திங்கள், 28 ஜூன், 2021
**நண்பா ஒரு நிமிடம்..**_ஜானி சின்னப்பன்
ஞாயிறு, 27 ஜூன், 2021
கவிதையே உனை எழுதவா?_ஜானி சின்னப்பன்
கவிதையொன்றை எழுதிட அமர்ந்தேன்..
கவிதையோ என்னை எழுதிக் கடந்து போனது..
உன் வடிவில்..
கடற்கரையின்
மணற் பரப்பில்
புறாக் கூட்டமொன்று
குபீரென எழுந்து
பறந்தாற்போல்
என்னுள் குதூகலம்..
காற்றின் வேகத்தில்
பலூன்களின்
நாட்டியம்..
தொலைதூரக் கப்பல்களின்
அசைவில்
ஏதோவொரு நளினம்..
அடித்து ஓய்ந்து
மீளும் அலைகளின்
சேதியென்னவென
முழுதாய் என் கவனம்..
ஆங்காங்கே கூடிக்கும்பலாய்
மானுடர் சிரிக்கும்
களங்கமில்லாப் பெருநகைப்பு காதுக்கு இதமாய்..
பாவம் இங்காவது
நிம்மதி அவர்களை
அரவணைக்கட்டும்
தற்காலிகமாகவாவது..
மீன் வறுவலும்..
சோளப் பொறிகளும்..
ஐஸ்க்ரீம் கப்புகளும்..
சிறுசிறு பொம்மைகளும்
பின் மாபெரும் மணற்பரப்பும்..
மீண்டுவிட முடியுமா
முழுதாய் அந்த நீலக் கடல்வெளிப் பரப்பில் தொலைத்த என்
ஞாபகங்களின்
நிழற்கயிறுகளின்
கட்டுகளிலிருந்து..?!
_ஜானி சின்னப்பன்
சனி, 26 ஜூன், 2021
*புதிரெனக்கு நீயடி*_ஜானி சின்னப்பன்
எட்டித் தாவிப் பல முயற்சி செய்து ஆலாய்ப் பறந்தேன்..
ஒருமுறையும் சிக்காமல் எட்டப் பறந்ததந்தப் புத்திமிகு பட்டாம்பூச்சி..
ஒரு கணம் நின்றேன்..
யோசித்தேன்..
அடடே தொலைவில் பறந்து போயே போயிற்றெனத் தெளிந்து
ஓர் ஓரமாக ஓய்வாக அமர்ந்தேன்..
தானே பறந்துவந்தென் கரந்தனில் அமர்ந்து புன்னகை வீசும் புதிரென்ன கூறேன் பட்டென பளபளக்கும் இறக்கையுடையோய்..
அழகுக் குச்சிக் கால்களால் கிச்சுக்கிச்சு மூட்டிடிடும் உணர்வினில் நெஞ்சம் நெகிழ நீ எம்பிப் பறந்தபின்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
_ஜானி சின்னப்பன்
வெள்ளி, 25 ஜூன், 2021
**அக்கறை எனக்கேதடி?**_ஜானி சின்னப்பன்
காற்றிடை வெளியாய்...
மரத்திடைக் கனியாய்..
அந்திச் சூரியனின் அழகாய்..
மாலை நேரத்தின் இதமாய்.. இலையிடை நரம்பாய்...
வேருக்குள் ஓடிடும் நீரோட்டமாய்..
என் இதயத்தில் என்றுமே
ஓடும் உன் நினைவாய்
சலசலக்கிறது என் வாழ்வின் ஓடை..
உன் பிரிவின் நினைவடுக்குகள் மேலெழுகையில் என் விழிநீர்
கசியும் மெல்லிய ஓசை
இந்த ஆர்ப்பரிப்புகளுக்குள்
புதைந்து போகிறது..
விதியின் சதிகளை..
மதியின் மூர்க்கங்களை..
என்னுள் ஆழ விதைத்துக் கொண்ட நம் நிழல் நினைவுகளை
அமைதியின் ஆழத்துக்குள் மௌனத்தோடு அசைபோடுகிறேன்.. ஓடட்டும்...
விநாடிகள்..
நிமிடங்கள்..
நாட்கள்..
ஆண்டுகள்..
இவற்றின்மேல் அக்கறை எனக்கேன்?
_ஜானி சின்னப்பன்
வியாழன், 24 ஜூன், 2021
**மாயவட்டம்**_ஜானி சின்னப்பன்
வானில் மிதக்கும் வெண் பஞ்சுப் பொதியென மிதக்கிக் கொண்டே
என்னைக் கடந்து போன மேகமொன்று உன்னை நோக்கிக் கேட்கும்..
ஏய் பெண்ணே
உன்னால் இதயம் தொலைத்தவன் ஒருவன் அங்கே கண்ணிருந்தும்
காரிருளில் தவிக்கிறான்..
அவனின் பகலாய் நீ அங்கே சென்று சேர்வாயா சீக்கிரம் என்று..
நீ நகைத்தாய்..
உன் நகைப்பின் எதிரொலிகள்
காற்றிலேறி
மேகம் முட்டி
என்னை வந்தடைய
காதுகுளிரக் கேட்டவன்
காத்திருப்பேன்
கண்ணீருடன்
நீ தரிசனம் தரும்
தினத்துக்காய்
தினம் தினம்...
இதுவொரு
மாய வட்டமடிப் பெண்ணே..
திரும்பத் திரும்ப..
மீண்டும் மீண்டும்...
மறுபடி மறுபடி...
எத்தனை ஜென்மங்
கடந்தும் உன்னையே
நாடுகிறது என் உள்முகப் பயணம்..
முற்றுப்பெறா வானமாய்
தொடர்கிறதே என் பயணம்.. முடிவதுதான் எப்போதென எனக்கொரு
விடை சொல்லென்றேன்
கொல்லென சிரித்தது
நம் விதி...
_ஜானி சின்னப்பன்
செவ்வாய், 15 ஜூன், 2021
மாய வனம்_ஜானி சின்னப்பன்
மாயக்கிழவியின்
மந்திர விரல்களாய்
என்னுள் உன் நினைவுகள்
சுருண்டு கிடந்தன..
தேகம் முழுவதும்
இளமை கடந்து
இதயம் இழந்து
நத்தைக்கூட்டின்
சின்னஞ்சிறு இருள் அறையாய் சுருக்கிக் கொண்டேன்
எப்போதோ எனைநான்..
வெகுகாலம் முன்பே
வலிகளால் வறண்டுபோன காடாய் மாறிப் போனதென் நெஞ்சம்..
இரத்த ஓட்டம் நின்று போய் தசையும் கூடக் கருவாடாகித் தேய்ந்தே போனேன் நான்..
எதிர்பாரா ஒரு பகலில்...
உன் முகம் ஒரு எண்ணெய் அகலில் யாரோ ஏற்றிய சிறு தீபத்தின் ஒளியில் அசைவாடுவதாய் பிரமை தட்டிற்று ஒரு வினாடி என் கானகப் பாலைவெளியில்...
திடுமென விழித்தது என் இருப்பு.. சட்டென உயிர்த்தது என் இன்னுயிர்.. கனமாய்த் திரண்டது புது நம்பிக்கை.. உன் வரவு நிச்சயம் என்று உறுதி செய்தது எங்கோ ஒரு குயிலின் கீதம்.. என் கானகத்தில் இப்போது உதிக்கும் சூரியன் காண்பான் எங்கும் பச்சைப் பரப்பினை..
மறு உயிர்த்தெழுதல் நிகழ்ந்த அதிசயம் உன் நிழலின் பிம்பத்தால் மாத்திரமே..
அறிந்தவன் ஆழ்கிறேன் ஆழ்தவத்தில் மீள... _ஜானிசின்னப்பன்
**ஆவலுடன்...**_ஜானி சின்னப்பன்
நீ இல்லாத
என் சாலைகள்
எப்போதும் வெறிச்சோடியே கிடக்கின்றன..
உன் சுவாசம் படிந்த
உற்சாகக் காற்று கிடைக்காமல்
ஒவ்வொரு மரமும் உணர்கிறது
என் தவிப்பை..
உன் கலகலப்பான
சிரிப்போசை கேட்காத குருவிகள் தம் பாட்டுக்கு மெட்டமைக்க முடியாமல்
மௌனமாகின்றன..
ஈரப்பதம் மிக்க உன் கண்களின் தயவின்றி
இலைகளின் நீராவித் துளைகளில்
பாலைவனக் காய்ச்சல்..
நிலைமை இன்னும் மோசமாவதற்குள் ஒரு முறை இவ்வழியே கடந்து
போய் விடேன்..
உன் வரவுக்காய் ஆவலுடன்..
_ஜானி சின்னப்பன்
வியாழன், 10 ஜூன், 2021
தருகிறேன் எனை நான்!_ஜானி சின்னப்பன்
பறந்திட சிறகுகள் தருகிறேன்.. அறிந்ததை சொல்வாயா கிளியே?
விரிந்திட வானைத் தருகிறேன்..
தெரிந்ததை சொல்வாயா மேகமே?
சலசலக்க இலைகள் தருகிறேன்..
புரிந்ததை சொல்வாயா மரமே?
தெளிந்திட நதியைத் தருகிறேன்..
கலக்கமதைத் தெளிவியேன்
நீரே..
இறைத்திட சோழிகள் தருகிறேன்..
புதிரொன்றை விடுவிப்பாயா
கடலே?
ஆக்ஸிஜனாய் என்னையே தருகிறேன்..
எனை எரித்தே அவள் எங்கேயென தேடிச் சொல் காற்றே..
தினம்தினம் தவிப்பதைக் காட்டிலும் இன்றெனை ஈந்தவள் நிலை
அறிய அனுமதி இயற்கையே..
பூக்கள் இறைந்து கிடக்கும் அப்பாதையெங்கிலும் வண்ணத்துப் பூச்சிகளின்
படபடப்புக்கள்...
ஆளரவமற்ற அமைதியின் கணங்களில் மின்மினிப் பூச்சிகளின் ஒளி நடனங்கள்..
கிளம்புகிறேன் அதோ தெரியும் திசையில்லாப் பேராழியில் வழியில்லாப் பெரும்
பாதைதனில் அவள் தடம் தேடுமொரு யுத்த கணம் பூத்திருக்கிறது..
இப்பயணத்தில் என் சுயம் இழக்கவும் நான் தயார்தான்.. முழுச் சம்மதம்..
நீ தயாரா இறையே?!
எப்பாடுபட்டேனும் மீட்டுக் கொள்கிறேன் அவள் நினைவையே..
_ஜானி சின்னப்பன்
திங்கள், 7 ஜூன், 2021
நிம்மதிப் பொழுதுகள்..ஜானி சின்னப்பன்
தத்தித் தாவிப் போகுமந்த தவளையை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்..
தொலைவில் அதோ கேட்குது
ஒரு இரயிலின் சிக்குபுக்கு சிக்குபுக்கு..
மேலே வானில் வெள்ளைக் கொக்குகளின் கூரானதொரு அணிவகுப்பு...
படபடக்கும் சின்னஞ்சிறு இறக்கையோடொரு வண்ணத்துப்பூச்சி என்னைத் தாண்டிப் பறக்கிறது..
காற்றிலெங்கும் பூக்களின் வாசம்.. பெரியவனானாலும் மறந்து போய் விடக்கூடாதென் இளமைப் பருவத்தின் இனிய நினைவுகளை...
_ஜானி சின்னப்பன்
வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்
வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...