வணக்கங்கள் வாசக வாசகியரே..
மார்ச்சினை சிறப்பிக்க வகம் கொண்டு வந்துள்ள மரண தேவதைகள்.. நியூயார்க் நகரம் ஒரு பரபரப்பில் இருக்கிறது. எங்கோ ஒரு மெடிக்கலில் திருட்டு நடந்துள்ளது. அதில் ஈடுபட்டவர்களைப் பற்றி விசாரித்ததில் ஏற்கனவே ஒரு சில கொள்ளைகளில் ஈடுபட்ட பெண்கள் கும்பலை ஒத்திருக்கிறது. விசாரணை தொடர மன்ஹாட்டனின் வணிக வங்கி ஒன்று அதே கும்பலால் கொள்ளையடிக்கப்படுகிறது. நிக் ரைடர் டீம் களமாடி இதில் சம்மந்தப்பட்டிருப்பது யார்? எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்? ஏன் இந்த குழுவில் பெண்களே இத்தனை ஈவிரக்கமில்லாமல் கொல்லும் தேவதைகளாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் பாணியில் துப்பறிந்து தெளிவாக அறிந்து கொள்கிறார்கள். தங்கள் கடமைக்கு எல்லைகள் ஒரு தடை என்றாலும் அதையும் மீறிக் கொண்டு தங்கள் உயிரைப் பணயம் வைத்தாலும் அது தங்களுக்குப் புகழ் சேர்க்காது என்று நன்கு அறிந்திருந்தும் காலத்தின் அருமையையும் வாய்ப்பினைத் தவற விடாமல் அதிரடியாகத் தாக்கி மரண தேவதைகள் வேர் வரை அறுத் தெறிகிறார்கள் நிக் ரைடர் குழு. இந்த பெரும் கொள்ளை மற்றும் கொலைகள் கொஞ்சமும் தயக்கமின்றி நடைபெற்றாலும் நிகழ்த்தும் பெண்களுக்கு கிடுக்கிப் பிடியாக பல சிக்கல்கள். அதனை வைத்து அவர்களை அச்சுறுத்தி தன் எண்ணம் போல் திசை திருப்பி லாபம் ஈட்டுகிறாள் கொடிய பெண் ஒருத்தி. அவளுக்குத் துணையாக அவளது கணவன். இருவரும் எப்படி வளர்ச்சி அடைந்தனர்? இப்படி ஒரு தேவதைகளின் படையை எப்படித் திரட்டினர்? அவர்கள் வீழ்ந்தது எவ்வாறு என்பதனை நாமும் சேர்ந்து துப்பறிந்து அறிந்து கொள்ள இம்மாதத்தின் மரண தேவதைகள் வகம் காமிக்ஸில் வந்திருக்கிறது. வாங்கி வாசித்து மகிழுங்கள்..
ஹைலைட்ஸ்:
ஒரு அபார்ட்மெண்ட்டில் தம்பதியர் மிரட்டப்படுகிறார்கள். ஹாலிவுட் திரைப்படங்களை ஒத்த காட்சி அமைப்பு.
தான் வீழும் நிலை வந்தாலும் கடமை வீரரான காவலர் ஒருவர் மரண தேவதைகளில் ஒருத்தியை வீழ்த்துவது.
நிக் ரைடர் அதிரடியாக சிங்கத்தின் குகைக்குள் நுழைவது.
இறுதியாக ஹா ஹா ஹா தொப்பி தொப்பி தொப்பி.. என்று ஒரு தொப்பி கொண்டு வரும் துரதிருஷ்டத்தை வைத்தே காமெடி ஏரியாவை டச் அப் செய்த விதம்..
போட்டி பொறாமை நிறைந்த உலகம் இது என்கிற கடுமையான மனநிலையை ஊட்டி ஊட்டி விஷமாக்கி வைத்திருக்கும் மம்மா. அதனால் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து சுட்டு தன் சக கொள்ளைக்காரிகளை வீழ்த்துவது தவறு என்று கூட எண்ணாத கடும் மனப்பான்மை..
நண்பர் புகழேந்தியின் மொழி பெயர்ப்பு கதையோட்டத்துக்கு பலம். சென்ற இதழான ஆடம் வைல்ட் சாகசத்துக்கும் புகழ்தான் மொழிபெயர்ப்பாளர். அவருக்கு வாழ்த்துக்கள்..
140 ரூபாய்க்கு நல்ல வாசிப்புக்கு ஏற்ற கதையாக அமைந்திருக்கிறது இந்த மரண தேவதைகள்.
என்றும் அதே அன்புடன் ஜானி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக