002_மாடஸ்டி இன் இஸ்தான்புல்_லயன் காமிக்ஸ்வணக்கங்கள்;வந்தனங்கள்;வாசகப் பெருமக்களே;
சென்னை புத்தகத்திருவிழா களைகட்டும் உங்கள் தூரம்கடந்த காமிக்ஸ் நேசத்தாலும் அர்ப்பணிப்பாலும். இத்தனை தூரம் காமிக்ஸ் வெளியாகும் தருணத்தில் அங்கே இருக்க வேண்டும் என்கிற உங்கள் தீரா தாகமே இன்று புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சம். இன்று வெளியாகும் கிராபிக்ஸ் நாவல் வித்தக வீரன் பவுன்சருடைய நல்வரவு. அன்னாரின் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் அத்தனை உள்ளங்களுக்கும் என் இனிய வந்தனங்கள். அடியேன் பங்கேற்க இயலா நிலை குறித்து ஏற்கனவே முகப்புத்தகங்களில் விளக்கிவிட்டாலும் இங்கேயும் பதிவு செய்துகொள்கிறேன்! சிறு விபத்தொன்றில் வில்லங்கமாகி விட்டது விரல் ஒன்று. சின்னஞ்சிறு சிராய்ப்புகளோடு சிக்கலின்றி தப்பிவிட்டன என் இடது பக்கம். தலைக் கவசத்தின் முக்கியத்துவத்தினை நினைவுபடுத்தும் விதமாக தப்பியது உச்சந்தலை சின்னதொரு சேதாரத்தோடு. BEWARE OF HELMET GUYS! ஒரு விளம்பரம் கண்டேன். செல்போன் பேசிக்கொண்டே வண்டியோட்டுவதில் கில்லாடியா நீங்கள்? உங்களுக்கு சர்க்கஸில் பணிபுரியும் யோகம் உள்ளது என்கிறது அந்த விளம்பரம்.    சோ, பவுன்சருடன் பந்தாட்டத்தில் பங்கேற்க செல்லும் உங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் பதிவில் புகுகிறேன்! மாடஸ்தி கதைகள் மாசஸ்தி கதைகள் ஆகும். ஓவியத்தரம் குறித்து ஆங்காங்கே சில விமர்சனங்கள் வந்திடும் வேளைதனில் கைவலித்தாலும் இந்தப் பதிவு மாடஸ்டியின் சிரசில் ஒரு மகுடமாக சூட்டப்படும் என்கிற நம்பிக்கை கொண்டு பதிகிறேன். தொடர்க...    
restored version 
sincere thanks to Chokkalingam sir, sriram, Vincent Moses Raja sir, Muthu fan sir

பெயர்: மாடஸ்டி இன் இஸ்தான்புல்
வெளியீடு : ஆகஸ்ட் 1984
வெளியீட்டு எண் : இரண்டு
மொழிபெயர்ப்பு : ஆசிரியர் திரு.விஜயன்
வெளியீடு: லயன் காமிக்ஸ், சிவகாசி.

கதை சுருக்கம் :
மாடஸ்டி வில்லி கார்வினைத் தேடி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் செல்கிறாள். அங்கிருந்து வில்லி குறிப்பிடும் கிரீம் சமவெளியினை நோக்கி ஜீப்பில் சென்று சேர்கிறாள். அங்கே வில்லியை துரத்திக்கொண்டு புற்றுகளில் இருந்து புறப்பட்டு சாரிசாரியாக வருகின்றன வண்டு மனிதர்கள். அதலபாதாளத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் பாறை முனையில் வில்லி சிக்கிக்கொண்டு தவிக்க வினோத ஜந்தின் கையில் இருக்கும் வினோத துப்பாக்கி பச்சை நிறக் கதிர்களை உமிழ அதலபாதாளத்தில் விழுகிறார் வில்லி கார்வின்.
இப்போது ஒரு திருப்பம். அவர் விழுந்த இடம் ஒரு படப்பிடிப்பு தளம். அவர் செவ்வாயில் இருப்பதாக காட்சி அமைப்பு அது. அதன் பின்னர்தான் அவர் ஒரு திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துவருவது மாடஸ்டிக்கு தெரியவருகிறது. திரைப்பட இயக்குனர் கிராண்டின் அழைப்பின்பேரில் வில்லி நடித்து வருகிறார். அது ஒரு உப்புமா கம்பெனி என்பதும் அதில் பணிபுரியும் உப நடிகர்கள் அனைவருமே மாபியா அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் லேசாகப் பிடிபடுகிறது. திரைப்பட அரங்கில் தனது ஒட்டகம் அழகுராணியின் திறமையை எப்படியேனும் காட்டி படத்தில் இடம்பெற்றுவிட வேண்டும் என்கிற தீராக் கலை தாகத்துடன் வந்திருக்கும் அலி என்கிற வியாபாரியின் அறிமுகம் மாடஸ்டிக்குக் கிடைக்கிறது. மாபியா கும்பல் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் தெரிகிறது. அலியை ஓரம் கட்டும் அந்த கும்பல் மக்களிடம் வழக்கமாக கேட்கும் அதே கேள்விகளை அலியிடமும் கேட்க புதிரான அந்தக் கேள்விகளுக்கு மிரளும் அலி பின்னர் தனக்குத் தெரியாது என்று நழுவ முயல்கிறான். 
அவனைக் காக்கும் முயற்சியில் மாடஸ்டி இறங்க ஒரு மோதல் நிகழ்கிறது. பின்னர் மாடஸ்டியும்,கார்வினும் துருக்கி நாட்டு போதைப் பொருள் தடுப்பு அதிகாரி யுசூப்பை சந்திக்கிறார்கள். அவர் இவர்களது வரவின் நோக்கம் அறிந்து கொண்டு இங்குள்ள சூழலை விளக்குகிறார். 
சுமார் எழுபது கோடி டாலர் விலை மதிப்புள்ள கச்சா மார்பின் போதைப் பொருள் ஒரு விமான விபத்தில் குபோர்லி பகுதியில் விழுந்துவிட்டதாகவும் விமான பாகங்களும், விமானியின் உடலும் மீட்கப்பட்ட நிலையில் அந்த போதைப்பொருள் பார்சல் இதுவரை கைப்பற்றப்படவில்லை எனவும் அது எங்கே என்று தேடுவதற்காகவே போதை உலக முப்பெரும் தலைவர்கள் அப்பகுதியில் போலியாக ஒரு படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் தகுந்த ஆதாரமாக அந்த பார்சல் கிடைத்தால் அம்மூவரையும் கைது செய்ய இயலும் என்றும், இதற்கிடையில் மாடஸ்டியின் வருகை தடையாக உள்ளது எனவும் விவரிக்கிறார்.
மாடஸ்டியும், கார்வினும் அங்கிருந்து கிளம்பினால் உதவியாக இருக்கும் என்று அவர் கூறவே, அடுத்த படப்பிடிப்பு தளமான குபோர்லி சென்று கிராண்டின் அனுமதியுடன் இருவரும் கிளம்பிவிடுகிறார்கள். கதையும் அத்துடன் முடிந்து விட்டால்தான் என்ன? பீட்டர் ஓ டன்னல் ஐ யார் கேட்க முடியும்? ஆனால் விதியின் விசித்திரக் கரங்கள் மாடஸ்டியை அமைதிக்கு அப்பால் எப்போதுமே நிறுத்தி விடுவதுதான் நாம் அறிந்தது அல்லவா?
இங்கே விதி அழகுராணியின் வடிவில் குறுக்கிட்டு அதன் வரிகளை வடிவமைத்துக்கொண்டு தொடர்ந்து செல்கிறது. யார் இந்த அழகு ராணி? அலியின் செல்லப்பிள்ளை இந்த பெண் ஒட்டகம்! யாராவது ஒட்டகம் கொண்டுவா என உரக்க சொன்னால் எங்கே ஒட்டகம் என்று தேடி பின் அது ஒட்ட-gum கம் (பசை) என புன்முறுவல் புரிந்த கணங்கள் நினைவில் நிற்கின்றனவா? ஹி ஹி ஹி நானும் அதில் ஒருவனே!
அழகு ராணி தனியே மேய்வதைக் கண்டு மாடஸ்டி ஜீப்பில் இருந்து இறங்கி அலியைத் தேட அவனோ சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் மரணத்தை எதிர்நோக்கி தனது உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவனை மாபியா கும்பல் மீண்டும் பிடித்து போதை பொருள் பார்சலில் இருப்பிடம் அறிந்து கொள்கிறது. 
 
அலி கூம்பு வடிவ பாறைகள் நிறைந்த புனித செட்ரிக் ஆலயம் என்கிற குகைக் கோவிலில் ஒளித்து வைத்துள்ளது அறிந்து அவனுக்கு மார்பின் ஊசி மூலம் அமைதி கொடுத்துவிட்டு யுசூப்புக்கு தபால் எடுத்துப் போகும் பணியாளனை வழியில் கண்டு கடிதம் கொடுத்து அனுப்பிவிட்டு பின்னர் குகை ஆலயத்தினை அடைகின்றனர். இதற்கிடையில் பணியாளன் கொண்டுபோகும் கடிதத்தை தந்திரமாகத் தட்டிப் பறிக்கும் மாபியா கும்பலுக்கு முழு விவரம் தெரியவர அவர்கள் குகைக் கோவிலில் வலை விரித்துக் காத்திருந்து மாடஸ்டி,கார்வினைப் பிடிக்கிறார்கள்.
அவர்களைப் பிணைத்து ஒரு குகையினில் வைத்து உயிரோடு சமாதி கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறார்கள். இரண்டு தினங்களில் ஹெலிகாப்டர் மூலமாகக் கடத்தலைத் தொடரும் எண்ணத்துடன்....மாடஸ்தியும்,கார்வினும் முதலில் தங்கள் கைக்காப்பில் இருந்து தப்பி பின்னர் தாங்கள் பிணைக்கப்பட்டிருந்த கம்பியை திறமையாக அகற்றி அதன் உதவியுடன் தொடர்ந்த முழுமுயற்சியால் கோபுரத்தில் துளையிட்டுத் தப்புகின்றனர். அங்கு வந்திறங்கி பின் மேலெழும் கொடியவர்களின் ஹெலிகாப்டரின் தூசியின் உதவியால் அடியாட்களை துவம்சம் செய்துவிட்டு இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட ஜீப்பினைக் கிளப்பி ஹெலிகாப்டர் போகும் திசையில் விரைந்து ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
ஹெலிகாப்டர் சுமந்துகொண்டு செல்லும் போதைப்பொருளும் கொடியவர்களான டாட்சன், ஹசன் மற்றும் யுவாங் ஆகியோருடன் சேர்ந்து எரிந்து அழிகிறது.
இதனை யுசூப்புக்கு தகவல் கொடுத்துவிட்டு நன்றாக ஒரு தூக்கம் போட்டுவிட்டு அமைதியை நாடிக் கிளம்புகிறது மாடஸ்தி அண்ட் கோ!      கதை பாத்திரங்கள்
சினிமா டைரக்டர் கிராண்ட்
ஒட்டக ஓட்டுனர் அலி
அழகு ராணி (ஒட்டகமே)
துருக்கிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி யூசுப்
வில்லன்கள்
போதை வஸ்து கடத்தலில் பெயர்பெற்ற உலகப் பெரும்புள்ளிகள்
டாட்சன் – பிரான்ஸ்
ஹசன் – துருக்கி
யுவாங் – தாய்லாந்து

பிடித்த வசனங்கள்
நம்மைத் தொலைத்துக் கட்டுவதற்காக பெரும் மலையையே கூட புரட்டிவிடுவார்கள் இவ்விருவரும்.
பெண் இனத்தைப் பழிக்கும் இவர்களுக்கு நானே பாடம் புகட்டத் தீர்மானித்தேன்!
மடமைத்தனம் ஒரு உயிர்க்கொல்லி.
மாடஸ்டியும் கார்வினும் வேகமானவர்கள் மட்டுமின்றி ஆபத்தானவர்களும் கூட...
தம் வாடிக்கையாளர்களை நடைபிணமாக்கும் இவர்களின் மரணத்தைப் பார்க்கும்போது இவர்கள் அதிர்ஷ்ட சாலிகள் என்றே தோன்றுகிறது.
மரணத்திற்குப் பின் நரகம் என்பது இல்லையானால் நீ கூறுவது உண்மைதான்.
அவர்களது கடத்தல் நோக்கத்தை முறியடித்தது நாங்கள் அல்ல....அவர்களது மரணம்..
என் அத்தை அடிக்கடி சொல்லுவாள் முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போடமுடியாது என்று...அது நூற்றுக்கு நூறு உண்மை!
புதிர்கள்
ராட்சதப்பறவை விழுவதைப் பார்த்தாயா?
பிரேதத்தைப் பிரித்துப் பார்த்தாயா?
வில்லத்தனம் நிரம்பிய வசனங்கள்
உங்கள் உயிர் அணு அணுவாகப் பிரிவதில்தான் என் தலைவருக்கு ஆனந்தம்!
சிறு குறிப்புகள்
மொத்தத்தில் அறுபத்தெட்டு பக்கங்கள் கொண்ட இந்த அதிரடி புத்தகம்  விலை வெறும் ரூபாய் இரண்டு மட்டுமே.
இதுவரை வந்துள்ள மாடஸ்டி காமிக்ஸ்கள் மொத்தம் தொண்ணூற்று ஆறு.
நாவல்கள் மொத்தம் பதிமூன்று
திரைப்படம் மாடஸ்டி பிளைசி (1966)
BBC வானொலியில் ஒலிச் சித்திரமாக லாஸ்ட் டேஸ் இன் லிம்போ (1977)
தொலைக்காட்சி திரைப்படமாக (TV MOVIE) மாடஸ்டி ப்ளைசி (1982)
DC COMICSஇல் மலர்ந்தது மாடஸ்டி பிளைசி (1994)
இதற்கு மட்டும் ஓவியர் டிக் ஜியார்டனோ
மற்ற அனைத்து காமிக்ஸ்களுக்கும் ஜிம் ஹால்டவே, பெரும்பாலும் என்ரிக் ரோமிரோ(இரண்டாயிரத்து இரண்டு வரை இவரது சாம்ராஜ்யமே), ஜான் பர்ன்ஸ், பேட் ரைட், நெவில்லி கால்வின் ஆகியோர் சித்திரம் இழைத்துள்ளனர். 
ஐரோப்பிய பதிப்பக வெளியீடுகள் டைட்டன் புக்ஸ், கென் பியர்ஸ், மானுஸ் கிரிப்ட் ப்ரெஸ் ஆகியவை..
தமிழில் மாடஸ்டி குமுதம் (கருப்பு முத்து) கல்கி (சிங்கக்கழுகு) என அபூர்வமாக தென்பட்டாலும் லயன் காமிக்ஸ் மாடஸ்டிக்கு கொடுத்திருக்கும் இடம் மிகமிக விசாலமானது. 
இந்த கதையுடன் இணைப்புக்கதையாக ஜார்ஜ் நோலனுடன் துப்பறியலாம் என்கிற சிறுகதை இடம் பெற்றுள்ளது. இது ஜார்ஜ் நோலனின் முதல் முத்திரைக் கதையாகும்.  அதில் ஜார்ஜ் நோலன் வழிப்பறிக்கும்பலை துரத்திக்கொண்டு செல்கையில் குறுக்கிடுகிறது சூறாவளி. சூறாவளி ஓய்ந்து கொள்ளைக் கும்பல் காரை நோக்கி சென்றால் கார் மரம் விழுந்து அப்பளமாக நசுங்கிக் கிடக்கிறது. விழுந்த மரம் செயற்கையாக விழுந்ததாக காட்டப்படுவதைக் கண்டுகொள்ளும் ஜார்ஜ் அருகில் நிற்பவர்களே கொள்ளையர்கள் என்பதைக் கண்டறிகிறார். விழுந்த மரத்தின் அடிப்பகுதி ரம்பம் கொண்டு அறுத்து எறியப்பட்டுள்ளதை அவரது எதையுமே கூர்ந்து நோக்கும் விழிகள் காட்டிக்கொடுக்கின்றன. 
இதற்கு அடுத்த ஆடுகளம் யாரு தெரியுமா நண்பர்களே? அதிரடி ஜித்தன், குற்றவியலின் முடிசூடா சக்ரவர்த்தி, ஜெட் வேக மாமன்னன் ஸ்பைடர்தான் அவர். வலைத்துப்பாக்கியால் விண்ணை எட்டி; எட்டுத்திக்கும் முரசு கொட்டி “எத்தனுக்கு எத்தனில் நமக்கு எத்தனால் ஏற்றியவர்; லயனின் களத்தில் காலத்தால் அழிக்க முடியா முத்திரையைப் பதித்து என்றும் நிமிர்ந்து நிற்பவர். மறுபதிப்பாக அவர் ஆட்டம் சூடு பறப்பது அவ்வப்போது நிகழ்ந்து வருவது நாம் அறிந்ததே. நேரமும் காலமும் இறைவனும் கருணை காட்டினாலும், அன்பு ஆசிரியர் விஜயன் அவர்களும், வாசக நேசமிகு தோழர்களான நீங்களும் அன்பும் ஆதரவும் காட்டினால் விரைவில் சபை ஏறுவார் நம்ம மீள் பதிப்பாக மீண்டுள்ள ஸ்பைடர். அன்னாருக்கு சந்தா கட்டி ஆதரவு நல்கிடுவீர் என்கிற வேண்டுகோளுடன் விடை பெறுகிறேன். இந்தப் பதிப்பு உருவாக உறுதுணையாக நின்றுதவிய அன்பு நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு (சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடப்போறார் நம்ம டெக்ஸ் வில்லர் அவருக்கு எங்கள் நண்பர் குழு சார்பாக வாழ்த்துக்கள்) நன்றிகளுடன். என்றும் அதே அன்புடன் உங்கள் தோழன் ஜானி (எ )ஜான் சைமன்!   

எத்தனால்(போதை வேதியியல் பொருள்_ஆல்கஹாலின் அண்ணன்)

Comments

King Viswa said…
12 பக்க ஸ்கேன்கள்!!!
Abisheg said…
மாடஸ்டீ-வில்லி ஜோடி மிகவும் பிடித்த ஒன்று.புதிய கதை படிக்காமலே பிடிக்காமல் போன நேரத்தில் உங்கள் பதிவு அருமை ஜி!
Abisheg said…
This comment has been removed by the author.
Abisheg said…
This comment has been removed by the author.
Abisheg said…
மன்னிக்கவும்,ஒரே கொமென்ட் தொடர்ந்து பதிவாகி விட்டது.
John Simon C said…
மிக முக்கிய சம்பவங்கள்+ அடுத்த அறிவிப்புகள் மட்டும் சித்திரங்களை உபயோகிக்கின்றேன். அவசியமெனில் எடிட்டி கத்தரி போட்டு விடுகின்றேன்! நன்றிகள் பல!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!