வியாழன், 13 பிப்ரவரி, 2025

ஒற்றைக் கண் மர்மம்..வண்ணத்தில்.. அறிவிப்பு

 ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க மகிழ்ச்சியானதொரு தகவல் இது முழு வண்ணத்தில் கிடைக்கப் போகிறது என்பதுதான். இந்த கதையானது முத்து காமிக்ஸ் வாரமலரில் தொடராக வெளியிடப்பட்டு மிகவும் சிறந்த கதையாக நிலைத்து நிற்கும் ஒரு கதையாகும்.. பதிப்பாசிரியர் திரு.முல்லை தங்கராசனை முன்னிறுத்திப் பயணித்த முத்து காமிக்ஸ் வாரமலரில் இதுவரையிலும் இருபத்திரண்டு மலர்கள் பூத்துக் குலுங்கி சித்திரக்கதை உலகினை சுவாரசியப்படுத்தியிருக்கின்றன.. இன்று ஓர் அபூர்வ இதழ் என்று பதுங்கிக் கொண்டு விட்டாலும் அவற்றில் வெளியான ஆகச்சிறந்த சித்திரக்கதைத் தொடர்களை முழுமையான ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது பாராட்டுக்குரிய ஒன்று.. 

*14.11.1982 அன்று வெளியிடப்பட்ட முதல் முத்து காமிக்ஸ் வாரமலரில் இடம்பெற்று அதுவும் முகப்புப் பக்கமாக அமைக்கப்பட்டது இந்த கதையின் சிறப்பம்சம்.. முத்து காமிக்ஸ் வாரமலர் தொடர்ந்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று பின்னர் நிறுத்தப்பட்டது.. 

*அறுபது காசுகளில் வெளியிடப்பட்ட பத்திரிகை டேப்லாய்ட் வடிவில் தினசரியை இரண்டாக மடித்தால் எத்தனை பெரியதாக இருக்குமோ அத்தனை பெரியதாக பெரிய சைஸ் பக்கங்களில் வண்ணங்கள் அன்றே மிரள வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. 

*21 வாரங்கள் இந்த தொடர் தொடர்ச்சியாக ஓரிரு பக்கங்கள் என்று  வெளியிடப்பட்டது. முகப்பாக வரும் பக்கம் வண்ணத்திலும் மற்ற பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் என்று அமைக்கப்பட்டிருந்தன.



*05.02.1984 அன்றுடன் தனது பயணத்தை இந்த கதை நிறைவு செய்தது.. 

*கடைசியாக வெளியானபோது அந்த முத்து காமிக்ஸ் வாரமலரின் விலை எண்பது காசுகள். 

 *அதன் அடுத்த இதழுடன் இருபத்தி இரண்டு என்கிற எண்ணிக்கையுடன் இந்த வாரமலர் தன் பயணத்தை நிறைவு செய்தது. 

*கடைசி இதழ் வெளியிடப்பட்டபோது அதில் துவங்கிய புதிய கதை என்ன தெரியுமா? 

*மாயாவிக்கோர் மாயாவி.. 

*19.02.1984 அன்றுடன் இந்த மாபெரும் பயணம் நிறைவானது. 

*அப்படியே தொக்கலில் விடப்பட்ட கதைகள் பட்டியலும் மிகவும் முக்கியம் என்று கருதுபவர்களுக்காக இதோ.. 

*வன ராஜா_(ராணி காமிக்ஸின் மன்னர் பீமா சாகசம்.) ஐந்தாவது பாகம்.. 

*நெக்லஸ் கடத்தல்_இன்ஸ்பெக்டர் ஈகிள் சாகசத்தின் மூன்றாவது பாகம். 

*தங்கமயில் தேவதை என்னும் நாவல் வடிவின் 14வது பாகம்.

*மாவீரன் ப்ரூஸ்லீ_சதி வலையில் ப்ரூஸ் லீ.._12வது பாகம்.(ராணி காமிக்ஸின் திசை மாறிய கப்பல்) 

நிறைவான கதைகள் என்றால் கபீஷ் மற்றும் சிறு கதைகள் ஓரிரண்டைக் குறிப்பிடலாம்.. 

ஒற்றைக் கண் மர்மம் கதை: 
ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் ஒரு கலங்கரை விளக்கம்.. அருகில் ஒரு வெளிச்சம் அடர் இருளைக் கிழித்துக் கொண்டு வானில் இருந்து கீழே இறங்கி வருகிறது.. சைக்கிள் ஓட்டும் இருவர் ஏதோ சலசலப்பு கேட்கவே கலங்கரை விளக்கத்தின் கதவினை திறந்து தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

                   அதே கடற்கரையோர பகுதிக்கு மூன்று மாத விடுப்பில் அனுப்பப்படுகிறார் நம் நண்பர் லூயிஸ் கிராண்டேல் (எ) இரும்புக்கை மாயாவி. நிழற்படையே ஒன்று கூடி அவரை அந்தப் பகுதிக்கு விடுப்பில் சென்று தங்க சாவி வரை ஏற்பாடு செய்கிறது..  அப்போதே மனிதர் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா என்ன? 

இதுபோன்ற பலப்பல சிக்கல்களைக் கடந்து ஒற்றைக் கண் ஜந்துக்களுடன் மோதும் மாயாவிக்கு இறுதி வெற்றி கிட்டியதா? இந்த கேள்விக்கு விரைவில் வண்ணத்தில் பதிலளிக்கவிருக்கிறது லயன் காமிக்ஸ்.. முழுமையான கதையை வண்ண சேர்க்கைகளுடன் வாசிக்க ஆயத்தமாவோம்.. 
அதுவரை நாமும் அப்படியே இரசிகர்களாக கதைத்துக் கொண்டே கடப்போம்.. டெக்ஸ் வில்லரின் கதையான தலைநகரில் தலைமகன் ஒருபுறம் காமிக்ஸ் என்னும் கனவுலகம் வாட்ஸ் அப் குழுவில் விமர்சிக்கப்பட்டு சிறந்த பரிசினை எட்டிப் பிடித்திருக்கிறது ஓர் அட்டகாசமான விமர்சனம்.. அது இதோ.. 

கனவுலகம் விமர்சனப் போட்டி:
தலை நகரில் தலைமகன்
பிப்ரவரி ~2025

இரும்புக் குதிரையொன்று தன்னுடைய வழித்தடத்திலே சாவகாசமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது.. ஜாலியாய் விசிலடித்தபடியே..
கரும் புகையைத் துப்பிக் கொண்டே..

சற்று தூரத்தில் தெரிய வரும் நீண்ட குகைப் பாதையின் பயணத் தூரம் முடியும் முன்னமே, அந்த புகை வண்டியினுள் நடக்கவிருக்கும் அந்த அசம்பாவிதத்தை உணர்ந்திருந்தால் அந்த விசில் சத்தமும் வாய் மூடி மௌனித்திருக்குமோ என்னவோ..?!

இதோ அந்த குகைப் பாதை..
நீண்ட நெடிய கரும் பாதை..
அமர்ந்திருக்கும் ஸ்டாப்பர்ட் என்பவனை நோக்கி ஒரு நெடிந்த உருவம் ஒன்று முன்னேறுகிறது..
சரியாக நெஞ்சுக் கூட்டை குறி வைத்து கத்தி ஒன்று வலுவாக இறக்கப்படுகிறது..
சின்னதாய் ஒரு அலறல்.. இல்லை முனகல்..
அதுவும் கூட குகைப் பாதை எதிரொலி சத்தத்தில் அடங்கிப் போகிறது..
ஸ்டாப்பர்ட்டின் கைப் பை பிடுங்கப்படுகிறது..
வந்த வழியே நெடிந்த உருவம் நழுவுகிறது..

ஒரு மாபெரும் அமெரிக்க அரசியல் சதுரங்க ஆட்டத்தின் முதல் காய் அங்கே நகர்த்தப்படுகிறது..

குகைப் பாதையின் முடிவு நெருங்க, நெருங்க ஒரு அதிரடிக் கதையின் மிரட்டல் களம் அங்கே அரங்கேறத் துவங்குகிறது..

வெளிச்சம் பரவிய புகை வண்டியின் மர்மக் கொலை நடந்த பெட்டியில் அலறல் சத்தங்கள் ஆட்டம் போடுகின்றன..

பக்கத்து பெட்டியில் இருக்கும் இரவுக் கழுகாருக்கும், வெள்ளி முடியாருக்கும் அலறல் சத்தங்கள் சுக்கா வறுவல்களை வாயில் ஊட்டி விட..
பதறிச், சிதறி ஸ்டாப்பர்ட்டை நெருங்குகிறார்கள்..
அவனோ ஏதோ ஒரு முக்கியச் செய்தியை தலயின் செவிகளில் கிசுகிசுத்து விட்டு செத்துப் போகிறான்..
அந்தக் கிசு கிசுப்பை கொலையாளியும் கண்டு கொள்கிறான்..

நவஹோக்களுக்காக லாரமியில் கால்நடைகள் வாங்குவதற்காக வந்த டெக்ஸ் & கார்சனின் பயணம் சட்டென்று திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பயணமாகிறது..

அதி முக்கியமான பணி..
அமெரிக்க ஏகாதிபத்திய அரசியல் களத்தையே ஆட்டம் காண வைக்கும் விவகாரம் அது..

வடக்கு, தெற்கு யுத்தங்களின் உண்மை முகத்தை கிழித்தெறிய வைக்கும் ஆவணத்தை தாங்கிக் கொண்டு பயணிக்கும் டெக்ஸ் மற்றும் கார்சனின் தொடரும் பயணத்தில் தான் எத்தனை இடையூறுகள்..

துப்பாக்கிக் கட்டையால் பின் மண்டை வீக்கப் படையல்கள்..

பழுக்கக் காய்ச்சிய பிச்சுவா தலயின் மார்புகளில் கோலம் போட..

கைக் கட்டுகளை அவிழ்த்தெறிய எரியும் நெருப்பிலே கைகளைச் செருகி கட்டுகளை களைய..
கார்சனின் கைகள் நெருப்பிலே பொசுங்கிப் போக..

அச்சச்சோ.. ☹️☹️☹️

எத்தனை, எத்தனை இன்னல்கள்..
எத்தனை, எத்தனை பிரச்சினைகள்..
எத்தனை, எத்தனை இடையூறுகள்..

இத்தனைகளையும் தாண்டி வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் ஒரு செமத்தியான கோச் வண்டி சேசிங்கில் அதிரடியாய் பிரவேசிக்கிறார்கள்..
ஜனாதிபதியைச் சந்திக்கும் முன் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள்..

இந்தக் களேபரத்தால் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதி வெளியே எட்டிப் பார்க்கிறார்..

டெக்சும், கார்சனும் போலீசாரால் புடை சூழ நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்..
கண்கள் இடுங்க அவர்களைப் பார்க்கிறார் ஜனாதிபதி..

அடுத்தது என்ன..??!!

அட்டகாசமான சித்திர ஜால வித்தைகளோடு தூரிகைத் துகில் உரித்து பேரிகை முழங்கியிருக்கிறார் ஓவியர்.. 🔥🔥🔥🔥

கதைக்களமுமே அசாத்திய வேகத்தோடு பயணிக்கிறது..

குகைப் பாதை மத்தியில் நிழலுருவ ஓவியங்கள் அதகளம் செய்கின்றன..

வழக்கம் போலவே, தலயின் சீண்டல்களும், கார்சனின் புலம்பல்களும் ரகளை மேளாக்கள்.. 😄😄😄

முகப்பு அட்டை மரண மாஸ் காட்டுகிறது..
அள்ளித் தின்னத் தோன்றுகிறது..
அழகோ, அழகு அள்ளுகிறது..
அதுவும் அந்த தலைப்பின் எழுத்துரு வடிவம் அல்டிமேட்.. 🔥🔥🔥
வாசக நண்பருக்கு வாழ்த்துகள்..!!
👌🏻
பின்னட்டையில்..
நிலவொளியில் வெள்ளை மாளிகை பளீரிட, முன்னிலையில் துப்பாக்கியோடு தலயின் ஸ்டைலான போஸ் மிரட்டுகிறது.. 🔥🔥🔥

224 பக்கங்களும் காட்டுத் தீயாய் பற்றி எரிகின்றன.. 🔥🔥🔥

தல ராக்ஸ்!!
நம்ம குணா கரூர் அவர்களது விமர்சனம் கலக்கலாக இருக்கிறது அல்லவா. அவருக்கு நம் வாழ்த்துக்கள்.. 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 





7 கருத்துகள்:

  1. ஸ்ரீபாபு, நாமக்கல்13 பிப்ரவரி, 2025 அன்று 11:07 PM

    அருமை.. 👍அட்டகாசம் ஜி 🙏💐😄😘

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வரவுக்கும் விமர்சனத்துக்கும் நன்றி ஜி.

      நீக்கு
  2. Super sir. Actually all the varamalar issues I had as a binding. But I lost them some years ago.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.. அருமையானதொரு தொகுப்பாக இருக்கும் அல்லவா..

      நீக்கு

சிந்தனைக்கு: ஆவணப்படுத்தலின் அவசியங்கள்

 வணக்கம் வாசகப் பெருமக்களே... யாரேனும் பொன்னி மாதிரி முன்னர் இயங்கி வந்து தற்சமயம் நடப்பில் இல்லாத பதிப்பகங்களில் வெளியான காமிக்ஸ்கள் என்னிட...