திங்கள், 9 அக்டோபர், 2017

பால்கன் காமிக்ஸ் வரிசை -006

வணக்கங்கள் வாசக நெஞ்சங்களே....
இன்று நாம் காணவிருப்பது முத்துகாமிக்ஸின் முன்னாள் ஆசிரியர் திரு.சவுந்திரபாண்டியன் அவர்கள் பணியாற்றிய டால்டன் பிரசுரத்தாரின் சந்தமாமா பதிப்பகத்தின் பால்கன் காமிக்ஸ் வரிசை எண் ஆறு...இந்த புத்தகம் பிரசாத் பிராசஸ் பிரைவேட் லிமிடெட் இல் இருந்து சென்னை 26 பகுதியில் இருந்து திரு.பி.விஸ்வநாத் ரெட்டி அவர்களால் எடிட் மற்றும் பதிப்பாகியிருக்கிறது.. இந்த நூலின் மூலம்... ஓதம்ஸ் பிரஸ் லிமிடெட், இங்கிலாந்து ஆண்டு 1965...
பெயர் : பால்கன்
மாதமிருமுறை
மலர் : 1
இதழ் : 6
30 மார்ச் 1968
இலங்கை - 75
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ச,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45 

சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்
அமெரிக்க உள்நாட்டுப் போர் கடுமையாக நடந்தது., கூட்டணிப்படை பயங்கரத் துப்பாக்கித் தாக்குதலுடன் முன்நீரியது. திடீரென அமெரிக்க அணியில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொடர்ந்து வெடித்தன. வெள்ளம் போல் வரும் தோட்டாக்களுக்கு எதிர் நிற்க முடியாமல் வீழ்ந்தது கூட்டணிப் படை. 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளான ஆண்டு பைவ் போர்க்ஸ் என்ற இடத்தில் தென் மாகாணங்களின் கூட்டணிப் படையை முறியடிக்க அமெரிக்க இராணுவம் புதிய போர்க்கருவியைக் கையாண்டது. அதுவே முதல் இயந்திரத் துப்பாக்கி.
அமெரிக்க உள்நாட்டுப் போரில் கையாளப்பட்ட இயந்திரத் துப்பாக்கி காட்லிங் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை இயக்கி இதன் கைப்பிடியைச் சுழற்றி ஒரு வீரன் நிமிடத்திற்கு 300  தோட்டாக்களை வெடிக்கலாம். இது சாதாரண துப்பாக்கியை விட நூறு மடங்கு அதிகமான தோட்டாக்களை வெடிக்கும். போருக்கிடையில் இந்த காட்லிங் துப்பாக்கியை கூட்டணிப் படையினர் கைப்பற்றி விட்டனர். உடனடியாக அமெரிக்க இராணுவக் குதிரைப்படையினர் அதை மீட்டனர். இல்லையேல் வெற்றி அடைவது மிகக் கடினமானதாக இருந்திருக்கும்.

காட்லிங் இயந்திரத் துப்பாக்கி இயங்கும் முறை....பற்றிய சித்திரமும் அதன் விளக்கமும் முகப்புப் பக்க பால்கன் ஆறாவது இதழை அலங்கரிக்கின்றன.


தொடர்கள்
1962, அக்டோபர் மாதம் அது...ஓவியர் பிரான்க் பெல்லாமியின் அலுவலக தொலைபேசி ஒலித்த அந்தத் தருணமே ஹீரோஸ் உருப்பெற்ற தருணம்.. ஸ்பார்டகஸ் என்கிற திரைக்காவியம் வெள்ளித் திரைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த தருணம் அது. 
Eagle நிறுவனத்தார் ரோமானிய வீரனாகவும், கிரேக்கக் கலவையிலும் ஒரு நாயகனைக் கொண்டுவரவிருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். சில தினங்களில் டாம் டல்லி எழுதிய கதையும் பிரான்க் பெல்லாமியை வந்தடைந்தது. அதனைத் தன் ஓவிய பாணியில் எதிர்கொண்டு வரைந்து விதவிதமான தன் கற்பனைத் திறன்களால் அலங்கரித்ததுதான் இந்த ஹீரோஸ்...

ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்
சீசர் மன்னன் ஹீரோசைக் கொள்ள சதித் திட்டம் வகுத்தான். தளபதி ருடீலியஸ் மன்னன் கட்டளைப்படி அவனைக் கொல்ல முயல்கிறான்.,காட்டுமிராண்டிகளின் கோட்டையை அவன் பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறான். நடந்தது என்ன? விடைகாணப் படியுங்கள்.. பால்கன் ஆறாவது இதழ்....ராபின் ஹூட், கிங் ஆர்தர் கதைகளை எழுதிப் புகழ் பெற்ற பிரான்க் பெல்லாமியின் படைப்பில்...


இந்தக் கதையை ஆங்கிலத்தில் பெற :http://bookpalace.com/acatalog/Frank_Bellamy.html
95  பவுண்டிலும்... நல்ல தோல் அட்டையில் 265 பவுண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது... கிரேக்க ரோமானிய உலகைக் கண் முன்பு நிறுத்தும் சாகசமிது....
டான் டேர் - வானவெளியில் கண்ட பயங்கரக் காளான்.
சுக்கிர கிரகத்து மீகோன் மனிதர்களின் எதிரி. கொதிக்கும் உலோகத்தால் ஆன பயங்கரக் காளானை இலண்டனில் வளரச் செய்கிறான். தொலைதூரத்தில் இருந்து அதன் மீது வீசப்பட்ட சிவப்பு ஒளிக் கதிர்களால் அது மேலும் வளர்ந்தது. அந்த ஒளிக் கதிர்கள் வரும் இடத்தை அறிந்து வர டான் டேரும் டிக்பியும் வானக் கப்பலில் புறப்பட்டனர். அதன் பின்னர் நேர்ந்தது என்ன? விடைகாணப் படியுங்கள்.. பால்கன் ஆறாவது இதழ்....



கடல் வீரர் கண்ட கடல் குரங்கு
கடல் குரங்கைக் கண்டு பிடிக்கப் போன பீட்டரைத் தேடிச் செல்லும் கடல் வீரர் மேசனும், துணையாள் குவாரோவும் கடல் குரங்கு வசிப்பதாக நம்பப்படும் குரோன் தீவுக்குப் போகின்றனர். அங்கே ஒரு பாழடைந்த கோட்டைக்குள் இருவரும் சென்றனர். மேற்கொண்டு நடந்தது என்ன? விடைகாணப் படியுங்கள்.. பால்கன் ஆறாவது இதழ்....


தெய்வத்தின் சாபம்
கிரேக்கக் கடவுள் ஜீயஸ் டெலாசுக்கு சொந்தமான வில்லைக் கண்டுபிடிக்கப் போன ஏரியன் மாயக் கப்பலில் ராட்சசன் ஒருவனை விடுவிக்கிறான். அவனோ கறுப்புக் காளையிடம் போ என்று கூறுகிறான். கடற்கரையில் கிரீட் நகரக் காவலர்கள் ஏரியனை இழுத்துச் செல்கின்றனர். அங்கே என்ன நடந்தது? விடைகாணப் படியுங்கள்.. பால்கன் ஆறாவது இதழ்....


இரும்பு மனிதன்
டாக்டர் பயங்கரம் என்ற கொடியவனின் இயந்திரப்படை நியூயார்க், இலண்டன், பாரீஸ் முதலிய நகரங்களில் பயங்கரத் தாக்குதல் நிகழ்த்தியது. அவர்களை அழிக்க முனைந்த இரும்பு மனிதன் ராபர்ட்டும், நண்பன் டிம்மும் பாரீஸ் வந்தனர். ராபர்ட் டாக்டர் பயங்கரத்தின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறான். அங்கு மறைந்திருக்கும்போது காவலர்கள் வருகின்றனர்.. அதன்பின் நடந்தது என்ன? விடைகாணப் படியுங்கள்.. பால்கன் ஆறாவது இதழ்....


கறுப்பு வில் சென்னா
கறுப்பு வில் சென்னாவாக மாறுவேடம் பூண்ட டாக்டர் ஜிம் பிராட் செயினி என்பவனைப் பிடிக்கிறார். தான் இரும்பு முகமூடி அல்ல என்று மறுக்கிறான் செயினி. ஊர் அதிகாரி அவனைக் கறுப்பு வில்லிடம் இருந்து பிடித்துச் செல்கிறார். கறுப்பு வில் டாக்டராக மாறி ஊர் திரும்புகிறார். அதன்பின் நடந்தது என்ன? விடைகாணப் படியுங்கள்.. பால்கன் ஆறாவது இதழ்....


தனிக்கதை
-விடுதலை வேட்கை
விடுதலை எண்ணம் என்பது மனதில் உருவாகி விட்டால் எத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி இலக்கை நோக்கி முன்னேறலாம் என்பதனை தத்தம் வாழ்க்கைப் பாடம் வழியாக நமக்குக் கற்றுத் தரும் வீரர்களின் சரித்திர உண்மைக் கதைகளின் நிகழ்வுகளை நமக்குக் காண்பிக்கும் கண்ணாடியாக அமைந்துள்ளது இந்தப் பகுதி. தேசப்பற்று மிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்து புரிந்து கற்றுக் கொள்ள வேண்டிய எக்கச்சக்கமான தியாக சீலர்களின் வாழ்க்கை வரலாறுகள் இப்பகுதியின் மிகவும் சுருக்கமாகவும், நேர்த்தியான படங்களுடனும் விவரிக்கப்பட்டுள்ளன.

ஜெர்மன் படையிடம் சிக்கிக் கொண்ட இரு வீரர்களின் வீரம் தெறிக்கும் கதைச் சுருக்கமே இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறைவசமானது எவ்வாறு, அதிலிருந்து மீண்டது எவ்வாறு, அவர்களுக்கு அமைந்த சோதனைகள் யாவை, அவற்றில் இருந்து எவ்வளவு நிதானமாகவும் சூழ்ச்சியாகவும் தப்பினார்கள் போன்றவற்றை இப்பகுதி விவரிக்கிறது. அர்னால், உட்வர்ட் என்கிற இரு வீரர்களின் வாழ்க்கைப் பாடத்தை நமக்குப் போதிக்கிறது இப்பகுதி...

கொள்கைக்காக உயிர்விடும் வீரர்கள் -தனிச் சண்டை
1807 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் நாள் ஆங்கிலேயருக்கும், அமெரிக்கருக்கும் கடும் போர் நடந்தது.. ஆங்கிலப் போர்க்கப்பல் அதிகாரிகள் சேசாபீக் என்ற அமெரிக்கப் போர்க் கப்பலை சோதனையிட விரும்பினர். கேப்டன் ஜேம்ஸ் பாரன் மறுக்கவே முன்னறிவிப்பின்றி சேசாபீக்கைத் தாக்கினர். சேசாபீக் சரணாகதி அடைந்தது.. இதற்குக் காரணமாக கேப்டன் ஜேம்ஸ் பாரனை கப்பற்படைத் தலைவர் டெகாடர் அவ்வப்போது குறிப்பிட்டு அவமானப்படுத்தி வந்ததால் அவரை தனிச் சண்டைக்கு அழைத்தார் ஜேம்ஸ். அதன் பின்னர் நடந்தது என்ன? விடைகாணப் படியுங்கள்.. பால்கன் ஆறாவது இதழ்....  
டாலடிக்கும் ஜெயலலிதா அவர்களது விளம்பரத்துடன் தனிச்சண்டை இடம்பெற்றுள்ளது சிறப்புக் கவன ஈர்ப்பாக உள்ளது.

நீங்களும் துப்பறியலாம்-புதிய பகுதி.
CID ப்ரூஸ் என்கிற துப்பறிவாளரின் பார்வையில் ஒரு குற்றமும் அதன் துப்புகளும், அதனை வைத்து அவர் எப்படிக் குற்றத்தைக் கண்டு பிடிக்கிறார் என்பதைப் பற்றி விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது...இந்தப் புதிய பகுதியில்..


பொன்மலர்...the golden flower
தொடர்ந்த பக்கத்தில் கீழே பொன்மலர் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி முதல் வெளியாகவிருப்பதாக விளம்பரம் தெரிவிக்கிறது. கற்பனைகளும், உண்மை நிகழ்ச்சிகளும் நிறைந்து உலகத்தின் தலைசிறந்த ஓவியர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்கும் புத்தம் புதிய படைப்பாக பொன்மலர் மலரவிருப்பதை இந்த விளம்பரம் சுட்டிக் காட்டுகிறது.. 

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விலை எண்பது காசுகள் என்கிற வகையில் வெளியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் இந்தப் பொன் மலர் சில நண்பர்கள் கைகளில் உலா வருகின்றன என்பது கொசுறு செய்தி. அதனை எப்பாடுபட்டாவது என்னை எட்டாமல் இருக்க அனைத்துத் தடுப்பினையும் சில நண்பர்களும், நட்பின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் செய்து வருகின்றனர். பார்க்கலாம். வாய்ப்பிருந்தால் இது குறித்து கட்டுரை எழுத முடிகிறதாவென.


சிறுவர் சித்திரக் கதைகள்

பழங்கால நாய் ஜில்லி -இது ரின் டின் கேனுக்கெல்லாம் தாத்தா! கலாட்டாக்களை அள்ளிவிடும் சித்திரக் கதை.

தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்
சோற்றுப் பட்டாளமும் தளபதி ராவணன் மீசையும்



சிறுவர் பகுதி
புதிர் களஞ்சியம்
நகைச்சுவை  
வேறுபாடு..
எண்களின் புதிர்..
பெரிய வளைவு எது?
வேடிக்கைத் துணுக்கு
புதிர் விடைகள் 
பால்கன் ஆல்பம்: உலகத்தின் மிகச் சக்தி வாய்ந்த தீயணைப்பு எஞ்சின்


ஆகிய பகுதிகள் இந்த ஆறாவது ஆல்பத்துக்கு அணி சேர்க்கின்றன.. 
இது போன்று மொத்தம் இருபத்திரண்டு பாகங்கள் மட்டுமே வந்து நின்று விட்ட சித்திரக் கதைகள் வெகு சொற்பமே. ஆனாலும் அவை இன்றளவிலும் வாசகர் நெஞ்சங்களை விட்டு நீங்காது எங்கோ ஒரு மூலையில் துயில் பயின்றே வருகின்றன.. தேடுவோம்...என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...

5 கருத்துகள்:

  1. எனக்கு இன்னும் நன்றாக நினைவில் உள்ளது இந்த பால்கன் காமிக்ஸ்... இன்று வரையிலும் இது போன்று தரமான, வார்னிஷ் பேப்பரில், முழு வண்ணத்தில், வேதாளனின் சாகஸங்கள் உட்பட தமிழில் வரவே இல்லை.. இன்றைய லயன் விதிவிலக்கு... ஆனால் அன்றைய காலகட்டத்தில்...?

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் பால்கன் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. மறக்க முடியாத பால்கன். என்னிடம் இதழ்கள் முழுவதுமிருந்தன. அதே காலகட்டத்தில் பொன்மலர் என்னும் காமிக்ஸ் சஞ்சிகையும் பால்கன் அளவில் வெளியானது. அதிலும் சிறப்பான ஓவியங்களுடன் கட்டுரைகள் வெளியானது நினைவிலுண்டு. அது பற்றியும் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள். பழைய நினைவுகளை உங்கள் பதிவு ஏற்படுத்தியது. அழியாத கோலங்கள் அவை. பொன்மலர் இதழ்களும் தொகுப்பாக என்னிடமிருந்தன. இலங்கையில் நிலவிய போர்ச்சூழலில் இழந்தவைகளில் அவையும் அடங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் விமர்சன நினைவுகளுக்கும் நன்றி.. அவற்றின் ஸ்கேன்களுக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.. இல்லாவிடினும் ஆங்கில வடிவிலிருந்து தமிழுக்கு இயன்றபோதெல்லாம் துணுக்குகளை மொழிமாற்றம் செய்திட விழைகிறேன்.. நன்றி..

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...