வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இந்த பதிவில் நாம் காணப் போவது வேதாளரின் FREW_002 இதழ் புலியின் உறைவிடத்தில் எனப் பொருள்படும் இன் தி டைகர்ஸ் லெயர்...
கதைக்குள் புகுமுன்பு ஒரு தகவல்.. வெள்ளை இளவரசி ராணி காமிக்ஸில் வந்த மிகவும் சிறந்த கதை. வனக்காவல் படையினரின் உருவாக்கம் மற்றும் வெள்ளை இளவரசி எப்படி வேதாளருக்கு உரியவராகிறாள் என்பதை மையப்படுத்தி வந்த கதை இது. கடந்த நான்கு ஆண்டுகளாக "வெள்ளை இளவரசி"க்கென தனித்தடம் அமைத்து தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கி அதில் போட்டிகளும் பரிசுகளும் வாரி இறைத்து ஒவ்வொரு மார்ச் மாதமும் முதல் தேதியில் இருந்து பதினாறு வரை குழுவினை இயக்க நிலைக்குக் கொண்டு வந்து அமர்க்களமாகக் கொண்டாடி மகிழ்வோம் ஆசிரியர் திரு.சரவணன், தோழர் திருப்பூர் குமார் இருவருடன் வாசகர்கள் அனைவரும். கவிதை, விமர்சனம், வசனங்களைக் கண்டு பிடித்தல், ஓவியம் வரைதல் என்று விதவிதமாக போட்டிகள் நிகழ்த்தி அதில் பங்கு பெற்ற அனைவருக்குமே பரிசுகளை அள்ளித்தந்து அபூர்வமான கதைகளையும் அற்புதமான பரிசுகளையும் மாதாந்திர காலண்டர்களையும் வழங்கி இந்த ஆண்டிலும் மிகப்பெரிய கொண்டாட்டமாகிப் போனது வாசகர்களுக்கு. நமது வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்வோம்.. அதில் எனது விமர்சனம் பரிசினை வென்று எனக்கு அபூர்வமான எத்தனை விலை கொடுத்தாலும் எளிதில் கிட்டாத "ஆழ்கடல் அதிரடி" முத்து காமிக்ஸ் பரிசாக வழங்கி டெக்ஸ் வில்லரின் பனி மண்டலப் போராளிகள், ஜவஹர்லால் நேரு வாழ்க்கை சித்திரக்கதை என்று மூன்று முத்தான பரிசுகளையும் வழங்கி கூடவே நிறைய சிறப்பான ஓவியங்களை அனுப்பி வைத்துள்ளனர் நண்பர்கள். அனைவருக்கும் என் அன்பின் நெகிழ்வுகளுடன் பதிவினைத் துவக்குகிறேன்..
இணையத்தில் கிடைத்த ஓவியம் இந்த அழகி கான்னி மூரின் ஓவியம்..
வேதாளரின் கதையான புலியின் உறைவிடத்தில் என்று பொருள்படும் இந்த இரண்டாவது FREW பதிப்பானது இந்த அழகி அமெரிக்காவில் இருந்து பெங்காலி வந்திறங்குவதில் தொடங்குகிறது..
கேப்டன் மைக் ஸ்ட்ராங்க் என்பவர் இந்த அழகியின் பால்ய வயது தோழர். அவரை நேசித்து மணமுடிக்க வரும் இப்பெண்ணுக்கோ தன் கணவரோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்கிற பேரவா.. இதே ஆசை வேறு ஒருவருக்கும் இருக்கிறது.. அது இப் பெண்ணை கானகத்தில் காணாமல் போன தன் அன்புக் காதலனைப் பரிதவிப்புடன் தேடித்தேடி ஆபத்துகளில் சிக்கிக் கொள்ள வகை செய்கிறது.. உதவிக்கரம் நீட்டிட வருகிறார் வேதாள மாயாத்மா. வேதாளரின் பந்தார் படையினர் அப்பெண் ஆபத்துகளில் சிக்கிக் கொள்ளாமல் மறைந்தே பின்தொடர்ந்து பாதுகாப்பு நல்குகின்றனர்.
ஒருவழியாக வேதாளரின் மண்டைஓட்டுக் குகையில் அவரைத் தரிசித்து மயக்கமாகி நிலைக்குத் திரும்புகிறாள் கான்னி மூர். தன் காதலர் யாரால் காணாமல் போனார்? என்றறிய உதவி கேட்கிறாள். கேப்டன் மைக்குக்கு நேர்ந்த கதி என்ன என்பதனை கண்டறிய முயற்சிக்கிறார் வேதாளர்.
இந்த இடத்தில் கட் செய்து மைக் என்னவானார் என்று பார்த்தால் ஒரு நாட்டின் ராணி ஆஸ்டா. தலைவன் மைக் ஏற்கனவே அவளைத் திருமணம் செய்திருக்கிறான். அடப்பாவி என்று நாம் நினைப்பதற்குள் அடுத்த குண்டு.. ராணிக்கு ஒன்பது திருமணங்கள் நிகழ்ந்து ஒவ்வொருவரின் தலையுமே கொய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் நீ வேறு டிசைன் என்கிறாள் அவள். ஆனால் உன்னை நான் எங்கே திருமணம் செய்து கொண்டேன் என்கிறான் மைக். நான் உன்னை காந்தர்வ மணம் (கண்டதும் காதல் மாதிரி) செய்து கொண்டேன் வா என் ராஜாவாக என்கிறாள். அவன் ஏற்கனவே இவளின் கைதியாக இருந்து தப்பியோடிய நபர். மீண்டும் சிறையிலேயே தள்ளி தண்ணீரும் பிரட்டும் உன்னை வழிக்குக் கொண்டு வரும் என்கிறாள்.. சிறைப் பறவையை மீட்பாரா வேதாளர்?
கான்னியை நட்டாத்துல விட்டுட்டு வந்தாச்சு திரும்பிப் போனா கத்தியை எடுத்து சொருகிருவா.. இந்த ராணியா சரியான காட்டுவாசி.. முடியலைப்பா என்கிறான் மைக்..
திருமண ஆடையுடன் "வனத்துக்குள் பிரவேசித்த வனிதை" (தலைப்புக்குப் பொருந்துதே?) வேதாளர் குகையில் ஆடை மாற்றிக் கொண்டு துணியைத் துவைத்து எடுத்துக் கொண்டு ட்ரோன்டலே நாட்டை நோக்கிப் பயணிக்கிறாள் வேதாளர் துணையுடன்..
ஆஸ்டா ராணிக்கு வேட்டை, வதை, விளையாட்டு எல்லாம் இருந்தும் போர் அடிக்கிறதென்கிறாள். எத்தனை சொத்து சுகம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாழ்க்கை போர் அடித்து விடும் என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டு இவள்.
கான்னி பற்றி அவள் கேள்விப்படும் நேரம் வேதாளருடன் கான்னியே அவளது ராஜாங்கத்தில் புகுகிறாள். பெர்பக்ட் டைமிங்..
வேதாளர் அவளை மட்டும் தனியே அரசியிடம் அனுப்பி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கிறார். அவளோ காதலனைத் தேடி வந்த காரிகையை சாட்டையடி கொடுக்கத் தயாராகிறாள். சூறாவளியாக அங்கே வந்து சாட்டையைப் பிடுங்கி வீரர்களை தாக்கி கான்னியை மீட்டுப் போகிறார் வேதாளர்.
மைக் தன்னைக் கைவிட்டு விட்டு ஓடிப் போகவில்லை என்றும் அவர் ராணியால் கடத்தப்பட்டார் என்பதையும் உணர்ந்து கொள்கிறாள் கான்னி.
தலைப்பு "கடத்தல் ராணி" பரவாயில்லை அல்லவா?
மைக்கை மீட்க மீண்டும் வருகிறார் வேதாளர். மைக் சிறைப்பட்டுக் கிடக்கும் இடத்துக்கு செல்கிறார். ராணியிடம் தனக்கு என்ன தொடர்பு என்பது பிளாஷ்பேக்காக திரையில் விரிகிறது.. சரி காமிக்ஸ் பக்கங்களாக..
பண்டைய முறைகளில் தீவிரமானவர் அரசர் டுராண்ட். அவருடைய மகளான ஆஸ்டா தங்களுடன் சமாதானம் பேச வந்த ஆங்கில கேப்டனை தன் தந்தை காட்டுக் குதிரைகள் இரண்டில் இரு வேறு திசையில் கட்டி இழுபடவைத்துக் கொல்வதற்கு முயற்சிப்பதைத் தடுத்து தன்னை மணக்குமாறு கேட்டு அதற்கு மைக்கும் ஒப்புக் கொள்வதால் தலை தப்புகிறது. திருமணத்துக்கு முன் கோட்டைக்கு வெளியே நதியொன்றில் குளித்து வர வேண்டிய மைக் அங்கிருந்து தப்பி விடுகிறார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சரியாக அவருக்குத் திருமணமாகும் நிலையில் தங்க மயில் சிறகு வந்து அச்சுறுத்துகிறது.. கடத்தவும் செய்கின்றனர் டுராண்டலே படையினர். இதுதான் நடந்தது என்று கூறிய மைக்கை மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேற்றி விட்டு அவருக்குப் பதிலாக கைதியாகிப் போகிறார் வேதாளர். அவரை சந்திக்க வந்த ராணியை மடக்குகிறார். அவளோ என்னை முத்தமிடு என்கிறாள்.. சளித் தொற்றுக்கு சிறந்த வழி இது என்று காமெடி செய்கிறார் வேதாளர்.
உன்னைக் கைது செய்து கொண்டு போகிறேன் என்கிறார் வேதாளர். நான் உன்னை ஏன் பிரியப் போகிறேன் என்கிறாள் காதல் வசப்பட்டு விட்ட ராணி ஆஸ்டா.. என்ன பொண்ணுடா இவ என்கிறார் வேதாளர்.
அவரை மீட்க வரும் கேப்டனும், கான்னியும் மீண்டும் சிக்கிக் கொள்ள "குதிரை வைத்தியம்" செய்ய முயற்சிக்கும் ராணியின் காட்டுக் குதிரைகளை தடுத்து வேதாளர் ராணியைக் கடத்த முயல வாயிற் கதவு அடைத்து அவளைக் காக்கிறார்கள் கோட்டைக் காவலர்கள்.. பின்னர் புலிகளோடு மோதுகிறார் மாயாவி. ராணிக்கு தான் செய்த தவறுகள் புரியவர, மயங்கிக் கிடக்கும் வேதாளரைக் காக்க புலிகளால் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகிறாள் ராணி. முன்னர் மாயாவியார் சுட்டிக் காட்டிய தான் ஒரு வரைமுறையற்று வளர்ந்த குழந்தை என்பதனை நினைத்துப் பார்த்ததாகவும் தன் மனதை மாற்றிக் கொண்டு விட்டதாகவும் தன் கால்கள், முகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு விட்டதாகவும் மூவரையும் விடுதலை செய்து உத்தரவிடுகிறாள் மனம் திருந்திய ராணி.. ஒரு காட்டு விலங்கு போன்று வளர்ந்தவள் காட்டு விலங்குகளால் அடிபட்டுத் திருந்தியதுதான் விதி.. மைக்-கான்னி தம்பதிக்கும், ராணிக்கும் விடை தருவதுடன் இந்த இரண்டாவது சாகசம் நிறைவடைகிறது. நன்றி வணக்கம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக