வெள்ளி, 8 ஏப்ரல், 2016

படகு வீடு மர்மம்-முத்து மினி காமிக்ஸ்-002


இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே!
படகு வீடு மர்மம் முத்து மினி காமிக்ஸின் இரண்டாவது பெருமை மிகு வெளியீடு.

வெளியான ஆண்டு டிசம்பர் 1974
கதை-பாரா பாக்வத்
விலை 60காசு.
கதாபாத்திரங்கள்: 

வாயு வேக வாசு என்கிற வாசு தேவன்...


மாலா...

அன்வர்...
இந்திய CID மன்சூர்...



பாகிஸ்தானிய உளவாளி -1



பாகிஸ்தானிய உளவாளி -2 
கதையமைப்பு:
அயல் நாட்டு உளவு சதியை முறியடிக்கும் சிறுவர்கள்.
கதைச் சுருக்கம்:
ஸ்ரீ நகரில் விடுமுறை நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் வாசு, அவன் தங்கை மாலா, தோழன் அன்வர் ஆகியோர் இராணுவ உளவாளி ஒருவரைப் படுகொலை செய்து பேரழிவை ஏற்படுத்தும் திட்டத்துடன் வரும் பாகிஸ்தான் உளவாளியைப் பற்றி மர்மமாக தனித்து நிற்கும் படகு வீட்டின் மர்மத்தை அவிழ்க்க முயலும் வேளையில் அறிந்து கொள்ள நேர்கிறது. அந்த உளவு சதியை முறியடிக்க அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுத்தனர், இந்திய உளவாளியின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா, அந்நிய நாட்டு உளவாளியின் சதித் திட்டம்thaan என்ன, அதனை முறியடித்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய வாசுவுடைய குழுவால் முடிந்ததா? என்பதனைப் பரபரப்பான கதையாகக் கொடுத்துள்ளனர்.
வாசு தனது விடுமுறையில் தனது சித்தப்பாவுடனும், அவர் மகள் மாலாவுடனும் ஸ்ரீ நகரில் ஒரு படகு வீட்டில் தங்கிக் கழித்துக் கொண்டிருக்கையில் படகோட்டியின் மகன் அன்வர் தோழனாகிறான். செய்தித் தாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாராசூட்டில் வந்திறங்கி இருப்பதாக செய்தி வருகிறது. நண்பர்கள் நரி வேட்டையில் ஈடுபட சென்று விட மாலா ஓவியம் வரைவதில் நேரத்தை செலவிடுகிறாள். அவளை அணுகும் ஒரு ஆசாமி ஒரு ஓவியத்தின் நகலை வரைந்து தருமாறு கேட்டு வாங்கிச் செல்கிறார். மாலாவும், வேட்டையாட சென்ற நண்பர்களும் ஒரு சேர பாராசூட்டுகளைக் காண நேர்கிறது. மாலாவை அந்தத் தீவிரவாதி கடத்துகிறான். மாதக்கணக்கில் வெறுமே இருந்த படகு வீட்டில் ஆள் நடமாட்டம் இருப்பதை வைத்து அந்தத் தீவிரவாதிகள் அங்கு சென்றுதான் ஒளிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை நோட்டம் விடுகிறார்கள் வாசுவும், அன்வரும். அந்தத் தீவிரவாதிகளுக்கு ஒரு நபர் தேவை இருப்பதை உணர்ந்து சிறுவன் அன்வர் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனைத் தீவிரவாதிகள் ஒரு பணிக்காக அனுப்புகிறார்கள். அதே நேரம் வாசு ஒரு அம்பில் செய்தி வைத்துக் கட்டி அதனைத் தன் சித்தப்பாவுக்கு அனுப்பி வைக்கிறான். அவர் காவல் நிலையம் செல்கிறார். செல்லும் வழியில் தன்னை விடுவித்துத் தப்பி வரும் சிறுமி மாலாவை சந்திக்கிறார். அவள் தனது ஓவியம் தீட்டிய கார்பன் தாளை அவரிடம் காண்பிக்கிறாள். அன்வர் தீவிர நாட்டுப்பற்றுடையவன் என்பதைத் தீவிரவாதிகள் அறிந்து கொள்கிறார்கள். அவர்கள் படகில் இருந்து சில ஆயுதங்களை வாசு திருடி விடுகிறான். தீவிரவாதிகள் படகினைக் கிளப்ப முயல்கிறார்கள். அன்வரைக் குறிவைத்து அவர்கள் செல்வதைக் கண்ட வாசு தன்னிடம் இருந்த கையெறி குண்டை வைத்துப் படகு வீட்டைத் தகர்க்கிறான். அன்வரிடம் இருந்த புகைப்படத்துடன் வாசு காவல் நிலையம் செல்லும் வழியில் புகைப்படத்தில் இருந்த நபரே அவன் முன் எதிர்பாராத விதமாக குறுக்கிடுகிறார். அவன் தன் மருமகன் என்று பேர் பண்ணிக் கொண்டு பலகாரக் கடை ஒன்றினுள் செல்கிறார். அங்கு வெடிகுண்டுகள் இரகசியமாகப் பரிவர்த்தனை செய்வதைக் கண்டு பிடிக்கிறார் மன்சூர். ஸ்ரீநகரின் குறுக்கே ஓடும் ஜீலம் நதியில் அமைந்துள்ள பாலத்தைத் தகர்க்க உள்ள இரகசிய சதிச் செயல் வெளிச்சத்துக்கு வருகிறது. மன்சூரைக் கொல்ல முயலும் தீவிரவாதியை அன்வர் குறுக்கிட்டுத் தடுக்கிறான். மன்சூர் கண்ட்ராக்டரைக் கண்டு வர சென்று விட, அன்வரும், மன்சூரும் மரத்தில் ஏறி விளையாடுகையில் தீவிரவாதி அங்கு வந்தடையும் நபர்களுடன் சதித் திட்டம் தீட்டுவதைக் காண நேரும் வாசு தீவிரவாதியுடன் மோதுகிறான். மோதலின் இறுதியில் அந்த நபர்களின் சட்டை மடிப்பில் வெடிகள் வைத்துத் தைக்கப்பட்டிருப்பதை வெளியிடும் தீவிரவாதி வாசுவைப் பள்ளத்தில் தள்ளிச் செல்கிறான். அன்வர் உதவியால் வாசு தப்பிக்கிறான். இதற்கிடையே இந்திய உளவாளி மன்சூர் அந்த வெடிமருந்துகளைக் கண்டுபிடித்து ஆட்களைக் கைது செய்து விடுகிறார். பாகிஸ்தான் உளவாளி தனியே காரியமாற்ற வேண்டிய நெருக்கடி நேர்கிறது. மாலாவும், சித்தப்பாவும் காவலர்களுடன் பாலம் நோக்கி விரைகையில் அந்த இரண்டாவது தீவிரவாதி காவல் துறையினரால் சுடப்பட்டுப் பிடிபடுகிறான். முதல் தீவிரவாதி வெடிகுண்டு வைக்கும் இடத்தினை வாசு முதலில் சென்றடைய வாசுவின் வேகமான கால்கள் விடுகிறது உதை. பறக்கிறது குண்டு. வெடிக்கிறது தீவிரவாதி மீது. பலத்த காயத்துடன் அவனும் பிடிபடுகிறான். அனைத்து சதித் திட்டங்களும் முறியடிக்கப்படுகின்றன. சுபம்.
மொத்தத்தில் படகு வீடு மர்மம் அசத்தலான கதை.
வாங்கி ஆதரிக்க மறவாதீர்கள். விரைவில் ரூபாய் 20 விலையில் மாணவ, மாணவிகளுக்கென்றே விலை மலிவாக லயன்-முத்து நிறுவனத்தின் மற்றொரு மணம் வீசும் மலராக விரைவில் வெளியாகவிருக்கிறது.
வாங்கி மகிழுங்கள்.  

ரங் ரேகா பியூச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் 1972வில் வெளியிட்ட கதை இது. தி சேகர் லித்தோ வொர்க்ஸ், சிவகாசியில் இருந்து டிசம்பர் 1974 இல் தமிழில் அச்சிட்டுள்ளனர். வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுஸ், விச்சு & கிச்சு(இரண்டு கதைகள்), வழி காட்டுங்கள் பகுதி, கோடுகளை இணையுங்கள் பகுதி, ஒளிந்திருக்கும் முதலையைக் கண்டு பிடிக்க முடியுமா உங்களால் பகுதி, வித்தியாசமான தோற்றம் உள்ள ஓவியம் எது என்று கண்டறியும் பகுதி, மேதாவி மணி, ஏழு வித்தியாசங்களைக் கண்டறியுங்கள் பகுதி, மவுனமாக இரசிக்க இரண்டு சிறப்புக் கதைகள் பகுதி என நிறைவான இதழ் இது. சிறுவர்களை அசத்தியதற்கு இது போன்ற ஈர்ப்புப் பகுதிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். இப்போது வெளியிடப்படும் கதைகளில் சிறுவர்களுக்கான பகுதிகள் மிகவே சுருங்கி இருப்பதும், நாற்பது வயதுக் காரர்களை இப்போது கவனத்தில் அதிகம் எடுத்துக் கொள்ள நேர்வதும் தமிழில் ஒரு சிறிய குறையாகவே தொடர்கிறது. ஆனால், இப்போதுள்ள தலைமுறைகள் வேறு வகைக் கொண்டாட்டங்களில் ஆர்வம் காட்டி வருவதும் கண்கூடு.

நான் எழுதிய ஒரு கவிதை,

அன்னை நிலாவைக் காட்டித்
தன் குழந்தைக்கு ஊட்டுவாள்
சோறு அது அந்தக் காலம்!
இன்றோ தன் மழலைக்கு
ஆண்ட்ராய்ட் விளையாட்டைக்
காட்டி ஊட்டுகிறாள் மேகி,
இது இந்தக் காலம்!
நிலாதான் ஏக்கமாய்!!!

மொத்தமாக முத்து மினியில் வந்திருக்கும் தலைப்புகள் இவ்வளவுதான் மக்களே! அனைவரும் காத்திருந்து வாசித்து இன்புறுங்கள். கோடைக்கால விடுமுறை மிகவும் உபயோககரமாக இம்முறை அமைந்து நம் சிறுவர் குழாமை மகிழ்விக்கப் போவது உறுதி.
புகைப்பட உதவி: திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம், 



என்றும் அதே அன்புடன்

உங்கள் இனிய நண்பன் ஜானி!

3 கருத்துகள்:

  1. அருமையான பதிவு நண்பரே....!
    முத்து மினியில் என்னென்ன கதைகள் வரப்போகின்றன என்று சிண்டைப்பிய்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அருமையான கதைச்சுருக்கத்துடன் அம்சமான பதிவு .வாழ்த்துகள்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஓவியர் ராம் வாயீர்கரின் கைவண்ணத்தை டிங்கிளில் கண்டிருக்கிறேன்.(சுப்பாண்டி...?)

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி நண்பரே! சுப்பாண்டி படைத்தவரே இக்கதையையும் படைத்துள்ளார்,

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...