வாயுவேக வாசு-முத்து மினி காமிக்ஸ் -001

வணக்கங்கள் இனிய நெஞ்சங்களே! 
முத்து மினி காமிக்ஸ் கலவர அலைகளை வீசி காமிக்ஸ் சுனாமியாக மாறி உங்களை வரும் மாதங்களில் தாக்க இருப்பது தாங்கள் அறிந்ததே.
அதன் முதல் இதழான வாயு வேக வாசுவைக் குறித்து அறிந்து கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். இதோ விவரங்கள்.

விலை 60 காசு
வெளியீட்டு எண் -001
நவம்பர் 1974
சேகர் லித்தோ வொர்க்ஸ், சிவகாசி
வெளியிடுவோர்
முத்து காமிக்ஸ் மற்றும் முத்து மினி காமிக்ஸ்


கதா பாத்திரங்கள்: 


வாயுவேக வாசு, 
இராணுவத் தளபதி..

சிஸ்டர் சரசு...


இராணுவ மேஜர்..
புத்த லாமா...
இன்னும் பலப்பல பாத்திரங்கள்....

கதையமைப்பு:
சீன நாட்டுடன் இந்தியா புரிந்த யுத்தத்தில் வாயு வேக வாசு உளவு வேலை செய்து நாட்டுக்கு உதவினால்....
கதை சுருக்கம்: சிறுவன் வாசு தனது துணிச்சல் மிகு துடிப்பான செயல்களால் நண்பர்கள் மத்தியில் வாயு வேக வாசு என்று அழைக்கப்படுகிறான்.
1962வில் இந்தி சீனி பாய், பாய் என்று நட்பாகப் பழகி வந்த சீனர்கள் திடீரென படையெடுத்து வந்ததால் மனமுடைந்த நேரு மாமாவைப் போல மனம் வருந்தி, கோபம் கொண்டு, வீறு கொண்டு எழுகிறான் வாயுவேக வாசு. இரும்புத் தொழிற்சாலை நகரான ஜாம்ஷெட்பூர் சுற்றுலாவுக்குப் பள்ளி மாணவனாக புறப்படும்  வாசு அங்கிருந்து ஹவுரா நகரை இரயில் மூலமாக அடைந்து டம்டம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் இராணுவ சரக்குகளிடையே ஒளிந்து கொண்டு பாராசூட் உதவியினால் நேரே நேபா போர் முனையில் இறக்கப்படுகிறான் வாசு. அங்கே அவன் உதவியாளனாக சேர்த்துக் கொள்ளப்பட்டு துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெறுகிறான். நேபா போர் நமக்கு சாதகமாக அமையவில்லை. கீழே இருக்கும் G-7இராணுவ தளத்துக்கு சென்று உதவி கோர இராணுவத் தளபதி வாசுவை அனுப்புகிறார். அவன் திரும்பி வருவதற்குள் அந்தத் தளம் அழிக்கப்பட்டு விடுகிறது. வீர மரணமெய்திய தளபதியின் இரத்தக் கையொப்பம் வாசுவின் கையொப்பப் புத்தகத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. அது அவனை இன்னும் உத்வேகமடைய செய்கிறது. இந்நிலையில் எதிரிப் படையின் ஆள் பலம் குறித்து குழப்பம் நிலவுகிறது. அதனைக் கண்டுபிடிக்க நமது வாசு புறப்படுகிறான். காட்டு எருது ஒன்று தாகத்தில் தவிப்பதைக் கண்டு அதன் முதுகில் ஏறி சீனர்களது படைகள் பாளயமிறங்கி இருக்கும் இடத்தை அடைகிறான் வாசு. மதுவை தண்ணீர் என்று அருந்திய காளை செய்யும் அட்டகாசத்தின் இடையில் வாசு இராணுவ இரகசியக் குறிப்புகளுடன் தப்புகிறான். மோட்டார் சைக்கிளை லாவகமாகக் கையாண்ட போதிலும் எதிரி குண்டு பட்டு காயமடையும் வாசு இந்திய இராணுவக் கூடாரத்தை அடைந்து விடுகிறான். இரகசியங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. சிகிச்சை அளிக்கும் சிஸ்டர் சரசுவின் அம்மாவுக்கு உதவ பணம் அனுப்ப கழுதைப் பயணம் செய்து சென்று தபால் ஆபீஸை அடைய முயன்று அதில் தோல்வி அடைகிறான் வாசு. இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட இராணுவ மேஜர் பண உதவி செய்கிறார். அவனது முயற்சியால் சரசு தனது அம்மாவுக்குப் பணம் அனுப்புகிறாள்.
இந்நிலையில் G-7 முகாமும் எதிரிகளால் தாக்கப்படுகிறது. சாமர்த்தியமாக மரத்தில் ஏறித் தப்புகிறான் வாசு. ஆனால் எதிரிகள் முகாமை அழித்து விடுகிறார்கள். வாசுவைக் கொண்டாடிய பல இராணுவ வீரர்கள் இறந்து விடுகின்றனர். பின்னர் வேறு இராணுவ முகாமை வந்தடையும் வாசு அங்கே இருந்த ஒரு புத்த பிக்குவை சந்திக்க நேர்கிறது. அன்பே உருவான அவரால் ஈர்க்கப்பட்டு அவருடன் பயணிக்கும் வாசு அவர் ஒரு சீனத்து உளவாளி என்பதை அறிந்து அவரை இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கிறான்.
அடுத்து பட்டம் விடும் இடத்துக்கு செல்கிறான். ஒரு இராணுவ ஹெலிகாப்டர் (உலங்கூர்தி) பட்டங்களை வட்டமிடுதல் குறித்து சந்தேகம் வர ஒரு பட்டத்தைக் கைப்பற்றி அதனை சோதிக்கும்போதுதான் அதில் இரகசியக் குறிப்புகள் எழுதி சீன இராணுவத்துக்குத் தகவல் அனுப்புவதைக் கண்டறிகிறான் வாசு. பட்டம் விட்டவனை மடக்கிக் காவல் துறையில் ஒப்படைத்து விட்டு காவல் துறையினர் அறிவுரையை ஏற்று ஊர் திரும்புகிறான் வாசு. பூனாவில் பள்ளித் தோழர்களுடன் இணைந்து கொள்கிறான்.
கதை பூனாவில் துவங்கி ஜாம்ஷெட்பூர், ஹவுரா, நேபா என்று பரவலாக விரிகிறது. டோராவின் பயணங்கள் போன்று, வாசுவின் பயணங்கள் என்று பேசாமல் தலைப்பை மாற்றிப் போட்டு விடலாம் போல. அத்தனை விதமான சவாரிகள் வாசுவால் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் காட்டெருமை சவாரி ஹைலைட் செய்ய வேண்டியது.
அட்டையில் இடம்பெற்றுள்ள வாசு உளவாளி ஜேம்ஸ்பாண்ட் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறான். அதுவும் அசத்தலாக உள்ளது. நாட்டுப்பற்றை அக்காலத்தில் அருமையாக ஊட்டி வளர்க்க இந்த சித்திரக்கதை மிகவும் உதவியிருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

கதையை எழுதிய பாரா பாக்வத் அவர்களுக்கும், ஓவியம் தீட்டிய ராம் வாயீர்க்கர் அவர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும். அட்டகாசமான இந்தக் கதையை மறுபடியும் முத்து மினி காமிக்ஸ்ஆக முன் போன்றே விலைக் குறைவான (olx ல் 35,000/- வரை விலை ஏற்றம் கண்டது இந்த நூல்) மலிவுப் பதிப்பாக மீண்டு வர உழைத்து இருக்கும் அத்தனை இதயங்களுக்கும் நன்றிகள். உங்கள் பிரதியைத் தவறவிடாதீர்கள். 
உள்ளங்கை அளவே இருக்கும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவும், விமர்சிப்பதற்கும் கொடுத்து உதவிய நண்பர் டெக்ஸ் சம்பத் அவர்களுக்கு நமது வாசகர் வட்டம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி....

இது 22.03.2017 ஆம் தேதி...

ஒரு கனவு கண்டால் அதில் தினம் முயன்றால் வானம் வசமாகும்.. நண்பர்கள் ஒரு சிலரது கனவுதான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன புத்தகத்தைக் கூட மீண்டுயிர்த்தெழ வைத்தது.. நன்றி வாசகப் பெருமக்களே...

Comments

Guna karur said…
அருமை!வாயு வேகப் பதிவு!சித்தரக் கதையை எழுத்து வடிவில் வாசித்தாயிற்று..சித்திரங்களோடு வாசிக்க ஆா்வம் கூட்டி விட்டீா்கள்!!நன்றி!!
Guna karur said…
ராம் வயீா்க்கா்,சுப்பாண்டியை சிருஷ்டித்தவா்...??!!
Kavinth JeevA said…
வாயு வேக வாசு,அழுத்தமான கதையம்சம் கொண்ட கதை போலும்...இதை போன்ற நூல்கள் மீள்பிறப்பிக்கப்படுவதே உத்தமம்..!
John Simon C said…
கண்டிப்பாக மீள் பிறப்பிக்கப்படும் நண்பரே! அது லயன் காமிக்ஸ் இரசிகர் படை கொடுக்கும் அழுத்தத்தைப் பொறுத்ததே. ஹீ ஹீ ஹீ முத்து மினி வந்தபோது நான் பிறந்திருக்கவேயில்லை. உண்மையிலேயே தேசபக்தியை சாதாரண மாணவ மணிகளுக்கு ஊட்டும் வேலை இதில் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் நண்பர்களே. ஆசிரியர் இந்த இதழை மிக விரைவில் கொண்டு வர இருப்பதால் முக்கிய பேனல்கள் இப்போதைக்குத் தவிர்க்கப்பட்டுள்ளன. திரு.ராம் வாயீர்க்கர் அவரே. நமது திரு.கிருஷ்ணசாமி அவர்களது தோழரும் கூட...தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் நண்பர்களே.
Blizy Babu said…
நன்றி அண்ணா!
நல்ல பதிவு!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!