செவ்வாய், 10 மே, 2022

தடத்தில்..தாகத்துடன்..#விஜயா மைந்தன்

 


காதலின் வலியை தடமாக விட்டு விட்டுப் போனவளே.. உன் பாதம் பட ஏங்கிடும் தரையின் மணலென தவங்கிடக்கிறேன்.. இன்னொரு ஜென்மம் தாண்டியாவது வா.. இன்னொரு பிரபஞ்சத்தில் இன்னிசை கீதத்துடன்
பறவைகள் சூழ படபடக்கும்
பட்டாம்பூச்சிகளாய் நீல வானின் மேகமண்டலங்களுக்குள் சிறகடித்துப் பறந்திடுவோம்.. புல்வெளிப் பனித்துளிகளை ஒன்றுசேர்த்து நமக்கோர் கூடு சமைப்போம்.. வானவில் பாலமேறிப் பரத்துடன் கைகோர்த்து ஆடிப் பாடிடுவோம்.. ஆங்கே விண்ணதிரும் பறைமுழங்க கோலாகலமாக்கிடுவோம்.. காத்திருப்பேன் கனவுகளுடன்..#கவியதிகாரம்..#விஜயாமைந்தன் #ஜானிசின்னப்பன் #jscjohny #chapterkavithai #jscjohnyfeelings

ஞாயிறு, 8 மே, 2022

காலத்தை வென்றவளே..#கவியதிகாரம்

 

விழி வலையை வீசி விண்மீன்கள் பிடிப்பவளே..

விழுந்து போனேன் விழிகளின் வீச்சினிலே..

விடையில்லாப் பயணத்தின் விளக்கமற்ற நிலை..

என்று கலைந்திடுமோ உன் மௌனத்தின் அலை?

ஆகிப் போகிறேன் அப்படியே சிலை.. 

இப்படியும் இருக்கிறதோ அளவிடற்கரிய கலை? 

குழம்பிக் குட்டையாகிப் போகிறது என் தலை..#கவியதிகாரம் #ஜானி #ஜானிசின்னப்பன்

வெள்ளி, 6 மே, 2022

கோலமே...கோலமே..!

 


அவளின் விரல் நகத்தில் உரசிய  கோலமாவின் துகள்களும் வைரத் துண்டுகளாய் மாறி ஒளிவீசிடும் மாயமென்னவோ...!

விதவிதமான வண்ணங்களில் ஒவ்வொருநாளும் அலங்காரமாகிறது அவளின் பாதம் நடனமாடியபடியே வரைந்திட்ட வாசல் கோலம்..

சாலையின் சிறுவர் குழாம் ஆர்ப்பரித்து அருவிபோல ஓடிக் கலையும் கோலத்தின் சிதறல்கள் கூட தரையில்  மெருகாகிப் பளிச்சென சிதறுகிறது.. 

தினம்தினம் இன்றென்ன கோலம் என்னை முக்திப் பேரின்பமயமாக்கிடும் என்றெண்ணியே உதிக்கும்போதே வெட்கம் பூக்க தலையை எட்டிப் பார்க்கிறான் கதிரவன்..

இருள் கவிழும் போதினில் அன்றிட்ட கோலம் மண்ணோடு மண்ணாய் மாயமானாலும் வானின் நட்சத்திரங்கள் தம்மோடு கோலத் துகள்களை விண்ணுக்கிழுத்து இணைத்துக் கொண்டு விட்டதாகவே பிரமை தட்டுகிறது..

#கவியதிகாரம் #கோலஅதிகாரம் #jscjohny #ஜானி #ஜானிசின்னப்பன்


செவ்வாய், 3 மே, 2022

மந்திரபானம்_சிறார் சித்திரக்கதை வரிசை#2-01_ரங் லீ காமிக்ஸ்

 இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே.. 

ரம்ஜான் பெருவிழா கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் நலவாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. 

நம் இல்லத்தின் செல்வங்களுக்கு நல்ல பொழுது போக்கினை உருவாக்கித்தர வேண்டியது நமது கடமையாகும். இப்போதைய விஷுவல் உலகினில் புத்தகங்கள் தம் பொறுப்பினை எப்போதும் உணர்ந்தே உள்ளன. அமைதியுடன் குறிப்பிட்ட தலைப்பில் நம் கவனத்தை விளம்பர இடையூறுகள் இன்றி நிலைநிறுத்தி வாசிக்க புத்தகங்களே இன்றுவரை சிறந்த கருவியாக இருந்து வருகின்றன.. அதனை நாமும் உணர்ந்து கொண்டால் நமது பிள்ளைகளுக்கு தங்கள் பாடங்கள் தவிர மற்ற பொழுது போக்குகளையும் நூல் வடிவில் கொடுப்பது சுலபமாக இருக்கும். இப்போது வரும் சித்திரக்கதைகள் பெரும்பாலும் பெரியவர்களுக்கான கதைகளாகவே அமைந்து விட்ட தருணத்தில் ரங் லீ காமிக்ஸ் தனது பறக்கும் பானம் என்கிற புதிய காமிக்ஸினை சிறார்களை கவனத்தில் கொண்டு முழுமையாக சிறார்களுக்காகவே கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் இந்த தைரியமான முயற்சியினைப் பாராட்ட வேண்டும். அவர்களை ஆதரித்தால் மற்ற சித்திரக்கதை நிறுவனங்களுக்கும் அது ஒரு ஊக்க சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பறக்கும் பானம் சித்திரக்கதை எளிதில் வாசிக்க ஏதுவாக சிறு சிறு கதைகளாக அமைந்திருக்கிறது. அதில் உள்ள மற்ற கதைகளின் தலைப்புகள்.. 

1. பறக்கும் பானம் 

2. ரகசிய கலவை 

3. மேதாவி கிளாரா 

4. மந்திரபான போட்டி 

5. கனவில் கொண்டாட்டம் 

டேவிட் ரீவாய் படைப்பினை தமிழில் மொழிபெயர்த்து நமக்கு வழங்குபவர் ஸஹானா இளங்குமரன். படைப்பினை சென்னை போரூரில் இயங்கி வரும் ரங்லீ பதிப்பகம் மே வெளியீடாக வெளியிட்டிருக்கிறது.    

சின்னஞ்சிறு கதைகளில் விரிகிறது நாம் கண்டிராத ஆச்சரியங்கள் மிகுந்த உலகம். அங்கே வண்ணங்கள் கண்ணைப்பறிக்கும்.. புதுமைகள் என்றும் தொடரும்.. குட்டிப் பெண் தாரா அவளது சுட்டிப் பூனை கிளாரா இருவரும் ஒன்றாக செய்யும் சாகசங்களை மேஜிக் உலகின் பின்னணியில் அருமையாக கொண்டு சென்றிருக்கிறார் டேவிட் ரீவாய்.. அவளின் மேஜிக் சக்தியினால் உருவாக்கும் பானங்களும் அதனால் உருவாகும் நன்மைகளும் சுற்றிலும் உள்ளவர்களுக்கு சிறுமி தாரா எப்படி உதவுகிறாள் என்பதைக் குறித்தெல்லாம் தானியா, குங்குமி, லவங்கி போன்றோரின் வண்ணமயமான மேஜிக் உலகில்    திறம்பட சிறுவர்களை கவரும் விதத்தில் ஓவிய ஜாலம் செய்து காண்பித்திருக்கிறார்கள்.  

இந்த கதைகள் தவிர இலவச விளம்பரங்கள் செய்து கொள்ள ஒரு வாய்ப்பினையும் ரங் லீ வழங்குகிறது. பள்ளிகளில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற சிறார்களின் ஓவியங்களை காட்சிப் படுத்தியிருப்பது சிறப்பு.. 

நூறு ரூபாய் விலையில் அருமையான ஒரு ஓவிய, சித்திரக்கதை அனுபவத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து உங்கள் மழலைகளின் உலகினை இன்னும் இன்பமயமாக்கிட இந்த பறக்கும் பயணம் உதவட்டும். எனது வாழ்த்துக்களுடன்.. 

உங்கள் நண்பன் ஜானி வி சின்னப்பன் 

  

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

திகில் கிராமம்-The Village_வெப் சீரிஸாக..அமேஸான் ப்ரைமில்..

 முன்னை நீ செய்த பிழையொன்று பெரும் பூத உருக் கொண்டதே...

பூதமாய்ப் பிறவியெடுத்துன் வாழ்வைக் கவ்வியதே..

தீயெனில் சுடும் விரல் உணர்ந்தோரில்

சுட்டும் புத்தி கெட்டோரை 

ஒழித்திடும் வேளை பிறக்குமே..

அந்நாளில் காண்போர் கதிகலங்கும்..மாண்டோரும் மீள்வார்..தீமை கொடும் பேயுருவெடுத்து ஆடித் தீர்த்திடுமே.. பயம் கொள்வாய் மானிடா.. கும்பர கும்பர கும்பாலே...

விரைவில்..திகில் கிராமம் வெப் சீரிஸாய் அனல் கக்கக் காத்திருக்கிறது...


திகில் பயணத்தை விரைவில் லைவ்வாகக் காணத் தயாராகுங்கள்.. பாதிப்புக்குள்ளாகும் எளியவர்களின் உணர்ச்சிப் பிழம்பான போராட்டமே இந்த "தி வில்லேஜ்.." தமிழ்நாட்டில் நிகழும் ஒரு கிராபிக் ஆடுகளமே திரையுரு பெற்று ஆர்யாவின் அசத்தல் நடிப்பிலும் ஜான் கொக்கனின் படுபயங்கர நடிப்பிலும் மிரட்டக் காத்திருக்கிறது. தமிழ் காமிக்ஸ் டைம்ஸின் மகிழ்ச்சியான தருணம் இது என்பேன். லோன் உல்ப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு பட்டையைக் கிளப்பி வரும் வேளையில் யாளி ட்ரீம்ஸ் மெகா கூட்டணியில் பிரம்மாண்டமான திரைவடிவில் நெற்றிக் கண் புகழ் இயக்குநர் Milind Rau அவர்களின் செதுக்கலில் அதகளம் புரியக் காத்திருக்கிறது.. Asvin Srivatsangam அவர்களது மாபெரும் முயற்சியில் Amazon prime web series மூலம் உங்களை மிரட்டப்போகும் கதையினை தமிழ்நாட்டை தரிசித்தேயிராமல் கற்பனைக் களம் அமைத்து புகுந்து விளையாடியிருக்கிறார் கதாசிரியர் Shamik Dasgupta .. ஓவியங்களில் மெர்சல் செய்திருக்கிறார் Gaurav Shrivastav..அதனை திரையில் கண்டு மகிழ காத்திருக்கும் காமிக்ஸ் காதலர்களுடன் தமிழக திரை இரசிகர்களுக்கும் விறுவிறுப்பான விருந்து காத்திருக்கிறது....😍😍😍😍செவ்வாய், 19 ஏப்ரல், 2022

030_மக்கபேயர்கள்_பகுதி_02_விவிலிய சித்திரக்கதை வரிசை

 

வணக்கங்கள் வாசக, வாசகியரே.. தங்கள் பலத்த ஆதரவுடன் இந்த விவிலிய சித்திரக்கதைகள் வரிசை தனது முப்பதாவது நூலில் ஆதியாகமம் முழுவதையும் நிறைவு செய்திருக்கிறது. இந்த பயணத்தில் எனது பக்கபலமாக துணை நின்று உதவிய திரு. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், விவிலிய கதைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதில் ஆர்வம் காட்டிய திரு. ஸ்ரீராம் லக்ஷ்மணன், திரு. குமார், திருப்பூர்  மற்றும் திரு. அலெக்சாண்டர் வாஸ் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 
வாசகர்கள் தங்கள் கிறிஸ்தவ தோழர்களுடன் இந்த நூல்களை ஷேர் செய்தால் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும்  மிகுந்த பயனளிக்கக்கூடிய வரிசைதான் இந்த விவிலிய சித்திரக்கதை வரிசை. இந்த நூல் மக்கபேயர்கள் வரலாற்றினை எடுத்துக் கூறுகிறது. வழக்கம்போல பிடிஎப் இணைப்பை பதிவின் முடிவில் இணைத்திருக்கிறேன். விரும்புபவர்கள் நேரடியாக அங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி. 
தரவிறக்க சுட்டி.. 
if this will published in colour... 

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் 
ஜானி v. சின்னப்பன் 
சனி, 16 ஏப்ரல், 2022

029_மக்கபேயர்கள்_பகுதி_01_விவிலிய சித்திரக்கதை வரிசை

அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு இந்த விவிலிய சித்திரக்கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். 
அனைவருக்கும் ஹேப்பி ஈஸ்டர்.. 
காமிக்ஸ் ஏலம் என்கிற மாய வலைகளில் ஆங்காங்கே சிறுசிறு நல்லவைகளும் இருக்கும். உங்கள் கனவு நூல்கள் கிடைக்கும். உங்கள் மனத்துக்குக் கடிவாளம் போட்டுக் கொண்டு உண்மையிலேயே ஏதேனும் ஒரு புத்தகம் வேண்டுமா? அது உங்கள் வாழ்க்கையில் அத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றா என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து நாலா பக்கங்களிலும் நன்கு விசாரித்தறிந்து கொண்டு புதிதாக வரும் அத்தனை காமிக்ஸ்களுக்கும் உங்கள் ஆதரவை நல்கி பின்னரே உங்கள் கனவு புத்தகத்தை மாத்திரம் தேடி செல்லுங்கள். அதுவே உங்கள் பணத்துக்கும், மனத்துக்கும் நல்லது என்பதனை மாத்திரம் இப்போது இருக்கும் சூழலில் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.. 
சம்பவம்:001. என் 2005-2006 களில் அப்போதெல்லாம் இணையத்தில் முத்தமிழ் மன்றம் அண்ணன் ரத்தினகிரியார் மற்றும்  முத்து டிரை பாட் புகழ் முத்து விசிறியார் ஆகியோரின் பங்களிப்புகளும், கிரவுன் காமிக்ஸ் எனும் இணைய தளத்தில் சில ஸ்கான்களும் (ராணி காமிக்ஸ் இரத்தக் காட்டேறி_007) போன்றவைகளும்தான் எனக்கான ரிலாக்ஸ் டைம்ஸ்.. 
முகநூல் நட்பாக மலர்ந்த முதல் நட்பு அன்பு நண்பர் ஸ்ரீராமுடையது. அவர் உதவியுடன்தான் சித்திரக்கதையின் மாயவலை குறித்து அனைத்தையும் நான் அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் என் நட்பு வட்டத்தில் ஓசி புக் படிக்கும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் எல்லோரும் காமிக்ஸ் என்னும் கனவினை சிறு வயதிலேயே கைகழுவி விட்டவர்கள்தான். என்னை பலமாகக் கலாய்த்த பலரும் ஒரு கட்டம் வரை பார்த்து விட்டு இது திருந்தாது என்று தலையில் அடித்துக் கொண்டு  விலகியவர்களே.. 
சம்பவம்:002. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் என்ற நண்பர் முகநூலில் தைரியமாக தனது கருத்துக்களை சொல்ல ஆரம்பித்த வேளை. அவரைக் கலாய்க்கிறேன் பேர்வழி என்று ஒரு சிலர் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்த வேளை.. சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். தனது இல்லத்துக்கே வரவழைத்து உபசரித்தார். அது மாத்திரமல்ல நண்பர்களே.. நான் கனவு கண்டு கொண்டிருந்த என் தேடல் இதழான முதல் ராணி காமிக்ஸ் இதழ் அழகியைத் தேடி.. அதனை அன்பளிப்பாக எடுத்துக் கொடுத்தே விட்டார். 
சம்பவங்கள் 003 தொடங்கி -இன்பினிட்டி(கால எல்லை கடந்தது)
எத்தனை எத்தனை நண்பர்கள்.. எத்தனை எத்தனை புத்தங்கங்கள்? காமிக்ஸ்கள்? நல்ல மனங்கள்? நிஜமாகவே காமிக்ஸ் குறித்து நான் சிலாகிப்பது என்னவென்றால் எனக்குக் கிட்டிய ஒவ்வொரு நட்பும் எனக்கு இறைவன் கொடுத்த வரமே.. எஸ்.. இதனைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் எனக்குக் கிட்டியதோர் அரிய வரமே..  மறக்க இயலாத நல்ல, நேர்மறையாளர்கள் நிறைந்த இடம் காமிக்ஸ் வட்டாரம். மற்றவை உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பார்த்துப் பழகி மகிழுங்கள். 
நன்றியுடன் நான்..     
இனி புத்தகத்துக்குள் புகலாம் வாருங்கள்.. 
உங்கள் நன்மைக்காக இறுதியில் வழக்கம்போல பிடிஎப் லிங்க் கொடுத்திருக்கிறேன்..  இந்த நூலை பிடிஎப் வடிவில் வாசிக்க:

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி வியாழன், 14 ஏப்ரல், 2022

கறுப்பு முகமூடி_மலர் காமிக்ஸ்_தமிழ் புத்தாண்டுப் பரிசு-2022

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை வாழத்தான். தொடர்ச்சியாக நம்மில் பலர் மறைந்தாலும் நாமும் ஒருநாள் மறைவது நிச்சயம் என்றாலும் எங்கே இருந்தாலும் வாழ்க்கையை சோகம் கடந்து மகிழ்ச்சியை மனதில் அமர்ந்து கொள்ள இடமளித்தால் வாழ்க்கையே வரமாகி விடும். இந்த சிந்தனைகளுடன் இந்த பதிவுக்குள் கடந்து செல்வோம். 

கறுப்பு முகமூடி: நமது முகமூடி வேதாளர் என்னும் பிரம்மாண்ட கதா நாயகரை மனதில் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை மனதில் கொஞ்சம் தாண்டி வந்து விட்டால் இந்த கதை நன்றாகவே இருக்கிறது. நாயகர் தனது உளவு நெட்வொர்க் மூலமாக ஒரு அரசு அலுவலகம் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்று சதிகாரர்களின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட முயல்கிறார். ஏகப்பட்ட மோதல்.. முகமூடி தாக்கப்பட்டு கொள்ளையர்களின் இடத்துக்கு   கொண்டு செல்லப்படுகிறார். ஐயகோ.. அவரை ஒரு கூண்டுக்குள் போட்டு இருபுறத்திலும் இரும்பு சுவர் கொண்டு நசுக்க முற்படுகிறார்கள் கடத்தல்காரர்கள்.. அதிலிருந்து எப்படித் தப்புகிறார்? எதிரிகள் வீழ்ந்தனரா என்பதை பரபரப்பான காட்சிகளாக நம் முன் விருந்து படைத்திருக்கிறார்கள் மலர் காமிக்ஸ் நிறுவனத்தினர். பதிப்பாசிரியர் திரு. கே.பாண்டிமணி அவர்களை பிரதானமாகக் கொண்டு மதுரை, வெண்கலக் கடைத்தெருவில் முன்னர் இயங்கிய மலர் பப்ளிகேஷனின் படைப்பினை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர இந்த அபூர்வமான புத்தகம் ஸ்கேன் ஆகும்போது ஏதும் கிழித்துக் கொள்ளுமோ, எதிர்காலத்தில் நல்ல விலைக்கு அபூர்வமான புத்தகம் ஐயா என்று சொல்லி நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பில் ஏதும் பிரச்சினை எழுமோ என்கிற எந்த பிரச்சினையையும் நினைத்துப் பார்க்காமல் உங்கள் அன்பும் அக்கறையும் இந்த காமிக்ஸ் வாசக உலகிற்கு தேவை என்று தானே முன்வந்து புத்தகங்களை ரிஸ்க் எடுத்து அனுப்பி வைத்த அன்புத் தம்பி  டெக்ஸ் சம்பத் அவர்களை இந்த நேரத்தில் மகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த புத்தகம் டிஜிட்டல் மயமாக பல ஆண்டுகள் முன்னரே ஸ்கேன் செய்வதற்கு கொடுத்து உதவிய நல்ல உள்ளத்துக்கு என் நன்றிகள். இந்த புத்தகத்தை வாசிப்பதுடன் தங்கள் மேலான கருத்துக்களையும் பதிவு செய்து தங்களிடம் இதுபோன்ற அபூர்வ காமிக்ஸ்கள் இருப்பின் அவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் தயக்கம் எதுவும் தேவையில்லை. அதே சமயம் உங்கள் நூல்களை டிஜிட்டல் மயமாக்க விரும்பினால் காமிக்ஸ் நண்பர்கள் உதவ எப்போது காத்திருக்கிறார்கள். இலவசமாகப் பெற்றேன் இலவசமாகவே கொடுப்பேன் என்கிற எனது கொள்கை உங்களிடமும் இருந்தால் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம். இது ஒரு தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் டிஜிட்டல் முயற்சி.. (முக நூலில் Tamil comics Times என்கிற காமிக்ஸ் குழுவிலும் இயங்கி வருவதால் அவ்வப்போது அதனையும் சுட்டிக்காட்டுவது என் வழக்கமுங்க!)   

தமிழ்ப் புத்தாண்டில் இந்த அரிய அபூர்வமான கலைப் பொக்கிஷத்தை உங்களுக்குப் பரிசளித்து நாங்களும் மகிழ்கிறோம்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும். குட்டீஸ்களுக்கும் இந்த நூலினை இலவசமாகக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. நிற்க.. தயவு செய்து நேரம் ஒதுக்கி கொஞ்சம் நூல்களை வாசிக்கவும் செய்யுங்கள். கணினி, கைபேசி யுகத்தில் புத்தக வாசிப்புக்கும் சற்றே நேரம் ஒதுக்குங்கள்.. 
இந்த நூலை தரவிறக்கம் செய்து கொள்ள: 

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி


திங்கள், 11 ஏப்ரல், 2022

புதைந்த நீதி_ரங் லீ காமிக்ஸ் ஏப்ரல் வெளியீடு

 

ரங் லீ  காமிக்ஸின் இந்த ஏப்ரல் 2022 மாத வெளியீடாக மலர்ந்திருக்கிறது புதைந்த நீதி. மொத்தம் ஆறு கதைகள். வண்ணத்தில் முப்பத்து ஆறு பக்கங்களில் திகில் விருந்து படைத்திருக்கிறது இந்த மாத காமிக்ஸ்.

-புதைந்த நீதி

-ரத்தக் காட்டேரியாகிய நான்

-மெழுகு மனிதன்

-குருதி மழை

-ஊசி வாயில் மரணம்

-நிஜமா? பிரமையா?

என்ற ஆறு தலைப்புகளும் ஆர்வமூட்டுவதுடன் கதைக்குள் நம்மை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு விடுகின்றன..கண்ணீரோடு கொலைக்கரங்கள் நீள துவங்கும் கதைக் கொத்துக்கள் இறுதியில் மரணமடைந்தும் தனது காப்பியத்தைப் பூரணமடைய செய்த ஆன்மாவின் நிம்மதியுடன் முடிவடைகின்றன.. அத்தனை கதைகளிலும் வித்தியாசமான, அமானுஷ்யமான, மர்மமான, திகிலான அனைத்து விதமான உணர்வுகளையும் வண்ணங்களை தெறிக்க விட்டுப் பரிமாறி இருக்கின்றனர் ரங் லீ பதிப்பகத்தார்.நமது காமிக்ஸ் வாசக வட்டாரத்தை அதிர வைத்த தோழர் பழனி வேலின் மறைவு.. அவரது குடும்ப நலத்திற்காக இந்த மாத வெளியீடான இந்த புதைந்த நீதி புத்தகத்தின் வருமானம் மொத்தத்தையுமே அப்படியே தரவிருக்கிறார்கள் ரங் லீ காமிக்ஸ். வாங்கி வாசிக்கும் நம் வாசகர்களுக்கும் மன நிறைவு கொடுக்கும் அருமையான விஷயம் இது.  

 


நம்மாலான ஆதரவாக காமிக்ஸ் வாங்கி வாசிப்போம். பிள்ளைகளுக்கும் காமிக்ஸ் வாசிப்பை கற்றுத்தருவோம். அவர்கள் அழகான உலகில் சித்திரக்கதைகளுக்கும் இடம் உண்டாக்கித்தருவோம். 
என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 

செவ்வாய், 15 மார்ச், 2022

ஒரு வேண்டுகோள்..

 

உங்களுக்கு   தேவையான  புத்தகங்களின் எண்ணிக்கைக்குரிய புத்தகங்களின் தொகையை  90430 36798 என்ற PayTM எண்ணுக்கு PayTMலிருந்து நேரடியாகவோ அல்லது UPI Id -  9043036798@paytm என்ற PayTM UPIக்கும் அனுப்பலாம். வங்கி கணக்கில் இருந்து அனுப்ப வேண்டுமானால் கீழே உள்ள PayTm Accountக்கு அனுப்பலாம்.


PayTM NEFT Account:


Name: PANNEER SELVAM C,  

Account Number: 919043036798, 

IFSC: PYTM0123456

BRANCH: Noida

வெள்ளி, 4 மார்ச், 2022

மூச்சற்றுப் போனவனின் முனகல்_ஜானி சின்னப்பன்

உறக்கமின்றி

பாயைப் பிறாண்டி

உன் பெயரை

புலம்ப வைத்து

மெல்ல மெல்ல 

மாயமாகிப்

போனாயே...

உன் புன்முறுவலில்

உயிர்த்திருந்த என்

உற்சாக தினங்களை

உன்னோடே 

கொண்டுபோய்

எங்கோ 

கொட்டிவிட்டாயே..

மாண்டவன்

மீண்டெழ 

வழியில்லாமல்

வனாந்தரத்தில்

வீசிப் போகிறேன்

வார்த்தைகளை..

வாய்ப்புள்ளோர்

வாசிக்கட்டும்

வாழ்விழந்தவன்

வாழ்க்கையை..

*ஜானி சின்னப்பன்*

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

சீறும் என் தோட்டா_ஜானி டைனமைட்

 சீக்கிரம்.. இராணுவத்தினர் வந்து விடப் போகிறார்கள். கிளம்புங்கள்.. உத்தரவு பறந்து வந்து காற்றை நிறைத்ததும் வானளாவ எரிந்து கொண்டிருந்த பண்ணை வீட்டை விட்டுப் புயலெனப் பாய்ந்து விரைந்தது அந்த எழுவர் அணி. 

கொடூரர் படை அது. அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்பில் இவர்கள் செல்லும் இடமெல்லாம் வெறியாட்டம் போடத் தவறுவதேயில்லை. அப்பாவி பண்ணை நிலதாரர்களும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ந்து தாக்குண்டு தீக்கிரையாகிக் கொண்டிருந்த கொடூர காலக் கட்டம். 

கணவாயை இலக்காக வைத்து விரைந்து போய்க் கொண்டிருந்த முதலாமவன் குதிரை தலைகுப்புறக் கவிழ்ந்தது.. கீழே விழுந்தவனை அப்படியே ஒரு மறைக்கப்பட்ட பள்ளம் காவு வாங்கியது. உள்ளே குத்தீட்டி போன்று நடப்பட்டிருந்த மர ஈட்டிகள். எழுவர் அறுவராக அவர்களுக்கு முன்னே அடர்ந்த காடு கனத்த அமைதியுடன்.. சரக்கென கத்தியொன்று பாய்ந்து இன்னொருவன் கழுத்தில் ஊன்றி நிற்க சப்தம் எழாமல் பரலோகம் போனான். அறுவரில் ஒருவன் காலி. மிரண்ட ஐவரும் தத்தம் ரிவால்வரை சகட்டு மேனிக்கு எட்டுத் திசைக்கும் சுட்டு தோட்டா மழை பொழிய மெல்லிய ஓசையாகக் கிளம்பி திடீரென ரொய்ய்ய்ங்ங்ங் என்று அதிகரித்த ஓசை தேனீக்களின் மரண ராகத்தை இசைக்கத் தொடங்கியது. தேனீக்களின் கொடுக்குககள் ஆங்காங்கே பொத்தல்களைப் போட இருவர் அங்கேயே சுருண்டு விழுந்தனர். குதிரைகள் மற்ற மூவரையும் தள்ளிப் பாய்ந்தோடி விட காட்டின் பாறைகளுக்கு மத்தியில் மறைவிடம் நாடி ஓடத் தொடங்கினர் ஆளுக்கொரு திசையில்.. விஷ்க்கென்ற ஓசையுடன் ஒருவனின் காலில் தைத்தது அம்பொன்று. ஐயோ அம்மாவென்று கதறியபடியே கீழே விழுந்தவனின் கழுத்தில் அடுத்த அம்பு தைத்தது.  செவ்விந்திய அபாச்சே இறகுகள்..

அடர்வனத்தில் சேர்ந்தவாறே ஓடிக் கொண்டிருந்தவனின் முதுகில் சதக்கென குத்திப் பிளந்தது கோடரியொன்று. கடையொருவன் விதிர்விதிர்த்துப் போனான். 

யார்டா எங்களைக் கொல்றது. தைரியமிருந்தால் முன்னே வா. நான் இந்தக் கூட்டத்தின் தலைவன் டேவி லார்சன். என்னைக் கொன்றால் உனக்கேதும் லாபமில்லை. வெளியே வா..கூப்பாடாகவும் இல்லாமல் கெஞ்சலாகவும் இல்லாமல் மிரட்டலாகவும் இல்லாமல் அப்படியொரு குரல். 

முதலில் வடக்கேயிருந்து ஊளைபோல ஆரம்பித்து ஏதோ குரல்கள் அவனை தைரியமிழக்க செய்தது. பின்னர் வடக்கே துவங்கி அவனை சுற்றிச்சுற்றி ஒரு குரல் பேசியது. 

அடேய் லார்சன்..

நான்தானடா 

ஜானி டைனமைட்..

எத்தனை கொலைகளும் கற்ழிப்புகளும் கொள்ளைகளும் நிகழ்த்தியிருப்பாய். இன்று என் வதைபடலத்தில் சிக்கிச் சிதறுகிறாயே. முட்டாள். நீ செய்த பெரிய தப்பு  என் நண்பன் மெக்கின்ஸியின் பண்ணையைத் தாக்கியது. அங்கே நீ விட்டுப் போன தடயங்களை வைத்து வெகு நாட்களாக உன்னைப் பிடித்து விட அலைந்து கொண்டிருந்தேன். இத்தனை நாட்களாக கழுவும் தண்ணீரில் நழுவும் மீனாக நீயிருந்தாய். இப்போதோ  உன் எழுவர் அணியின் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டி விட்டேன். இதோ பாரடா என்று குரலின் சுற்று நெருக்கத்தில் கேட்க.. முதுகில் பலத்த உதை விழுந்து தடுமாறி விழுந்தான் லார்சன். துப்பாக்கியை உருவ எத்தனித்தவனின் கையை பூட்ஸ் கால் நசுக்கியது.. 


போய் சேரடா நரகத்திற்கு..   என்றவனின் கண்களின் இடுக்கத்தில் கொடூரமும் கொஞ்சம் அப்பிக் கிடந்தது. அவனது பிஸ்டல் டுமீல்ல்..என ஒற்றைத் தோட்டாவை உமிழ்ந்தது..
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

ஜானி டைனமைட்_அறிமுகம்

 

அநீதிகள் அலறியோடும்.. அக்கிரமங்கள் வாலை சுருட்டிக் கொள்ளும்..
இலக்கொன்று மனதில் கொண்டு இவன் குதிரையிலேறிப் பறந்தாலே..
திக்கெட்டும் தெறித்திடுமே கொள்ளைக் கும்பல்..
வந்தானே ஒரு வெகுமதி வேட்டையனே.. 
சீறும் இவன் தோட்டா முன்
நில்லாதே!!!
ஓடு..ஓடு..ஓடு..
செவ்விந்தியர் சேனைக்குள்ளும் புகுவான்..
அமெரிக்காவின் இராணுவத்திலும் பாய்வான்..
பொதுமக்கள் நிம்மதியை 
மூச்சுக் காற்றென எண்ணுவான்..
அற்பப் பதர்களை அடி வேரோடு பிடுங்கியெறிவான்..
இவன் பார்வைக்குப் பின்னால்
பல நூறு டைனமைட் வெடிகள்..
இவன் அசைவுக்கு முன்னால்
பிதுங்கிடும் பலரது விழிகள்..
அர்கன்சாஸ் அலற அலற
டெக்ஸாஸ் மிரள மிரள
கலிபோர்னியா கதற கதற
இல்லினாய்ஸூம்
கென்டக்கியும்
இன்னபிற ஏரியாக்களும் பதற பதற
பலி கொள்வான் தீயோரை..
காத்திடுவான் நல்லோரை..
இவன் பெயர்..
ஜானி டைனமைட்
தயாராகுங்கள்..

புத்தம்புது புரட்சிக்கு..

கதை எண்-001. வங்கிக் கொள்ளையர்

அந்த மரத்தின் இருள் போர்வைக்குள்ளே தன்னை ஒளித்துக் கொண்டு வெகுநேரமாகக் காத்திருந்தது அந்த உருவம்.. வெகுதூரத்தில் மெல்லியதாக துவங்கிய அதிர்வுகள் நெருக்கத்தில் தடக்..தடக். தடக் என பலமாக அதிரத் துவங்கின.. அந்த நான்கு குதிரையிலும் நான்கு முகமூடிகள்.. எங்கோ கொள்ளையடித்திருந்த பணக் குவியலோடு பாய்ந்து வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தில் வேகம் குறைத்து பயணிக்க எத்தனித்த வேளையில்  திடீரென்று அவர்கள் முன்னே குதித்தெழும்பியது அந்த உருவம். குதிரைகள் ஹீஹீயென ஓசையெழுப்பி கலவரமடைய ககுதிரைகளைக் கட்டுப்படுத்தி நிறுத்திய நால்வர் முன் தன் இரு கரங்களிலும் துப்பாக்கியை ஏந்திய வண்ணம் புன்முறுவலை முகத்தில் தரித்து நின்றான் அந்த வீரன். யாரடா நீ..உயிர் ஆசை இல்லையா உனக்கு..வழியை விட்டு ஒதுங்கடா! அடாவடிக் குரலுடன் குதிரையிலிருந்தவன் உறுமினான். நீ யாரென எனக்கு நன்றாகவே தெரியும்.. பிரபல பேங்க் கொள்ளையன்  ஸ்டான் வில்சன்தானே? மரியாதையாக வங்கிக் கொள்ளைப் பணத்தை ஒப்படைத்து சரணடையுங்கள்.. இல்லையென்றால்..டுமீல்.. குதிரையிலிருந்த ஒருவன் அப்படியே சாய்ந்து விழுந்தான். இது வெறும் பேச்சல்ல. என் ஆணை.. ஒழுங்கு மரியாதையாக சரணடையுங்கள்.. 

கலவரமடைந்த கொள்ளைக் கும்பல் மிரட்டலுக்குப் பணிந்தது. தங்கள் வசமிருந்த பேங்க் பணத்தை ஒப்படைப்பதாகக் கூறி பையைத் தூக்கி வீச விலகி சிரித்தான் ஜானி டைனமைட். ஹெஹெ..இந்த பழைய காலத்து டெக்னிக்குக்கெல்லாம் ஏமாறுவேன் என நினைத்தீர்களா என்றவன் சடசடசடவென தன் தோட்டாக்களை உமிழ்ந்து அத்தனை பேரின் பெல்ட்டிலும் தோட்டாக்கள் உரசிப் போகுமாறு செய்ய மூன்று கொள்ளையர்களும் சரணடைந்தனர்.. அவர்களைத் துரத்தி வந்து கொண்டிருந்த ஷெரீப் டைசனின் படையினரின் குதிரைக் குளம்புகள் எழுப்பும் ஓசை தொலைவில் எழும்போது இங்கே பணத்துடன் குதிரைகளில் பிணைக்கப்பட்ட மூவரும் அவர்களின் பார்வைக்குத் தென்பட ஜானி டைனமைட் அப்படியே மாயமானான்.

ஷெரீப் தலைவனின் நெஞ்சில் குத்தியிருந்த காகிதத் துணுக்கை எடுத்து படித்தார். 

டியர் ஷெரீப் டைசன்..

இந்த பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அப்படியே ரிவார்டு தொகையை என் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுங்கள்.

 என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி டைனமைட்..

திங்கள், 21 பிப்ரவரி, 2022

தி பார்ச்சூன் ஆப் வின்ஸ்லாவ்ஸ்-01 வான்கோ 1848--அறிமுகம் The fortune of the winczlavs-vanko 1848 லார்கோ பூர்வீகம்

வணக்கங்கள் பிரியமானவர்களே.. நாமறிந்த லார்கோ பெரும் பணக்காரர். அவரின் அந்த பெரும் திரள் செல்வம் அவரது முன்னோர்களுக்கு எப்படி கிடைக்கப்பெற்றது என்பதன் பின்னணி பற்றிய கதையாக மலர்வது தி பார்ச்சூன் ஆப் வின்ஸ்லாவ்ஸ்.  தி பார்ச்சூன் ஆஃப் தி வின்ஸ்லாவ்ஸ் #1 - வான்கோ, 1848 (2022) : வின்ச் என்ற பெயருடன், லார்கோ வின்ஸ்லாவ் ஒரு மகத்தான செல்வத்தைப் பெற்றார். ஆனால் அது எங்கிருந்து வந்தது? அவரது பரந்த சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியது யார்? என்ன தியாகங்கள் தேவை என்று நிரூபிக்கப்பட்டது? 1848. ஒட்டோமான் ஆக்கிரமித்துள்ள மாண்டினீக்ரோவில், இளம் மருத்துவர் வான்கோ வின்ஸ்லாவ் மக்கள் எழுச்சியின் தலைவர்களில் ஒருவர். துரோகம் செய்யப்பட்டு, அதிகாரிகளால் தேடப்பட்டு, அவர் ஒரு பல்கேரிய அகதியான வெஸ்காவுடன் சேர்ந்து அமெரிக்காவிற்கு பால்கனில் இருந்து தப்பிச் செல்கிறார், அவர் சட்டப்பூர்வமாக நியூயார்க்கிற்குள் நுழைய அனுமதிக்க அவரை திருமணம் செய்து கொண்டார். பல மாற்றங்களைச் சந்திக்கும் இன்னும் புதிய நாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த ஒரு குடும்பத்தின் வரலாறு தொடங்குகிறது.

ஆட்டோமான் சாம்ராஜ்ய வீரர்களிடமிருந்து தப்பும் ஒரு மருத்துவரின் பயணமும் வாழ்வும் சிறப்பான முறையில் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது


ஓவியர் பெர்தெட்கதாசிரியர் வான் ஹாம்
இதன் தொடர்ச்சியாக 2.டாம் அண்ட் லிசா -1910 விரைவில் வரவிருப்பதாக சினிபுக் அறிவித்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஜெரோம் செயின்கேன்டின் சினிபுக்கிற்காக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.2021ல் இந்த கதையினை டூபிஸ் பிரெஞ்சில் வெளியிட 2022 கிரேட் பிரிட்டன் கென்ட்டில்  எடிட்டர் எரிக்கா  ஓல்சன் ஜெப்ரி  சினி புக் சார்பில் வெளியிட்டு இருக்கிறார். புத்தகம் அச்சடிப்பு ஸ்பெயினில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 
வான்கோ வின்ஸ்லாவ் ஒரு மருத்துவர். 25 வயது இளைஞன். மான்டிநெக்ரோவில் போராளிக் குழுவினருடன் இணக்கமாக இருந்ததால் துருக்கியப்படை அவரது தலைக்கு விலை வைத்து தேடி வரும் சூழலில் ஒரு கிராமத்தில் பதுங்கி வைத்தியம் பார்த்து வருகிறார். ஊர்த்தலைவரை துருக்கியர்கள் மடக்கி விசாரித்து வான்கோவினை மடக்கிக் கைது செய்ய எத்தனிக்க அங்கிருந்து ஊர் மக்கள் உதவியுடன் தப்புகிறார் வான்கோ. அவருக்கு உதவி செய்யும் பெண் கொல்லப்படுகிறாள். குரோஷியாவின் டுப்ரோவ்னிக் நகரில் அடைக்கலம் புக எத்தனிக்கையில் அங்கும் ஒரு பெண்ணின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து அங்கிருந்தும் தப்பி அல்பேனியா வழியாக  இத்தாலி, பிரான்ஸ் சென்று அமெரிக்காவை அடையும் திட்டத்துடன் இந்த ஜோடி இணைந்து பயணிக்கிறது. ஒரு கட்டத்தில் அமெரிக்க கப்பலில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இத்தனைக்குப் பின்னர் அமெரிக்காவில் இந்த தம்பதியினர் நிம்மதியாக வாழும் நிலைமை இருந்ததா? வான்கோவின் வரலாறை தொடர நமக்கு லார்கோவின் மூதாதையர் பற்றிய பரிச்சயம் ஏற்படுகிறது. 


ஓவியங்களில் லார்கோவின் தெறிக்கும் பாணி இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். புது ஓவியர் தனது பாணியில் வரைந்திருந்தாலும் கதைக்கு அவசியமான சகல விஷயங்களையும் நிறைவாகவே செய்திருக்கிறார். 

கதையில் வரும்  சில சுவாரஸ்யமான தகவல்கள்...

மார்பைன் - ஓபியம்-கிரேக்க கடவுள் மார்பியஸின் பெயரே இது. அதன் அர்த்தம் உறக்கத்தின் கடவுள். கனவில் வரும் இவர் மனித உருவத்தில் இருப்பாராம்.. 
https://en.wikipedia.org/wiki/Morpheus
வலி நிவாரணியாக உதவும் மார்பைன் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள..                                                  https://en.wikipedia.org/wiki/Morphine
. மான்டேநெக்ரோ வரலாற்றை அறிந்து கொள்ள:
இந்த சுவாரஸ்யமான கதையினை சித்திர வடிவில் ருசி பார்க்க தமிழிலும் விரைவில் எதிர்பார்க்கலாம். 
அதுவரை இந்த பேனலை ரசிப்போம்..

 
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் 
jscjohny @ ஜானி சின்னப்பன் 

தடத்தில்..தாகத்துடன்..#விஜயா மைந்தன்

  காதலின் வலியை தடமாக விட்டு விட்டுப் போனவளே.. உன் பாதம் பட ஏங்கிடும் தரையின் மணலென தவங்கிடக்கிறேன்.. இன்னொரு ஜென்மம் தாண்டியாவது வா.. இன்னொ...