வியாழன், 23 மார்ச், 2017

நிம்மதியைத் தேடி..



அதோ நீல வானின் நிரந்தரத்தைக் 
குறுக்காக வெட்டிக் கொண்டு பச்சைப்பசேலென 
விரியும் சமவெளிப் பிரதேசத்தில்
 சின்னஞ்சிறு புள்ளியாய்
தொலைவே தெரிகிறது என் கிராமம்..


வீசிடும் கடும் காற்றின் தூசியைப் பூசிக்
கொண்ட என் விழிகளை விலக்கி மீண்டும் பார்த்தேன்
தெரிந்தது என் வீடிருக்கும் சொர்க்கமா?
இல்லை! இல்லை! அது வெறும்
கானல்..

முன்பொரு மோசமான பொழுதில்
இரைக்கலையும் கழுதைப்புலியெனப்
பாய்ந்து வந்து தீயிட்டு எரித்தார்களே
அந்த அக்கிரமக்காரர்களுக்குத் தெரியுமா...?

என் பிள்ளைகள் பாசம்,
என் மனைவியின் நேசம்,
என் நண்பர்களின் உற்சாக ஓலம்,
என் சொந்தங்களின் கோடரி நடன கும்மாளம்...?

போயிற்று எல்லாம் போயிற்று...
காற்றில் கரைந்து போயிற்று...
அவர்களின் நினைவுகள்.

இன்றோ அந்தத்திசைதனில் சாம்பல் மேடு மாத்திரமே...
ஆங்காங்கே எரிந்தும் எரியாமலும்
வெந்தும் வேகாமலும் கிடக்கும்
மரக்கட்டைக் குவியல்கள்...
இதயத்தைக் குத்திக் கிழிக்கும்
வேதனை அம்புகளாய் என்னை வதைக்கின்றன.

இதோ பாலை வெளியில் என்
தனிமையைத் தரித்து நிற்கிறேன்...
அன்றைய அச்சுறுத்திய பொழுதில்
தனியனாக வேட்டைக்குப் பிரிந்து
திரும்ப நாள்களை எடுத்துக் கொண்டு
பெருத்த இரையொன்றினை சுமந்து வந்தேன்..


என்  குழந்தைகளின் குதூகல விழிகளைக்
கண்டு மகிழும் பேரார்வத்தோடு
காடு மலை மேடுகளைத் தாண்டிக்
காற்றினும் கடிது வந்த நான்...
கண்டதோ???


அழிவுக்கு ஆயிரம் காரணம் நீங்கள் காட்டலாம்..
ஆனால் காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும்
என் இதய வேதனை நதியில்
ஒரு சொட்டைத்தான் பருகிப் பாருங்களேன்
இந்தக் கவிதை வழியாக..

-என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...