செவ்வாய், 1 ஏப்ரல், 2025

விமர்சனப் போட்டியும் கனவுலகமும்..

 

ஒரு ஹேப்பி நியூஸ்.. காமிக்ஸ் எனும் கனவுலகப் போட்டியில்
2014ல் வெளியான இரவே இருளே கொல்லாதே சித்திரக்கதையிலிருந்து விமர்சனப் போட்டி வைத்தனர். அதில்  பரிசைத் தட்டிட்டாரு நம்ம தோழர் @⁨Sures Thanapal⁩ கூடவே நானும்..ஹிஹி விமர்சிச்ச அத்தனை பேரையுமே பரிசால் மகிழ்விச்சிருக்காங்க.. 

அவர்கள்

@⁨Gunasekaran Muthuswamy⁩ 

@⁨discoverboo_Boopathi Rasipiram Nagpur⁩ 

@⁨~Baranitharan⁩ 

@⁨Sures Thanapal⁩ 

@⁨Cm Siva Ingam Cni 😇⁩ 

@⁨~Thottam Siva⁩ 

@⁨🤩Chris Ruban🥳⁩ 

@⁨சின்னமனூர் பி சரவணன்⁩ 

@⁨~Madhusoodhanan RK⁩

காமிக்ஸ் எனும் கனவுலக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சக வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் காமிக்ஸ் வாசக வட்டம் சார்பாக  நன்றிகள். 

அடுத்து நான் எழுதிய 

 இரவே இருளே கொல்லாதே விமர்சனத்திலிருந்து 

காமிக்ஸ் என்னும் கனவு உலகம் விமர்சனப்போட்டி 

தலைப்பு இரவே.. இருளே.. கொல்லாதே!

நடிகை ஒருத்தி தன்னுடைய எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டிப் பயணப்படுகிறாள். அப்போது கார் ஒரு விபத்தில் சிக்கி விட ஒரு குக்கிராமத்தில் சிகிச்சைக்காக தங்க நேரிடுகிறது. அவளை துரத்தும் இறந்த கால நினைவுகளில் அங்கிள் செஸ்டர் காமுகனாக துரத்திவர நிகழ்கால நடப்பில் சைக்கோ கொலையாளி ஒருவன் அவளை சுற்றிச்சுற்றி வலைப்பின்னலாக கொலைகளை நிகழ்த்தி வலைக்குள் சிக்க வைக்க முயற்சிக்கிறான். அவ்வப்போது கற்பனை கலந்த கனாக்களின் தாக்கமும் அவளை வாட்டியெடுக்கிறது. இந்த சைக்காலஜிக்கல் திரில்லருக்குள் கதைக்குள் கதையாக ஏகப்பட்ட கதைமாந்தர்கள் நிறைந்திருக்க நாம் காமிக்ஸ்தான் வாசிக்கிறோமா இல்லை இந்த அப்பாவிப் பெண்ணைத் துரத்திடும் பூச்சாண்டியின் கொடூரமான பல பாகத் திரைப்படத்துக்குள் ஒரு பாத்திரமாகி விடுகிறோமா என்ற சந்தேகமே எழுகிறது. வழக்கமான சைக்கோ த்ரில்லர்களின் கொலையாளிகள் பின்புலமாக கொலையாளியை  நியாயப்படுத்தும் ஒரு கதைப்பின்புலம் இருக்கும். இங்கே நட்பு வட்டம் ஒன்றும் அதன் தைரியத்தை சோதிக்கும் ஒரு ஹேங்மேன் வீடும் பல திகில் சம்பவங்களும் நம்மை ப்ரேம் பை ப்ரேம் திகைப்புக்குள்ளும் குழப்பத்திலும் சிக்கலுக்குள்ளும் கதையை விட்டு நகராவண்ணம் இறுக்கிக் கட்டிப் போட்டு விடுகின்றன.. ஜோயெல் காலெடேவின் கதையமைப்பும் ஓவியர் டெனிஸின் கொடூரப் பூசணிக்காய் இளிப்போவியங்களும் ஹ்யூபெர்ட்டின் இருளும் ஆழமுமான வண்ணங்களும் லயன் காமிக்ஸ் கதைத் தேர்வும் தீபாவளி மலராக வெளியிடப்பட்ட இம் மூன்று பாகக் கதையும் ஹாலோவீன் தினத்திலேயே வெளியிடப்பட்டு நம்மை ஹாரர் கதைக்களத்துக்குள் தள்ளிய விதமும் நிச்சயமாக சிறப்பானவை.. குறியீடாக பூசணிக்காய்களும்  புனுகுப்பூனை ஒன்றும் கதை நெடுக ஹாலோவீன் தொடர்புடைய காட்சிகளும் ஆங்காங்கே சரியான இடத்தில் வந்து ஒரு புரட்டுப்புரட்டி விட்டுப் போகிறது. ஆக மொத்தம் த்ரில் விரும்பும் பலமான இதயங்களுக்கும் கதையில் வரும் திரைப்பட ஓனரினைப் போல தைரியமாக பேய்ப்படங்களை ஒற்றை ஆளாக தியேட்டரிலேயே அமர்ந்து பார்க்கும் தில்லான வாசகர்களுக்கும் செமத்தியான ட்ரீட் இந்த இரவே..இருளே..கொல்லாதே..

நன்றிகள் அகெய்ன்.

நியாயம்தானே?!?

 ஒரு மனுஷன் உயிரோடு இருக்கும் போது, நமது ஊடகங்களை பெரும் உறக்கம் ஆட்கொண்டு விடுகிறது! 


50 ஆண்டுகளைத் தொட்டு நின்ற 2022-ல்.... அல்லது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்ற 2023-ல் இவர்களது சிந்தைகளில் முத்து காமிக்சின் ஸ்தபாகர் / சீனியர் எடிட்டர் தோன்றிடாது போனது ஏனோ - படைத்தவருக்கே வெளிச்சம்!


 *கபிஷ்* மீள்வருகையினை கேரள ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்தன - அது மிதமான 2 கலர் இதழாக இருந்த போதிலும்....


 *டின்டின்* ஹிந்தியில் வெளியான சமயம் தேசிய ஊடகங்களே திருவிழாவாக்கினர் அந்தப் பொழுதினை!!


இங்கே - ஆசிய கண்டத்திலேயே முதன்முறையாய் ஒரு நூறு இதழ்களை நாம் வெளியிட்டாலும் - 'அப்டி ஓரமா போயி வெளாடு தம்பி ' தான்!


And இன்றைக்கு மாண்டு போனவரை மாய்ஞ்சு... மாஞ்சு ஒளிவட்டத்துக்குக் கொண்டு வர போட்டி அரங்கேறுகிறது! தபால்தலை போடுறதா? புக்கு எழுதுறதா? என்ற பட்டிமன்றங்கள் நடந்து வருகின்றன!


இருக்கும் போது இதனில் ஒரு கால் பங்கு வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம்  கிட்டி இருந்தாலும் பூரித்துப் போயிருப்பாரே...!_ஆசிரியர் திரு.விஜயன் அவர்களது நியாயமான ஆதங்கம்..


சனி, 29 மார்ச், 2025

ஆசிரியர் திரு.எம்.சௌந்தரபாண்டியன் _அஞ்சலி

சிற்றிலக்கிய வகையான சித்திரக்கதைகள் வெகுஜனப் பார்வைக்கு வருவதும் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்பதும் பெரிய சவாலான நாட்கள் அவை. இந்திரஜால், அம்புலி மாமா போன்ற பெரும் பத்திரிக்கைகளுக்கு இணையாக தமிழில் களமிறக்கி சிவகாசி மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த முத்து காமிக்ஸின் புகழுக்கு காரணமான பெரியவர் திரு.சௌந்தரராஜன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவருக்காக இறைவனை வேண்டுவோம். 


திரு.ஜெயமோகன் தனது கட்டுரையில்

 முத்து காமிக்ஸ் நூல்களை நான் என் எட்டாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன்இன்றும்கூட மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அந்நூல்களை வாங்கிவிடுகிறேன்மூளை சூடாகாமல்இயல்பாக வாசிக்கத்தக்கவைவணிக எழுத்தின் சில்லறைப் பாவனைகளும் அற்றவைநம்மை சிறுவனாக உணரச்செய்பவைகுறிப்பாக நான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன்என் நண்பர் கடலூர் சீனுஜா.ராஜகோபாலன் எல்லாருமே முத்து காமிக்ஸ் ரசிகர்கள்தான்.

ஐரோப்பிய ,அமெரிக்க காமிக்ஸ்களின் ஓவியச்சட்டகங்கள் மிகத்தேர்ச்சி கொண்டவைசினிமா எனக்குச் சலிப்பூட்டுகிறதுஅதில் நான் கற்பனை செய்ய ஏதுமில்லைஆனால் காமிக்ஸ் ஒரே சமயம் காட்சியனுபவமாகவும்என் கற்பனையைத் தூண்டும் வாசிப்பனுபவமாகவும் உள்ளதுஆகவேதான் இந்த மோகம்.

முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் மறைந்தார்அவருக்கு அஞ்சலி.

என தெரிவித்துள்ளார். சித்திரக்கதை வாசகர்களை துயரத்தில் ஆழ்த்தி மறைந்த ஐயா திரு.சௌந்தரபாண்டியன் தன் இறுதி மூச்சுவரை சித்திரக்கதைகளையே சுவாசித்தவர். மிக சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் குழு அவருக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதில் சித்திரக்கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்து தெரிவித்துக் கொண்டே இருப்பார். அந்த தீபத்தை தொடர்ந்து ஏந்திப் பயணிக்க வாசகர்களும் லயன் குடும்பத்தாரும் சித்திரக்கதை நேயர்களும் தயாராகவே இருப்பார்கள். அவரது கனவு என்றுமே இளமையாக இனிமையாக அன்னாரது நினைவுகளுடன் தொடரும்.. 

ஞாயிறு, 23 மார்ச், 2025

LC 465 இளமை எனும் பூங்காற்று_Tex Willer-Jan-2025

வணக்கம் தோழமை உள்ளங்களே.. நமது காமிக்ஸ் என்னும் கனவுலகம்

விமர்சனப் போட்டிக்காக விமர்சித்தது தங்களுக்கும் வாசிக்க எளிதாக இங்கே பகிர்கிறேன். 

நூல்: இளமையெனும் பூங்காற்று

 வணக்கம்..

ஜனவரி 2025ல் வெளியாகியிருக்கும் இந்த சித்திரக்கதை லயன் கிராபிக் நாவல் வரிசை வெளியீடாகும். வெளியீட்டு எண் 461. விலை ரூ.125/-

 


வன்மேற்கை மையமாகக் கொண்ட இக்கதையில் இரண்டு கோச் வண்டிகள் தொடர்ச்சியாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொள்ளையரில் ஒரு சிறுவனும் இருக்கிறான். கொள்ளைப்பணத்தை சேகரிப்பவனும் அவனே. பாதிப்புக்குள்ளாவோருக்கு சிறிது பணமும் திருப்பித் தருகிறான் என்பதை டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் பைனல் கவுண்டி ஷெரீப் மூலமாகக் கேள்விப்படுகிறார்கள். இது புதிதாக இருக்கிறதே என்று யோசித்து இதில் ஈடுபடுபவர்களை பிடிக்கப் போயிருக்கும் கும்பலைத் தொடர்கிறார்கள்.. கட் பண்ணா..


 நம்ம ஹீரோயின் பெர்ல் ஹார்ட் தன்னுடைய இளமைப் பருவத்தில் கனடாவின் ஒன்டாரியோ ஏகாந்தமாக அமர்ந்திருக்கையில் காவலர்களுக்குத் தப்பியோடி வரும் ஒருவன் நட்பும் பின்பு அவன் மேல் காதலும் பிறக்கிறது. அவன் சடுதியில் இறந்து போனதால் விளைந்த பச்சாதாபம் இப்படி உருமாற்றம் பெற்று விட்டதா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. அவனது துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொள்கிறாள். பப்பல்லோ பில் நடத்தி வரும் வைல்ட் வெஸ்ட் ஷோவில் தானும் இணைய முயற்சிக்கிறாள். வரலாற்றில் முக்கியமானதொரு பாத்திரமான சாக மங்கை ஆனி ஓக்லே அங்கே ஏற்கனவே பணியில் இருப்பதால் இவளுக்கு வேலை கிடைக்காமல் போகிறது.


அவள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை ஓட்ட பசியைப் போக்க க்ளப்பில் இணைந்து பணியாற்றி அங்கேயிருந்து ஜோபூட் என்பவனுடைய நட்பும் கிடைத்து தன்னை வேசியென்று ஒதுக்காமல் இளவரசியென்று அழைக்கும் இரண்டாவது நபர் ஜோ பூட் என்பதால் அவனின் அருகாமையிலேயே இருக்க ஆசைப்பட்டு ஒரு கட்டத்தில்  அவன் இன்னுயிரைக் காக்க முயற்சிக்கிறாள். அப்படியே அவனுடன் தோழமை பூண்டு அவன் ரூட்டிலேயே கொள்ளைக்காரியாகி இருக்கிறாள். கட் செய்தால் டெக்ஸ் அண்ட் கிட் கார்சனுக்கு முன்பே கொள்ளையரின் உறைவிடத்தை செவ்விந்திய வழிகாட்டியின் உதவியோடு காற்றில் வீசும் புகையின் வாசத்தை மோப்பம் பிடித்தே சுற்றி வளைத்து விடுகிறது அவர்களைத் தேடிப் போன கும்பல்..

பெரும் முதலாளிகள் கொள்ளையருக்குப் பயந்து அமைத்த அந்த தனிப்படைக்குத் தலைமையேற்று நடத்துபவன் ஈவிரக்கமே துளியும் அற்ற ஹோஸ். அவன் பேர்ல் பெண் என்பது தெரிந்ததும் கிள்ளுக்கீரையாக எண்ணி அசிங்கப்படுத்த முயற்சிக்கும்போது திரௌபதியைக் காக்க கண்ணன் அருட்கரம் நீட்டினாற்போன்று வந்து சேர்கிறார்கள் டெக்ஸ் அண்ட் கார்சன். அவர்களிடம் ஹோஸ் சிறைப்பட்டுப் போக அனைவரும் ஊர் திரும்புகிறார்கள். வழக்கு நடக்கிறது. பெர்ல் தனது வழக்கை தானே வாதாடுவதாக தெரிவித்து நீதிபதி அனுமதியுடன் தன் தாய் நோய்வாய்ப்பட்டு இருப்பதால்தான் கொள்ளைக்காரியாகிப் போனேன் என்கிறாள். பத்திரிகைகள் இப்படி ஒரு பெண் கொள்ளைக்காரி வன்மேற்கில் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாள் என்றால் சும்மா விடுவார்களா? சரித்திரத்தின் ஒரே பெண் கொள்ளைக்காரியாக பதிவு செய்யப்பட்ட உண்மை நபரான பெர்ல் ஹார்ட்டினை சுற்றி வளைத்துப் பேட்டி எடுக்கிறார்கள்.. நீதிமன்றம் அவளை குற்றமற்றவள் என்று விடுவித்தாலும் நீதிபதி அவளது கையொப்பத்தை ஒப்பிட்டு தன் தாய் எழுதியதாகக் காண்பித்த கடிதம் போலி என்று நிரூபிக்கிறார். ஆகவே சிறைக்கூடத்தில் ஐந்து ஆண்டுகள் அவளும் முப்பது ஆண்டுகள் ஜோ பூட் டும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. சிறையின் டைரக்டர் அவளை வைத்தே தன் சிறைச்சாலையை பிரபலமாக்குகிறார். அவளுக்கு வாசிக்க, எழுத  என்று ஏகப்பட்ட சலுகைகள்.  அவளைப் பற்றி ஏகப்பட்ட பத்திரிகைகள் எழுதித் தீர்க்கின்றனர்.  ஒரு கட்டத்தில் டைரக்டரை தன் கவர்ச்சியால் வீழ்த்தி விட்டு  தன் காதலனுடன் தப்பி மெக்சிகோ பறந்து விடுகிறாள். அங்கோ ஜோ தலைமறைவாகி விட மறுபடியும் அவல நிலைக்குள்ளாகிறாள். 


முன்பு டெக்ஸ் வில்லர் அவளை ஹோஸ் என்பானிடம் இருந்து விடுவித்தார் இல்லையா. அவன் பழிவாங்க துரத்துகிறான். ஜோ பூட்டை மடக்கி அவள் இருப்பிடம் அறிந்து அவன் வரும் முன்னர் டெக்ஸ் அண்ட் கார்சன் சென்று காத்திருந்து அவளைக் காப்பாற்றி அவளுக்கு விடுதலை கிடைத்து விட்ட தகவலைக் கூறுகிறார்கள். அவள் தன் நீண்ட கால கனவான பப்பல்லோ பில் நாடகக் குழுவில் இணைய விரும்புவதை தெரிந்து கொண்டு அங்கே இணைத்து விடுகிறார்கள். அங்கே நகைச்சுவை நாடகங்கள் இயற்றி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறாள். இனிய முடிவு. 

        உண்மைக் கதைகளை டெக்ஸ் வில்லர் என்னும் இனிப்பைத் தடவிக் கொடுத்தால் வாசகரிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்பது இந்தக் கதையில் இன்னும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது. இதோ இன்னொரு நிஜமான பாத்திரத்துடன் நம் பயணம் தென்றலாக வருடிப் போகிறது இளமை எனும் பூங்காற்றாய்!

எடிட்டர் பக்கம்.. 

சென்னை புத்தக திருவிழாவும் களை கட்ட இந்த புதிய புத்தகங்களை லயன் கொண்டு வந்துள்ளனர். 
சுவாரசியம் மிகுந்த வாசகர் பக்கம்.. 
அடுத்து பிப்ரவரி வெளியீடுகளின் விளம்பரங்கள்..
ஆர்வத்தை எகிற வைக்கும் பின் அட்டை.. 
ஆக ஒரு சிறப்பான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கக் கூடிய இந்த புத்தகம் பெரியவர்களுக்கானது. சிறுவர்கள் தவிர்க்கலாம். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 

சனி, 22 மார்ச், 2025

041_மரண தேவதைகள்_நிக் ரைடர் சாகசம்_Vagam Comics

 வணக்கங்கள் வாசக வாசகியரே.. 



                 மார்ச்சினை சிறப்பிக்க வகம் கொண்டு வந்துள்ள மரண தேவதைகள்.. நியூயார்க் நகரம் ஒரு பரபரப்பில் இருக்கிறது. எங்கோ ஒரு மெடிக்கலில் திருட்டு நடந்துள்ளது. அதில் ஈடுபட்டவர்களைப் பற்றி விசாரித்ததில் ஏற்கனவே ஒரு சில கொள்ளைகளில் ஈடுபட்ட பெண்கள் கும்பலை ஒத்திருக்கிறது. விசாரணை தொடர மன்ஹாட்டனின் வணிக வங்கி ஒன்று அதே கும்பலால் கொள்ளையடிக்கப்படுகிறது. நிக் ரைடர் டீம் களமாடி இதில் சம்மந்தப்பட்டிருப்பது யார்? எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்? ஏன் இந்த குழுவில் பெண்களே இத்தனை ஈவிரக்கமில்லாமல் கொல்லும் தேவதைகளாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் பாணியில் துப்பறிந்து தெளிவாக அறிந்து கொள்கிறார்கள். தங்கள் கடமைக்கு எல்லைகள் ஒரு தடை என்றாலும் அதையும் மீறிக் கொண்டு தங்கள் உயிரைப் பணயம் வைத்தாலும் அது தங்களுக்குப் புகழ் சேர்க்காது என்று நன்கு அறிந்திருந்தும் காலத்தின் அருமையையும் வாய்ப்பினைத் தவற விடாமல் அதிரடியாகத் தாக்கி மரண தேவதைகள் வேர் வரை அறுத் தெறிகிறார்கள்   நிக் ரைடர் குழு. இந்த பெரும் கொள்ளை மற்றும் கொலைகள் கொஞ்சமும் தயக்கமின்றி நடைபெற்றாலும் நிகழ்த்தும் பெண்களுக்கு கிடுக்கிப் பிடியாக பல சிக்கல்கள். அதனை வைத்து அவர்களை அச்சுறுத்தி தன் எண்ணம் போல் திசை திருப்பி லாபம் ஈட்டுகிறாள் கொடிய பெண் ஒருத்தி. அவளுக்குத் துணையாக அவளது கணவன். இருவரும் எப்படி வளர்ச்சி அடைந்தனர்? இப்படி ஒரு தேவதைகளின் படையை எப்படித் திரட்டினர்? அவர்கள் வீழ்ந்தது எவ்வாறு என்பதனை நாமும் சேர்ந்து துப்பறிந்து அறிந்து கொள்ள இம்மாதத்தின் மரண தேவதைகள் வகம் காமிக்ஸில் வந்திருக்கிறது. வாங்கி வாசித்து மகிழுங்கள்.. 

ஹைலைட்ஸ்:

ஒரு அபார்ட்மெண்ட்டில் தம்பதியர் மிரட்டப்படுகிறார்கள். ஹாலிவுட் திரைப்படங்களை ஒத்த காட்சி அமைப்பு. 

தான் வீழும் நிலை வந்தாலும் கடமை வீரரான காவலர் ஒருவர் மரண தேவதைகளில்  ஒருத்தியை வீழ்த்துவது. 



நிக் ரைடர் அதிரடியாக சிங்கத்தின் குகைக்குள் நுழைவது. 

இறுதியாக ஹா ஹா ஹா தொப்பி தொப்பி தொப்பி.. என்று ஒரு தொப்பி கொண்டு வரும் துரதிருஷ்டத்தை வைத்தே காமெடி ஏரியாவை டச் அப் செய்த விதம்.. 

போட்டி பொறாமை நிறைந்த உலகம் இது என்கிற கடுமையான மனநிலையை ஊட்டி ஊட்டி விஷமாக்கி வைத்திருக்கும் மம்மா. அதனால் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து சுட்டு தன் சக கொள்ளைக்காரிகளை வீழ்த்துவது தவறு என்று கூட எண்ணாத கடும் மனப்பான்மை.. 

 நண்பர் புகழேந்தியின் மொழி பெயர்ப்பு கதையோட்டத்துக்கு பலம். சென்ற இதழான ஆடம் வைல்ட் சாகசத்துக்கும் புகழ்தான் மொழிபெயர்ப்பாளர். அவருக்கு வாழ்த்துக்கள்.. 

140 ரூபாய்க்கு நல்ல வாசிப்புக்கு ஏற்ற கதையாக அமைந்திருக்கிறது இந்த மரண தேவதைகள். 

ஆடம் வைல்டின் மார்ச் மாத சாகசத்தில் ஓரளவுக்கு காட்டப்பட்ட அசுரனுடன் ஒரு மல்லுக்கட்டு இருக்கிறது என்று இந்த விரைவில் வருகிறது விளம்பரம் நமக்குக் காண்பிக்கிறது.. 
 
மனிதனுக்கும் மிருகத்துக்குமான இணைப்பு மிஸ்ஸிங் லிங்க் என்று அறிமுகபடுத்தப்பட்டிருப்பதால் அடிமையாகிப் போன அசுரனை மீட்டு வரும் வைல்ட் கதையாக இது இருக்க வாய்ப்பிருக்கிறது.. 


என்றும் அதே அன்புடன் ஜானி.. 




வெள்ளி, 21 மார்ச், 2025

In The Tiger's Lair_Phantom_FREW_002 இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இந்த பதிவில் நாம் காணப் போவது வேதாளரின் FREW_002 இதழ் புலியின் உறைவிடத்தில் எனப் பொருள்படும் இன் தி டைகர்ஸ் லெயர்... 

கதைக்குள் புகுமுன்பு ஒரு தகவல்.. வெள்ளை இளவரசி ராணி காமிக்ஸில் வந்த மிகவும் சிறந்த கதை. வனக்காவல் படையினரின் உருவாக்கம் மற்றும் வெள்ளை இளவரசி எப்படி வேதாளருக்கு உரியவராகிறாள் என்பதை மையப்படுத்தி வந்த கதை இது. கடந்த நான்கு ஆண்டுகளாக "வெள்ளை இளவரசி"க்கென தனித்தடம் அமைத்து தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கி அதில் போட்டிகளும் பரிசுகளும் வாரி இறைத்து ஒவ்வொரு மார்ச் மாதமும் முதல் தேதியில் இருந்து பதினாறு வரை குழுவினை இயக்க நிலைக்குக் கொண்டு வந்து அமர்க்களமாகக் கொண்டாடி மகிழ்வோம் ஆசிரியர் திரு.சரவணன், தோழர் திருப்பூர் குமார் இருவருடன் வாசகர்கள் அனைவரும். கவிதை, விமர்சனம், வசனங்களைக் கண்டு பிடித்தல், ஓவியம் வரைதல் என்று விதவிதமாக போட்டிகள் நிகழ்த்தி அதில் பங்கு பெற்ற அனைவருக்குமே பரிசுகளை அள்ளித்தந்து அபூர்வமான கதைகளையும் அற்புதமான பரிசுகளையும் மாதாந்திர காலண்டர்களையும் வழங்கி இந்த ஆண்டிலும் மிகப்பெரிய கொண்டாட்டமாகிப் போனது வாசகர்களுக்கு. நமது வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்வோம்.. அதில் எனது விமர்சனம் பரிசினை வென்று எனக்கு அபூர்வமான எத்தனை விலை கொடுத்தாலும் எளிதில் கிட்டாத "ஆழ்கடல் அதிரடி" முத்து காமிக்ஸ் பரிசாக வழங்கி டெக்ஸ் வில்லரின் பனி மண்டலப் போராளிகள், ஜவஹர்லால் நேரு வாழ்க்கை சித்திரக்கதை என்று மூன்று முத்தான பரிசுகளையும் வழங்கி கூடவே நிறைய சிறப்பான ஓவியங்களை அனுப்பி வைத்துள்ளனர் நண்பர்கள். அனைவருக்கும் என் அன்பின் நெகிழ்வுகளுடன் பதிவினைத் துவக்குகிறேன்.. 

இணையத்தில் கிடைத்த ஓவியம் இந்த அழகி கான்னி மூரின் ஓவியம்.. 
வேதாளரின் கதையான புலியின் உறைவிடத்தில் என்று பொருள்படும் இந்த இரண்டாவது FREW பதிப்பானது இந்த அழகி அமெரிக்காவில் இருந்து பெங்காலி வந்திறங்குவதில் தொடங்குகிறது.. 

கேப்டன் மைக் ஸ்ட்ராங்க் என்பவர் இந்த அழகியின் பால்ய வயது தோழர். அவரை நேசித்து மணமுடிக்க வரும் இப்பெண்ணுக்கோ தன் கணவரோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்கிற பேரவா.. இதே ஆசை வேறு ஒருவருக்கும் இருக்கிறது.. அது இப் பெண்ணை கானகத்தில் காணாமல் போன தன் அன்புக் காதலனைப் பரிதவிப்புடன் தேடித்தேடி ஆபத்துகளில் சிக்கிக் கொள்ள வகை செய்கிறது.. உதவிக்கரம் நீட்டிட வருகிறார் வேதாள மாயாத்மா. வேதாளரின் பந்தார் படையினர் அப்பெண் ஆபத்துகளில் சிக்கிக் கொள்ளாமல் மறைந்தே பின்தொடர்ந்து பாதுகாப்பு நல்குகின்றனர். 


ஒருவழியாக வேதாளரின் மண்டைஓட்டுக் குகையில் அவரைத் தரிசித்து மயக்கமாகி நிலைக்குத் திரும்புகிறாள் கான்னி மூர். தன் காதலர் யாரால் காணாமல் போனார்? என்றறிய உதவி கேட்கிறாள். கேப்டன் மைக்குக்கு நேர்ந்த கதி என்ன என்பதனை கண்டறிய முயற்சிக்கிறார் வேதாளர். 

இந்த இடத்தில் கட் செய்து மைக் என்னவானார் என்று பார்த்தால்  ஒரு நாட்டின் ராணி ஆஸ்டா. தலைவன் மைக் ஏற்கனவே அவளைத் திருமணம் செய்திருக்கிறான். அடப்பாவி என்று நாம் நினைப்பதற்குள் அடுத்த குண்டு.. ராணிக்கு ஒன்பது திருமணங்கள் நிகழ்ந்து ஒவ்வொருவரின் தலையுமே கொய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் நீ வேறு டிசைன் என்கிறாள் அவள். ஆனால் உன்னை நான் எங்கே திருமணம் செய்து கொண்டேன் என்கிறான் மைக். நான் உன்னை காந்தர்வ மணம் (கண்டதும் காதல் மாதிரி) செய்து கொண்டேன் வா என் ராஜாவாக என்கிறாள்.    அவன் ஏற்கனவே இவளின் கைதியாக இருந்து தப்பியோடிய நபர். மீண்டும் சிறையிலேயே தள்ளி தண்ணீரும் பிரட்டும் உன்னை வழிக்குக் கொண்டு வரும் என்கிறாள்.. சிறைப் பறவையை மீட்பாரா வேதாளர்? 
கான்னியை நட்டாத்துல விட்டுட்டு வந்தாச்சு திரும்பிப் போனா கத்தியை எடுத்து சொருகிருவா.. இந்த ராணியா சரியான காட்டுவாசி.. முடியலைப்பா என்கிறான் மைக்.. 
திருமண ஆடையுடன் "வனத்துக்குள் பிரவேசித்த வனிதை" (தலைப்புக்குப்  பொருந்துதே?) வேதாளர் குகையில் ஆடை மாற்றிக் கொண்டு துணியைத் துவைத்து எடுத்துக் கொண்டு ட்ரோன்டலே நாட்டை நோக்கிப் பயணிக்கிறாள் வேதாளர் துணையுடன்.. 

 ஆஸ்டா ராணிக்கு வேட்டை, வதை, விளையாட்டு எல்லாம் இருந்தும் போர் அடிக்கிறதென்கிறாள். எத்தனை சொத்து சுகம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாழ்க்கை போர் அடித்து விடும் என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டு இவள். 
கான்னி பற்றி அவள் கேள்விப்படும் நேரம் வேதாளருடன் கான்னியே அவளது ராஜாங்கத்தில் புகுகிறாள். பெர்பக்ட் டைமிங்..  
வேதாளர் அவளை மட்டும் தனியே அரசியிடம் அனுப்பி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கிறார். அவளோ காதலனைத் தேடி வந்த காரிகையை சாட்டையடி கொடுக்கத் தயாராகிறாள். சூறாவளியாக அங்கே வந்து சாட்டையைப் பிடுங்கி வீரர்களை தாக்கி கான்னியை மீட்டுப் போகிறார் வேதாளர். 
மைக் தன்னைக் கைவிட்டு விட்டு ஓடிப் போகவில்லை என்றும் அவர் ராணியால் கடத்தப்பட்டார் என்பதையும் உணர்ந்து கொள்கிறாள் கான்னி. 
தலைப்பு "கடத்தல் ராணி" பரவாயில்லை அல்லவா? 
மைக்கை மீட்க மீண்டும் வருகிறார் வேதாளர். மைக் சிறைப்பட்டுக் கிடக்கும் இடத்துக்கு செல்கிறார். ராணியிடம் தனக்கு என்ன தொடர்பு என்பது பிளாஷ்பேக்காக திரையில் விரிகிறது.. சரி காமிக்ஸ் பக்கங்களாக.. 
பண்டைய முறைகளில் தீவிரமானவர் அரசர் டுராண்ட். அவருடைய  மகளான ஆஸ்டா தங்களுடன் சமாதானம் பேச வந்த ஆங்கில கேப்டனை தன் தந்தை காட்டுக் குதிரைகள் இரண்டில் இரு வேறு திசையில் கட்டி இழுபடவைத்துக் கொல்வதற்கு முயற்சிப்பதைத் தடுத்து தன்னை மணக்குமாறு கேட்டு அதற்கு மைக்கும் ஒப்புக் கொள்வதால் தலை தப்புகிறது. திருமணத்துக்கு முன் கோட்டைக்கு வெளியே நதியொன்றில் குளித்து வர வேண்டிய மைக் அங்கிருந்து தப்பி விடுகிறார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சரியாக அவருக்குத் திருமணமாகும் நிலையில் தங்க மயில் சிறகு வந்து அச்சுறுத்துகிறது.. கடத்தவும் செய்கின்றனர் டுராண்டலே படையினர். இதுதான் நடந்தது என்று கூறிய மைக்கை மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேற்றி விட்டு அவருக்குப் பதிலாக கைதியாகிப் போகிறார் வேதாளர். அவரை சந்திக்க வந்த ராணியை மடக்குகிறார். அவளோ என்னை முத்தமிடு என்கிறாள்.. சளித் தொற்றுக்கு சிறந்த வழி இது என்று காமெடி செய்கிறார் வேதாளர். 

உன்னைக் கைது செய்து கொண்டு போகிறேன் என்கிறார் வேதாளர். நான் உன்னை ஏன் பிரியப் போகிறேன் என்கிறாள் காதல் வசப்பட்டு விட்ட ராணி ஆஸ்டா.. என்ன பொண்ணுடா இவ என்கிறார் வேதாளர். 
அவரை மீட்க வரும் கேப்டனும், கான்னியும் மீண்டும் சிக்கிக் கொள்ள "குதிரை வைத்தியம்" செய்ய முயற்சிக்கும் ராணியின் காட்டுக் குதிரைகளை தடுத்து வேதாளர் ராணியைக் கடத்த முயல வாயிற் கதவு அடைத்து அவளைக் காக்கிறார்கள் கோட்டைக் காவலர்கள்.. பின்னர் புலிகளோடு மோதுகிறார் மாயாவி. ராணிக்கு தான் செய்த தவறுகள் புரியவர, மயங்கிக் கிடக்கும்  வேதாளரைக் காக்க புலிகளால் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகிறாள்  ராணி. முன்னர் மாயாவியார் சுட்டிக் காட்டிய தான் ஒரு வரைமுறையற்று வளர்ந்த குழந்தை என்பதனை நினைத்துப் பார்த்ததாகவும் தன் மனதை மாற்றிக் கொண்டு விட்டதாகவும் தன் கால்கள், முகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு விட்டதாகவும் மூவரையும் விடுதலை செய்து உத்தரவிடுகிறாள் மனம் திருந்திய ராணி.. ஒரு காட்டு விலங்கு போன்று வளர்ந்தவள் காட்டு விலங்குகளால் அடிபட்டுத் திருந்தியதுதான் விதி.. மைக்-கான்னி தம்பதிக்கும், ராணிக்கும் விடை தருவதுடன் இந்த இரண்டாவது சாகசம் நிறைவடைகிறது. நன்றி வணக்கம்.. 
 







ரேகா காமிக்ஸ் பட்டியல்

 வணக்கம் நண்பர்களே.. 

திருப்பூர் குமார் தொகுத்துள்ள 

ரேகா காமிக்ஸ் பட்டியல் இதோ.. கிடைக்கும் அட்டைகளை பின்னர் இணைக்கிறேன். 

1. கொள்ளைகாரன் ஜிங்கோ 

2. காமெட் மாயாவி 

3. புதையல் விமானம் 

4. ரகசிய உளவளி 000

5. புயல் வீரன் 

6. டாப் சீக்ரெட்

7. இரவு கழுகுகள் 

8. பழிக்குப் பழி 

9. கொலைகார விஞ்ஞானி

10. ரெட் சிக்னல் 

11. வைரத்தீவு 

12. சிகப்பு ராணுவம்

13. மரண போராட்டம் 

14. மர்ம தலைவன் 

15. ஒற்றன் தேடிய ரகசியம்

16. விந்தியன் 

17. வெடிகுண்டு எக்ஸ்பிரஸ் 

18. நிச்சயிக்கப்பட்ட மரணம் 

19. ராணுவ ரகசியம்

20. விஷ ஊசி டாக்டர்

புதன், 19 மார்ச், 2025

042_மரணப் பாதையில்_ஆடம் வைல்ட்_வகம் காமிக்ஸ்

 வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே..இது வகம் காமிக்ஸ் "மரணப் பாதையில்" விமர்சனம்.

அடிமை வர்த்தகம் என்பது மனித இனத்தை பிடித்த சாபக்கேடு. மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே என்ற பாடலுக்கு அர்த்தமாக அடிமை வர்த்தகம் நடக்கும் தேசத்திலே அதனை எதிர்த்து நடக்கும் யுத்தத்தை முன்னெடுத்து செல்கிறார் நாயகன். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக ஆரம்பித்து அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு இடையே ஓர் ஆராய்ச்சியாளனின் பார்வையில் இனப்படுகொலை ஒன்றை காண்பித்துக் கொண்டே அடிமை வர்த்தகம் ஓரிடத்தில் அழிக்கப்பட்டதால் மற்றொரு இடத்தை அதுவும் ஏற்கனவே புழங்கிய இடத்தையே மீண்டும் புதுப்பித்து மனித வர்த்தக சந்தையை திடமாக நடத்தலாம் என்று எண்ணி ஆக்கிரமிக்க நினைக்கும் எதிரிகளை பந்தாடுகிறார் ஆடம் வைல்ட். இழப்புகள் இருபக்கமும் இருந்தாலும் இறுதி வெற்றினை ஈட்டுகிறது ஆட்டம் வைல்டின் அணி.. இதற்கிடையே மிருக வேட்டையில் ஜோடியாகிப் போன இருவர் மனித வேட்டைக்கு களம் காண அடுத்த பாகத்தில் ஆடம் வைல்டை வேட்டையாட கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்புகிறது. இனி என்ன நடக்கும்?!? மரணப் பாதையில் பல மரணங்களை உதிர்த்தாலும் நீதியின் பக்கம் நின்று வெல்ல நினைக்கும் நாயகனின் பயணம் தான் என்னவோ? தொடர்கிறது இந்த மரணப் பாதை.. முதல் புத்தகத்தில் இருந்து இரண்டாவது புத்தகத்தை தனியாக படிக்க இயலும். இருப்பினும் ஆடம் வைல்டு ஒரு சிறந்த நாயகர். ஆகவே அவரை தொடர்ந்து ஆதரிக்க வலுவான கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் போனல்லி குரூப் கொண்டு வந்த கதை அல்லவா..  அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கிறது.. வகம் காமிக்ஸ் 42 வது வெளியிடான மரணப் பாதையில் விலை ரூபாய் 140 இல் அட்டகாசமாக அமைந்து இருக்கிறது. கருப்பு வெள்ளை ஓவியங்கள் நல்ல மஞ்சள் நிற காகிதம் அழகான எழுத்துருக்கள் அம்சமான மொழிபெயர்ப்பு சிறப்பான வடிவமைப்பு என ஒரு தரமான நூலை வாசித்த அனுபவம் கிட்டுகிறது..





சனி, 15 மார்ச், 2025

அறிமுகம்.. டிக்சி டூகன்

 


LGN 28 மூன்றாவது தினம் கிராபிக் நாவல்_IL TERZO GIORNO_Graphic Novel

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இது மூன்றாம் தினம் கிராபிக் நாவல்.. ஆளரவமற்ற இடங்கள் அதிலே தொடரும் மர்மங்கள் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள் என்ற ரீதியில் இதுவும் ஒரு தனிஇடத்தைப் பெறும் ஒன் ஷாட் கதை. 

புத்தகக் கண்காட்சியில் விலை ரூ.90/-ல் வெளியிடப்பட்டுள்ள (10% தள்ளுபடியுடன் 80/- ரூபாய் மட்டுமே/-) லயன் கிராபிக்ஸ் நவல் வரிசையின் 28ஆவது வெளியீடு இந்த மூன்றாம் தினம்.. 



ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதில்

கேள்வி: படிச்சுட்டு இதயத்தை இழந்தவங்க எப்படி மறுபடியும் உயிரோட வந்தாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்?

பதில்: Chaos மகன் Erebos மனதை குளிர்வித்தால் இறவா நிலை அடையலாம் அல்லது இறப்பை வெல்லலாம் என்பது போன்ற Egyptian mythology ஒட்டி இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது._திரு.சுரேஸ் தனபால்

ஆக எகிப்திய புராணத்தைப் போன்றதொரு கதைதான் இந்த திகில் திரில் நிறைந்த கதை.. ஓவியங்கள் உங்களை ஒன்றுக்கு இரண்டு முறை அலசிப் பார்க்க வைக்கும்.. வித்தியாசமான பயணம் இந்தக் கதை. 

போன்நெலி குழுமம் வெளியிட்டுள்ள இந்த படைப்பு வினோதமான விசித்திரமான விபரீதமான மாந்தர்களை சித்திரங்களாக உலவ விடுகிறது.. 
 


விமர்சனப் போட்டியும் கனவுலகமும்..

  ஒரு ஹேப்பி நியூஸ்.. காமிக்ஸ் எனும் கனவுலகப் போட்டியில் 2014ல் வெளியான இரவே இருளே கொல்லாதே சித்திரக்கதையிலிருந்து விமர்சனப் போட்டி வைத்தனர...