சனி, 16 ஏப்ரல், 2016

சூரப்புலி சுந்தர் - முத்து மினி காமிக்ஸ் 004

வணக்கங்கள் ப்ரியமானவர்களே!
கள்ளக்கடத்தல் அன்றும், இன்றும், என்றும் தீராத ஒரு தலைவலியாகவே இருந்து வருகிறது. அதனைத் தடுக்க தம் இன்னுயிரைப் பணயம் வைத்துப் போராடும் அலுவலர்கள் நிறைய பேர். அவர்களின் தியாகங்கள் திரைமறைவில் நிழலாக இருப்பவை. வெளிச்சத்துக்கு வர முடியாதவை. அவர்கள் தம் இடையறாத பணியால் சட்டத்தைக் கட்டிக் காக்கிறார்கள். நீதியை நிலைநாட்டிடும் அப்படிப்பட்ட உத்தமர்களின் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் சூரப்புலி சுந்தர்.
வண்ணத்தின் எண்ணம் -திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம். 

     இது முத்து மினி காமிக்ஸ் வெளியீடு எண் 004. 60 காசு விலையில் ஒரு அருமையான மசாலா திரைப்படம் போன்ற சித்திரக்கதை. மே,1975 ல் தி சேகர் லித்தோ வொர்க்ஸ், சிவகாசி 626123 என்ற முகவரியில் இருந்து வெளியிட்டுள்ளனர். முத்து காமிக்ஸின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் ஜூன், 1975 ல் வெளியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகி இருக்கிறது. மையக் கதைகள் இரண்டு. 3 வது பக்கத்தில் துவங்கிப் பரபரவென வேகமெடுத்து 51 ஆம் பக்கம் சடாரென முடிகின்றன. அடடே நாம் இரண்டு கதைகளைக் கடந்து வந்து விட்டோமா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். முற்றும் என்கிற பதம் மட்டுமே எல்லையைக் குறிக்கிறது. ராம் வாயீர்க்கர் ஓவியம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதே பாரா பாகவத் கூட்டணியாக இருக்கலாம். அதனைத் தொடர்ந்து அக்பர்-பீர்பாலின் "சொர்க்கலோகப் பயணம்" எனும் சிறு கதையும், பின்னர் விச்சு & கிச்சுவின் காமெடி கலாட்டாவும் பின் அட்டையில் சேகர் நோட்டுப் புத்தகங்கள் விளம்பரமும் அழகாக அச்சிடப்பட்டு உள்ளன. முன்னும் பின்னும் ஒரே விதமான அட்டை. துறைமுகப் பின்னணியில் கைத் துப்பாக்கியுடன், கோட்டு, சூட்டு, குளிர் கண்ணாடி அணிந்த பருமனான நபர் நிற்கிறார். யாரப்பா அது? ஒரு வேளை சூரப்புலி சுந்தரின் மாறுவேடம் எனில் அவனது ஒல்லி உருவம் ஒட்டவில்லையே. இந்தக் குறை புதிதாக வெளியாகவிருக்கும் மறுபதிப்பில் களையப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். முக்கியமாக ஒன்று கூற வேண்டும். இது சூரப்புலி சுந்தரின் இரண்டு தனித்தனி சாகசங்கள், தனித்தனி வில்லன்கள். தலைப்புகள் தனித் தனியே கொடுக்கப்படவில்லை.
     உள்ளங்கைக்குள் அடங்கி விடும் இந்த தம்மாத்தூண்டு புத்தகத்தை இத்தனை ஆர்வமூட்டும் விதத்தில் கொடுத்த சேகர் லித்தோ ஒர்க்ஸ்க்கு ஜே. இவ்வளவு அரியதொரு படைப்பு இருக்கிறது எனக் காண்பித்து வாசிக்கவும் கொடுத்து உதவிய நட்பூக்கள் கலீல், சம்பத் ஆகியோருக்கு என் நன்றிகள்.
     பழமைக்கு என்றும் மதிப்புண்டு. ஆனால், பழமை, பழமை என்று நீங்கள் வாங்கும் புத்தகங்கள் உண்மையிலேயே பழமையானவைதான் என்று உங்களுக்குத் தெரியுமா? பழமையாக்கி புத்தகங்களை விற்க முடியாதா என அச்சகத்துறை நண்பர்களையும், நண்பர் திரு. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களையும் கேட்டேன். அவர் நாளிதழ் துறையில் இருந்தவர். புதிதாக அச்சடித்த புத்தகங்களை அப்படியே எடுத்துக் கொண்டு சென்று ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்குள் வைத்து எடுத்தால் ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகள் பழமையான புத்தகங்கள் போன்று தோன்ற செய்ய முடியுமாம். அவை நீங்கள் தொட்டால் கொட்டும் நிலையில்தான் இருக்கும். பார்த்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதனை அப்படி பழமைக்கு மாற்றி கல்லா கட்டும் கும்பல் உங்களை எப்போதுமே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. புத்தகத்தை அன்றைக்கு 60 காசுக்கு அச்சடித்து ஏதோ ஒரு சேவை மனப்பான்மையிலோ அல்லது சிறு லாபம் வைத்தோ மாணவ மணிகளுக்குக் கொடுத்த புத்தகங்களை இன்றைக்கு அரிய புத்தகம், சொறிய புத்தகம் என்று ஆசைகாட்டி மோசம் செய்ய எத்தனிக்கும் நரிகள் உலவும் பூமி இது. உங்கள் பரிமாற்றங்களில் சப்தமே இல்லாமல் பழைய புத்தகங்கள் என்கிற பெயரில் இப்படிப்பட்ட புத்தங்களை உங்கள் இல்லங்களில் நீங்கள் ஏற்றுக் கொண்டால் பின்னர் ஒரு காலத்தில் நீங்கள் ஏமாந்தது யாரிடம் என்று வருந்தத் தொடங்கி விடுவீர்கள். அரிய புத்தங்களை வெளிக் கொண்டு வரவே இந்த வலைப்பூவையும், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் முக நூல் பக்கத்தையும் வடிவமைத்து இருக்கிறோம். சென்னையில் ஒரு நூலகம் நடத்தும் முயற்சியில் இப்போது விற்பனைக்கு வரும் நமது லயன் குடும்ப இதழ்களையும், ஓ காமிக்ஸின் புதிய படைப்பு டாக்டர் டிட்சியும் வாங்கி வருகிறோம். ஆனால், மட்கிப் போன நிறங்களில் புத்தகங்களைக் கண்டதும் அதன் மீது விழுந்து பிடுங்கி கேட்கும் விலையைக் கொடுத்து என்று நீங்கள் படும்பாடு நிச்சயம் வருந்தத் தக்கது. உங்கள் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் நன்றாகப் பழகினாலே நீங்கள் ஆசைப்படும் நூல்கள் உங்களுக்கு வாசிப்புக்குக் கிடைக்கும். அதற்கு சரியாக, நேரத்துடன், கவனமாகத் திருப்பிக் கொடுக்கும் பண்பு உங்களுக்கு இருக்க வேண்டியது உங்கள் தகுதியாகும். ஆகவே நண்பர்களே உஷார். கவனம். அரிய புத்தகமாயினும் நட்பை மதித்து பாண்டியில் இருந்தும், திருப்பூரில் இருந்தும் இந்த புத்தகத்தைக் கொடுத்து அனுப்பி வாசிக்கவும் உங்களுக்குக் கதை சொல்லவும் உதவிய நட்பூக்களை உதாரணமாகக் கொள்ளுங்கள். உங்கள் நட்பு வட்டம் விரியட்டும். காசேதான் கடவுளடா என்பது நிலைக்காது நண்பர்களே. புத்தாக்கம் என்பது புத்தாக்கமாகவே உருவாக்கப்படுவது. அந்தக் கதையின் மீதும், கதாசிரியர் மீதும், வெளியீட்டாளர்கள் மீதும், அந்தப் படைப்பை அழிய விடக்கூடாது என்கிற உண்மையான தாகத்திலும் ஒவ்வொரு பேனல்களையும் நேரமெடுத்து இழைப்பது என்பது ஒரு புத்தக உருவாக்கத்துக்கான உழைப்பு, மெனக்கெடல். உ.வே.சாமிநாதய்யர் காலத்தில் இருந்தே இந்த மல்லுக்கட்டல்கள் தொடர்கின்றன. கேட்கும் புத்தகத்தைக் கொடுக்காமல் நான் ஆற்றில் கூட விடுவேன். இலக்கியம் என்று வந்து கேட்கும் கோமாளி நீ உனக்கு நான் ஏன் தர வேண்டும் என்ற மந்தமான தொலைநோக்குப் பார்வை அலைகளைத் தன் பொறுமையால் வீழ்த்தி வென்று இன்றும் வரலாற்றில் தமிழ்த் தாத்தா என்ற அடை மொழியுடன் நிற்கிறார். காலம் தன் கடமையை என்றாவது செய்தே தீரும். இறையருள் உதவும்.
    
     இனி கதை. முதல் சாகசத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள். கதையமைப்பும் தடதட வேகத்தில்தான் பயணிக்கிறது. ஊரில் இருந்து நகரத்துக்கு வரும் ஹீரோ, அவனுக்கு ஒரு ஹீரோயின், ஒரு காமெடி தோழன், வில்லனின் கூட்டத்தில் ஒரு கவர்ச்சி நங்கை, பாடலுக்கேற்ற பிக்னிக் சூழல், ஒரு காபரே நடனம், பல சேஸிங்குங்கள், கிளைமாக்ஸ் கப்பலில், கடைசியில் போலீஸ் ஆஜர் என அப்படியே மசாலா சினிமா பார்த்த திருப்தி வாசகர்களுக்குக் கிடைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கதையமைப்பில் இரசிக மனங்களைக் கவர்ந்து இழுத்து விடுகிறான் இந்த சூரப்புலி சுந்தர்.
     இரண்டாவது சாகசம் பெயரிடப்படவில்லை. செங்கல், செங்கல்லாய்த் தங்கம் என்று வேண்டுமானால் மரண மொக்கையாகத் தலைப்பொன்று இடுகிறேன். பொறுத்தருள்வீர் ஐயாமாரே.
     வேலை தேடி மும்பை வரும் சுந்தர் ஜேப்படித் திருடன் ஒருவனை மடக்குகிறான். அவனிடமிருந்து மீட்டுத் தந்த பர்ஸ் சுங்க அதிகார் நரேஷ் மேத்தாவுடையது. எனவே அவனுக்கு சுங்கத்துறையில் பணி கிடைக்கிறது. அக்ரம் ஷா என்பவன் ஒரு பெண்ணிடம் கலாட்டா செய்ய அவனை அடக்குகிறான். அப்பெண் ஆஷா பவார் அவனுக்குத் தங்க இடமும், காயங்களுக்கு மருந்தும் தருகிறாள். ஏற்கனவே சுந்தர் அறிந்த போக்கிரி கமால் காக்கா ஒரு பார்சலைக் கடத்த மாறுவேடத்தில் வர அவனை மடக்குகிறான் சுந்தர். அந்தப் பார்சலில் அபினி உள்ளது. கமால் காக்காவின் ஒத்துழைப்பு சுந்தருக்குக் கிடைக்க ஏராளமான கடத்தல் எலிகளைப் பிடித்து விடுகிறான் சுந்தர்.
     இதனால் ஆத்திரமடையும் தலைவன் சுந்தரைக் குறிவைக்கிறான். அழகி ரீனா அவன் சார்பில் சுந்தருடன் பேச சுந்தர் ஒத்துழைக்க மறுக்கிறான். சுந்தர் மீதான தாக்குதல் தொடர்கிறது. அனைத்திலும் தப்புகிறான். கமால் காக்கா அனுப்பியதாக வந்த ஒருவன் ஓட்டல் ஜல்ஸாவில் (இங்க பாருடா) காத்திருக்கும் வாசிம் என்பவர் நிறைய தகவல் கொடுக்கவிருக்கிறார் என்று நைச்சியமாகப் பேசி வாஸிமை சந்திக்க வைக்கிறான். சுந்தருக்கு மதுபானத்தில் தூக்க மருந்து கொடுத்து வீட்டுக்குப் பார்சல் செய்கின்றனர்.
     ஆனால், மதுவை அருந்தியதாக நாடகமாடும் சுந்தர் கப்பல் ஒன்றில் கடத்தல் பொருள்கள் இருப்பதை மாறுவேடத்தில் சன்று அறிந்து கொள்கிறான். மோதல் நிகழ, போலீஸ் வர, சுபம்.
     வாசிமாக வந்தவன்தான் கொள்ளைக்கூட்டத் தலைவன் அகரம் ஷா என்பது கதையின் போக்கினூடே நாமே யூகித்தறிய வேண்டிய விடயம். ஆஷாவின் அண்ணன் காவல் துறை இன்ஸ்பெக்டர் என்றும் ஆஷா சுந்தரைக் காதலிக்கிறாள் என்றும் நிறைவுறுகிறது முதல் கதை.
     இரண்டாவது கதை அடுத்த பதிவில் -நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்- தொடரும்.
-என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.   
இது ஹி ஹி  என் கலரிங்...


     

2 கருத்துகள்:

  1. நல்ல விரிவான அலசல்,கதை பற்றிய கண்ணோட்டம் அருமை! உங்கள் லைப்ரரி திறப்புவிழாவின் நாள் விரைவில் குறியுங்கள், ஒரு குட்டி அழைப்பை தட்டிவிட்டால் நிகழ்ச்சிக்கு ஓடி வந்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
  2. நடப்பில் உள்ளது தோழரே. வாசகர்கள் புகைப்படங்களை அவ்வப்போது தமிழ் காமிக்ஸ் டைம்ஸில் தரவேற்றம் செய்து வருகிறேனே. முறைப்படியான அறையில் மரபு வழி நூலகம் அமைத்தலில் உள்ள அனைத்து குறைகளும் தீர்ந்ததும் நிச்சயம் திறப்பு விழாவை வைப்போம். என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.

    பதிலளிநீக்கு

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...