வியாழன், 25 டிசம்பர், 2014

001_கத்தி முனையில் மாடஸ்டி _லயன் காமிக்ஸ்

வணக்கங்கள் அன்பு லயன் காமிக்ஸ் வாசக நெஞ்சங்களே! உங்கள் இரசிப்புத்தன்மையின் துவக்கப்புள்ளியாக நமது லயன் ஆசிரியர் விஜயன் அவர்களின் கத்தி முனையில் மாடஸ்டி வெளியாகி மிகப் பெரிய வெற்றி கண்டது தமிழ் நாட்டின் பத்திரிகை உலகில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வரலாறு. இன்றளவும் இவ்வளவு தரம் வாய்ந்த ஒரு காமிக்ஸ் நிறுவனம் அட்டகாசமான எழுத்து நடைக்கு சொந்தக்காரரான ஆசிரியரின் துணையுடன் வெற்றிகரமான நடை போட்டு முன்னேற்றம் கண்டதில்லை எம் தாகமிகு செந்தமிழில் என்பதே இதன் வெற்றிக்கு ஆதாரம். இந்த வெற்றியின் துவக்கம் 1986 ஆண்டில் திரு.விஜயன் அவர்களை அச்சாணியாகக்கொண்டு துவங்கிய லயன் காமிக்ஸ் எனும் ரதம் இன்றளவிலும் இறக்கை கட்டிப் பறந்து பல வெற்றிக் கதைகளை ரசிகரோடு சேர்ந்து பெற்று இன்னும் பல்லாயிரக்கணக்கான கதைகளுக்குக் களம் அமைத்து வைத்து சாதனை பல பெற்று வருவது கண்கூடு. தமிழ் இலக்கியங்களில் சித்திரங்களால் கதை சொல்லும் எத்தனையோ காமிக்ஸ் வகைகள் வந்து சென்றாலும் நின்று அடித்து ஆடும் ஆடுகள நாயகன் திரு.விஜயன் அவர்கள் துவக்கிய பயணம் கத்தி முனையில் மாடஸ்டி மூலமாக சிறந்த வகையில் துவக்கம் பெற்றது. மாடஸ்தி என்னும் மங்களகரமான மங்கை நல்லாளின் கதையினை சுமந்துகொண்டு பெண்ணிய சிந்தனைகளை கண்ணியப்படுத்தும் விதத்தில் களம் இறக்கி பெரும் வெற்றி கண்ட நாயகன் விஜயன் அவர்களுக்கு இன்னும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
நிற்க!
கத்தி முனையில் மாடஸ்டி என்கிற முதல் காமிக்ஸ் வைத்திருக்கும் வாசகர்கள் புத்தகத்துடன் உங்கள் புகைப்படங்களை எடுத்து எனக்கு அனுப்பி வைத்தால் கவுரவ வாசகர் என்கிற தலைப்போடு இந்த பதிவிலேயே சேர்பித்து விடுகிறேன். இந்த கதை குறித்த சுருக்கமான கதை விவரம், முன், பின் அட்டைகள், கதையின் போக்கில் அத்தியாவசியமாக குறிப்பிட வேண்டியுள்ள பக்கங்கள் மட்டுமே இங்கு பகிரப்படும். ஒரு வாசகனின் நிலையில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொண்டு லயன் காமிக்ஸினை ப்ளஸ் இதர அனைத்து சித்திரக்கதைகளைக் கூடிக் கொண்டாடுவது மட்டும்தான் எனது நோக்கம் என்பதனை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். உங்களுக்கு இந்தக் கதை வேண்டும் எனில் லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களை கேட்டுக் கொண்டால் அதிக ஆதரவு பெற்ற மாடஸ்டி கதைகளை அவர் உடன் மறு பதிப்புப் பட்டியலில் கொணர ஆவன செய்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலை இன்னும் வரப்போகும் அனைத்துக் கதைகளுக்கும் அப்படியே தொடரும். முழுக் கதையின் ஸ்கான்ஸ் கொடுங்களேன் என்ன செலவானாலும் பரவாயில்லை என்கிற வேண்டுகோள் என் செவிக்கே எட்டாது என்பதையும் கறாராக இங்கேயே சொல்லிவிடுகிறேன். நட்பு வேறு இது வேறு என்பதை மீண்டும் ஒரு முறை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  இந்த முயற்சியினை சமகால இலக்கியத்தின் ஆவணப்படுத்துதலாகவே எடுத்துக் கொண்டு வாசித்துக் கடந்து செல்லுங்கள். இன்னும் காமிக்ஸ் மீதான நேசம் கொண்டோர் நிறைய உருவாக வேண்டும் என்கிற எங்களது (தமிழ் காமிக்ஸ் ரசிக தோழர்களது) எண்ணமே இந்த ரீதியில் வெளியாகியுள்ளது. வாசித்து மகிழ்ந்தோர் அப்படியே தமிழில் வெளியாகி விற்பனையில் புதுப்புது உச்சங்களை எட்டிடும் லயன் குழும இதழ்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்களேன்!
முன் அட்டை _திருத்தம் திரு.சொக்கலிங்கம் அவர்கள் 

பின் அட்டை 

இந்த கதையின் முக்கியப்பங்கு வகிக்கும் பாத்திரங்கள்!
ஜேன், ஜூலி, ஷேக் கதீம் அல் மஸ்பா, ஹாமில்டன் தம்பதியினர், மார்ஷல், சிட்னி, ராமோன், ஜெரால்ட் டைரன்ட் இன்னும் பலர்.  
கதைசுருக்கம்
     ஒரு பெண் தன் தொலைந்துபோன சகோதரியை மீட்க எவ்வளவு தூரம் முயற்சிப்பாள்? தனது இன்னுயிரையும் இந்தக் கதையின் சகோதரி ஜேன் தருகிறாள்....
            இலண்டன் ஹைட் பார்க்கில் ஷேக் கதீம் அல் மஸ்பா மாடஸ்டியையும் வில்லி கார்வினையும் ஒரு விருந்துடன் சந்திப்பதில் இருந்து துவக்கம் பெறுகிறது. அவரது உதவியாளர் ஜாசிம் விருந்தினர்களை உபசரிக்கிறார். அங்கிருந்து காடிலாக் காரில் கிளம்பி செல்லும் குழுவினர் மீது  ஒரு ஜாம் டின் வெடிகுண்டு போல் எறியப்படுகிறது. எறிந்தவள் ஜேன். வில்லி கார்வின் பங்குதாரராக உள்ள சர்க்கஸில் கத்தி எறியும் சாகசத்தின் இலக்காக பணியில் உள்ளவள். எறிந்த காரணம் அவளது சகோதரி ஜூலி அரேபிய நைட் கிளப் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பின்னர் எங்கு தேடியும் கிடைக்காமல் - காணாமல் போய்விட்டதால் ஜேனுக்கு அரேபியரைக் கண்டாலே அப்படியொரு வெறுப்பு.
சரி ஷேக்கிடம் சொல்லி தேடலாம் என்று அவளை சமாதானப்படுத்துகிறார் வில்லி.

   ஒரு வாரம் சென்றபின்னர் ஜேன் தலைமறைவாகிவிட கத்தி வீசும் நிபுணர் ராமோன் கை அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கார்வினும் மாடஸ்டியும் அந்த சாகசத்தில் பங்கேற்கும் நிலைமை.
ஜேன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு பெண்களை அனுப்பும் ஏஜென்சிக்கு செல்கிறாள். மேஜர் ஹாமில்டன், அவரது மனைவி நடத்தும் நிறுவனம் ஒன்றின் மீது அவளுக்கு சந்தேகம். காரணம் வேலைக்கு அனுப்பும் கான்ட்ராக்ட் வாசகங்கள் அரேபியா சென்றபின் செல்லாது. அங்கு அரேபிய மொழியில் எழுதப்படும் புது ஒப்பந்தமே செல்லும் என்கிற விஷயம் உதைக்கிறது.  அவர்களை பார்ட்டி ஒன்றில் வெளிப்படையாக மிரட்டுகிறாள் ஜேன். மிரட்டலின் நடுவில் இது குறித்து மாடஸ்டிக்கும், வில்லி கார்வினுக்கும் இது குறித்து தெரியும் என்கிற வார்த்தை மேஜர் தம்பதிகளை உதறல் எடுக்க வைக்கிறது. மேஜர் தனக்கு விசுவாசமான கூலிப்படை தலைவன் மார்ஷலிடம் நிலைமையைக் கூறி ஜேனையும், மாடஸ்டியையும், கார்வினையும் தீர்த்துக் கட்ட சொல்கிறார். மார்ஷல் கொலை செய்வதிலும் கலையைப் புகுத்துவதில் நிபுணன் என்பது இந்தக் கதையின் சுவாரசியமான ஒரு அங்கம்.  

         ஜேன் சென்று கொண்டிருக்கும் இரயில் நிலையம் சென்றடைந்ததும் கார்வின் அனுப்பியதாகக் கூறி மார்ஷல் அனுப்பும் மரண தூதன் பைக்கில் ஏற்றி சென்று வழியில் ஹெல்மட்டை கழட்டி சரிபார்க்கும்படி சொல்லி திடீரென சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியதில் ஜேன் தூக்கி எறியப்பட்டு பாலத்தில் இருந்து கீழே செல்லும் இரயில் ட்ராக்கில் விழுந்து பலத்த காயமடைகிறாள். தற்செயலாக அமைந்த விபத்து போன்று உருவகப்படுத்துகிறார்கள். அதே பாணியில் வில்லி கார்வினை கடத்தி மயக்கமுற செய்து அவரது காரிலேயே எஞ்சின் புகையை குழாய் மூலம் திருப்பிவிட்டு அதில் கிளம்பும் கார்பன் மோனாக்சைடினை சுவாசித்து மரணம் நிகழ்வது போன்று செட் அப் செய்கின்றனர். அதில் கார்வின் தப்புகிறார். அதே சமயம் மாடஸ்டி கத்தி வீசும் சாகசத்தில் கத்தி முனையில் நிறுத்தப்படுகையில் கத்தி பாய்ந்து மரணம் எய்த வேண்டும் என்கிற திட்டப்படி மார்ஷலின் ஆள் ஒருவன் கத்தி வீசும் கார்வின் போன்று (கார்வின் ஏற்கனவே ரமோனின் விக் முடி வைத்து வேறுமாதிரி தோற்றம் அளித்து சாகசத்தில் பங்கு கொள்வார்) உருமாறி கத்தி வீசுகிறார். அதனை கண்டுகொள்ளும் மாடஸ்டி அவனின் கத்தி, கோடரி வீச்சினைத் தடுத்துத் தப்புகிறார். அவரும், கார்வினும் ஒரு புள்ளியில் சந்தித்து பாதுகாப்பான இடம் போய் சேர்கின்றனர். பின்னர் ஹாமில்டனைத் தொடர்பு கொண்டு பணம் கொடுத்தால் உன்னைப் பழிவாங்காமல் விட்டுவிடுகிறோம் என்பது போன்று மிரட்டல் விடுக்கிறார்கள். ஒப்பந்தப்படி தொகையை ஒரு கட்டிடத்தில் கொண்டு போய் கொடுக்க வேண்டும். மார்ஷலின் கும்பல் முன்கூட்டியே அங்கு வரும் என்பதைக் கணித்து அவர்களது கவனத்தினை திசை திருப்பிவிட்டு மாடஸ்டி ஹாமில்டன் தம்பதியினரை முதலில் பிடித்து வைத்துக் கொள்கிறாள். பின்னர் வெங்கின் உதவியுடன் பறவை ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக அங்கு வந்ததுபோன்று ஒரு நாடகக் குழுவினரை செட் அப் செய்து அனுப்புகிறாள். அவ்வாறு அந்த நாடகக்குழு ஒரு பஸ்ஸில் அங்கு சென்று சேர்ந்ததும் மார்ஷலின் கடல் கொள்ளையர் போன்று வேடமிட்ட ஆட்கள் தங்களது துப்பாக்கிகளை உபயோகிக்காமல் மாடஸ்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகிறது. சிலபல அதிரடிகளுக்குப் பின்னர் மார்ஷல் அவனது அடியாட்கள் அனைவரும் சிறைபிடிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் ஹாமில்டன் தம்பதியினருடன் முதலில் கண்ட ஷேக்கின் கப்பலில் நாடுகடத்தப் படுகின்றனர். அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை காத்திருக்கிறது....அடிமை வியாபாரிகளே அடிமையாகின்றனர்.
ஜேன் தனது இனிய உயிரைப் பிடித்துக் கொண்டு காத்திருக்க ஜூலி ஷேக்கின் ஆட்களால் மீட்கப்பட்டு லண்டன் வந்து சேர்ந்த விவரம் காதில் விழுந்ததும் அவளது உயிர் பிரிகிறது. தனது தங்கையை மீட்க இன்னுயிரையும் கொடுத்துக் காக்கிறாள். இப்போதுதான் வருகிறது ஆன்டி – க்ளைமாக்ஸ். ஜூலி தன்னை ஏன் மீட்டுக்கொண்டு வந்தீர்கள் என்று கோபம் கொள்கிறாள். அரேபியாவில் நலமாக எல்லா வளங்களுடனும் சந்தோஷமாக தான் வசித்ததாகவும் தன்னை அங்கேயே திரும்ப அழைத்து சென்றுவிடுமாறும் கேட்கிறாள். அதன்படியே நிகழ்கிறது. வீணாக தன் இன்னுயிரை ஜேன் இவளுக்காக இழந்தது கொடுமையான நிகழ்வாகிறது.   
சில அதிரடிக் காட்சிகள்:-







மாடஸ்டியின் ஆடையணிகள்:-
சர்க்கஸ் உடையில் மாடஸ்டி
 இயல்பான உடையில் மாடஸ்டி 

எனக்குப் பிடித்த பன்ச் வசனங்கள்:-
“ஒவ்வொரு கலைஞனுக்கும் தோல்வியே வெற்றிக்கான ஏணியாக அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள்
“ஆஹா! நமது தனித்தன்மைக்கு, நமது திறமைக்கு இது ஒரு அருமையான சவால்
கொலைகாரப் பன்ச்:-
ஒரு புள்ளிமானை வேட்டையாடுவதைவிட, பெண் புலி மாடஸ்டியை வேட்டையாடுவதில் த்ரில் அதிகம் அல்லவா?
வேனை எடுத்து சென்று இந்த மானை நசுக்கி வரவா?
புதுப்புது பாணிகளில் கொலை செய்வதில் ஒரு தனித் த்ரில் உள்ளதல்லவா?
விவரிக்க அரிய சில வரிகள்:
சிட்னி சிட்டாய்ப் பறக்கிறான்.
கொலையிலும் ஒரு கலைநயத்தைக் காணும் வித்வான்கள்.
ஆளில்லாத பட்டறையில் ஒரு நூதனமான கொலை முயற்சி நடக்கிறது.  
எந்த நேரமும் இந்த டுமீல்-டுமீல் உன் கையிலேயே இருக்கட்டும். லண்டனில் பாதி கொலைகாரர்கள் நம்மைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள்.
ச்சே... வரவர உலகம் ரொம்பவும்தான் மோசமாகிவிட்டது. பணத்திற்காக இப்படியா கொள்கைகளை விட்டுவிடுவது?
உலகெங்கும் தராதரங்கள் வீழ்ந்துவிட்டன அம்மணி!
கொள்ளைக்காரப் பாணியில் கொலை செய்யக் காத்திருப்போம்!

அடிசக்கை எமப்பயல்களின் மூளையே மூளை!
இன்னும் கதையோட்டத்தில் கவர்ந்த பக்கங்கள்:-






அடுத்த கதை விளம்பரம் 
அவ்வளவுதான் நண்பர்களே!
உங்கள் கத்தி முனையில் மாடஸ்டி புத்தகத்துடன் எடுத்த செல்பிக்களை எனது jsc.johny@gmail.com என்கிற ஜி மெயிலுக்கு தட்டி விடுங்களேன்??? முடிந்தால் இந்த கதை உங்களில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஓரிரு வரிகளையும் சேர்த்து அனுப்பினால் சிறப்பாக இருக்கும்.
_தொடரும் முயற்சிகளுக்கு உங்கள் நட்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம்! 
_ உங்கள் லயன் காமிக்ஸ் சந்தாவை மறவாமல் செலுத்தி தமிழ் காமிக்ஸ் செழித்தோங்க எப்போதும் உங்கள் ஆதரவை தாருங்கள்!
என்றும் அதே அன்புடன்_உங்கள் நண்பன் ஜானி!

3 கருத்துகள்:

  1. ஜானி சாரே,

    விமர்சனத்துக்கு 17 பக்க ஸ்கேன் கொஞ்சம் ஓவராக படவில்லையா?

    பதிலளிநீக்கு
  2. ஹி ஹி ஹி மிக அரியதொரு துவக்க நூல் தலைவரே! இப்போது கிடைக்கும் புத்தகங்களுக்கு இத்தனை பக்கங்களை விமர்சனம் என்கிற பெயரில் களத்தில் இறக்கினால் சரிப்பட்டு வராது! அது விற்பனையைக் கூட பாதிக்கலாம்! ஆனால் ஏற்கனவே வெளியாகி வெற்றிவாகையை சூடி மக்கள் மனத்தில் தனக்கென்று நிலையான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்ட மாதர் திலகம் மாடஸ்டியின் அதிரடிக் கதையை விளக்குவது புதிய வாசகர்களை கவரும் பொருட்டே! தங்கள் கருத்துக்கு நன்றிகள்! தங்களின் ஹிந்து கட்டுரை வாசித்து ரசித்தேன். அத்தனை கதையையும் வாசித்து விமர்சித்துள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...