்தினர் உபசரிப்பில் தனது நலிந்த நிலையிலும் குறை வைக்காது வாழ்ந்து வரும் அந்தக் குடும்பத்தாருக்கு சிகிச்சைக்கும், புத்தகக் கடை ராம்ஜி தனது புத்தகக் கடையைப் புதுப்பிக்கவும் தபால் தலை விற்று வந்த பணத்தில் உதவி செய்கிறார்கள் பிரபு குழுவினர் என்று நிறைகிறது இந்தத் தபால் தலை மர்மம்.

இன்று 
22.03.2017
   
புதிதாக வெளியிடப்பட்டுள்ள அதன் மறுபதிப்பில் இருந்து சில பக்கங்கள் உங்களுக்காக ..விலையும் இருபதே ரூபாய்தான்.. பக்கங்கள் சிறிது சாம்பல் வடிவில் இருக்கும்.. கதையின் வேகத்தில் குறைகள் ஏதும் தெரியவே தெரியாது.. கட்டாயம் உங்கள் பிரதியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.. 














திங்கள், 25 ஏப்ரல், 2016

காந்த மலை மர்மம் _முத்து மினி காமிக்ஸ் 005

வணக்கம் தோழமை உள்ளங்களே!
இம்முறை உங்களை சந்திக்க வந்திருப்பது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய காந்த மலை மர்மத்துடன். பெர்முடா முக்கோணம்  என்றொரு பகுதி  நாம் வாழும் இந்த  ஆண்ட்ராய்ட் யுகத்திலும் சவால் விடும்  ஒரு மர்மப் பிரதேசம். அங்குள்ள ஒரு வித காந்த விசை அந்தப் பகுதியில் செல்லும் விமானங்களையும், கப்பல்களையும் கடலுக்குள் மூழ்கடித்து விடுகிறது. அது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளும் ஒரு சங்கதி.
அந்தக் கதையை இங்கே புத்தகப் பிரியனுடன் சேர்ந்து வேறு கோணத்தில் ராம் வாயீர்க்கர் ஓவியத்துடனும், பாரா பாகவத்  அசத்தும்  விதத்தில் கொடுத்துள்ள கதை இந்த காந்த மலை இரகசியம். 

புத்தகப் பிரியன் பிரபுவின் பக்கத்து வீட்டு சிறுவன் ராஜூ. கடற்பயணக் கதைகளின் மீதான ஆர்வமிகுதியில் துறைமுகம் சென்றடைகிறான். அங்கே மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அவனை அழைத்துக் கொண்டு கப்பலில் பயணமாகிறார். இதனை நேரில் கண்ட போர்ட்டரை பிரபு விசாரித்தறிகிறான். கப்பல் பெயர் ஆயிஷா. அது ஆப்பிரிக்கா நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கப்பல் கேப்டனுக்குத் துறைமுகப் போலீசார் தகவல் அளிக்கின்றனர். அந்தப் பெண்மணி ஒரு மயில் உருவத்தைப் பச்சை குத்தி விடுவதால் சிறுவனின் அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது. ராஜூவைத் தனது மகன் என்றும் அனைவரின் முன்பும் குறிப்பிடுகிறாள். அவர்கள் செல்லும் கப்பல், ஏடன் சென்றடையாமல் புயலில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு மடகாஸ்கரின் வடமேற்கில் இனந்தெரியாத ஈர்ப்பு விசைக்கு ஆளாகி ஒரு தீவின் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகிறது. பிரபு எப்பாடுபட்டேனும் ராஜூவைக் கண்டறிய வேண்டும் என்கிற வெறியில் கிடைத்த தடயங்களை வைத்துக் கொண்டு அதே தீவுக்கு ஒரு படகோட்டியின் உதவியால் வந்தடைகிறான். அங்கே ஒரு தனி ராஜ்யமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து ராஜூவையும் மீட்டு தீவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஸ்டம் என்ற தலைவனது முரட்டுக் கும்பலை அடக்கியோடுக்கித் தீவில் சிறை வைக்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் மீட்கிறான் பிரபு. அப்போதுதான் ஒரு நெகிழச் செய்யும் கதை தெரிய வருகிறது.  
     புரபசர் நிரண் எலெக்ட்ரோ டைனமிக்சில் நிபுணர். அவருக்குக் குழந்தை பாக்கியமில்லாத வருத்தத்தில் தனது சொந்த ஊரான மும்பையை விட்டுத் தன் மனைவிக்குத் தெரியாமல் ஏடன் சென்றடைகிறார்.
     ரஸ்டம் திருட்டுக் கும்பலின் தலைவன். அவன் எரிமலை வகையைச் சேர்ந்த இந்தத் தீவுக் கூட்டங்களில் அலைகள் கொண்டு வந்து சேர்க்கும் துகள்களில் ஒரு வகை காந்த சக்தி கொண்டவையாக இருப்பதைக் காண்கிறான். அவனது எண்ணத்துக்கு உதவியாக புரபசர் நிரண் வந்து சேர்வதால் அவரை வைத்து காந்த சக்தியைப் பன்மடங்கு அதிகரிப்பு செய்து குறிப்பிட்ட தீர்க்க ரேகையில் செல்லும் பெரிய கப்பல்களைக் கவர்ந்து தீவுக்கு ஈர்த்து வரும்படி கருவி ஒன்றை அமைத்து விடுகிறான். அதுதான் காந்த மலையின் இரகசியம். பாறைகளுக்கு காந்தத் தன்மையை அதிகரித்து அதனால் கப்பல்களை மோதி விபத்தடைய வைத்துப் பல உயிர்களைப் பலி வாங்கி, தப்பும் உயிர்களை அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டே சரக்குகளைத் தரையிறக்கி என அவன் செய்து வரும் அட்டூழியங்கள் கணக்கிலடங்கா.


     ராஜூ தன்னுடன் வந்த பெண்மணிதான் சதுரா என்றும். அவர் புரபசர் நிரணின் மனைவியார் என்பதைப் புரிந்து கொண்டு விட, பிரிந்த புரபசர் தம்பதியினரை சேர்த்து வைக்கிறார்கள். இல்லாத மகனை இருப்பதாக நம்ப வைத்தாவது தன் கணவனை மீண்டும் தன்னுடன் வாழ வகை செய்ய எண்ணிய, அதற்காக எந்தத் தேசத்துக்கும் செல்லத் துணிந்த உயர்ந்த உள்ளம் படைத்த பெண்மணியாக அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஒரு சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக் கொள்கிறாள். அவன் ஓடிப் போனதால் அந்த இடத்தில் கடல் பயணத்தில் ஆர்வம் காட்டிய ராஜூவைப் பயன்படுத்திக் கொண்டு விடுகிறாள் என்பதும் தெளிவாகிறது.
     இதற்கிடையே வெடி விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்ப முயலும் ரஸ்டமும் அவனது அடியாட்களும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுகிறார்கள். அனைத்தும் இனிதே முடிய சுபம்.
     கதை இந்திய மண்ணில் துவங்கி ஆப்பிரிக்க மண்ணில் நிறைவடைவது இந்தக் கதையின் ஒரு சிறப்பம்சம். மிகையில்லாத நாயகனாக இதில் புத்தகப் பிரியன் பிரபுவும், ஆர்வமிகு ராஜூவும், கணவனைத் தேடித் தேசம் விட்டு தேசம் செல்லும் சதுராவும், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் மனம் போன போக்கில் செல்லும் புரபசர் நிரணும், லாபத்துக்காக எதையும் செய்யத் தயங்காத ரஸ்டமும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்து பாத்திரங்களும் நிறைவாக உள்ளன.
எனக்கு இந்தக் கதையில் பிடித்த சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
-என் இனிய நண்பர்களே!
 -இறகு வம்சம் எழுதிய கவிஞர் தணியாத ஆர்வமே தன்னைத் தூண்டி இந்த நூலை எழுத வைத்தது அது மிகப்பெரும் கடலைத் துடுப்புப் படகால் கடப்பதற்கு ஒப்பானது என்று கூறினார்.
-அவனது மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பது போல சுடர் விட்டுப் பிரகாசித்து ஜொலித்த அவனது பிரகாசமான கண்கள்.
-எனக்கு மகன்தான் இல்லையே தவிர மகன் போன்ற அன்பு கொண்ட ஒரு பிள்ளையின் அன்பு கிடைத்தது.
இவை எங்கே வருகின்றன?
வாசித்து மகிழுங்கள் புத்தகப்பிரியன் பிரபுவின் "காந்த மலை மர்மம்" விரைவில் முத்து மினி காமிக்ஸ் வெளியாக உள்ளது. உங்கள் பிரதிக்கு இப்போதே லயன் நிறுவனம், சிவகாசிக்கு முன்பணம் செலுத்தலாம். அல்லது விற்பனை துவங்கியதும் வாங்கி வாசித்து மகிழலாம். விலை ரூபாய் 20/- மட்டுமே. நிச்சயம் உங்களுக்கு ஒரு மாறுபட்ட இந்தியத்தரத்தில் ஒரு அருமையான கதை காத்திருக்கிறது.

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

வணக்கம் தோழர்களே...
இந்தப் புத்தகம் வெற்றிகரமாக வெளியாகி வசூலை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் குவித்துக் கொடுத்து சில மாதங்களாகிறது.. இன்று 22.03.2017 இந்தப் பதிவினை மீண்டும் புதுப்பித்துள்ளேன்.. புதிய வெளியீட்டில் இருந்து.. இதனைக் கண்டு எடுத்து மீண்டும் இதன் உயிர் தப்பிப் பிழைத்து நண்பர்களின் கரங்களில் தவழ்வதற்காக தன் பெரும் பொருட்செலவையும் பொருட்படுத்தாத நண்பர்கள் திரு.டெக்ஸ் சம்பத், திரு.கலீல், திரு.தயாளன், திரு.ஸ்டாலின், திரு.சதீஷ் போன்ற பலரால்தான் காமிக்ஸ் உலகம் அற்புதங்களையும் அதிசயங்களையும் சந்தித்து வருகிறது. அதனை சராசரி வாசகனான நானும் உங்களுடன் சேர்ந்தே அனுபவித்து வருகிறேன். அப்படிப்பட்ட தியாக தீபங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..  இந்த வெற்றி வாசகர்களுடைய வெற்றி.. பிரம்மாண்டமான தேடலையும் நாற்பது ஆண்டுகாலத் தவத்தையும் உள்ளடக்கிய மாபெரும் வெற்றி.. இந்த புத்தகத்தை மீண்டும் உயிர்ப்பித்து அதற்காக கிடைக்க வேண்டிய நற்பெயரை சில நல்ல உள்ளங்களால் நழுவ விட்ட திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இந்தப் படைப்பை வாசகர்களின் தேடலை மதித்து, வாசகப் போராட்ட உணர்வைப் புரிந்து கொண்டு மறுபதிப்பாகக் கொண்டு வந்த லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். புதிய வெளியீட்டில் இருந்து உங்களுக்காக சில பக்கங்கள்..












     

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

கணத்தின் கீற்றில்...

பிதுங்கிய சிந்தனையில்
கசங்கிய மூளையில்
கருவுற்ற பிழையுற்ற
காகிதக் குப்பைகளைக்
கதை, கட்டுரை, கவிதையெனக்
கிறுக்கிக் கசக்கிக்
கிழித்தெறிந்தேன்!
கணத்தின் கீற்றின்
மின்னி மறையும்
வெளிச்சத்தில் கண்டேன்
ஒரு தரிசனம்
நெகிழ்ந்தேன் நான்.
என்னைச் சுற்றிலும்
காகித மலர்கள்!
இறைவா! ஆசீர் அளித்த
உனக்கு நன்றி!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

முத்து மினி 004-சூரப்புலி சுந்தர் (தொடர்ச்சிப் பகுதி)


வணக்கங்கள் வாலிப நெஞ்சங்களே!
சூரப்புலி சுந்தரின் இரண்டாவது சாகசம் செங்கல் செங்கல்லாய்த் தங்கம்...
மாறுவேடம், ஜேப்படி, கொள்ளைக் கூட்ட பாஸ், கவர்ச்சிக்கு ஒரு மங்கை, காதலி, கடத்தல் தங்கத் துரத்தல் (ஐ இன்னொரு தலைப்பு...!), 3 பைட்டு, (2 பாட்டு வெச்சாலும் வெச்சி இருப்பாங்களோ?) கிளைமாக்ஸ் சீன் கடற்கரைப்பகுதியில் என அச்சு அசலான அக்மார்க் மசாலா உருண்டையில் தோய்த்த கடலை மாவை அப்படியே எண்ணைச் சட்டிக்குள் போட்டு பொறித்தெடுத்த கதை. அட்டகாசமான இந்த இரண்டாவது சாகசமும் மொறு மொறு, பரபர வெனக் காட்சிகளை நகர்த்திக் கொண்டு செல்கிற வேகம்தான் என்னே?
     தங்கக் கடத்தலில் ஈடுபடும் ஆசாமிகள் விதம் விதமான வழிமுறைகளைக் கையாண்டு கடத்தி வருகிறார்கள். அதில் ஒரு முறை செய்திப் பரிமாற்றம் பத்திரிகை விளம்பரம் மூலமாக. கார்சனின் கடந்த காலம் நினைவு வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது. அவுங்க நம்மைக் காப்பி அடிச்சிருப்பாங்கடோய். ஹி ஹி.
    
     ஒரு முறை மருத்துவர் மூலமாக மருத்துவரிடம் பொருள் சேர்வது போல தங்கத்தைக் கடத்துவதைப் பிடித்து விடும் சுந்தர். தன் தொடர்ந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் செங்கல் நிறுவனம் ஒன்றில் புகும் சுந்தர் தீயவர்கள் வைக்கும் பொறியில் எலி என  குருதிப் புனல் அர்ஜூன் கணக்காக ஏடாகூடமாக சிக்கிக் கொள்கிறான்.

     முதலில் கவர்ச்சிக்கு அடிமையாக்கி அவன் அறிந்த தகவல்களை வெளியே கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதற்கு கவர்ச்சிக் கன்னி செரீனாவைப் பயன்படுத்துகிறார்கள். சுந்தர் மசியாது போகவே அடி உதைப் படலம் துவங்குகிறது. செரீனா உதவியினால் அங்கிருந்து தப்பும் சுந்தர் தனது குழுவினர் உதவியுடன் கடத்தல் தங்கத்தைக் கொண்டு வரும் படகை சுற்றி வளைத்திட மோதல் கடற்கரையில் துவங்குகிறது. எதிரிகள் சாய நீதி வெல்கிறது. சுபம்.
-எனக்குப் பிடித்த வரிகள்
-எந்த ஆரம்பமும் சம்மதமே, வாய்ப்பும் தேவை!_சுந்தருக்கு வேலை கொடுத்திட சுங்கத் துறை அதிகாரி முன் வரும்போது சுந்தர் உதிர்க்கும் தன்னம்பிக்கை மிகு வார்த்தைகள்.
-கிளி முகத்திலே கிலி அடிக்குதே.
-முரட்டாத்மா இவன்.

-எந்தப் பெண் வேண்டும் உங்களுக்கு? நீங்க காப்பாத்தின அந்தப் பெண்ணா, உங்களைக் காப்பாத்தின பெண்ணா?
என்றும் அதே  அன்புடன்  டன் டன்...
உங்கள் ப்ரிய நண்பன் ஜானி 


சனி, 16 ஏப்ரல், 2016

சூரப்புலி சுந்தர் - முத்து மினி காமிக்ஸ் 004

வணக்கங்கள் ப்ரியமானவர்களே!
கள்ளக்கடத்தல் அன்றும், இன்றும், என்றும் தீராத ஒரு தலைவலியாகவே இருந்து வருகிறது. அதனைத் தடுக்க தம் இன்னுயிரைப் பணயம் வைத்துப் போராடும் அலுவலர்கள் நிறைய பேர். அவர்களின் தியாகங்கள் திரைமறைவில் நிழலாக இருப்பவை. வெளிச்சத்துக்கு வர முடியாதவை. அவர்கள் தம் இடையறாத பணியால் சட்டத்தைக் கட்டிக் காக்கிறார்கள். நீதியை நிலைநாட்டிடும் அப்படிப்பட்ட உத்தமர்களின் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் சூரப்புலி சுந்தர்.
வண்ணத்தின் எண்ணம் -திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம். 

     இது முத்து மினி காமிக்ஸ் வெளியீடு எண் 004. 60 காசு விலையில் ஒரு அருமையான மசாலா திரைப்படம் போன்ற சித்திரக்கதை. மே,1975 ல் தி சேகர் லித்தோ வொர்க்ஸ், சிவகாசி 626123 என்ற முகவரியில் இருந்து வெளியிட்டுள்ளனர். முத்து காமிக்ஸின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் ஜூன், 1975 ல் வெளியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகி இருக்கிறது. மையக் கதைகள் இரண்டு. 3 வது பக்கத்தில் துவங்கிப் பரபரவென வேகமெடுத்து 51 ஆம் பக்கம் சடாரென முடிகின்றன. அடடே நாம் இரண்டு கதைகளைக் கடந்து வந்து விட்டோமா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். முற்றும் என்கிற பதம் மட்டுமே எல்லையைக் குறிக்கிறது. ராம் வாயீர்க்கர் ஓவியம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதே பாரா பாகவத் கூட்டணியாக இருக்கலாம். அதனைத் தொடர்ந்து அக்பர்-பீர்பாலின் "சொர்க்கலோகப் பயணம்" எனும் சிறு கதையும், பின்னர் விச்சு & கிச்சுவின் காமெடி கலாட்டாவும் பின் அட்டையில் சேகர் நோட்டுப் புத்தகங்கள் விளம்பரமும் அழகாக அச்சிடப்பட்டு உள்ளன. முன்னும் பின்னும் ஒரே விதமான அட்டை. துறைமுகப் பின்னணியில் கைத் துப்பாக்கியுடன், கோட்டு, சூட்டு, குளிர் கண்ணாடி அணிந்த பருமனான நபர் நிற்கிறார். யாரப்பா அது? ஒரு வேளை சூரப்புலி சுந்தரின் மாறுவேடம் எனில் அவனது ஒல்லி உருவம் ஒட்டவில்லையே. இந்தக் குறை புதிதாக வெளியாகவிருக்கும் மறுபதிப்பில் களையப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். முக்கியமாக ஒன்று கூற வேண்டும். இது சூரப்புலி சுந்தரின் இரண்டு தனித்தனி சாகசங்கள், தனித்தனி வில்லன்கள். தலைப்புகள் தனித் தனியே கொடுக்கப்படவில்லை.
     உள்ளங்கைக்குள் அடங்கி விடும் இந்த தம்மாத்தூண்டு புத்தகத்தை இத்தனை ஆர்வமூட்டும் விதத்தில் கொடுத்த சேகர் லித்தோ ஒர்க்ஸ்க்கு ஜே. இவ்வளவு அரியதொரு படைப்பு இருக்கிறது எனக் காண்பித்து வாசிக்கவும் கொடுத்து உதவிய நட்பூக்கள் கலீல், சம்பத் ஆகியோருக்கு என் நன்றிகள்.
     பழமைக்கு என்றும் மதிப்புண்டு. ஆனால், பழமை, பழமை என்று நீங்கள் வாங்கும் புத்தகங்கள் உண்மையிலேயே பழமையானவைதான் என்று உங்களுக்குத் தெரியுமா? பழமையாக்கி புத்தகங்களை விற்க முடியாதா என அச்சகத்துறை நண்பர்களையும், நண்பர் திரு. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களையும் கேட்டேன். அவர் நாளிதழ் துறையில் இருந்தவர். புதிதாக அச்சடித்த புத்தகங்களை அப்படியே எடுத்துக் கொண்டு சென்று ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்குள் வைத்து எடுத்தால் ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகள் பழமையான புத்தகங்கள் போன்று தோன்ற செய்ய முடியுமாம். அவை நீங்கள் தொட்டால் கொட்டும் நிலையில்தான் இருக்கும். பார்த்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதனை அப்படி பழமைக்கு மாற்றி கல்லா கட்டும் கும்பல் உங்களை எப்போதுமே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. புத்தகத்தை அன்றைக்கு 60 காசுக்கு அச்சடித்து ஏதோ ஒரு சேவை மனப்பான்மையிலோ அல்லது சிறு லாபம் வைத்தோ மாணவ மணிகளுக்குக் கொடுத்த புத்தகங்களை இன்றைக்கு அரிய புத்தகம், சொறிய புத்தகம் என்று ஆசைகாட்டி மோசம் செய்ய எத்தனிக்கும் நரிகள் உலவும் பூமி இது. உங்கள் பரிமாற்றங்களில் சப்தமே இல்லாமல் பழைய புத்தகங்கள் என்கிற பெயரில் இப்படிப்பட்ட புத்தங்களை உங்கள் இல்லங்களில் நீங்கள் ஏற்றுக் கொண்டால் பின்னர் ஒரு காலத்தில் நீங்கள் ஏமாந்தது யாரிடம் என்று வருந்தத் தொடங்கி விடுவீர்கள். அரிய புத்தங்களை வெளிக் கொண்டு வரவே இந்த வலைப்பூவையும், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் முக நூல் பக்கத்தையும் வடிவமைத்து இருக்கிறோம். சென்னையில் ஒரு நூலகம் நடத்தும் முயற்சியில் இப்போது விற்பனைக்கு வரும் நமது லயன் குடும்ப இதழ்களையும், ஓ காமிக்ஸின் புதிய படைப்பு டாக்டர் டிட்சியும் வாங்கி வருகிறோம். ஆனால், மட்கிப் போன நிறங்களில் புத்தகங்களைக் கண்டதும் அதன் மீது விழுந்து பிடுங்கி கேட்கும் விலையைக் கொடுத்து என்று நீங்கள் படும்பாடு நிச்சயம் வருந்தத் தக்கது. உங்கள் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் நன்றாகப் பழகினாலே நீங்கள் ஆசைப்படும் நூல்கள் உங்களுக்கு வாசிப்புக்குக் கிடைக்கும். அதற்கு சரியாக, நேரத்துடன், கவனமாகத் திருப்பிக் கொடுக்கும் பண்பு உங்களுக்கு இருக்க வேண்டியது உங்கள் தகுதியாகும். ஆகவே நண்பர்களே உஷார். கவனம். அரிய புத்தகமாயினும் நட்பை மதித்து பாண்டியில் இருந்தும், திருப்பூரில் இருந்தும் இந்த புத்தகத்தைக் கொடுத்து அனுப்பி வாசிக்கவும் உங்களுக்குக் கதை சொல்லவும் உதவிய நட்பூக்களை உதாரணமாகக் கொள்ளுங்கள். உங்கள் நட்பு வட்டம் விரியட்டும். காசேதான் கடவுளடா என்பது நிலைக்காது நண்பர்களே. புத்தாக்கம் என்பது புத்தாக்கமாகவே உருவாக்கப்படுவது. அந்தக் கதையின் மீதும், கதாசிரியர் மீதும், வெளியீட்டாளர்கள் மீதும், அந்தப் படைப்பை அழிய விடக்கூடாது என்கிற உண்மையான தாகத்திலும் ஒவ்வொரு பேனல்களையும் நேரமெடுத்து இழைப்பது என்பது ஒரு புத்தக உருவாக்கத்துக்கான உழைப்பு, மெனக்கெடல். உ.வே.சாமிநாதய்யர் காலத்தில் இருந்தே இந்த மல்லுக்கட்டல்கள் தொடர்கின்றன. கேட்கும் புத்தகத்தைக் கொடுக்காமல் நான் ஆற்றில் கூட விடுவேன். இலக்கியம் என்று வந்து கேட்கும் கோமாளி நீ உனக்கு நான் ஏன் தர வேண்டும் என்ற மந்தமான தொலைநோக்குப் பார்வை அலைகளைத் தன் பொறுமையால் வீழ்த்தி வென்று இன்றும் வரலாற்றில் தமிழ்த் தாத்தா என்ற அடை மொழியுடன் நிற்கிறார். காலம் தன் கடமையை என்றாவது செய்தே தீரும். இறையருள் உதவும்.
    
     இனி கதை. முதல் சாகசத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள். கதையமைப்பும் தடதட வேகத்தில்தான் பயணிக்கிறது. ஊரில் இருந்து நகரத்துக்கு வரும் ஹீரோ, அவனுக்கு ஒரு ஹீரோயின், ஒரு காமெடி தோழன், வில்லனின் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நங்கை, பாடலுக்கேற்ற பிக்னிக் சூழல், ஒரு காபரே நடனம், பல சேஸிங்குங்கள், கிளைமாக்ஸ் கப்பலில், கடைசியில் போலீஸ் ஆஜர் என அப்படியே மசாலா சினிமா பார்த்த திருப்தி வாசகர்களுக்குக் கிடைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கதையமைப்பில் இரசிக மனங்களைக் கவர்ந்து இழுத்து விடுகிறான் இந்த சூரப்புலி சுந்தர்.
     இரண்டாவது சாகசம் பெயரிடப்படவில்லை. செங்கல், செங்கல்லாய்த் தங்கம் என்று வேண்டுமானால் மரண மொக்கையாகத் தலைப்பொன்று இடுகிறேன். பொறுத்தருள்வீர் ஐயாமாரே.
     வேலை தேடி மும்பை வரும் சுந்தர் ஜேப்படித் திருடன் ஒருவனை மடக்குகிறான். அவனிடமிருந்து மீட்டுத் தந்த பர்ஸ் சுங்க அதிகார் நரேஷ் மேத்தாவுடையது. எனவே அவனுக்கு சுங்கத்துறையில் பணி கிடைக்கிறது. அக்ரம் ஷா என்பவன் ஒரு பெண்ணிடம் கலாட்டா செய்ய அவனை அடக்குகிறான். அப்பெண் ஆஷா பவார் அவனுக்குத் தங்க இடமும், காயங்களுக்கு மருந்தும் தருகிறாள். ஏற்கனவே சுந்தர் அறிந்த போக்கிரி கமால் காக்கா ஒரு பார்சலைக் கடத்த மாறுவேடத்தில் வர அவனை மடக்குகிறான் சுந்தர். அந்தப் பார்சலில் அபினி உள்ளது. கமால் காக்காவின் ஒத்துழைப்பு சுந்தருக்குக் கிடைக்க ஏராளமான கடத்தல் எலிகளைப் பிடித்து விடுகிறான் சுந்தர்.
     இதனால் ஆத்திரமடையும் தலைவன் சுந்தரைக் குறிவைக்கிறான். அழகி ரீனா அவன் சார்பில் சுந்தருடன் பேச சுந்தர் ஒத்துழைக்க மறுக்கிறான். சுந்தர் மீதான தாக்குதல் தொடர்கிறது. அனைத்திலும் தப்புகிறான். கமால் காக்கா அனுப்பியதாக வந்த ஒருவன் ஓட்டல் ஜல்ஸாவில் (இங்க பாருடா) காத்திருக்கும் வாசிம் என்பவர் நிறைய தகவல் கொடுக்கவிருக்கிறார் என்று நைச்சியமாகப் பேசி வாஸிமை சந்திக்க வைக்கிறான். சுந்தருக்கு மதுபானத்தில் தூக்க மருந்து கொடுத்து வீட்டுக்குப் பார்சல் செய்கின்றனர்.
     ஆனால், மதுவை அருந்தியதாக நாடகமாடும் சுந்தர் கப்பல் ஒன்றில் கடத்தல் பொருள்கள் இருப்பதை மாறுவேடத்தில் சன்று அறிந்து கொள்கிறான். மோதல் நிகழ, போலீஸ் வர, சுபம்.
     வாசிமாக வந்தவன்தான் கொள்ளைக்கூட்டத் தலைவன் அகரம் ஷா என்பது கதையின் போக்கினூடே நாமே யூகித்தறிய வேண்டிய விடயம். ஆஷாவின் அண்ணன் காவல் துறை இன்ஸ்பெக்டர் என்றும் ஆஷா சுந்தரைக் காதலிக்கிறாள் என்றும் நிறைவுறுகிறது முதல் கதை.
     இரண்டாவது கதை அடுத்த பதிவில் -நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்- தொடரும்.
-என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.   
இது ஹி ஹி  என் கலரிங்...


     

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

புதையல் தீவு மர்மம்_முத்து மினி காமிக்ஸ்_003


வணக்கங்கள் அருமை தோழமைகளே! நமது முத்து காமிக்ஸின் பெருமை மிகு படைப்பான புதையல் தீவு மர்மம் கதை குறித்துக் கதைக்க வந்திருக்கிறேன். இது அறுபதே காசுகள் விலையில் பிப்ரவரி மாதம் 1975 ஆம் ஆண்டு மாணாக்கர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு பலத்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நூலாகும். ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டோர் தி சேகர் லித்தோ வொர்க்ஸ், தபால் பெட்டி எண் 62, சிவகாசி -626123. இந்த நூலைத் தபாலில் பெற 75 பைசா மணியார்டரில் அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மையக் கதையைத் தவிர வால்ட் டிஸ்னியின் பிராணிகள் உலகம், மூன்று முட்டாள்கள் என்கிற சிறுகதை, பீர்பால் துணுக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கதாபாத்திரங்கள்: புத்தகப் பிரியன் பிரபு.

கல்லூரி மாணவனான பிரபுவுக்குப் புத்தகங்கள் மீது கொள்ளைப் பிரியம். அவன் பம்பாய் (மும்பை) நகரின் ஒரு நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தான். அவனது தோழர்கள் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் சிறுவர்களே. இதுதான் அவன் உலகம். அவனும், அவன் தோழர்களும் செய்யும் சாகசங்கள் ராம் வாயீர்க்கரின் ஓவியங்களில், பாரா பாக்வத் அவர்களில் கதை சொல்லலில் நமக்கு சித்திரக் கதைப் பொக்கிஷங்களாக அமைந்துள்ளன. நண்பர்கள் தவற விடவே கூடாத சாகசங்கள் இவனுடையவை.

ராஜூ... 

மீனா...

சாம் டெக் க்ரூஸ்...

க்ரூப்.. 
ஜேம்ஸ்..
இந்தக் கதையின் முக்கிய மையக் கதாபாத்திரம் கீழே  காணப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்தான். அவரது தியாகத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது. 
போராட்டக் குழுத் தலைவர் திரு.தேசாய். 


கதையின் சாராம்சம்: 

     நம் கதாநாயகன் புத்தக நேசன் பிரபுவுக்கு சாலையோரக் கடையில் கிடைத்த புதையல் தீவு என்ற கதைப் புத்தகத்தின் உள்ளே ஒரு வரைபடம் வெகுகாலமாகத் துயில் பயின்று வருவது தற்செயலாக தெரிய வருகிறது.
கஜூலியில் 1917ல் வாழ்ந்து வந்த தினேஷ் தேசாய் என்பவரது உடமையாக இருந்த புத்தகம் அது. பிரபுவின் தோழன் டெக் க்ரூஸின் தந்தையார் காவல் துறை அதிகாரியாக அந்தப் பகுதியில் பணியில் இருப்பதால் விசாரணை முடுக்கி விடப்படுகிறது. தேசாய் என்கிற குடும்பப் பெயர் உள்ளவர்கள் குறித்து நடந்த விசாரணையில் கைதியாக இருந்து இறந்து போன ஒருவர் பெயரும், பொக்கிஷ விவகாரமும் ஒரே கோட்டில் வருகிறது. இதை உணரும் பிரபுவும் அவனது தோழர்கள் ராஜூ, மீனா ஆகியோரும் மேற்கொண்டு உண்மைகளை அறிய நேரில் தோழன் சாம் டெக் க்ரூஸின் இல்லத்துக்கு சென்று தங்குகையில் சாமின் ஓட்டுனர் ஜேம்ஸ் அந்த புதையல் வரைபடத்தைத் திருட்டுத்தனமாக நகல் எடுத்து விடுகிறான்.
     கஜூலியில் உள்ள தினேஷ் தேசாயின் மகன் பிகாஜி தேசாய்  என்பவர் தினேஷின் வீர சரிதத்தைக் கூறுகிறார். 1917ல் போர்த்துக்கீசிய அரசுக்கெதிராக வீரர்களைத் திரட்டிப் போராடி வந்த மாவீரர் தினேஷ். கோட்டை போன்ற வீடு. திரண்ட செல்வ வளம். மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், போராட்டக்காரர்களுக்குத் தலைமை ஏற்று அவர்களுக்காக நிதியைத் திரட்டி, அதனைப் பாதுகாத்து, திட்டங்கள் பல தீட்டி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் மாவீரன் தேசாய். இந்தியத் திருநாடு இவர்களைப் போன்றோரின் தியாகத்திலும், எண்ணற்ற வீரர் தம் உயிரைக் கொடுத்துப் போராடியமையாலும் மட்டுமே நாம் இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு அதே இந்திய மண்ணில் இருந்து பல சாதனைகள் படைத்து வருகிறோம். தேச ஒற்றுமை, வேற்றுமைகள் பல என்றாலும் ஒரே குடும்பமாக இணைந்து நிற்கிறோம் என்றால் அதற்கு இந்த தேசாய் போன்ற எத்தனையோ வீரர்தம் தியாகமே அதற்கு முக்கியக் காரணம். அப்படிப்பட்ட வீரர்களின் வாழ்வு பட்டு மெத்தை மேலான உல்லாசமான வாழ்வு கிடையாது. அது முள் படுக்கை மீதான உறக்கமாகவே இருந்தது. நமது நாயகன் போராட்டக் குழுவின் தலைவர் தினேஷின் நடவடிக்கைகளைக் கவனித்து வரும் போர்த்துக்கீசியப் படை அவரைக் கைது செய்கிறது. அவரது திரண்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவரது செல்வவளம் மிக்க குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. அவர் போராட்டத்துக்காக சேர்த்த நிதி, தங்கம் எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என்று கேட்டு சித்திரவதை பல மாதங்கள் தொடர்கின்றன. இறுதிவரை அனைத்துக் கொடுமைகளையும் மவுனமாகத் தாங்கிக் கொள்கிறார். அடுத்த வருடம் தான் இறக்கும் வரையிலும் இரகசியத்தை ஒருவரிடமும் வெளியிடவில்லை. ஆனால், அவருக்கு சிறையில் சில மாதங்களுக்குப் பின் வழக்கமாக அவரது குடும்பத்தாரிடம்  புத்தகங்கள் வாசிக்க அனுமதி கிடைத்ததால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் வாசித்த புதையல் தீவு எனும் நூலில் வரைபடம் வைத்து அனுப்பி விடுகிறார். ஆனால், விதியின் வலிமையால் அந்த நிதி யாரிடமும் சிக்காமல் அந்த வரைபடம் இருந்த புத்தகமும் எங்கெங்கோ சென்று இறுதியாக நமது பிரபுவின் கரங்களுக்கு வந்து தஞ்சமடைகிறது.
     நியாயமான நமது நாயகன் வடிவில் தேசாயின் மகன் திரு.பிகாஜி தேசாயின் வாசலுக்கே வந்து கதவைத் தட்டுகிறது. பிகாஜி தேசாய் அப்படி ஏதும் பொக்கிஷம் கிடைத்தால் இந்திய அரசுக்கே கொடுத்து விடுமாறு தெரிவிக்கிறார். கொடுத்து சிவந்த கைகளுக்குரிய குடும்பத்தார் ஆயிற்றே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற முதுமொழிக்கிணங்க தான் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தாலும், தன் தந்தையாரின் முயற்சிகள் வீணாகாத திருப்தி மட்டுமே செல்வமெனக் கருதி இந்திய  தேசத்துக்கே அந்தப் புதையலை கொடுக்குமாறு கூறி விடுகிறார்.   
     இதனிடையில் டெக் க்ரூஸின் முன்னாள் ஓட்டுனர் ஜேம்ஸ் தன் போக்கிரி நண்பன் க்ரூப்புடன் இணைந்து தீவை சென்று அடைகிறான். இருவரும் புதையல் தீவின் பூதங்களென பிரபு குழுவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கேயே சமாதி கட்டுவது திட்டம். இதிலும் ஒரு உள்ளடி வேலை. ஜேம்சுக்குத் தெரியாமல் க்ரூப் ஒரு விமானப் பயணச் சீட்டு எடுத்திருப்பதை வைத்து அவன் தன்னையும் இங்கேயே அழித்து விடத் தீர்மானித்து விட்டான் என்பதை ஜேம்ஸ் அறிய நேர்கிறது. க்ரூப்பை ஒழித்துக் கட்ட தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறான். புதையல் தீவின் வரைபடத்தை யாரோ நகல் எடுத்ததற்கும், சாமின் ஓட்டுனர் காணாமல் போனதற்கும் உள்ள தொடர்பை அறிகிறார்கள் பிரபு குழுவினர். சாமின் தந்தையாரிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிற வேளையில் பிரபுவும் நண்பர்களும் தீவை சென்றடைந்து இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடலை மேற்கொள்கிறார்கள். இரண்டு குழுக்களும் ஜேம்ஸ் மற்றும் க்ரூப் வசம் சிக்குகின்றனர். அவர்களைக் குகையில் அடைத்து விட்டு ஜேம்ஸ் க்ரூப்பை சுட்டுக் கொன்று விட்டுத் தப்ப எத்தனிக்கையில் சாமின் தந்தையாரால் முடுக்கப்பட்டிருந்த காவல் துறையினர் குறுக்கிட, அனைவரும் மீட்கப்பட, சுபம். 
இந்த கதையில் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை சரிவிகிதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசத்தைத் தன் பெருமை மிகு படைப்புகளால் அலங்கரித்த பாரா பாக்வத், ராம் வாயீர்க்கரின் அட்டகாசங்களை நீங்கள் வாங்கி இந்திய தேசத்தில் உருவான சுதேசி சித்திரக் கதையை ஆதரித்தீர்களானால் இது போன்று உருவான சிறந்த தேச பக்திக் கதைகள் இப்போது உள்ள தலைமுறையினரையும் சென்றடையும். இந்தப் புத்தகம் தொலை நோக்குப் பார்வையுடன் அன்றே திரு.சவுந்திர பாண்டியன் ஐயா அவர்களால் முத்து மினி காமிக்ஸ் என்ற குடையின் கீழ் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. புத்தகம் மறு வெளியீடாக ஒரு சில அட்டகாசங்களுக்குப் பின்னர் பலத்த கரவோசைகளுக்கிடையே நமது இனிய ஆசிரியப் பெருந்தகை திரு.எஸ். விஜயன் அவர்களால் மறுபதிப்பு செய்யப்படவிருக்கும் பொன்னான தருணத்தின் விளிம்பில் நிற்கிறோம். புத்தகம் 20 ரூபாய் விலையிடப்பட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக வெகு குறைவான பிரதிகளே அச்சிடப்பட்டு வரும் மாதத்தில் சிங்கப் பாய்ச்சல் நிகழ்த்தப்படவிருக்கிறது.
இந்த நூலை வாசிக்கக் கொடுத்து உதவிய முதலைப் பட்டாளத்தார் திரு.கலீல் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்_ஜானி

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

படகு வீடு மர்மம்-முத்து மினி காமிக்ஸ்-002


இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே!
படகு வீடு மர்மம் முத்து மினி காமிக்ஸின் இரண்டாவது பெருமை மிகு வெளியீடு.

வெளியான ஆண்டு டிசம்பர் 1974
கதை-பாரா பாக்வத்
விலை 60காசு.
கதாபாத்திரங்கள்: 

வாயு வேக வாசு என்கிற வாசு தேவன்...


மாலா...

அன்வர்...
இந்திய CID மன்சூர்...



பாகிஸ்தானிய உளவாளி -1



பாகிஸ்தானிய உளவாளி -2 
கதையமைப்பு:
அயல் நாட்டு உளவு சதியை முறியடிக்கும் சிறுவர்கள்.
கதைச் சுருக்கம்:
ஸ்ரீ நகரில் விடுமுறை நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் வாசு, அவன் தங்கை மாலா, தோழன் அன்வர் ஆகியோர் இராணுவ உளவாளி ஒருவரைப் படுகொலை செய்து பேரழிவை ஏற்படுத்தும் திட்டத்துடன் வரும் பாகிஸ்தான் உளவாளியைப் பற்றி மர்மமாக தனித்து நிற்கும் படகு வீட்டின் மர்மத்தை அவிழ்க்க முயலும் வேளையில் அறிந்து கொள்ள நேர்கிறது. அந்த உளவு சதியை முறியடிக்க அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுத்தனர், இந்திய உளவாளியின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா, அந்நிய நாட்டு உளவாளியின் சதித் திட்டம்thaan என்ன, அதனை முறியடித்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய வாசுவுடைய குழுவால் முடிந்ததா? என்பதனைப் பரபரப்பான கதையாகக் கொடுத்துள்ளனர்.
வாசு தனது விடுமுறையில் தனது சித்தப்பாவுடனும், அவர் மகள் மாலாவுடனும் ஸ்ரீ நகரில் ஒரு படகு வீட்டில் தங்கிக் கழித்துக் கொண்டிருக்கையில் படகோட்டியின் மகன் அன்வர் தோழனாகிறான். செய்தித் தாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாராசூட்டில் வந்திறங்கி இருப்பதாக செய்தி வருகிறது. நண்பர்கள் நரி வேட்டையில் ஈடுபட சென்று விட மாலா ஓவியம் வரைவதில் நேரத்தை செலவிடுகிறாள். அவளை அணுகும் ஒரு ஆசாமி ஒரு ஓவியத்தின் நகலை வரைந்து தருமாறு கேட்டு வாங்கிச் செல்கிறார். மாலாவும், வேட்டையாட சென்ற நண்பர்களும் ஒரு சேர பாராசூட்டுகளைக் காண நேர்கிறது. மாலாவை அந்தத் தீவிரவாதி கடத்துகிறான். மாதக்கணக்கில் வெறுமே இருந்த படகு வீட்டில் ஆள் நடமாட்டம் இருப்பதை வைத்து அந்தத் தீவிரவாதிகள் அங்கு சென்றுதான் ஒளிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை நோட்டம் விடுகிறார்கள் வாசுவும், அன்வரும். அந்தத் தீவிரவாதிகளுக்கு ஒரு நபர் தேவை இருப்பதை உணர்ந்து சிறுவன் அன்வர் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனைத் தீவிரவாதிகள் ஒரு பணிக்காக அனுப்புகிறார்கள். அதே நேரம் வாசு ஒரு அம்பில் செய்தி வைத்துக் கட்டி அதனைத் தன் சித்தப்பாவுக்கு அனுப்பி வைக்கிறான். அவர் காவல் நிலையம் செல்கிறார். செல்லும் வழியில் தன்னை விடுவித்துத் தப்பி வரும் சிறுமி மாலாவை சந்திக்கிறார். அவள் தனது ஓவியம் தீட்டிய கார்பன் தாளை அவரிடம் காண்பிக்கிறாள். அன்வர் தீவிர நாட்டுப்பற்றுடையவன் என்பதைத் தீவிரவாதிகள் அறிந்து கொள்கிறார்கள். அவர்கள் படகில் இருந்து சில ஆயுதங்களை வாசு திருடி விடுகிறான். தீவிரவாதிகள் படகினைக் கிளப்ப முயல்கிறார்கள். அன்வரைக் குறிவைத்து அவர்கள் செல்வதைக் கண்ட வாசு தன்னிடம் இருந்த கையெறி குண்டை வைத்துப் படகு வீட்டைத் தகர்க்கிறான். அன்வரிடம் இருந்த புகைப்படத்துடன் வாசு காவல் நிலையம் செல்லும் வழியில் புகைப்படத்தில் இருந்த நபரே அவன் முன் எதிர்பாராத விதமாக குறுக்கிடுகிறார். அவன் தன் மருமகன் என்று பேர் பண்ணிக் கொண்டு பலகாரக் கடை ஒன்றினுள் செல்கிறார். அங்கு வெடிகுண்டுகள் இரகசியமாகப் பரிவர்த்தனை செய்வதைக் கண்டு பிடிக்கிறார் மன்சூர். ஸ்ரீநகரின் குறுக்கே ஓடும் ஜீலம் நதியில் அமைந்துள்ள பாலத்தைத் தகர்க்க உள்ள இரகசிய சதிச் செயல் வெளிச்சத்துக்கு வருகிறது. மன்சூரைக் கொல்ல முயலும் தீவிரவாதியை அன்வர் குறுக்கிட்டுத் தடுக்கிறான். மன்சூர் கண்ட்ராக்டரைக் கண்டு வர சென்று விட, அன்வரும், மன்சூரும் மரத்தில் ஏறி விளையாடுகையில் தீவிரவாதி அங்கு வந்தடையும் நபர்களுடன் சதித் திட்டம் தீட்டுவதைக் காண நேரும் வாசு தீவிரவாதியுடன் மோதுகிறான். மோதலின் இறுதியில் அந்த நபர்களின் சட்டை மடிப்பில் வெடிகள் வைத்துத் தைக்கப்பட்டிருப்பதை வெளியிடும் தீவிரவாதி வாசுவைப் பள்ளத்தில் தள்ளிச் செல்கிறான். அன்வர் உதவியால் வாசு தப்பிக்கிறான். இதற்கிடையே இந்திய உளவாளி மன்சூர் அந்த வெடிமருந்துகளைக் கண்டுபிடித்து ஆட்களைக் கைது செய்து விடுகிறார். பாகிஸ்தான் உளவாளி தனியே காரியமாற்ற வேண்டிய நெருக்கடி நேர்கிறது. மாலாவும், சித்தப்பாவும் காவலர்களுடன் பாலம் நோக்கி விரைகையில் அந்த இரண்டாவது தீவிரவாதி காவல் துறையினரால் சுடப்பட்டுப் பிடிபடுகிறான். முதல் தீவிரவாதி வெடிகுண்டு வைக்கும் இடத்தினை வாசு முதலில் சென்றடைய வாசுவின் வேகமான கால்கள் விடுகிறது உதை. பறக்கிறது குண்டு. வெடிக்கிறது தீவிரவாதி மீது. பலத்த காயத்துடன் அவனும் பிடிபடுகிறான். அனைத்து சதித் திட்டங்களும் முறியடிக்கப்படுகின்றன. சுபம்.
மொத்தத்தில் படகு வீடு மர்மம் அசத்தலான கதை.
வாங்கி ஆதரிக்க மறவாதீர்கள். விரைவில் ரூபாய் 20 விலையில் மாணவ, மாணவிகளுக்கென்றே விலை மலிவாக லயன்-முத்து நிறுவனத்தின் மற்றொரு மணம் வீசும் மலராக விரைவில் வெளியாகவிருக்கிறது.
வாங்கி மகிழுங்கள்.  

ரங் ரேகா பியூச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் 1972வில் வெளியிட்ட கதை இது. தி சேகர் லித்தோ வொர்க்ஸ், சிவகாசியில் இருந்து டிசம்பர் 1974 இல் தமிழில் அச்சிட்டுள்ளனர். வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுஸ், விச்சு & கிச்சு(இரண்டு கதைகள்), வழி காட்டுங்கள் பகுதி, கோடுகளை இணையுங்கள் பகுதி, ஒளிந்திருக்கும் முதலையைக் கண்டு பிடிக்க முடியுமா உங்களால் பகுதி, வித்தியாசமான தோற்றம் உள்ள ஓவியம் எது என்று கண்டறியும் பகுதி, மேதாவி மணி, ஏழு வித்தியாசங்களைக் கண்டறியுங்கள் பகுதி, மவுனமாக இரசிக்க இரண்டு சிறப்புக் கதைகள் பகுதி என நிறைவான இதழ் இது. சிறுவர்களை அசத்தியதற்கு இது போன்ற ஈர்ப்புப் பகுதிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். இப்போது வெளியிடப்படும் கதைகளில் சிறுவர்களுக்கான பகுதிகள் மிகவே சுருங்கி இருப்பதும், நாற்பது வயதுக் காரர்களை இப்போது கவனத்தில் அதிகம் எடுத்துக் கொள்ள நேர்வதும் தமிழில் ஒரு சிறிய குறையாகவே தொடர்கிறது. ஆனால், இப்போதுள்ள தலைமுறைகள் வேறு வகைக் கொண்டாட்டங்களில் ஆர்வம் காட்டி வருவதும் கண்கூடு.

நான் எழுதிய ஒரு கவிதை,

அன்னை நிலாவைக் காட்டித்
தன் குழந்தைக்கு ஊட்டுவாள்
சோறு அது அந்தக் காலம்!
இன்றோ தன் மழலைக்கு
ஆண்ட்ராய்ட் விளையாட்டைக்
காட்டி ஊட்டுகிறாள் மேகி,
இது இந்தக் காலம்!
நிலாதான் ஏக்கமாய்!!!

மொத்தமாக முத்து மினியில் வந்திருக்கும் தலைப்புகள் இவ்வளவுதான் மக்களே! அனைவரும் காத்திருந்து வாசித்து இன்புறுங்கள். கோடைக்கால விடுமுறை மிகவும் உபயோககரமாக இம்முறை அமைந்து நம் சிறுவர் குழாமை மகிழ்விக்கப் போவது உறுதி.
புகைப்பட உதவி: திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம், 



என்றும் அதே அன்புடன்

உங்கள் இனிய நண்பன் ஜானி!

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...