செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மூடுபனியில் ஒரு திகில்!


வணக்கம் நண்பர்களே!
மே தின நல்வாழ்த்துக்கள் தங்களின் உழைக்கும் கரங்களுக்கு உரித்தாகுக! எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? அனைவரும் நலமாக வாழ இறையருளை வணங்குகிறேன்! நாம வாழும் இந்த காலக்கட்டத்தில் நாகரிகம் என்கிற பெயரில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளோம். ஒரு சுவிட்சை தட்டினால் கண்டம் விட்டு கண்டத்திற்கு ஏவுகணைகள் பாய்கின்றன. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதனோ உணவுக்கும், உறைவிடம் நாடியும், பலகாலம் அலைந்து திரியும் ஒரு நாடோடி வாழ்வு வாழ்ந்தான். ஆதி மனிதன் நெருப்பைக் கண்டு அஞ்சினான். பின் அதனை வைத்தே உணவு சமைத்தான். அதற்கு முன்னர் அவன் வாழ்ந்த வாழ்க்கையானது காட்டு மிராண்டித் தனமான ஒரு வாழ்க்கைமுறை. மிருகங்களை வேட்டையாடி பச்சையாக புசித்து வாழ்ந்த ஒரு கீழ் நிலை வாழ்வு. பின்பு சக்கரம் கண்டறிந்தான். நாகரிகம் வளர்ந்தது. வளர்ந்த நாகரிக உலகில் அதன் வேகம் தாங்காமல் அல்லது தாக்குப் பிடிக்க முடியாமல், மன நிலையில் பிறழ்ன்று, பின்னர் சைக்கோ நிலையை அடைந்து, சக மனித இனத்தையே காவு வாங்கும் அரிதான நபர்களும் இப்போது மானுடருள் அடக்கம். அதில் சில நரமாமிசம் தின்னும் மிருகங்களும் உள்ளனர். வரலாறு திரும்பிய ஒரு நிலை அல்லவா இது?
நிற்க! காமிக்ஸ் உலகின் மன்னன் டெக்ஸ் வில்லரின் அறுநூறாவது கதையாக வெளியாகி வெளிநாட்டில் சக்கை போடு போட்டுக் கொண்டுள்ளது. அந்தக் கதைதான் தி டெமன்ஸ் ஆப் நார்த்.The 600th Great Comics of TEX VILLER

Hollywood Hero John Wayne film Sentieri Selvaggi! எவ்வளவு ஒற்றுமைகள் இருவரது ஸ்டில் களில் உள்ளதென்று  கவனியுங்கள் !!


100-Super TEX, 200,300,400,500,600............the history continues....
 இதில் அரிய வகையான சூழலும், அதில் வாழும்  பழங்குடி மக்களும் மிக அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளனர்! அமைதியான மக்களின் மத்தியில் அவர்களது பாதுகாவலுக்காக கனடா அரசாங்கம் நிறுவிய கோட்டைதான் நம்பிக்கைக் கோட்டை (FORT HOPE) அதனை யாரோ முற்றுகையிட்டு அதில் இருந்த சிலரைக் கொன்றுவிட்டு மற்றோரை பிடித்துச் சென்று விடுகின்றனர். இந்த தகவல் ஒரு செவ்விந்தியன் மூலமாக விலங்குகளை வேட்டையாடும் வேட்டையர்களுக்கு தெரியவருகிறது. நேரிலும் சென்று உறுதிபடுத்திக் கொண்டபின்னர் தங்களது அருகாமையில் உள்ள ஜான் கோட்டைக்குத் தகவல் அளிக்கின்றனர். கொல்லப்பட்ட நபர்கள் நன்றாக வறுக்கப்பட்ட நிலையில் உண்ணப்பட்டுள்ளனர் எனவே இது விலங்குகளின் கைங்கரியம் அல்ல. என்பதையும் உணர்த்துகின்றனர்.
இதனிடையே நவஜோ கிராம மாந்த்ரீகன் பேரபாயம் மூடு பனியின் இருளில் இருந்து புறப்பட்டு அழிவை ஏற்படுத்துவதை தனது கனவில் காண்கிறார்.
அவர் டெக்ஸ் குழுவினரை உஷார்ப்படுத்துகிறார். அவ்வேளையில் ஜான் கோட்டையில் இருந்து தகவல் வந்து சேர்கிறது. டெக்ஸ், கார்சன், கிட் மற்றும் நவஜோ வீரர் டைகர் ஆகியோருடன் கனடா புறப்படுகின்றனர். மேஜர் டிக்கன்ஸ் விவரம் தெரிவிக்கிறார். தன் படையினரை உடன் அனுப்பி வைப்பதாகவும் இந்த புதிரை விடுவிக்கும்படியும் கூறவும் டெக்ஸ் வழக்கம்போல் தட்டாது இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறார். அந்த பகுதியில் வசிக்கும் எல்லோ நைப், டோக்ரிப் மற்றும் சில பழங்குடிகள் இத்தீச்செயலை செய்திருக்கவியலாது என்று முடிவு செய்கின்றனர். அந்த கோட்டையை தாண்டி உள்ள வனம், அதைத் தாண்டியுள்ள மூடு பனி பூர்த்திய தூந்திரப் பிரதேச பகுதிகள் இன்னும் கண்டறியப்படாத பகுதிகள் என்று அறிகிறார்கள். செல்லும் பாதையும் மிக சவாலானதாக சதுப்புப் புதைகுழிகள் நிறைந்த வண்ணம் இருக்க இந்த குழு மிக சிரமப்பட்டு தங்கள் பயணத்தை தொடரும் வழியில் டோக்ரிப் பழங்குடியினரால் தாக்கப்பட்டு தப்பிக்கிறார்கள்.
மடக்கப்பட்ட பழங்குடியினர் தங்கள் தற்காப்புக்காக தாக்கியதாக சொல்ல டெக்ஸ் விடுவிக்கிறார். பின்னர் எல்லோ நைப் பழங்குடியினரின் குடியிருப்புக்கு சென்று தாக்குதல் நிகழ்ந்த விதத்தையும் நேரத்தையும் தெரிந்துகொண்டு முழு நிலவு வரும்போதே  தாக்குதல் நிகழ்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். அந்த முடிவுக்கு ஏற்றவகையில் அருகாமையில் உள்ள பழங்குடியினரின் கிராமம் முழு நிலவில் தாக்கப் பட்டுள்ளதை கிட்டும், டைகரும்  உறுதி செய்கின்றனர். அவ்வாறு சென்று திரும்பும்போது அந்த காட்டு மிராண்டிகளால் தாக்கப் படுகின்றனர். டெக்ஸ் தன் நண்பர்களுடன் சென்று அந்த தாக்குதலை முறியடிக்கிறார். பின்னர் கோட்டையை சரி செய்து அங்கே எல்லோ நைப் பழங்குடியினரை மிக கடினமான போராட்டத்துக்கு இடையில் இடமாற்றம் செய்கின்றனர். அந்த ஓநாய் மனிதர்கள் பெரும்பாலும் மூடுபனியின் இருளில் கடும் இரவில் மட்டுமே தாக்குதல் நடத்துகிறார்கள். 


அதுவே எதிரிகளுக்கு அவர்கள் அழியாத் தன்மை கொண்டவர்களென எண்ண வைக்கிறது. ஆனால் டெக்ஸ் குழுவினரின் இடைவிடாத போராட்ட முடிவில் அவர்கள் வெறும் மனிதர்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் டோக்ரிப் பழங்குடியினர் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் ஓநாய் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் பின் வாங்கும்போதும் பலரைக் கடத்திக் கொண்டு செல்கிறார்கள் அந்த தீயவர்கள் கூட்டம். டெக்ஸ் குழுவினர் அவர்களை மீட்டு வர எமனின் எல்லைக்கே சென்று அவர்களை அழித்து மீட்டு வருவதுதான் கதை. மிக பயங்கர எண்ணங்களையும் விதைத்து செல்லும் இக்கதையில் காமெடிக்கு ஒரு மானுடவியல் வல்லுநர் பயன்பட்டுள்ளார். அவர் அந்த பழங்குடியினரை அழிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவர்களின் பழக்க வழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அவர்களை அழிய விடக் கூடாது என்கிற எண்ணத்துடன் தன் வசனக் குவியலால் அவ்வப்போது சிரிப்பு வர வைக்கிறார். மொத்தத்தில் அறுநூறாவது கதையும் மிக அற்புதமாக செதுக்கப் பட்டுள்ளது.
அதிரடிகள் நிறைந்த இந்த கதை விரைவில் நமது லயன் காமிக்ஸில் வெளியாகும். வண்ணத்தில் எப்படி இருக்கு என்று ரசித்து விட்டு சிங்கத்தின் சிறு வலையில் ஒரு ஆதரவுக் கரம் நீட்டி விடுங்கள்! அவ்ளோதான்! விரைவில் வருகிறேன்! 

சனி, 6 ஏப்ரல், 2013

காவியம் புகழும் கிழவி! கவசத்திற்குள் இரு ஆவி!பாட்டியின் பக்தர்களே! பக்தைகளே! அனைவருக்கும் வணக்கம்!
 
நட்புக்கு பெருமை சேர்த்ததில் பாட்டி மிகச் சிறந்து விளங்குகிறார்! அவ்வைப் பாட்டியின் அன்பான அரசன் வள்ளல் அதியமானின் நட்பும் கருநெல்லிக் கனியும் தமிழ் கூறும் நல்லுலகு மறவா பாத்திரங்கள்! அரியதோர் கரு நெல்லிக் கனியினை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து பறித்தெடுத்த மன்னன் அதியமான் அதனை தானுண்டால் நீண்ட நாள் வாழலாம் ஆயினும் அதனால் தனக்கு என்ன பெருமை? அரிய தமிழ் பாடல்கள் மூலம் ஆருயிராம் தமிழை வளர்த்து மகிழும் தனது நட்புக்கு உரிய அவ்வைப் பாட்டிக்கு அதனை வழங்கி விடலாம் என்றெண்ணும் உயரிய குணம் தமிழ் மண்ணின் உபச்சார குணத்தினை காட்டி மகிழ்கிறது! 

அவ்வை பாட்டி அந்த நாட்களின் அற்புதமான அறிவுரைகளை தன் தமிழ் பாடல்களால் நிலைத்து நிற்க செய்த பெருமைக்கு உரியவள்! 
கண்ணகிக்கு சிலை வைத்துள்ள அதே மெரினா பீச்சில் நம்ம தலைவிக்கும் சிலை உண்டு! 
ஔவையார் என்னும் பெயரோடு இருந்தவர் இருவர். அவருள் முன்னவர் சங்க காலத்தவர். பின்னவர் கம்பர் காலத்தில் இருந்தவர். சங்கம் இருந்தது பற்றி சங்கத் தமிழ் மூன்றும் தா எனும் அவரது பாடலால் அறியலாம். ஔவையார் இயற்றிய நூல்கள் மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் , நல்வழி முதலியன. ஔவையாரின் பாடல் வரிகளில் முக்கியமான சில:
- சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்!
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
- சொல்லாமலே பெரியார் சொல்லிச் சிறியவர் செய்வர்
  சொல்லியும் செய்யார் கயவரே!
- கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு!
- மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்!
- அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்! (ஆத்திச்சூடி)
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
- உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம் மனையில் உண்ணாமை கோடி  பெறும்!
- கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்!
- கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும்! மேலதிக விவரங்களுக்கு:
தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்ட தமிழ் நாடு தேர்வாணையம் வழங்கும் போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பல கேள்விகள் தொகுப்பாக இங்கே கிடைக்கிறது நண்பர்களே!
http://tnpscguidance.blogspot.in/

அப்புறம்?
ஹாட் அண்ட் கூல் ஸ்பெஷல் கிடைச்ச நண்பர்கள் மகிழ்ச்சியோடு படித்து கொண்டு இருக்க நாம இங்கே கொஞ்சம் பாட்டி கதை பார்க்கலாமா?


பாட்டி சொல்லும் கதைகளில் எப்போதும் மறக்கவியலாத ஒரு பாடம் இருக்கும்! மனித மனங்களில் விளையாடிக்கொண்டு இருக்கும் ஆணவத்தின் சேட்டைகளை, அவற்றின் ஆட்டம் கடைசியில் எங்கு சென்று முடிகிறது! என்பதில் பாட்டி கதைகள் பாடம் சொல்லிக் கொடுக்கும்! "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்கிற உன்னத நீதியை அவளது கதைகள் வலியுறுத்தி முடிபவையாக இருக்கும்! அப்படித்தான் இந்த கதை ஒரு போராட்டக் களத்தில் துவங்குகிறது! வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்! 

சர்.காரெய்ன் மற்றும் சர்.டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும் வரையில் மோதுவது என முடிவெடுத்து கையில் ஈட்டியுடன் ஆங்கிலேய முறைப்படி குதிரையில் இருந்து கொண்டு நேரடியாக முட்டிக் கொள்கிறார்கள். டாரண்ட் ஒரு வலிமை வாய்ந்த எதிரி என்று  காரெய்னின் காதலி அவனை எச்சரிக்கிறாள். அன்பே! நீ என் அருகில் இருக்கையில் மாமலையும் ஓர் சிறு கடுகாம்! எனவே அஞ்சாதே! என்று காரெய்ன் கூறிப் பாய்ந்து புறப்பட்டு களம் புகுகிறான்!  


ஈட்டிகள் பாய்கின்றன! தாழ்வான உயரத்தில் வலுவான இரு ஈட்டிகள் இடியென பாய்ந்து ஓசை எழுப்புகின்றன! 


அய்யகோ!! அந்தோ பரிதாபம்! காரெய்ன் வீழ்கிறார்! டாரண்ட் வெற்றிக் களிப்பில் அருகே நெருங்குகிறார்! பரவாயில்லை ! நான் நேருக்கு நேராக தரையில் நின்று போரிடுவேன் என்ற உறுதியுடன் மோதுகிறார் காரெய்ன்! 
 
புல்வெளியில் மின்னலென பளிச்சிட்டுப் பாய்ந்தன வாட்கள்! கவசங்களின் உராய்வு ஓசைகள் கோட்டையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தன! காரெய்னின் தலைக் கவசம் டாரண்டின் வாள் வீச்சின் முன்பு நிற்க முடியாமல் தெறித்து வீழ்கிறது! 
"வேறு ஒரு வீரனை காக்க நீ மோதினாய்! அவனைப் போன்று வீர மரணம் எய்த எண்ணுகிறாயா? இல்லை உனதருமை உயிருக்காக என்னிடம் உயிர்ப்பிச்சை கோரப் போகிறாயா?"_டாரண்ட்  
 "ஒரு வீரனாக என் கடமை என்னவென்றால், உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். ஒன்று, நீ வீரனாக உனதருமை உயிரை கௌரவமான முறையில் விடு! அல்லது உன் உயிரைக் காத்துக் கொள்ள நான் தோற்று விட்டேன் என்று கதறு!"_டாரண்ட். "அந்தோ! நான் இறந்து விட்டால் என்னருமைக் காதலி லேடாவை இழந்து விடுவேன் ஆகவே நான் தோற்று விட்டேன், விட்டு விடுகிறேன் என்று  காரெய்ன் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்.  

நான் வாழ்வதே லேடாவுக்காகதான்! _காரெய்ன்
நீ நிச்சயமாகத்தான் சொல்கிறாயா? உன்னைப் போன்ற கோழையை அவள் விரும்புவாளா இல்லை என்னைப் போன்ற மாபெரும் வீரனை விரும்புவாளா? லேடா நீ என்ன சொல்கிறாய் ? _டாரண்ட் 
சில மணித்துளிகள் சென்றதும் லேடா தான் தேர்ந்து கொண்டவருடன் குதிரையில் விரைகிறாள்! ஏன் இப்படி செய்தாய் லேடா? என்று _காரெய்ன் புலம்ப, பெண்கள் வீரரையே விரும்புவர்! கோழைகள் விட்டுக்கொடுத்து தான் ஆகா வேண்டும் என்று டாரண்ட் சொல்லிச் செல்கிறார்! 


ஹீ! ஹீ ! ஹீ ! கண்ணுங்களா! நான்தான் கறுப்புக் கிழவி ஹெப்சிபா க்ரிம்! கதை இத்தோட முடிஞ்சிதுன்னு நடையைக் கட்டிடாதீங்க! சினிமால காட்டற மாதிரி ஆரேழு நூற்றாண்டுக்கு அப்புறமா லண்டன்ல, 

ஒரு பழம்பொருள் கடையில் ஜின்னி என்கிற பெண் குட்டி தன் அப்பாகிட்ட "இன்னொரு கவசமா அப்பா?" 
"ஆமா ஆனா இது ரொம்ப ஸ்பெஷல் ஜின்னி!" என்கிறார் அவளது தந்தை!  அந்த கவசத்தை ஒரு பாட்டுக்கு பரிசாகப் பெற்றதாகவும், அந்த கவசத்தின் உரிமையாளர் உண்மையில் சர்.காரெய்ன் பயன்படுத்தியது என்பதை அறியாமல் தூக்கிக் கொடுத்து விட்டார் என்று கூறுகிறார். இடைக்காலப் பாடல்களில் டாரண்ட்டிடம்காரெய்ன் தோற்று விட்டார் என்று உள்ளதே சரியா அப்பா!_ஜின்னி  
சரிதான்! துல்லியமாக சொல்லணும்னா டாரண்ட்டின் கவசம் கூட இங்கேதான் மேலே இருக்கிறது!_அப்பா 

அவர்கள் இப்போ ஒன்று  சேர்ந்தாச்சு! நான் இந்த இரு கவசங்களுக்கும் சேர்த்து மிக மிக அதிகமான தொகையைப் பெறுவேன்! இலண்டனில் உள்ள பழம்பொருள் சேகரிப்பவர் ஒருவரை நான் நாளைக்கு அழைத்து வருகிறேன்! 
 என்று கூறி கிளம்புகிறார் அவர்!
அன்றிரவு அகால வேளையை நோக்கி நிமிடங்கள் நகர்ந்தன. எங்கோ ஒரு ஆந்தை தின்ற எலி செரிக்காமல் அலறும் சப்தம்! தூர ஒரு நாயில் ஊளை ஓசை காதைக் கிழித்தது! வினாடிகள், நிமிடங்களாகின! நிமிடங்கள் மணித் துளிகளாயின! திடீரென ஏதோ ஒன்று நகரும் சப்தம்! நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள சின்னி மாடியில் இருந்து இறங்கி வருகிறாள்! க்ரீச்! க்ரீச்! க்ரீச்! காலடியில் படிகள் நசுங்கின! இருளில் ஒரு உருவம் நிற்பதைக் கண்டு உற்று நோக்கிய சின்னி "டாரண்ட்டின் கவசம் கண்டிப்பாக தனது இடத்தில் இருந்து நகர்ந்து இருக்கிறது என்பதைக் காண்கிறாள்!


 மெல்லிய ஒளி என்னை ஏய்க்க முடியாது! அந்த கவசம் உள்ளே அவையின்றி நகர்ந்திருக்க முடியாது என்ற திட நம்பிக்கையுடன்,
 ஈ!ஈ! இன்னொரு பேயா?
டாரண்ட் _அடேய் பயந்தாங்கொள்ளி!

காரெய்ன்_நான் ஒன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல! நீ என்னை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!
 நிறுத்துங்கள்_ஜின்னி
முடியாது! என்னை கோழை என்றெண்ணும் இவனை விடமாட்டேன்! இவன் என்னை வீரன் என்று ஏற்கும் வரை போராடுவேன் _காரெய்ன்
உண்மையை மறுப்பதா? நீ கோழைதான் அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன்!-டாரண்ட் 


 ஜின்னியின் பயம் ஆர்வமாக மாறியது கண்ணுங்களா! யாரவது அடிச்சிட்டு செத்தா யாரு கேக்குறா? வேடிக்கைதானே பார்க்கிறீங்க! ஹீ! ஹீ! ஹீ!
 அவன்தான் கோழையாச்சே! அவனுக்கு எதுக்கு நீ ஆர்வமூட்டுறே?-டாரண்ட்
"அவர் ஒண்ணும் கோழையல்ல! தான் தோத்தா சக வீரர்களிடம் அவமானப்பட வேண்டியிருக்கும்னு தெரிஞ்சும் காதலுக்காக சண்டையில விட்டுக் கொடுத்தார்! காதலுக்காக வாழ்ந்த அப்படி ஒரு மனுசன்தான் எனக்கு கணவனா வரணும்! அப்படி ஒருத்தரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்! "
ஜின்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கணக்கா ஆவிங்க ரெண்டும் வீரர்களின் சொர்க்கம் புகுந்தன! ஹீ! ஹீ! ஹீ! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையெல்லாம் படிச்சிருக்கீங்களா கண்ணுகளா?

ஜின்னி தன்னோட அப்பாகிட்ட என்ன சொல்வா? அவா சொல்றதை அவளோட அப்பா நம்புவாரா?  ஹீ! ஹீ! ஹீ! மண்டை ஒட்டு சூப் காத்திருக்கு கண்ணுகளா! அப்புறமா கனவில கதை சொல்ல வாறேன்! திகில் கதைங்க படிச்ச ரசிகங்கள் ஒரு பயங்கரமான கதையை நம்ம விஜயன் சார்ட்ட கேளுங்க! நமக்கு கடுதாசி போடுவாரா பாப்போம்! (குறிப்பு ஈ மெயில் நமக்கு தெரியாது! வேணும்னா டெலிபதி பண்ணுங்க)  ஹீ! ஹீ! ஹீ! 

ஹாய் நண்பர்களே! திகில், முத்து, லயன், ஜூனியர் லயன், மினி லயன் வரிசையில் முத்து மினி காமிக்ஸில் வெளியான அட்டைப் படங்களைக் கண்டு களிக்க அணுகவும் முதலைப் பட்டாளம் வலைப்பூ! 
http://mudhalaipattalam.blogspot.in/2013/04/blog-post.html? நண்பர் கலீல் அவர்கள் முத்து மினி காமிக்ஸ் பற்றி வெளியிட்டுள்ள பதிவு! அனைத்து அட்டைப் படங்களையும் கண்டு இன்புறுங்கள்! நன்றிகள் திரு கலீல் அவர்களே! 
அகில உலக அதி பயங்கர தலைப்புகளை சுமந்துகொண்டு வந்த இந்திரஜால் காமிக்ஸில் வெளியான தமிழ் கதைகளின் தலைப்புகளை கண்டு அதிர "காமிக்ஸ் கடந்த பாதை"http://tamilcomicskadanthapaathai.blogspot.in/ நன்றிகள் ஸ்டாலின், சிபி அவர்களுக்கு!
http://nallapisaasu.blogspot.in/ யாரோ புனித சாத்தானாம் கண்டுகினு வந்துடுங்க! வாழ்த்துக்கள் சோமசுந்தரம் அவர்களே! இதை எல்லாம் அப்பப்போ குறுஞ்செய்தி பண்ணிடனும்! சரியா? 

என்றும் அதே அன்புடன்! உங்கள் நண்பர் ஜானி! 

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...