திங்கள், 20 செப்டம்பர், 2021

அநீதி அகற்றிடு! _கற்பனைக் கதை_ஸ்பைடர்+சுஸ்கி விஸ்கி சந்தித்தால்.._ஜானி சின்னப்பன்

 ஸ்பைடர்.. ஸ்பைடர்..

பதட்டத்தோடு ஓடி வந்தார் பெல்ஹாம்.. சிலந்திவலைப்படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்தான் அந்த வீர வேங்கை ஸ்பைடர். என்ன பெல்ஹாம்..பேய் அறைந்ததைப் போல விழிக்கிறாய்?!? 

ஸ்பைடர்.. யாரோ இரண்டு குழந்தைகள் எதையோ தேடி நம் ஒளிவிடத்தில் அலைகிறார்கள்.. காமிராவில் காட்சி தெரிகிறது.. 


அடேய் ஆர்டினி.. இரகசியக் கோட்டையை மறைக்கும் மாயத்திரையை மறைத்து விட்டான் போலிருக்கே.. குறும்பன்.. எங்கே அவன். குரலில் கோபம் கொப்பளித்தாலும் மனதில் மென்மை தெறித்தது ஸ்பைடரிடம். பெல்ஹாம்..அந்த இருவரையும் அழைத்துவா..
சற்று நேரத்தில் சிறு அறிமுகத்துக்குப் பின்..

ஸ்பைடர் அங்கிள்.. வாங்க உங்க ஹெலிகாரில் ஒரு இடத்துக்குப் போகணும்.. புதிரா எதோ இரகசியம் ஒளிஞ்சிருக்கு ஓர் இடத்தில்.. சுஸ்கி விஸ்கி யின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்பைடர் புறப்பட்டது ஹெலிகார்.

அதன் கட்டுப்பாடுகளை உற்றுக் கண்காணித்தவாறே வழியை சொல்ல ஏரியொன்றின் அருகில் இறங்கியது ஹெலிகார்..

ஆர்டினி..ஐயோ நீரென்றால் பயம்..உயரமென்றாலும் பயம்.. பயபுள்ளையை விட்டுத் தப்பி எங்காவது ஓடிப்பிடலாம்னா விடவே மாட்டேங்கிறான் தம்பி.. புலம்பலுக்குப் புன்னகையை உதிர்த்தனர் சுஸ்கி விஸ்கி..


இந்த ஏரிக்கடியில் ஏதோ மர்மம் ஒளிஞ்சிருக்கு.. சுற்றியும் பாருங்கள் என்று கூற ஸ்பைடரின் கூர்விழிகளுக்குக் கதிரியக்கம் பாதித்த சூழல் புரிந்தது.. தனது நுட்பமான கருவிகளின் துணையுடன் பெல்ஹாமின் மூளையுடன் ஆர்டினியின் அலறலோடு ஏரியை இம்மிவிடாது அலசி எப்போதோ கடத்தப்பட்டு அங்கே கைவிடப்பட்டிருந்த அணு உமிழ் ஆயுதம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட உள்ளூர் ஆட்கள் ஒன்று கூடி அவர்களை ஆரவாரத்தோடு வழியனுப்ப..சுபம்🙏🏻💐😄💓

All in one வாட்ஸ் அப் குழுவுக்காக..

மேலதிகக் கதைகளுக்கு:

திங்கள், 13 செப்டம்பர், 2021

டைகர் கதை வாசிக்க..

 நண்பர் ஒருவர் ஏற்கனவே FB ஒன்றில் பதிவு செய்த details:


டைகர் கதைகள்:-


லெப்டினன்ட் ப்ளூபெர்ரி (தமிழில்: கேப்டன் டைகர்) கதை தொடர்கள் 1963ல்

முதன் முறையாக

வெளியிடப்பட்டன. இதில்

இதுவரை 28கதைகள் இடம்பெற்று

உள்ளன. இவை அனைத்தும்

தமிழில் வந்துவிட்டன.


1,2,3,4&5=இரத்தக்கோட்டை-5பாக

கதை(ஒற்றை ஒற்றை பாகங்களில் கறுப்பு வெள்ளையில் முத்து காமிக்ஸ்ல போடப்பட்டு, ஆகஸ்ட் 2017ல் ஈரோடு விழாவில் ஒரே இதழாக வண்ண மறுபதிப்பாக வெளியிடப்பட்டது)


6. தோட்டா தலைநகரம்-சிங்கிள்

சாட்- வண்ண மறுபதிப்பு-2018மார்ச்.


7,8,9&10=இரும்புக்கை

எத்தன்-4பாக கதை.(முத்து 250ல் ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கி, வண்ணத்தில் 2013 மே மாதம் க்ளைமாக்ஸ் பாகங்கள் போடப்பட்டன.)


11&12=தங்க கல்லறை-இருபாக

கதை(2012நவம்பரில் வண்ணமறுபதிப்பு)- என்னைப் பொறுத்து நெ1. ஆஃப் டைகர்.


13to23=மின்னும் மரணம்-11பாக

கதை- தி கிரேட் ஸ்டோரி ஆர்க் ஆஃப் டைகர். முத்துவில், லயனில் என ஆங்காங்கே போடப்பட்டு, 2015ஏப்ரலில் பிரமாண்டமான வண்ண மறுபதிப்பாக வெளியானது. 


24,25,26,27&28=என் பெயர்

டைகர்-5பாக கதை- கி. நா. பாணியில் இருந்தாலும் கூட வசீகரிக்க ஏதோ உள்ளது. 


இத்தொடர் பெரிய வெற்றி

பெற்றதை அடுத்து டைகரின்

இளவயது நடப்புகளை கொண்ட

யங்டைகர் சீரியஸ் 1989ல்

வெளியிடப்பட்டது. அதில்

இதுவரை 21கதைகள் வந்துள்ளன.

தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக

கதைகளாக வெளிவந்துள்ளன.

இன்னமும் 12பாக்கியுள்ளன.


இளம்டைகர்...

1,2&3=இளமையில் கொல்-3பாக

கதையாக லயன் கெளபாய் ஸ்பெசலில் வெளியானது.(அடுத்த வண்ண மறுபதிப்பு இதுவாகத்தான் இருக்கும்)


4. மரணநகரம் மிசெளரி(வைல்டு

வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)

5. கான்சாஸ் கொடூரன்

(முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்) 


6. இருளில் ஒரு

இரும்புக்குதிரை(முத்து NBS

jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)

7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்

2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)


8. அட்லான்டா ஆக்ரோசம்

9. உதிரத்தின்விலை...8&9-ஒரே

இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக

சாகசம்.


9. மார்ஷல் டைகர் - Lion magna spl லில் வந்த முதல் பாக கதை

10. வேங்கைக்கு முடிவுரையா & ரனகள ராஜ்ஜியம்- 2 பாக கதை


அடுத்த 9 பாகங்கள் கொண்ட இளம் டைகருக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

ஆவேசம் கொண்டெழுந்தவனின் பாடலிது_திகில் கிராமம்..

 திகில் கிராமம்


(இது வீழ்த்தப்பட்டவர்கள் விழித்தெழுந்தெழுந்த வீரக்கதை)


வா வா வெக்காளி..

வா வா வெக்காளி..

உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..

புதைக்கப் பாத்துது மனுச குலம்..

விதையா முளைச்சி வெளிவருவோம்..

அழிக்கப் பார்த்த ஒரு பயலும்

பொழைக்க மாட்டான் இனிமேலும்..

சக்தியும் பலமும் கொடுத்தாயே

உலகை நசுக்க மறப்போமா?

உப்பைத் தின்னவன் எவன்னாலும்

தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..

தப்பை செஞ்சவன் எவன்னாலும்

தலையைக் காவு வாங்கிருவோம்..


அலட்சியம் பண்ணா ஆதிகுடி

பொழச்சி வந்து பொளப்போமடா..

ஆவேசமா வாரா வெக்காளி...

அவ முன்னே பூமி அடங்குமடா..

வா வா வெக்காளி..

துணையா வா வெக்காளி..


_ஜானி சின்னப்பன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் தின வாழ்த்துக்கள்..

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

பிணமென்று நினைத்தாயோ..?_வினாடி கதை வரிசை_ஜானி சின்னப்பன்

ஊஊஊஊ என்ற ஊளைச்சத்தம் அந்த சுடுகாட்டுக்கு அருகிலிருந்த ஜீவனேஷின் வீட்டை நிறைத்தது.. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் தன்னந்தனியே அவனது வீடு.. பலப்பல அசிங்கமான நிழல் காரியங்களுக்கு அவனுக்கு உதவிக் கொண்டிருந்த வீடு அது..

வீட்டுக்குள்ளே ஜீவனேஷ்..

எங்கோ ஒரு ஆந்தையின் அலறலில் அவனது இதயம் ஒருகணம் நின்று துடித்தது. நெற்றியில் துளித்துளியாய் வியர்வையோடு   ஜீவனேஷ் நிமிர்ந்தான். இந்த ஆறடி ஆழம் சரியாய்த்தானிருக்கும்..அவன் மனம் திட்டமிட மண்வெட்டியை ஓரம் வைத்து விட்டு அந்த பெண்ணின் சடலத்துடைய காலைப் பற்றி இழுத்து குழிக்குள் தள்ளினான்.. 

அப்படியே அவனை இழுத்துக் குழியில் தள்ளிய விசையோடு வெளியே பாய்ந்தாள் ஷைனிகா.

ஜீவனேஷ்  குழிக்குள் விழுந்த வினாடியில் பள்ளத்தின் பக்க சுவர்கள் அப்படியே சரிந்து ஜீவனேஷை மூடிக் கொள்ள மூச்சடங்கும் ஓசை..மயான அமைதி..

தன்னை அழிக்க நினைத்த காதலனின் பணக்கார புதுக் காதலி ஜூவாலினியை நினைத்து ஒரேயொரு செகண்ட் கடைக் கண்ணில் கசிவுடன் வெளியேறினாள்..

விடை பெறுகிறேன் காதலா..

@Copyright belongs to jscjohny.blogspot.

புதன், 11 ஆகஸ்ட், 2021

திகில் கிராமம்..டீம் அறிமுகம்

வணக்கம் ப்ரியமுள்ள வாசகர்களே.. இதுதான் திகில் கிராமம் பின்னணியில் உழைத்து உருவாக்கிய குழுவினர்.. வெல்கம் ஆல்..

 

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ்_ஒரு அறிமுகம்

 

யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் ஒரு சித்திரக்கதை வெளியிடும் அசல் இந்திய நிறுவனமாகும், இது காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைப் பயன்படுத்தி உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்க அசல் கதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் அசல் மற்றும் கற்பனை கதைகளை திகில் மற்றும் கற்பனையின் கலவையுடன் கொண்டுவருகிறது; மனதை வளைக்கும் அறிவியல் புனைகதை மற்றும் புராணம். அடுத்த தலைமுறையினரை எங்கள் கவரும் கதைகள் மற்றும் கண்கவர் கலை வேலைகள் மூலம் காமிக் புத்தக காட்சியில் குதிக்க நாங்கள் வளர்த்து அறிவூட்டுகிறோம். எங்கள் குழு, மிகவும் படைப்பாற்றல் கலைஞர்கள் முதல் விதிவிலக்கான திறமையான எழுத்தாளர்கள் வரை, ஒரே இலட்சியத்தைக் கொண்டுள்ளது: சிறந்த கதைகளை வெளியிட்டு வரும் இந்த நிறுவனம் தமிழ் நாட்டின் திரு.அஸ்வின் ஸ்ரீவத்சாங்கம் அவர்களால் 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2013 முதல் தங்கள் அட்டகாசமான  படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். யாளி என்கிற பெயரே கற்பனையான ஒரு மிருகத்தை குறிப்பிடுவதாகும். இல்லாத ஒரு மிருகத்தை கற்பனை செய்து ஆலயங்களிலும், சிற்பங்களிலும் கொண்டு வந்த அந்த கால சிற்பிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் தங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டிருப்பதே இதன் இந்திய கலைத்துறைக்கான ஆகச்சிறந்த மதிப்பாகும். 

சமூக ஊடகங்கள் மூலமாகவே தனது தோழர்களான ஷமிக் தாஸ்குப்தா, சூர்யோதய் டே ஆகியோரை தொடர்பு கொண்ட அஸ்வின் ஸ்ரீவத்சாங்கம் தனது இலட்சியத்தைப் பகிர்ந்து கொண்டதும் விரைவிலேயே "கேரவன்" உதயமானது.. 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற  காமிக்-கான் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக கேரவன் அங்கே வெளியிடப்பட்டது. தொடர்ந்ததெல்லாம் சரித்திரம். தற்போது தமிழில் வெளியாகவிருக்கும் திகில் கிராமம் விருது பெற்ற படைப்பாகும். சிறப்பான கதை சொல்லல் பாணியில் பட்டாசை மிஞ்சிய தொடர் வெடியை போட்டாற்போன்று இந்திய காமிக்ஸ் வானில் கொண்டாட்ட நிகழ்வாகிப் போனது திகில் கிராமம் (தி வில்லேஜ்). அற்புதமான ஓவியங்கள், கதை, புத்தக வடிவமைப்பில்   அனைவரையும் அசத்திய இந்த கிராபிக்ஸ் நாவல் தமிழ் நாட்டை கதைக்களமாகக் கொண்டது. இவ்வருடம் தமிழ் பேச வருகிறது என்பது ஹைலைட் செய்தி.. இந்த ஆண்டில் தமிழ் நாட்டில் புதியதாக உருவாகியிருக்கும் லோன் உல்ப் பதிப்பகத்தாரால் ரூனி காமிக்ஸ் உருவாக்கப்பட்டு தங்கள் முதல் பதிப்பாக திகில் கிராமம் வெளியிடப்படுகிறது.. அதற்கான முன்பதிவு சுட்டியை சென்ற பதிவிலேயே கொடுத்திருக்கிறேன்.. தங்கள் அனைவரது முயற்சியால் கண்டிப்பாக இந்த படைப்பு மாபெரும் வெற்றியடையும் என்பதில் பெரு மகிழ்ச்சியுடன்...

என்றும் அதே அன்புடன்..

ஜானி சின்னப்பன்,

மொழிபெயர்ப்பாளர்,

காமிக்ஸ் காதலர் + காவலர்.

Connected Links

https://www.yalidreamcreations.com/


திங்கள், 9 ஆகஸ்ட், 2021

திகில் கிராமம்_முன்பதிவுகள் துவக்கம்..

 பிரியமுள்ள சிநேகிதங்களுக்கு,

வணக்கம்.. வெகு ஆவலைத் தூண்டியுள்ள ரூனி காமிக்ஸ் முதல் வெளியீடு "திகில் கிராமம்"

முன்பதிவு ஆரவாரமாக துவங்கி உள்ளது.  

அதன் முன் பதிவுக்கான சுட்டி இதோ:

திகில் கிராமம்_Rooney Comics

கதையில் வரும் பாத்திரங்கள் நம்மை வெகுவாக பாதிக்கும். ஏதோவொரு அம்சம் நம்முடன் ஒன்றிப்போகும். நிறைய அதிரடிகள், அச்சமூட்டும் நிகழ்வுகள், ஏமாற்றங்கள், பழிக்குப்பழி என்று சகல விதத்திலும் விருந்து படைத்து சாதித்த கதைக்களம் அதுவும் தமிழ் நாட்டில் நிகழ்வதாக சொல்லப்பட்ட கதைக்களம் இத்தனை வீரியமாகவும், விறுவிறுப்புடனும் சமீபத்தில் எதுவும் வாசித்ததில்லை என்று வாசகர்கள் விரைவில் சொல்வார்கள் என்பது உறுதி.. 

திகில் கிராமம்_Rooney Comics

முன்பதிவு நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் தங்கள் ஆதரவை இந்தத் தமிழ் மண்ணில் திரளென குவித்து ஆதரிக்க இன்னும் ஒரு காரணம் இதோ...

கேரவன் என்கிற பெயரில் இந்திய லெவலில் சாதித்த மாபெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் அடுத்த வெளியீடாக லோன் வுல்ப் பப்ளிகேஷனால் ரூனி காமிக்ஸ் இரண்டாவது பிரம்மாண்ட வெளியீடாக பட்டையைக் கிளப்ப வரப்போகிறது.. இந்த அழகான இரத்தக்காட்டேரிகளின் நடன நிகழ்ச்சியை ஆதரிப்போம் வாசக நண்பர்களே!

என்றும் அதே அன்புடன்,
உங்கள் இனிய நண்பன் ஜானி!திங்கள், 2 ஆகஸ்ட், 2021

திகில் கிராமம்_Follow Up

வணக்கம் ப்ரியமானவர்களே..பலப்பல கதைகள் உலகெங்கும்..
எங்கோ ஒரு ட்ரான்ஸில்வேனியாவும், எப்போதோ ஒரு வெஸ்டர்னும் மனதில் பதிந்து இன்றும் நிற்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்..

இதோ  வருகிறது தமிழர் குறைதீர்க்க.. தமிழ்நாட்டின் கதைக்களத்தோடு.. கதிகலங்கச் செய்யும் சம்பவங்கள்.. அச்சுறுத்தும் அகால வேளைகள்.. மானிடர்களின் அயோக்கியத்தனத்தால் பொங்கிடும் மானிட சுனாமியும் இயற்கையை தீண்டியதால் ஆங்காரமாகக் களமிறங்கும் இயற்கை சுனாமியும் கதிகலங்கடிக்கக் காத்திருக்கின்றன..
காத்திருங்கள்..
அனிமேஷன் உலகில் பலப்பல சாதனைகளை நிகழ்த்தி வரும் யாளி ட்ரீம்ஸ் க்ரியேஷனின் *The Village* அழகு தமிழில் லோன் வுல்ஃப் பப்ளிகேஷனின் பெருமை மிகு முதல் படைப்பாக..
*திகில் கிராமம்*
கதிகலங்கடிக்கும் சம்பவங்கள்..
கண்கலங்க வைக்கும் நிகழ்வுகள்..

வேதனை, நிந்தனை, சோதனை, சாதனை, போதனை அனைத்தும் சேர்ந்த பேக்கேஜ்தான் *திகில் கிராமம்*

காத்திருங்கள்..
பட்டறையில் சுத்தியலின் ஓசை பலமாகக் கேட்கிறது..

நிற்க..
விரைவில் இறுதிப் பணிகள் நிறைவடைந்து அறிவிப்புகள் அதிர வைத்திட காத்திருங்கள்..
அட்வான்ஸ் புக்கிங்குகள் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கூகிள் பே, இணையதள வழி வங்கிப் பரிவர்த்தனை மேல்விவரங்கள் கிடைத்ததும் பகிர்கிறேன்..

வாழ்த்துவோம் யாளி ட்ரீம்ஸ் கிரியேஷன் அண்ட் லோன்வுல்ப் பப்ளிகேஷன் தமிழிலும் சிறப்பான வெற்றியை ருசி பார்க்க...

சனி, 31 ஜூலை, 2021

திகில் கிராமம்_லோன் வுல்ஃப் பப்ளிகேஷன்_அறிமுகம்

 

வணக்கங்கள் அன்புமிகு தோழமைகளே...
காமிக்ஸ் வானில் சிறகடிக்கும் கனவுகளின் அணிவரிசையில் அழகுக்கு அழகுசேர்க்கப் பாய்ந்தோடி வருகிறது ரூனி காமிக்ஸ்.. லோன்வுல்ஃப் பப்ளிகேஷன் வெளியிடும் புத்தம்புது வரவான திகில் கிராமம்.. 
யாளி ட்ரீம்ஸ் கிரியேஷன் ஆங்கிலத்தில் வெளியிட்ட தி வில்லேஜ் கிராபிக் நாவல் இப்போது முதன்முறையாக தமிழில் வெளியாகவிருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் இது.. 
மேலும் அதிக விவரங்களுக்கு: 

வியாழன், 22 ஜூலை, 2021

"உசிருக்குள்ளே உன்னை வெச்சேன்.."_ஜானி சின்னப்பன்

கையைப் பிடிச்சுக் கூட்டிப்போகும் 
உன்னைக் கண்கள் தேடுதே அப்பா.. தோழமையா சிரிச்சுப் பழகி பலகதைகளை சேர்ந்து பேசிய அந்த நாளும் திரும்ப வருமா அப்பா.. கண்டிச்சாலும் தண்டிச்சாலும் நான் சாப்பிட்டேனான்னு ரகசியமா விசாரிச்சாலும் எதிலும் உன்கிட்ட அன்புதானே பாக்க முடியும்?

இந்த உலகமே எதிர்த்தாலும் எங்கப்பா கூட இருந்தா வர்ர பலமே வேறதான் அப்பா..

நீயில்லாம தனியா ஒவ்வொரு நொடியும் நானே முடிவெடுக்கையில ஒரு ஓரமா உசுருக்குள்ள ஒன் ஞாபகமும் ஒக்காந்துக்குதே அப்பா.. நீ இருந்தா நானே ஏன் தலையைப் பிச்சிக்கப்போறேன்னு நெனப்பு வந்து உன் நினைவைக் கிண்டிவிட்டுப் பறக்குதப்பா.. திரும்ப ஒரு நா உன்னை சந்திப்பேனா தெரியலை.. ஆனா சந்திச்சா கட்டிப் புடிச்சிக்கிட்டு என்னோட ஒலகத்தையே சமர்ப்பிச்சிட ஆசை அப்பா..

கிடைக்குமா ஒரு வாய்ப்பு

திரும்ப நான் ஒன்னைப் பாக்க..

_ஜானி சின்னப்பன்..


ஞாயிறு, 11 ஜூலை, 2021

சோகம் ஏன் சித்திரப்பெண்ணே?_ஜானி சின்னப்பன்

 


உன் சோகப் பார்வையில் 
ஒரு நூறு அர்த்தங்கள்.. 
தீராத அலையாய் 
உன்னுள் எழும் சிந்தனை 
நீர்த்திவலைகள் பட்டுத் 
தெறிக்கின்றன 
என் மீதும் கொஞ்சம்.. 
கொஞ்சுமொழிப் 
பேசிப் போனவன் 
வரவையெண்ணி ஏக்கமா? 
உன் கண்ணில் 
சமுத்திரத்து ஆழம் 
கண்டேன்..
 உன்னவனை 
ஊருக்கனுப்புகையில் 
உன் கண்ணிலுறைந்த 
துக்கமா 
அறியேன் நான்.. 
காற்றுகூட உன்னைக் 
கடந்து போகையில் 
சோகராகம் இசைத்துப் 
போவது என் காதில் 
கேட்கிறது.. 
நுட்பமாய்ப் பார்த்தால் 
நீயும் ஒரு தவமியற்றும் 
யோகியே.. 
காத்திருத்தல்..
கண்களில் நீர் கோர்த்தல்..
இடைவிடா மோனநிலை.. 
தீரட்டும் உன் மௌனம்.. 

அதோ உன்னவனின் 
வருகையை மோப்பம் 
பிடிக்கிறது என் நாசி..  
மகிழ்ச்சி கொள்கிறேன் 
நானும் வாலாட்டியபடி..
_ஜானி சின்னப்பன்...

புதன், 7 ஜூலை, 2021

நினைவுகளின் ஸ்பரிசம்..._ஜானி சின்னப்பன்

 

உன் நினைவுகளின் 

ஸ்பரிசத்தில் மான்குட்டியாய் 

தத்தித் தாவும் மனதுன்னை

நினைத்து 

எப்போதுமிருக்கும் 

தவத்துடன்

தனித்ததொரு தீவாய்...

_ஜானி சின்னப்பன்

திங்கள், 28 ஜூன், 2021

**நண்பா ஒரு நிமிடம்..**_ஜானி சின்னப்பன்

இல்லையா இதற்கொரு 
எண்ட் கார்ட் என்ற 
என் நண்பனே..
வானத்தின் தொடு தூரம் 
சொல்லேன்?
நிலவின் வடைப் 
பாட்டியைத்தான் 
கேளேன்..
நீண்டு கிடக்கும் இரயில் 
தண்டவாளத்தை தூரம் 
விசாரியேன்..
கடற்கரையில் பொக்கென 
வளையினில் பதுங்கிடும் 
நண்டுகளை எண்ணிப் 
பாரேன்?
வேகக் காற்றின் 
சுழலினைக் 
கேளேன்..
நில்லாமல் திரிந்திடும் 
அதற்கில்லை 
எத்தடையும்...
முயற்சியோடு 
பயிற்சியோடு 
விவேகம் கொண்டு 
நீ இருக்க 
வெற்றி எப்படி உன்னைத் 
தாண்டி வேறு பக்கம் 
செல்ல முடியும்?
உன்னைச் சுற்றி 
மாயத்தடையொன்றை 
எழுப்பியதும் 
உனக்கொரு சோகக் 
கதையை எழுதியதும் 
நீயே..
உடைத்து வர 
உள்ளொளி பெருக்கு.. 
உற்சாகம் மிகக் கொள்.. 
தானே உருவாகும் உன் பாதை..
உன் துயரங்களுக்கு நீயே 
போட்டு விடு எண்ட் கார்ட்...
இறையருள் துணை நிற்க 
வாழ்த்துகிறேன் உன் துணையாய் 
பாக்கெட்டில் பயணித்திடும் 
உன் பேனா..
_ஜானி சின்னப்பன்

ஞாயிறு, 27 ஜூன், 2021

கவிதையே உனை எழுதவா?_ஜானி சின்னப்பன்


 கவிதையொன்றை  எழுதிட அமர்ந்தேன்..

கவிதையோ  என்னை எழுதிக் கடந்து போனது..

உன் வடிவில்..


கடற்கரையின்

மணற் பரப்பில்

புறாக் கூட்டமொன்று 

குபீரென எழுந்து

பறந்தாற்போல்

என்னுள் குதூகலம்..


காற்றின் வேகத்தில்

பலூன்களின் 

நாட்டியம்..


தொலைதூரக் கப்பல்களின்

அசைவில்

ஏதோவொரு நளினம்..


அடித்து ஓய்ந்து

மீளும் அலைகளின்

சேதியென்னவென

முழுதாய் என் கவனம்..


ஆங்காங்கே கூடிக்கும்பலாய்

மானுடர் சிரிக்கும்

களங்கமில்லாப் பெருநகைப்பு காதுக்கு இதமாய்..


பாவம் இங்காவது

நிம்மதி அவர்களை 

அரவணைக்கட்டும்

தற்காலிகமாகவாவது..மீன் வறுவலும்..

சோளப் பொறிகளும்..

ஐஸ்க்ரீம் கப்புகளும்..

சிறுசிறு பொம்மைகளும்

பின் மாபெரும் மணற்பரப்பும்..


மீண்டுவிட முடியுமா 

முழுதாய் அந்த நீலக் கடல்வெளிப் பரப்பில் தொலைத்த என்

ஞாபகங்களின் 

நிழற்கயிறுகளின் 

கட்டுகளிலிருந்து..?!


_ஜானி சின்னப்பன்
சனி, 26 ஜூன், 2021

*புதிரெனக்கு நீயடி*_ஜானி சின்னப்பன்

 
எட்டித் தாவிப் பல முயற்சி செய்து ஆலாய்ப் பறந்தேன்.. 

ஒருமுறையும் சிக்காமல் எட்டப் பறந்ததந்தப் புத்திமிகு  பட்டாம்பூச்சி.. 

ஒரு கணம் நின்றேன்.. 

யோசித்தேன்.. 

அடடே தொலைவில் பறந்து போயே போயிற்றெனத் தெளிந்து 

ஓர் ஓரமாக ஓய்வாக அமர்ந்தேன்.. 

தானே பறந்துவந்தென் கரந்தனில் அமர்ந்து புன்னகை வீசும் புதிரென்ன கூறேன் பட்டென பளபளக்கும் இறக்கையுடையோய்..

அழகுக் குச்சிக் கால்களால் கிச்சுக்கிச்சு மூட்டிடிடும் உணர்வினில் நெஞ்சம் நெகிழ நீ எம்பிப் பறந்தபின்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்... 

_ஜானி சின்னப்பன்

வெள்ளி, 25 ஜூன், 2021

**அக்கறை எனக்கேதடி?**_ஜானி சின்னப்பன்

 காற்றிடை வெளியாய்... 

மரத்திடைக் கனியாய்.. 

அந்திச் சூரியனின் அழகாய்.. 

மாலை நேரத்தின் இதமாய்.. இலையிடை நரம்பாய்... 

வேருக்குள் ஓடிடும் நீரோட்டமாய்..

என் இதயத்தில் என்றுமே 

ஓடும் உன் நினைவாய் 

சலசலக்கிறது என் வாழ்வின் ஓடை.. 

உன் பிரிவின் நினைவடுக்குகள் மேலெழுகையில் என் விழிநீர் 

கசியும் மெல்லிய  ஓசை 

இந்த ஆர்ப்பரிப்புகளுக்குள் 

புதைந்து போகிறது.. 

விதியின் சதிகளை.. 

மதியின் மூர்க்கங்களை.. 

என்னுள் ஆழ விதைத்துக் கொண்ட நம் நிழல் நினைவுகளை 

அமைதியின் ஆழத்துக்குள் மௌனத்தோடு அசைபோடுகிறேன்.. ஓடட்டும்...

விநாடிகள்..

நிமிடங்கள்..

நாட்கள்..

ஆண்டுகள்.. 

இவற்றின்மேல் அக்கறை எனக்கேன்?  

_ஜானி சின்னப்பன்

வியாழன், 24 ஜூன், 2021

**மாயவட்டம்**_ஜானி சின்னப்பன்

 


வானில் மிதக்கும் வெண் பஞ்சுப் பொதியென மிதக்கிக் கொண்டே

என்னைக் கடந்து போன மேகமொன்று  உன்னை நோக்கிக் கேட்கும்..

ஏய் பெண்ணே

உன்னால் இதயம் தொலைத்தவன் ஒருவன் அங்கே கண்ணிருந்தும்

 காரிருளில் தவிக்கிறான்.. 

அவனின் பகலாய் நீ அங்கே சென்று சேர்வாயா சீக்கிரம் என்று..


நீ நகைத்தாய்.. 

உன் நகைப்பின் எதிரொலிகள் 

காற்றிலேறி 

மேகம் முட்டி

என்னை வந்தடைய

காதுகுளிரக் கேட்டவன்

காத்திருப்பேன்

கண்ணீருடன்

நீ தரிசனம் தரும்

தினத்துக்காய்

தினம் தினம்...


இதுவொரு 

மாய வட்டமடிப் பெண்ணே..

திரும்பத் திரும்ப..

மீண்டும் மீண்டும்...

மறுபடி மறுபடி...

எத்தனை ஜென்மங்

கடந்தும் உன்னையே

நாடுகிறது என் உள்முகப் பயணம்..


முற்றுப்பெறா வானமாய்

தொடர்கிறதே என் பயணம்.. முடிவதுதான் எப்போதென எனக்கொரு

விடை சொல்லென்றேன்

கொல்லென சிரித்தது

நம் விதி...

_ஜானி சின்னப்பன்

செவ்வாய், 15 ஜூன், 2021

மாய வனம்_ஜானி சின்னப்பன்

 

மாயக்கிழவியின் 

மந்திர விரல்களாய் 

என்னுள் உன் நினைவுகள் 

சுருண்டு கிடந்தன..  

தேகம் முழுவதும் 

இளமை கடந்து 

இதயம் இழந்து 

நத்தைக்கூட்டின் 

சின்னஞ்சிறு இருள் அறையாய் சுருக்கிக் கொண்டேன் 

எப்போதோ எனைநான்.. 

வெகுகாலம்  முன்பே 

வலிகளால்  வறண்டுபோன காடாய் மாறிப் போனதென் நெஞ்சம்..  

இரத்த ஓட்டம் நின்று போய் தசையும் கூடக் கருவாடாகித் தேய்ந்தே போனேன் நான்..  

எதிர்பாரா ஒரு பகலில்... 

உன் முகம் ஒரு எண்ணெய் அகலில் யாரோ ஏற்றிய சிறு தீபத்தின் ஒளியில் அசைவாடுவதாய் பிரமை தட்டிற்று ஒரு வினாடி என் கானகப் பாலைவெளியில்... 

திடுமென விழித்தது என் இருப்பு.. சட்டென உயிர்த்தது என் இன்னுயிர்.. கனமாய்த் திரண்டது புது நம்பிக்கை.. உன் வரவு நிச்சயம் என்று  உறுதி செய்தது எங்கோ ஒரு குயிலின் கீதம்.. என் கானகத்தில் இப்போது உதிக்கும் சூரியன் காண்பான் எங்கும்  பச்சைப் பரப்பினை.. 

மறு உயிர்த்தெழுதல் நிகழ்ந்த அதிசயம் உன் நிழலின் பிம்பத்தால் மாத்திரமே.. 

அறிந்தவன் ஆழ்கிறேன் ஆழ்தவத்தில் மீள... _ஜானிசின்னப்பன்

**ஆவலுடன்...**_ஜானி சின்னப்பன்நீ இல்லாத 

என் சாலைகள் 

எப்போதும் வெறிச்சோடியே கிடக்கின்றன..


உன் சுவாசம் படிந்த

உற்சாகக் காற்று கிடைக்காமல்

ஒவ்வொரு மரமும் உணர்கிறது 

என் தவிப்பை..


உன் கலகலப்பான

சிரிப்போசை கேட்காத குருவிகள் தம் பாட்டுக்கு மெட்டமைக்க முடியாமல்

மௌனமாகின்றன..


ஈரப்பதம் மிக்க உன் கண்களின் தயவின்றி

இலைகளின் நீராவித் துளைகளில்

பாலைவனக் காய்ச்சல்..


நிலைமை இன்னும் மோசமாவதற்குள் ஒரு முறை இவ்வழியே கடந்து

போய் விடேன்..


உன் வரவுக்காய் ஆவலுடன்..


_ஜானி சின்னப்பன்
வியாழன், 10 ஜூன், 2021

தருகிறேன் எனை நான்!_ஜானி சின்னப்பன்

 


பறந்திட சிறகுகள் தருகிறேன்.. அறிந்ததை சொல்வாயா கிளியே?


விரிந்திட வானைத் தருகிறேன்..
தெரிந்ததை சொல்வாயா மேகமே?

சலசலக்க இலைகள் தருகிறேன்..
புரிந்ததை சொல்வாயா மரமே?

தெளிந்திட நதியைத் தருகிறேன்..
கலக்கமதைத் தெளிவியேன்
நீரே..

இறைத்திட சோழிகள் தருகிறேன்..
புதிரொன்றை விடுவிப்பாயா
கடலே?

ஆக்ஸிஜனாய் என்னையே தருகிறேன்..
எனை எரித்தே அவள் எங்கேயென தேடிச் சொல் காற்றே..

தினம்தினம் தவிப்பதைக் காட்டிலும் இன்றெனை ஈந்தவள் நிலை
அறிய அனுமதி இயற்கையே..

பூக்கள் இறைந்து கிடக்கும் அப்பாதையெங்கிலும் வண்ணத்துப் பூச்சிகளின்
படபடப்புக்கள்...

ஆளரவமற்ற அமைதியின் கணங்களில் மின்மினிப் பூச்சிகளின் ஒளி நடனங்கள்..

கிளம்புகிறேன் அதோ தெரியும் திசையில்லாப் பேராழியில் வழியில்லாப் பெரும்
பாதைதனில் அவள் தடம் தேடுமொரு யுத்த கணம் பூத்திருக்கிறது..

இப்பயணத்தில் என் சுயம் இழக்கவும் நான் தயார்தான்.. முழுச் சம்மதம்..
நீ தயாரா இறையே?!
எப்பாடுபட்டேனும் மீட்டுக் கொள்கிறேன் அவள் நினைவையே..

_ஜானி சின்னப்பன்


திங்கள், 7 ஜூன், 2021

நிம்மதிப் பொழுதுகள்..ஜானி சின்னப்பன்

 

தத்தித் தாவிப் போகுமந்த தவளையை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.. 

தொலைவில் அதோ கேட்குது 

ஒரு இரயிலின் சிக்குபுக்கு சிக்குபுக்கு..

மேலே வானில் வெள்ளைக் கொக்குகளின் கூரானதொரு அணிவகுப்பு... 

படபடக்கும் சின்னஞ்சிறு இறக்கையோடொரு வண்ணத்துப்பூச்சி என்னைத் தாண்டிப் பறக்கிறது.. 

காற்றிலெங்கும் பூக்களின் வாசம்.. பெரியவனானாலும் மறந்து போய் விடக்கூடாதென் இளமைப் பருவத்தின் இனிய நினைவுகளை... 

_ஜானி சின்னப்பன்

புதன், 26 மே, 2021

புயலின் புன்னகை..!_ஜானி சின்னப்பன்


 
ஹேய்...
என் தெளிவற்ற வானிலையின் காரணி நீ...

மேகமாய் என்னைக் கடந்து போகிறாய்.. மலைபோல் சிலையெனத் தயங்கி நிற்கிறேன் நான்.. 

நீ போனதும் என்னைச் சுற்றிச் சுழலும் சூழ்ந்திடும் வெறுமையிடம் சொல்லிக் கொள்வேன் நீ நாளையும் வருவாய் அப்போது சொல்லிவிடுவேன் என் காதலையென..

ப்சு.. போனமுறை நீ அடுக்கிய  அதே பதிலா.. 
என்று சலித்து கொண்டது  என் தனிமையின் சூன்யவெளி....

மீண்டும் அவளைக் கண்டதும் உறைந்து போனாயா?!?
அடுத்த வருடமும் வருவேன் நான் அதற்குள்ளாவது  சொல்லித் தொலையேன் உன் காதலை என்று கேலி செய்து வீசிப் போனது புயல்...

இதயத்தின் ஏக்கம் வாட்டியெடுக்கும் 
வேதனையை மறைத்துக் கொண்டே புன்னகை முகமூடியால் போர்த்திக் கொள்கிறேன் மறுபடியும் என்னை நான்..
_ஜானி சின்னப்பன்

#jscjohnyphotos #jscjohnyvisuals #ஒளிப்பதிவதிகாரம் #ஜானி #jscjohny
#கவிதையதிகாரம்

செவ்வாய், 25 மே, 2021

*அதோ என் விடியல்*_ஜானி சின்னப்பன்

 -----
நித்தம் நித்தம்
உந்தன் முகம் தேடி
புத்தம் புது காலைதோறும் காத்திருப்பேன்..
குடம் ஏந்தி நீர் சிதற 

நடனமாடும் அழகோடு 

வளையோசை குலுங்கல்கள் கொலுசின் ஓசையோடு 

உன் வரவை தெருக்கோடிவரை 

பறை சாற்றிடும் அதிகாலை வேளைகளில்..
ஆனந்தப் பறவைகளின் இன்னிசை உன் வரவுக்குக் கட்டியம் கூற.. என்னைத் தாண்டிப் போகும் 

உன் நீள நிழலின் 

ஒரு ஓரம் என் மீது பட்டாலே 

என் ஜென்மம் அடைந்திடுமே மோட்சமெனக் காத்திருப்பேன்..
பொழுதும் புலர்ந்தது 

காலையும் வந்தது..
அதோ நீ..
இதோ நான்..
மேகப்பொதியொன்று
மிதந்து செல்வதாய்
கற்பனையில் மனம்
திளைக்க
உன் ஓரப்பார்வையின்
வீச்சு என்னைக் கிறங்கடிக்க..
போதுமடா சாமி...
பூலோகத்தின்
அதிர்ஷ்டசாலி
நானாகிப்போனேன்..

நாளையா...
இன்றே இருதயத்தில்
பல யுகங்கள்
தாங்குமையா...

_ஜானி சின்னப்பன்
Pic credit: Appu Siva

ஆனைமலை

அநீதி அகற்றிடு! _கற்பனைக் கதை_ஸ்பைடர்+சுஸ்கி விஸ்கி சந்தித்தால்.._ஜானி சின்னப்பன்

 ஸ்பைடர்.. ஸ்பைடர்.. பதட்டத்தோடு ஓடி வந்தார் பெல்ஹாம்.. சிலந்திவலைப்படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்தான் அந்த வீர வேங்கை ஸ்பைடர். என்ன பெல்ஹ...