வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!
இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்பகத்தின் முதல் வெளியீட்டைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு மற்றும் கதைச் சுருக்கம்..
நிற்க.. திருவண்ணாமலையில் புத்தகத்திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.. இம்முறை வழக்கமான காந்தி நகர் பைபாஸில் இல்லாமல் நகராட்சி ஈசானிய மைதானத்தில் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் உணவுத் திருவிழா இடம்பெறவில்லை என்கிறார்கள். ஓரிரு நாட்களில் மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படலாம். தகவல் தெரிவிக்கிறேன்..
இனி என்டர் தி பேண்டம் உங்கள் பார்வைக்கு..
மாண்ட்ரேக் புகழ் எழுத்தாளர் லீ பால்க்கின் தி பேண்டம் என்றே பிரபலப்படுத்துவதில் இருந்து மாண்ட்ரேக் எத்தனை புகழ்பெற்ற பாத்திரமாக ஆஸ்திரேலியா வரை நிலைத்திருந்திருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சிட்னியில் இருந்து இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும் ஆறு ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் ஓவியர் குறித்த குறிப்புகள் இல்லை. ஆனாலும் இந்த வகை ஓவியங்களை வரைந்தவர் யார் என்பதை போகிற போக்கில் அறிந்து கொள்வோம்..
வேதாள மாயாத்மாவின் தோற்றம் மற்றும் தொடர்ச்சி போன்றவை ஒவ்வொரு கதையிலுமே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.. இந்த கதையிலும் துவக்கம் அதை வைத்துத்தான்..
இனி கதையின் சுவாரஸ்யமான அம்சங்கள்..
*கதை ஆரம்பிப்பதே மன்னார் வளைகுடாவில்...
*அதில் வரும் இராணுவ வீரர் தான் மெட்ராஸில் இருந்து வருவதாக தெரிவிக்கிறார்.
*அரேபிய உடையில் வேதாளர் பாலைவெளியில் நிகழ்த்தும் சாகசம் இந்தக் கதை.
*சுவாரஸ்யமான வசனங்கள் நிறையவே இருக்கின்றன..அதில் ஒன்று அமெரிக்காவின் மிஸ் அமெரிக்கா நீங்கள்தான்..இல்லையேல் தேர்வுக்குழு தவறு இழைத்திருக்கிறார்கள் என்று ஒரு வசனம் வரும்..
கப்பலில் பிரயாணித்து கொண்டிருக்கும் டயானா பால்மரிடம் இராணுவ வீரர் லெப்டினென்ட் பைரோன் பழகுகிறார்.. மோரிஸ் டவுனில் இருந்து புறப்பட்டதாக கூறும் டயானா தனக்குத் திருமணமாகி விட்டதையும் தெரிவித்து வைக்கிறார்.. இராணுவத்தினை சில தினங்களுக்கு முன்பாக மாபெரும் வனவாசிகள் சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டதாகவும் படுகொலை அரங்கேறியிருக்கும் நிலையில் அங்கே ஓர் மாவீரர் தோன்றி அவர்களை காப்பாற்றியதாகவும் அதனை தான் மெட்ராஸில் வான் தந்தியில் கேட்க நேர்ந்ததாகவும் பைரோன் தெரிவிக்கிறார். அவருக்கு விருதே தந்திருக்கலாம் ஆனால் மாயமாகி விட்டார் என்றதும் டயானாவுக்கு அவர் மாயாவியாரைத்தான் சொல்கிறார் என்பது புரிகிறது..
அவர்கள் பயணிக்கும் கப்பல் ஒரு புயலில் சிக்குண்டு கவிழ்ந்து விடுகிறது.. அதில் இருந்து தப்பும் பைரோன் ஒரு சில வாரங்களில் பெங்காலி வனத்துக்குள் அரும்பாடுபட்டு மாயாவியாரை அவரது மண்டையோட்டுக் குகைக்கே சென்று சந்தித்து தன்னுடன் டயானாவும் சிலரும் தப்பிக் கரை சேர்ந்ததாகவும் அரேபிய அடிமை விற்பனையாளர்களிடம் டயானா சிக்குண்டு தான் மட்டும் தப்பிக்க உதவியதாகவும் தெரிவிக்கிறார். வேதாளர் தனி விமானம் ஏற்பாடு செய்து கொண்டு பைரோன் துணையுடன் வனத்தில் இருந்து பாலைவனத்துக்கு இடம்பெயர்கிறார்.. அங்கே தேடல் துவங்குகிறது..
செய்தி சேகரிக்க பணம் கொடுப்பது என்பது மிகவும் ரிஸ்க் நிறைந்தது.. உங்களிடம் இன்னும் அதிகம் பணம் இருக்கலாம் என்பதால் நீங்கள் கொல்லப்படவும் வாய்ப்பிருக்கிறது.. தங்க முட்டையிடும் வாத்து கதைதான்.. இங்கே மாயாவி தங்கத்தையே நீட்டுகிறார்.. அவரை பாலைப் பரப்பிலேயே புதைத்து விடும் வேகம் வெறியர்களுக்கு எழுவது உலக இயல்புதானே? கடைசி ஆசையாக கொஞ்சம் அருந்த நீர் கேட்கிறார்.. நீரை வாங்கி நெருப்பை அணைத்து விடுகிறார்.. காரிருள் அங்கே சூழ்கிறது..
வாங்கிக் கொள்ளுங்கள் வேதாள முத்திரை அற்பர்களே..!
அது வேதாளரின் முத்திரை என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டு அதிர்ந்து போகின்றனர் கயவர்.. பாலைவெளியில் டயானா அடைபட்டிருந்த கூடாரத்துக்கு அருகில் நின்ற காவலர்கள் வண்ணவண்ண வெளிச்சங்கள் திடீரென எழும்புவதைக் கண்டு திகைத்து அது என்ன என்று தெரிந்து கொள்ள கணநேரம் கவனமின்றி செல்கின்றனர். அந்த இடைவெளியில் டயானாவின் குகையில் புகுந்து விடுகிறார் வேதாளர். இருவரும் சந்தித்த மகிழ்ச்சி கலைவதற்குள் எதிரிகளிடம் அகப்பட்டு விடுகிறார் மாயாவி.. கடத்தல் கும்பல் தலைவன் இது வேதாளரேதான் என்பதை அறிந்து..
"சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கிறீர்.. இப்போது எதற்காக வந்தீர்? "என்று கேட்க..
என் குடையை மறந்து வைத்து விட்டேன் என்கிறார் வேதாளர்...
இன்னும் எத்தனை காலம்தான் இந்த அடிமை வியாபாரத் தொழில் என்று வினவுகிறார்.
நான் தலைவனாக இருக்கும்வரை இப்படித்தான் என்று கூறி அவரை ஒரு எறும்புப் புற்றுக்குள் திணித்து சித்திரவதைக்கு விட்டு விட்டு அந்த கயவர் கும்பல் புறப்பட்டு விடுகிறது..
அவரை மீட்கப் போராடும் டெவில் நரிக் கும்பலால் படாதபாடுபட்டு தன் எஜமானரைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியைத் தழுவும் வேளையில் ஒரு புதிரான ஆசாமி அவரை மீட்டு நரிகள் பூட்டியதொரு இழுவை வாகனத்தில் தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று குணமாக்குகிறார்.. அவர் பாலைவெளித் துறவி என்று மக்களால் அழைக்கப்படுபவர் என்று பின்னர் வேதாளர் தெரிந்து கொள்கிறார். அவரது முகத்தைக் கண்ட முதல் மனிதர் என்று வேதாளர் துறவியைக் கூறுகிறார். இரு அபூர்வமான பிறவிகள் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். எறும்புகளின் விஷமும், பாலை வெயிலும் வேதாளரை பலவீனமாக்கி இருக்கின்றன.. துறவி நரிகளை வளர்ப்பு மிருகங்களாக மாற்றி வைத்திருக்கிறார். ஒரு பெண்ணுக்காகவா இத்தனை தூரம் சிரமப்பட்டிருக்கிறாய் என்று வெறுப்புடன் கூறுகிறார் துறவி.. அவரது வாழ்க்கை வரலாறு சித்திரங்களாக விரிகிறது..
மிகவும் அழகான பெண் ஒருத்தியை காதலித்தவர் ஒரு கட்டத்தில் பிரிய நேர்கிறது. அவள் பின்னர் குழந்தை குட்டி என்று பெற்றுக் கொண்டு குடும்பத்தில் ஐக்கியமாகி விட துறவிக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் விடுகிறது.. ஆனால் என்னுடைய டயானா முற்றிலும் வேறுபட்டவள் என்கிறார் வேதாளர்..
இது இப்படி இருக்க சுல்தான் ஒருவரிடம் அடிமை விற்பன்னர் டயானாவை விற்க முயற்சிக்க காத்திருக்கிறது ஆன்டி க்ளைமாக்ஸ்.. சுல்தான் அமெரிக்கப் படைகளை நமக்கெதிராகத் திருப்பி விட்டு விடுவாய் என்று கடிந்து கொண்டு அடிமை வியாபாரியை ஓட விடுகிறார். டயானாவும் வேதாளரும் எப்படி சேர்ந்தார்கள்? அடிமை வியாபாரியை வேதாளர் முடக்கிப் போட்டு வியாபாரத்தை நிறுத்தினாரா என்பது விலாவாரியாக முப்பத்து மூன்று பக்கங்களில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.. பதிவு நீளமாக சென்றால் வாசிப்பதற்கு சிரமம் ஏற்படலாம் என்பதால் இத்துடன் இந்த கதையை முடித்து வைக்கிறேன்.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..
விரைவில்...
Super brother
பதிலளிநீக்குthank you bro
நீக்குநன்றி
பதிலளிநீக்கு