ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

சீறும் என் தோட்டா_ஜானி டைனமைட்

 சீக்கிரம்.. இராணுவத்தினர் வந்து விடப் போகிறார்கள். கிளம்புங்கள்.. உத்தரவு பறந்து வந்து காற்றை நிறைத்ததும் வானளாவ எரிந்து கொண்டிருந்த பண்ணை வீட்டை விட்டுப் புயலெனப் பாய்ந்து விரைந்தது அந்த எழுவர் அணி. 

கொடூரர் படை அது. அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்பில் இவர்கள் செல்லும் இடமெல்லாம் வெறியாட்டம் போடத் தவறுவதேயில்லை. அப்பாவி பண்ணை நிலதாரர்களும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ந்து தாக்குண்டு தீக்கிரையாகிக் கொண்டிருந்த கொடூர காலக் கட்டம். 

கணவாயை இலக்காக வைத்து விரைந்து போய்க் கொண்டிருந்த முதலாமவன் குதிரை தலைகுப்புறக் கவிழ்ந்தது.. கீழே விழுந்தவனை அப்படியே ஒரு மறைக்கப்பட்ட பள்ளம் காவு வாங்கியது. உள்ளே குத்தீட்டி போன்று நடப்பட்டிருந்த மர ஈட்டிகள். எழுவர் அறுவராக அவர்களுக்கு முன்னே அடர்ந்த காடு கனத்த அமைதியுடன்.. சரக்கென கத்தியொன்று பாய்ந்து இன்னொருவன் கழுத்தில் ஊன்றி நிற்க சப்தம் எழாமல் பரலோகம் போனான். அறுவரில் ஒருவன் காலி. மிரண்ட ஐவரும் தத்தம் ரிவால்வரை சகட்டு மேனிக்கு எட்டுத் திசைக்கும் சுட்டு தோட்டா மழை பொழிய மெல்லிய ஓசையாகக் கிளம்பி திடீரென ரொய்ய்ய்ங்ங்ங் என்று அதிகரித்த ஓசை தேனீக்களின் மரண ராகத்தை இசைக்கத் தொடங்கியது. தேனீக்களின் கொடுக்குககள் ஆங்காங்கே பொத்தல்களைப் போட இருவர் அங்கேயே சுருண்டு விழுந்தனர். குதிரைகள் மற்ற மூவரையும் தள்ளிப் பாய்ந்தோடி விட காட்டின் பாறைகளுக்கு மத்தியில் மறைவிடம் நாடி ஓடத் தொடங்கினர் ஆளுக்கொரு திசையில்.. விஷ்க்கென்ற ஓசையுடன் ஒருவனின் காலில் தைத்தது அம்பொன்று. ஐயோ அம்மாவென்று கதறியபடியே கீழே விழுந்தவனின் கழுத்தில் அடுத்த அம்பு தைத்தது.  செவ்விந்திய அபாச்சே இறகுகள்..

அடர்வனத்தில் சேர்ந்தவாறே ஓடிக் கொண்டிருந்தவனின் முதுகில் சதக்கென குத்திப் பிளந்தது கோடரியொன்று. கடையொருவன் விதிர்விதிர்த்துப் போனான். 

யார்டா எங்களைக் கொல்றது. தைரியமிருந்தால் முன்னே வா. நான் இந்தக் கூட்டத்தின் தலைவன் டேவி லார்சன். என்னைக் கொன்றால் உனக்கேதும் லாபமில்லை. வெளியே வா..கூப்பாடாகவும் இல்லாமல் கெஞ்சலாகவும் இல்லாமல் மிரட்டலாகவும் இல்லாமல் அப்படியொரு குரல். 

முதலில் வடக்கேயிருந்து ஊளைபோல ஆரம்பித்து ஏதோ குரல்கள் அவனை தைரியமிழக்க செய்தது. பின்னர் வடக்கே துவங்கி அவனை சுற்றிச்சுற்றி ஒரு குரல் பேசியது. 

அடேய் லார்சன்..

நான்தானடா 

ஜானி டைனமைட்..

எத்தனை கொலைகளும் கற்ழிப்புகளும் கொள்ளைகளும் நிகழ்த்தியிருப்பாய். இன்று என் வதைபடலத்தில் சிக்கிச் சிதறுகிறாயே. முட்டாள். நீ செய்த பெரிய தப்பு  என் நண்பன் மெக்கின்ஸியின் பண்ணையைத் தாக்கியது. அங்கே நீ விட்டுப் போன தடயங்களை வைத்து வெகு நாட்களாக உன்னைப் பிடித்து விட அலைந்து கொண்டிருந்தேன். இத்தனை நாட்களாக கழுவும் தண்ணீரில் நழுவும் மீனாக நீயிருந்தாய். இப்போதோ  உன் எழுவர் அணியின் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டி விட்டேன். இதோ பாரடா என்று குரலின் சுற்று நெருக்கத்தில் கேட்க.. முதுகில் பலத்த உதை விழுந்து தடுமாறி விழுந்தான் லார்சன். துப்பாக்கியை உருவ எத்தனித்தவனின் கையை பூட்ஸ் கால் நசுக்கியது.. 


போய் சேரடா நரகத்திற்கு..   என்றவனின் கண்களின் இடுக்கத்தில் கொடூரமும் கொஞ்சம் அப்பிக் கிடந்தது. அவனது பிஸ்டல் டுமீல்ல்..என ஒற்றைத் தோட்டாவை உமிழ்ந்தது..




வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

ஜானி டைனமைட்_அறிமுகம்

 

அநீதிகள் அலறியோடும்.. அக்கிரமங்கள் வாலை சுருட்டிக் கொள்ளும்..
இலக்கொன்று மனதில் கொண்டு இவன் குதிரையிலேறிப் பறந்தாலே..
திக்கெட்டும் தெறித்திடுமே கொள்ளைக் கும்பல்..
வந்தானே ஒரு வெகுமதி வேட்டையனே.. 
சீறும் இவன் தோட்டா முன்
நில்லாதே!!!
ஓடு..ஓடு..ஓடு..
செவ்விந்தியர் சேனைக்குள்ளும் புகுவான்..
அமெரிக்காவின் இராணுவத்திலும் பாய்வான்..
பொதுமக்கள் நிம்மதியை 
மூச்சுக் காற்றென எண்ணுவான்..
அற்பப் பதர்களை அடி வேரோடு பிடுங்கியெறிவான்..
இவன் பார்வைக்குப் பின்னால்
பல நூறு டைனமைட் வெடிகள்..
இவன் அசைவுக்கு முன்னால்
பிதுங்கிடும் பலரது விழிகள்..
அர்கன்சாஸ் அலற அலற
டெக்ஸாஸ் மிரள மிரள
கலிபோர்னியா கதற கதற
இல்லினாய்ஸூம்
கென்டக்கியும்
இன்னபிற ஏரியாக்களும் பதற பதற
பலி கொள்வான் தீயோரை..
காத்திடுவான் நல்லோரை..
இவன் பெயர்..
ஜானி டைனமைட்
தயாராகுங்கள்..

புத்தம்புது புரட்சிக்கு..

கதை எண்-001. வங்கிக் கொள்ளையர்

அந்த மரத்தின் இருள் போர்வைக்குள்ளே தன்னை ஒளித்துக் கொண்டு வெகுநேரமாகக் காத்திருந்தது அந்த உருவம்.. வெகுதூரத்தில் மெல்லியதாக துவங்கிய அதிர்வுகள் நெருக்கத்தில் தடக்..தடக். தடக் என பலமாக அதிரத் துவங்கின.. அந்த நான்கு குதிரையிலும் நான்கு முகமூடிகள்.. எங்கோ கொள்ளையடித்திருந்த பணக் குவியலோடு பாய்ந்து வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தில் வேகம் குறைத்து பயணிக்க எத்தனித்த வேளையில்  திடீரென்று அவர்கள் முன்னே குதித்தெழும்பியது அந்த உருவம். குதிரைகள் ஹீஹீயென ஓசையெழுப்பி கலவரமடைய ககுதிரைகளைக் கட்டுப்படுத்தி நிறுத்திய நால்வர் முன் தன் இரு கரங்களிலும் துப்பாக்கியை ஏந்திய வண்ணம் புன்முறுவலை முகத்தில் தரித்து நின்றான் அந்த வீரன். யாரடா நீ..உயிர் ஆசை இல்லையா உனக்கு..வழியை விட்டு ஒதுங்கடா! அடாவடிக் குரலுடன் குதிரையிலிருந்தவன் உறுமினான். நீ யாரென எனக்கு நன்றாகவே தெரியும்.. பிரபல பேங்க் கொள்ளையன்  ஸ்டான் வில்சன்தானே? மரியாதையாக வங்கிக் கொள்ளைப் பணத்தை ஒப்படைத்து சரணடையுங்கள்.. இல்லையென்றால்..டுமீல்.. குதிரையிலிருந்த ஒருவன் அப்படியே சாய்ந்து விழுந்தான். இது வெறும் பேச்சல்ல. என் ஆணை.. ஒழுங்கு மரியாதையாக சரணடையுங்கள்.. 

கலவரமடைந்த கொள்ளைக் கும்பல் மிரட்டலுக்குப் பணிந்தது. தங்கள் வசமிருந்த பேங்க் பணத்தை ஒப்படைப்பதாகக் கூறி பையைத் தூக்கி வீச விலகி சிரித்தான் ஜானி டைனமைட். ஹெஹெ..இந்த பழைய காலத்து டெக்னிக்குக்கெல்லாம் ஏமாறுவேன் என நினைத்தீர்களா என்றவன் சடசடசடவென தன் தோட்டாக்களை உமிழ்ந்து அத்தனை பேரின் பெல்ட்டிலும் தோட்டாக்கள் உரசிப் போகுமாறு செய்ய மூன்று கொள்ளையர்களும் சரணடைந்தனர்.. அவர்களைத் துரத்தி வந்து கொண்டிருந்த ஷெரீப் டைசனின் படையினரின் குதிரைக் குளம்புகள் எழுப்பும் ஓசை தொலைவில் எழும்போது இங்கே பணத்துடன் குதிரைகளில் பிணைக்கப்பட்ட மூவரும் அவர்களின் பார்வைக்குத் தென்பட ஜானி டைனமைட் அப்படியே மாயமானான்.

ஷெரீப் தலைவனின் நெஞ்சில் குத்தியிருந்த காகிதத் துணுக்கை எடுத்து படித்தார். 

டியர் ஷெரீப் டைசன்..

இந்த பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அப்படியே ரிவார்டு தொகையை என் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுங்கள்.

 என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி டைனமைட்..

திங்கள், 21 பிப்ரவரி, 2022

தி பார்ச்சூன் ஆப் வின்ஸ்லாவ்ஸ்-01 வான்கோ 1848--அறிமுகம் The fortune of the winczlavs-vanko 1848 லார்கோ பூர்வீகம்

வணக்கங்கள் பிரியமானவர்களே.. நாமறிந்த லார்கோ பெரும் பணக்காரர். அவரின் அந்த பெரும் திரள் செல்வம் அவரது முன்னோர்களுக்கு எப்படி கிடைக்கப்பெற்றது என்பதன் பின்னணி பற்றிய கதையாக மலர்வது தி பார்ச்சூன் ஆப் வின்ஸ்லாவ்ஸ். 



 தி பார்ச்சூன் ஆஃப் தி வின்ஸ்லாவ்ஸ் #1 - வான்கோ, 1848 (2022) : வின்ச் என்ற பெயருடன், லார்கோ வின்ஸ்லாவ் ஒரு மகத்தான செல்வத்தைப் பெற்றார். ஆனால் அது எங்கிருந்து வந்தது? அவரது பரந்த சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியது யார்? என்ன தியாகங்கள் தேவை என்று நிரூபிக்கப்பட்டது? 1848. ஒட்டோமான் ஆக்கிரமித்துள்ள மாண்டினீக்ரோவில், இளம் மருத்துவர் வான்கோ வின்ஸ்லாவ் மக்கள் எழுச்சியின் தலைவர்களில் ஒருவர். துரோகம் செய்யப்பட்டு, அதிகாரிகளால் தேடப்பட்டு, அவர் ஒரு பல்கேரிய அகதியான வெஸ்காவுடன் சேர்ந்து அமெரிக்காவிற்கு பால்கனில் இருந்து தப்பிச் செல்கிறார், அவர் சட்டப்பூர்வமாக நியூயார்க்கிற்குள் நுழைய அனுமதிக்க அவரை திருமணம் செய்து கொண்டார். பல மாற்றங்களைச் சந்திக்கும் இன்னும் புதிய நாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த ஒரு குடும்பத்தின் வரலாறு தொடங்குகிறது.

ஆட்டோமான் சாம்ராஜ்ய வீரர்களிடமிருந்து தப்பும் ஒரு மருத்துவரின் பயணமும் வாழ்வும் சிறப்பான முறையில் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது


ஓவியர் பெர்தெட்



கதாசிரியர் வான் ஹாம்
இதன் தொடர்ச்சியாக 2.டாம் அண்ட் லிசா -1910 விரைவில் வரவிருப்பதாக சினிபுக் அறிவித்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஜெரோம் செயின்கேன்டின் சினிபுக்கிற்காக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.2021ல் இந்த கதையினை டூபிஸ் பிரெஞ்சில் வெளியிட 2022 கிரேட் பிரிட்டன் கென்ட்டில்  எடிட்டர் எரிக்கா  ஓல்சன் ஜெப்ரி  சினி புக் சார்பில் வெளியிட்டு இருக்கிறார். புத்தகம் அச்சடிப்பு ஸ்பெயினில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 
வான்கோ வின்ஸ்லாவ் ஒரு மருத்துவர். 25 வயது இளைஞன். மான்டிநெக்ரோவில் போராளிக் குழுவினருடன் இணக்கமாக இருந்ததால் துருக்கியப்படை அவரது தலைக்கு விலை வைத்து தேடி வரும் சூழலில் ஒரு கிராமத்தில் பதுங்கி வைத்தியம் பார்த்து வருகிறார். ஊர்த்தலைவரை துருக்கியர்கள் மடக்கி விசாரித்து வான்கோவினை மடக்கிக் கைது செய்ய எத்தனிக்க அங்கிருந்து ஊர் மக்கள் உதவியுடன் தப்புகிறார் வான்கோ. அவருக்கு உதவி செய்யும் பெண் கொல்லப்படுகிறாள். 



குரோஷியாவின் டுப்ரோவ்னிக் நகரில் அடைக்கலம் புக எத்தனிக்கையில் அங்கும் ஒரு பெண்ணின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து அங்கிருந்தும் தப்பி அல்பேனியா வழியாக  இத்தாலி, பிரான்ஸ் சென்று அமெரிக்காவை அடையும் திட்டத்துடன் இந்த ஜோடி இணைந்து பயணிக்கிறது. ஒரு கட்டத்தில் அமெரிக்க கப்பலில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இத்தனைக்குப் பின்னர் அமெரிக்காவில் இந்த தம்பதியினர் நிம்மதியாக வாழும் நிலைமை இருந்ததா? வான்கோவின் வரலாறை தொடர நமக்கு லார்கோவின் மூதாதையர் பற்றிய பரிச்சயம் ஏற்படுகிறது. 


ஓவியங்களில் லார்கோவின் தெறிக்கும் பாணி இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். புது ஓவியர் தனது பாணியில் வரைந்திருந்தாலும் கதைக்கு அவசியமான சகல விஷயங்களையும் நிறைவாகவே செய்திருக்கிறார். 

கதையில் வரும்  சில சுவாரஸ்யமான தகவல்கள்...

மார்பைன் - ஓபியம்-கிரேக்க கடவுள் மார்பியஸின் பெயரே இது. அதன் அர்த்தம் உறக்கத்தின் கடவுள். கனவில் வரும் இவர் மனித உருவத்தில் இருப்பாராம்.. 
https://en.wikipedia.org/wiki/Morpheus
வலி நிவாரணியாக உதவும் மார்பைன் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள..                                                  https://en.wikipedia.org/wiki/Morphine
. மான்டேநெக்ரோ வரலாற்றை அறிந்து கொள்ள:
இந்த சுவாரஸ்யமான கதையினை சித்திர வடிவில் ருசி பார்க்க தமிழிலும் விரைவில் எதிர்பார்க்கலாம். 
அதுவரை இந்த பேனலை ரசிப்போம்..

 
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் 
jscjohny @ ஜானி சின்னப்பன் 

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

விலங்கு-Zee 5 வெப் சீரிஸ்- விமர்சனம்


 விலங்கு...

இது கைவிலங்கு பற்றிய கதை அல்ல.. மனித மனத்தில் உறைந்திருக்கும் கொடூர விலங்கு ஒன்றினை அதன் ஆணிவேரிலிருந்து பின்பற்றி செல்லும் புதிய பாணித் தொடர். பல காட்சிகள் புத்தம்புது கோணங்களிலும் கதைக்கு நம்மை நெருக்கமாகவும் வைத்திருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.. கொஞ்சம் காவல் துறையின் சகல நுணுக்கங்களையும் ஏதோ உடனிருந்து பார்த்து நோட்ஸ் எடுத்ததைப் போன்றே விரிகின்றன.. ஆனால் காவல் நிலையத்தில் ஏகப்பட்ட வன்முறைக் காட்சிகளைத் திணித்திருப்பது கொடுமை. அவசியமற்ற கெட்ட வார்த்தைகளால் பொதுவான பார்வையாளர்கள் முகம் சுழிக்க வாய்ப்பிருப்பதை கொஞ்சம் புது இயக்க முயற்சிகள் மனதில் வைத்தால் நன்று. துப்பு துலக்குவதும் அதன் துணை சம்பவங்களும் மிகைப்படுத்தப்படக்கூடாது என்பதில் துவங்கி ரொம்பவே பாவப்பட்ட அப்பாவியைப் போல  குற்றவாளிகள்-காவலர் உறவு சித்தரிக்கப்பட்டிருப்பது கதையோடு கொஞ்சமும் பொருத்தமில்லை. இருப்பினும் சீரிஸ் விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சங்கள்,  திருப்பங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள் நம்மைக் கட்டிப் போட்டு விடுவதுதான் "விலங்கு" மேஜிக். சில முறை ரிப்பீட்டாகக் கூட பார்க்கலாம். என் பரிந்துரை: பாருங்களேன். பிடித்து விடும் பரிதியையும் போலீஸ் பலரையும்..

திங்கள், 14 பிப்ரவரி, 2022

நடனமாடும் பயங்கரம் & வெற்றியைத் தேடி.. ரிலீஸ் சேதி

ப்ரியமானவர்களே வணக்கம்..

லோன் உல்ப் திகில் கிராமம் வெளியீட்டுக்குப் பின்னர் தற்போது இரண்டு வெளியீடுகளுடன் வந்துள்ளனர்.

முதல் கதை புகழ் பெற்ற யாளி ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸாரின் கேரவன் Caravan 

தமிழில் நடனமாடும் பயங்கரம் என்னும் தலைப்பில் தமிழக காமிக்ஸ் இரசிக இரசிகையரை ஆச்சரியப்படுத்தப் போகிறது. 


இரண்டாவது கதை வெற்றியைத் தேடி..

இலங்கை காமிக்ஸ் ஓவியர் ப்ளஸ் கதாசிரியர் திரு.வினோபா சிவனருள் சுந்தரம்.

கௌபாய் கதையாக படைத்திருக்கும் வெற்றியைத் தேடி உங்களை பிரமிக்க செய்யப் போவது உறுதி.


மூத்த வாசகியின் வாசிப்பில்.. நடனமாடும் பயங்கரம் மற்றும் வெற்றியைத் தேடி.. 




இப்போது விற்பனையில்..

லோன் உல்ப் பப்ளிகேஷன்

For booking queries: 

9043036798


Gpay:account :9043036798


லோன் உல்ப் பப்ளிகேஷன் வெளியீடுகள்

1.திகில் கிராமம்:399/-

2.நடனமாடும் பயங்கரம்:249/-

3.வெற்றியைத் தேடி:49/-


Offer:

இந்த புத்தகங்களில் எந்த இரண்டு காமிக்ஸ்களை வாங்கினாலும் 

கொரியர் ப்ரீ.

புத்தகம் வாங்க இணைய தள லிங்க்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVkHHXuOu-r96ouxyA6Wam3Bo-CeKg8AwUcdvN-ozP67LqSg/viewform


இந்தப் படிவத்தை நிரப்பியும் எளிதாக புக்கிங் செய்து மகிழலாம்.

தங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும்  கைபேசி எண் தங்களுக்கு தேவையான காமிக்ஸ் போன்றவற்றை குறிப்பிட்டு பதிவு செய்தும் கொரியரில் புத்தகங்களைப் பெறலாம்..









நன்றி. என்றும் அதே அன்புடன் தங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன். ஹேப்பி வெலன்டைன்ஸ் டே ஆல்..


வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...