ஞாயிறு, 23 மார்ச், 2025

LC 465 இளமை எனும் பூங்காற்று_Tex Willer-Jan-2025

வணக்கம் தோழமை உள்ளங்களே.. நமது காமிக்ஸ் என்னும் கனவுலகம்

விமர்சனப் போட்டிக்காக விமர்சித்தது தங்களுக்கும் வாசிக்க எளிதாக இங்கே பகிர்கிறேன். 

நூல்: இளமையெனும் பூங்காற்று

 வணக்கம்..

ஜனவரி 2025ல் வெளியாகியிருக்கும் இந்த சித்திரக்கதை லயன் கிராபிக் நாவல் வரிசை வெளியீடாகும். வெளியீட்டு எண் 461. விலை ரூ.125/-

 


வன்மேற்கை மையமாகக் கொண்ட இக்கதையில் இரண்டு கோச் வண்டிகள் தொடர்ச்சியாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொள்ளையரில் ஒரு சிறுவனும் இருக்கிறான். கொள்ளைப்பணத்தை சேகரிப்பவனும் அவனே. பாதிப்புக்குள்ளாவோருக்கு சிறிது பணமும் திருப்பித் தருகிறான் என்பதை டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் பைனல் கவுண்டி ஷெரீப் மூலமாகக் கேள்விப்படுகிறார்கள். இது புதிதாக இருக்கிறதே என்று யோசித்து இதில் ஈடுபடுபவர்களை பிடிக்கப் போயிருக்கும் கும்பலைத் தொடர்கிறார்கள்.. கட் பண்ணா..


 நம்ம ஹீரோயின் பெர்ல் ஹார்ட் தன்னுடைய இளமைப் பருவத்தில் கனடாவின் ஒன்டாரியோ ஏகாந்தமாக அமர்ந்திருக்கையில் காவலர்களுக்குத் தப்பியோடி வரும் ஒருவன் நட்பும் பின்பு அவன் மேல் காதலும் பிறக்கிறது. அவன் சடுதியில் இறந்து போனதால் விளைந்த பச்சாதாபம் இப்படி உருமாற்றம் பெற்று விட்டதா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. அவனது துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொள்கிறாள். பப்பல்லோ பில் நடத்தி வரும் வைல்ட் வெஸ்ட் ஷோவில் தானும் இணைய முயற்சிக்கிறாள். வரலாற்றில் முக்கியமானதொரு பாத்திரமான சாக மங்கை ஆனி ஓக்லே அங்கே ஏற்கனவே பணியில் இருப்பதால் இவளுக்கு வேலை கிடைக்காமல் போகிறது.


அவள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை ஓட்ட பசியைப் போக்க க்ளப்பில் இணைந்து பணியாற்றி அங்கேயிருந்து ஜோபூட் என்பவனுடைய நட்பும் கிடைத்து தன்னை வேசியென்று ஒதுக்காமல் இளவரசியென்று அழைக்கும் இரண்டாவது நபர் ஜோ பூட் என்பதால் அவனின் அருகாமையிலேயே இருக்க ஆசைப்பட்டு ஒரு கட்டத்தில்  அவன் இன்னுயிரைக் காக்க முயற்சிக்கிறாள். அப்படியே அவனுடன் தோழமை பூண்டு அவன் ரூட்டிலேயே கொள்ளைக்காரியாகி இருக்கிறாள். கட் செய்தால் டெக்ஸ் அண்ட் கிட் கார்சனுக்கு முன்பே கொள்ளையரின் உறைவிடத்தை செவ்விந்திய வழிகாட்டியின் உதவியோடு காற்றில் வீசும் புகையின் வாசத்தை மோப்பம் பிடித்தே சுற்றி வளைத்து விடுகிறது அவர்களைத் தேடிப் போன கும்பல்..

பெரும் முதலாளிகள் கொள்ளையருக்குப் பயந்து அமைத்த அந்த தனிப்படைக்குத் தலைமையேற்று நடத்துபவன் ஈவிரக்கமே துளியும் அற்ற ஹோஸ். அவன் பேர்ல் பெண் என்பது தெரிந்ததும் கிள்ளுக்கீரையாக எண்ணி அசிங்கப்படுத்த முயற்சிக்கும்போது திரௌபதியைக் காக்க கண்ணன் அருட்கரம் நீட்டினாற்போன்று வந்து சேர்கிறார்கள் டெக்ஸ் அண்ட் கார்சன். அவர்களிடம் ஹோஸ் சிறைப்பட்டுப் போக அனைவரும் ஊர் திரும்புகிறார்கள். வழக்கு நடக்கிறது. பெர்ல் தனது வழக்கை தானே வாதாடுவதாக தெரிவித்து நீதிபதி அனுமதியுடன் தன் தாய் நோய்வாய்ப்பட்டு இருப்பதால்தான் கொள்ளைக்காரியாகிப் போனேன் என்கிறாள். பத்திரிகைகள் இப்படி ஒரு பெண் கொள்ளைக்காரி வன்மேற்கில் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாள் என்றால் சும்மா விடுவார்களா? சரித்திரத்தின் ஒரே பெண் கொள்ளைக்காரியாக பதிவு செய்யப்பட்ட உண்மை நபரான பெர்ல் ஹார்ட்டினை சுற்றி வளைத்துப் பேட்டி எடுக்கிறார்கள்.. நீதிமன்றம் அவளை குற்றமற்றவள் என்று விடுவித்தாலும் நீதிபதி அவளது கையொப்பத்தை ஒப்பிட்டு தன் தாய் எழுதியதாகக் காண்பித்த கடிதம் போலி என்று நிரூபிக்கிறார். ஆகவே சிறைக்கூடத்தில் ஐந்து ஆண்டுகள் அவளும் முப்பது ஆண்டுகள் ஜோ பூட் டும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. சிறையின் டைரக்டர் அவளை வைத்தே தன் சிறைச்சாலையை பிரபலமாக்குகிறார். அவளுக்கு வாசிக்க, எழுத  என்று ஏகப்பட்ட சலுகைகள்.  அவளைப் பற்றி ஏகப்பட்ட பத்திரிகைகள் எழுதித் தீர்க்கின்றனர்.  ஒரு கட்டத்தில் டைரக்டரை தன் கவர்ச்சியால் வீழ்த்தி விட்டு  தன் காதலனுடன் தப்பி மெக்சிகோ பறந்து விடுகிறாள். அங்கோ ஜோ தலைமறைவாகி விட மறுபடியும் அவல நிலைக்குள்ளாகிறாள். 


முன்பு டெக்ஸ் வில்லர் அவளை ஹோஸ் என்பானிடம் இருந்து விடுவித்தார் இல்லையா. அவன் பழிவாங்க துரத்துகிறான். ஜோ பூட்டை மடக்கி அவள் இருப்பிடம் அறிந்து அவன் வரும் முன்னர் டெக்ஸ் அண்ட் கார்சன் சென்று காத்திருந்து அவளைக் காப்பாற்றி அவளுக்கு விடுதலை கிடைத்து விட்ட தகவலைக் கூறுகிறார்கள். அவள் தன் நீண்ட கால கனவான பப்பல்லோ பில் நாடகக் குழுவில் இணைய விரும்புவதை தெரிந்து கொண்டு அங்கே இணைத்து விடுகிறார்கள். அங்கே நகைச்சுவை நாடகங்கள் இயற்றி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறாள். இனிய முடிவு. 

        உண்மைக் கதைகளை டெக்ஸ் வில்லர் என்னும் இனிப்பைத் தடவிக் கொடுத்தால் வாசகரிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்பது இந்தக் கதையில் இன்னும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது. இதோ இன்னொரு நிஜமான பாத்திரத்துடன் நம் பயணம் தென்றலாக வருடிப் போகிறது இளமை எனும் பூங்காற்றாய்!

எடிட்டர் பக்கம்.. 

சென்னை புத்தக திருவிழாவும் களை கட்ட இந்த புதிய புத்தகங்களை லயன் கொண்டு வந்துள்ளனர். 
சுவாரசியம் மிகுந்த வாசகர் பக்கம்.. 
அடுத்து பிப்ரவரி வெளியீடுகளின் விளம்பரங்கள்..
ஆர்வத்தை எகிற வைக்கும் பின் அட்டை.. 
ஆக ஒரு சிறப்பான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கக் கூடிய இந்த புத்தகம் பெரியவர்களுக்கானது. சிறுவர்கள் தவிர்க்கலாம். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விமர்சனப் போட்டியும் கனவுலகமும்..

  ஒரு ஹேப்பி நியூஸ்.. காமிக்ஸ் எனும் கனவுலகப் போட்டியில் 2014ல் வெளியான இரவே இருளே கொல்லாதே சித்திரக்கதையிலிருந்து விமர்சனப் போட்டி வைத்தனர...