சனி, 16 ஆகஸ்ட், 2014

மலர் காமிக்ஸ் பரிசளிக்கும் "மரண அலை!!!"

அன்புடையீர் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்!
டெனன்ட் ஃபார்ம் Tenant Form
காவல் துறையில் மீண்டும் வாடகைக்குக் குடியிருப்போர் நலனையும், வீட்டை வாடகைக்கு அளித்துள்ளோர் நலனையும் மேம்படுத்துவது தொடர்பாக சென்ற வருடம் போலவே இவ்வருடமும் டெனன்ட் ஃபார்ம் வழங்கி தகவல் சேகரிக்கும் படலம் துவக்கி உள்ளோம். இதன் நன்மைகள் பல. முதலில் ஒருவர் சென்னைக்குள் வந்து தங்குமிடம் முதல் அவர் வாடகைக்கு எங்கெல்லாம் தங்குகிறாரோ அந்த விவரங்கள் காவல் துறை சர்வர்களில் பாதுகாக்கப்படும். அதனால் நல்ல நோக்கம் உள்ளவர்கள் மட்டும் வாடகை வீடுகளில் தங்கும் நிலை உருவாகும். வீட்டு உரிமையாளர் தன்னுடைய விவரங்களை காவல் துறைக்காக கேட்கிறார் என்று வாடகைக்கு வருவோர் அறிந்து கொள்ளும்போது அவர்களுக்கிடையே பரஸ்பரம் புரிதலுணர்வும் உருவாகும்.  ஆகவே, காவல்துறை எதற்காக இவ்விவரங் களைக் கேட்கிறது என்று குழம்பிடாமல் காவல் துறைக்கு தங்களது வாடகைதாரர் விவரங்களை அளித்து விடலாமே? தங்களது அருகாமை காவல் நிலையத்துக்கு இந்த விவரங்களை அவசியம் தெரிவித்து விடுங்கள்.
மூத்தோர் பட்டியல்

Senior Citizens list என்கிற மூத்தோர் பட்டியலை காவல்துறை சேகரித்து வருகிறது. பிள்ளைகள் வளர்ந்து தனியே தன் சிறகை விரித்துப் பறந்து வேறிடங்களில் தன் கூட்டினை அமைத்துக் கொள்கையில் பெற்றோர் தன்னந்தனியே வாழ நேரிடுகிறது. அவ்வாறு தனியே வசிக்கும் நிலையில் மற்றவர்களை சார்ந்ததொரு வாழ்வாகவே பல சமயங்களில் இருந்திட நேர்ந்திடும் சந்தர்ப்பங்கள் தானாகவே அமைந்து விடுகிறது. நீங்கள் தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டவராயின் வயதான முதியோரைக் குறி வைத்து தனியே வீட்டில் இருக்கும் அவர்களை வீழ்த்தி அவர்களது உடமைகளை எளிதில் தட்டிப் பறித்திடும் கும்பல்களும் மாநகரில் அவ்வப்போது தலை நீட்டுகின்றன. அவர்களை ஒடுக்கும் விதத்தில் காவல்துறை முதியோர் (வயது ஐம்பத்தைந்து தாண்டியவர்களை முதியவர்கள் எனக் கொள்கிறோம்!) பட்டியலைத் தயாரித்து அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு நல்கி வருகிறது. அவர்களின் பீதியைப் போக்கி தங்களை எவ்வாறெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிற யோசனைகளைப் பரிமாறி அவர்களின் மன அமைதிக்கு உதவி வருகிறோம். தங்கள் அருகாமையில் உள்ள முதியோரின் விவரங்களை காவல் துறைக்குத் தெரியப் படுத்துங்களேன்!!!!
அப்புறம் மலர் காமிக்ஸ் மற்றும் மலர் மணி காமிக்ஸ் ஆகியவை கலைப் பொன்னி வெளியீடாக மதுரை மண்ணில் இருந்து விண்ணைத் தொட்ட அரும்பெரும் நாட்களும் ஒரு காலத்தில் மலர்ந்ததுண்டு. சிவகாசியில் தயாராகி மதுரையில் அருவாவைத் தீட்டித் தீந்தமிழ் முழங்க காமிக்ஸ் வளர்த்ததொரு காலம். ஐம்பதே காசு விலையில் சின்னஞ்சிறு மலராக கதையும் படங்களும் திரு.வசந்த் அவர்களின் அருமையான சிந்தனையில் பூத்ததொரு பூதான் இந்த "மரண அலை".  திரு. ஸ்ரீகாந்த் அவர்களது கைவண்ணத்தில் உருவான வண்ணமய அட்டையுடன் ஸ்ரீ சங்கரேஸ்வரி பதிப்பகம், சிவகாசியில் அச்சேற்றி வெளியானது இந்நூல். 
 மலர் காமிக்ஸின் மற்ற தலைப்புகள் 
- கொலைப்பாதகன்
- மரணக் கூண்டு
- மர்ம ஆவி
- தங்க வேட்டை 
- நடுநிசி மோகினி 
- எரிமலைத் தீவு 
- சோலார் - 7
- ஏழு கடல் ராணி 
- இரத்தப்பலி 
மலர்மணி காமிக்ஸ் பட்டியல் 
- காலகண்டன் கொலை வழக்கு
- திகில் யுகம் கி.பி.2001
- இராட்சத காளான்கள்
- சாத்தானுக்கு மரண ஓலை
- எரிமலை நாசகாரி 
- விபரீதப் போட்டி 
- மரண தேவதை 
- கழுகு வேட்டை  
இவையெல்லாம் வெறும் பெயர்ப் பட்டியலாக நில்லாமல் கண்ணில் புத்தகமாக தென்படுவது தங்களின் தேடலிலும் ஆதரவிலும்தான் உள்ளது.
நண்பர் திரு.சம்பத் அவர்களின் பெரிய மனத்தால் நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்ள இந்தப் புத்தகத்தைக் கொடுத்து உதவினார். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
அப்புறம் ஒரு வேண்டுகோள்!
தங்களுக்கு தெரிந்த சென்னை நண்பர்களுக்கு இந்த tenants form ஐ தரவிறக்கி கொடுத்து உதவுங்களேன். எப்படியும் எங்கள் சக காவலர்கள் வந்து தகவல் கூறி பின்னர் சேகரிக்கும் இந்த படிவத்தை விரைந்து நிறைவு செய்ய ஏதுவாக எங்கள் காவல் துறை அலுவலக தளத்தில் கொடுத்துள்ளனர். தாங்களும் இந்த முயற்சியில் எங்களுக்கு உதவலாமே?
இது ஒரு கூட்டு முயற்சி நண்பர்களே!
இனி கதைக்குள் புகலாம் வாருங்கள்!!!

















இந்தப் பட்டியலில் உங்கள் கையில் சிக்கும் காமிக்ஸ்களை அவ்வப்போது தெரிவித்து முழுமையான மலர் காமிக்ஸ் மற்றும் மலர்மணி காமிக்ஸ் பட்டியலை உருவாக்க நண்பர்கள் கை கொடுங்களேன்???
அப்புறம் அண்ணன் ராஜேஷ் குமாரின் அட்டகாசமான அதிரடி நாவல் சிவப்பு நிலா விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருகிறது. வாங்கி வாசியுங்களேன்?

என்றும் அதே அன்புடன்  உங்கள் நண்பன் ஜானி.....  


2 கருத்துகள்:

  1. அட! இன்னுமா க்ரைம் நாவலெல்லாம் வெளிவருகிறது? சிறு வயதில் பாட்டி வீட்டில் படித்ததோடு சரி. அப்புறம் கண்ணிலேயே படவில்லை. இவை நின்று விட்டதாகத்தான் நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி!

    ('சிவப்பு நிலா' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அட்டைப்படத்தில் 'சிவப்பு இரவு' என இருக்கிறது. திருத்திக் கொள்ளுங்களேன்!)

    பதிலளிநீக்கு
  2. புதிய சித்திரக்கதை வெளியீட்டுக்கு நன்றி! ஆனால், ஒவ்வொரு முறை சித்திரக்கதையை வெளியிடும்பொழுதும் அதைப் பி.டி.எப் வடிவிலும் வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது, சி.பி.ஆர் என்றாலும் நல்லது.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...