எங்கும் பரவட்டும் தீப ஒளி!

இனிய நண்பர்களுக்கு,
அன்பின் வணக்கங்கள்!
நாளை கார்த்திகை தீபம்!
புராணப்படி, பிரம்மாவும், விஷ்ணுவும் தங்களில் யார் பெரியவர் என்கிற சர்ச்சையில் மூழ்கி இருக்க அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சிவன் தன் அடி – முடியை  கண்டறிபவரே பெரியவர் என்கிற போட்டியை அறிவிக்கிறார். இதற்கு சம்மதிக்கும் பிரம்மா – விஷ்ணு இருவர் முன்னிலையில் ஒரு பெரிய அக்கினி தூணாக மாறி நிற்கிறார் சிவன். அவரது அடியைக் கண்டறியும் எண்ணத்துடன் புறப்படும் விஷ்ணு வராக அவதாரம் எடுத்து மண்ணை அகழ்ந்துகொண்டே போகிறார். பிரம்மா ஒரு அன்னப்பறவை ரூபமெடுத்து வானில் ஏறிப் பறக்கிறார். அந்த பயணம் நீஈஈஈஈண்ட ஒன்றாக இருக்கிறது. வழியில் ஒரு மலர் வீழ்ந்து கொண்டுள்ளதைக் கண்ட பிரம்மா அது என்ன மலர் என்று காண்கிறார். அது தாழம்பூ. சிவனின் தலையில் சூட்டியிருந்த மலர் அது என்றறிகிறார். அந்த மலரிடம் இன்னும் எவ்வளவு தூரம்தான் பயணிக்க வேண்டும் என்று பிரம்மா கேட்க அந்த மலர் பலப்பல யுகங்களாக வீழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது. எனவே தான் அத்தனை தூரம் கடந்து சிவனின் உச்சியை காண்பது சாத்தியமல்ல என்று எண்ணிடும் பிரம்மா, தனக்காக சிவனிடம் ஒரேயொரு பொய் கூறுமாறு வேண்டுகிறார். தான் உச்சியை அடைந்ததை அந்த மலர் சாட்சி கூறுமாறு வலியுறுத்துகிறார். மலரும் ஒப்புக்கொள்ள இருவரும் சேர்ந்து திரும்புகின்றனர். விஷ்ணுவும் தான் ஒன்றும் கண்டவரில்லையாதலால் சோகமயமாகத் திரும்புகிறார். சிவன் இருவரிடமும் கேட்க விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார். பிரம்மாவோ தாழம்பூவினை சாட்சியாக நிறுத்துகிறார். உண்மை உணர்ந்த சிவனின் சாபத்தில் தாழம்பூ இன்றுவரை பூஜைக்குப் பயன்படுத்த இயலாத மலராகிவிட்டது. பிரம்மாவுக்கும் இன்றுவரை பெரிதாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

இந்த புராணக் கதையில் சிவன் அக்னி வடிவில் தரிசனம் கொடுத்த இடமாக திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறோம். கார்த்திகை தீபம் மிகமிக பிரம்மாண்டமான ஒரு விழாவாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.    உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!! 

எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த போது, கார்த்திகை தினத்தின் மாலைப்பொழுதில் மணலூர்ப்பேட்டை பேரூராட்சி  தண்ணீர் தொட்டி மீது என் நண்பர்களுடன் சரசரவென எண்பது ப்ளஸ் படிகளை சுற்றிச் சுற்றிக் கொண்டு ஏறி நின்று கொள்வோம்! அங்கே இருந்து வடக்கு நோக்கி தவமிருக்கத் தொடங்கி விடுவோம். தூரத்து வான் இருண்டு கொண்டு வரும் சமயம்  கண்டால் தொலை தூரத்தில் தூர அடி வானில் கீற்றென எழும் தீபம் எங்களின் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தூண்டி விடும்! அதைப் பார்த்து வணங்கி விட்டு கீழே வந்து பனம் பூவின் கரித் துகள்கள் துணியால் கட்டி எருக்கம் செடியின் குச்சிகளை வைத்துக் கட்டிய கட்டின் மையத்தில் பொருத்தி மேலே நெருப்புக் கங்குகளை வைத்து நெருப்பு இறங்கி துகள்கள் கொட்டும் வகையில் தயாரானதும் எடுத்து முனையில் கட்டிய கயிற்றினை வைத்து சுற்றி விளையாடுவோம். கூடவே கார்த்தி கார்த்தி கம்மங் கார்த்தி என்று முழக்கமிடுவோம்!
மேல் விவரங்களை இந்த தளங்களில் உலாவி அறிந்து கொள்ளுங்களேன்??? 
http://www.thiruvannamalai.in/tiruvannamalai-temple/tiruvannamalai-karthigai-deepam.html

lhttp://en.wikipedia.org/wiki/Karthikai_Deepam

இது எங்கள் வீட்டின் முன் காட்சி! கிறிஸ்துமஸ் மரம் + தீபம் ஒரே ஷாட்டில் உங்களின் பார்வைக்கு :

என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி நிறைவுடன் விடை பெறுகிறேன்! பை!  

Comments

POSTAL PHOENIX said…
நண்பர்ஜான் சைமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..நலமாய் வாழ
வாழ்த்துகிறேன்
நட்புடன்,இராஜா மயிலாடுதுறை
John Simon C said…
மிக்க நன்றி நண்பரே!
Abisheg said…
அருமை ஜி

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!