வியாழன், 24 அக்டோபர், 2019

கோழிக்கு கொடி பிடிப்போம்...ஏழைக்கேத்த உணவு...

நேற்று பேலியோ கடைபிடிக்கும் கால்நடை மருத்துவ சகோதரர் ப்ராய்லர் கோழியில் தீதில்லை என்று வீடியோ பதிவு செய்திருந்தார்

ப்ராய்லர் கோழி நாம் உண்ண உகந்தது என்று பல முறை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம்.

இருப்பினும் அந்த துறை சார்ந்த வல்லுனர் அதைப்பற்றி பேசும் போது அதற்கு கூடுதல் எடை இருக்கிறது.

அவர் கூற்றின் சாராம்சம் இது தான்

1. ப்ராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போட வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு நான்கு முறை போட வேண்டும். அதற்கு செலவாகும் முதல் அதிகம். ப்ராய்லர் கோழிகள் அனைத்தும் தீவனம் சாப்பிட்டு தான் உடல் போடுகின்றன.

2. கோலிஸ்டின் ஆண்ட்டிபயாடிக் குறித்து சமீபத்தில் வெளியான அரவம் படத்தில் காட்சிகள் உள்ளன. அந்த கோலிஸ்டின் மருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்டு பல காலம் ஆகிறது

3. ப்ராய்லர் கோழிகள் உண்ணத்தகுதியானவை. அவற்றால் பூப்பெய்துதல் சீக்கிரம் நிகழ்வதில்லை.

இதில் முதல் இரண்டு செய்திகள் கால்நடை மற்றும் ப்ராய்லர் வளர்ப்பு துறை சார்ந்தது.

மூன்றாவது பாய்ண்ட் என்னுடைய துறை சார்ந்தது.

அதில் சில கருத்துகளை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

உண்மையில் நாம் அச்சம் கொள்ளும் அளவு,  வளர் இளம் பெண்கள் பூப்பெய்தும் வயது சீக்கிரமே நடக்கிறதா???

இல்லை என்பதே பதில்.

இப்போதும் இந்தியாவில் வளர் இளம் பெண்கள் பூப்பெய்தும் வயது சராசரியாக 13.5 தான்.
கூடக்குறைய இரண்டு வருடங்கள் இருக்கலாம்.

இந்த சராசரியும் அனைத்தும் இடங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.

ஒரு ஆராய்ச்சியில்
ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெண்கள் கொஞ்சம் லேட்டாக பூப்பெய்துவதாகவும்

ஹிந்தி பேசாத மாநிலங்களில் பெண்கள் முன்னவர்களை விட சீக்கிரம்  பூப்பெய்துவதாகவும் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இது என்னடா கூத்து?

ப்ராய்லர் தான் காரணம் என்றால்
ஹிந்தி பேசுவது கூட காரணமா?

அப்ப நாம எல்லாம் ஹிந்தி பேசத்தொடங்கி விட்டால் நம்ம புள்ளைக லேட்டாக வயதுக்கு வருவார்களா???

அது அப்படி இல்லை.

உலகம் முழுவதும் செய்த ஆராய்ச்சிகளில்
கிடைத்த முடிவுகளின் சாரங்களை இங்கு பதிவு செய்கிறேன்

 உலகம் முழுவதும் பெண்களின் பூப்பெய்தும் வயது ஒரு தசாப்தத்துக்கு ( பத்து வருடங்களுக்கு) ஒரு முறை ஒரு மாதம் குறைந்து வருகிறது.

மொத்தமாக 1900 களில் இருந்த சராசரி பூப்பெய்துதல் வருடம் - 14.5 என்றால் இப்போது 13.5 ஆகி இருக்கிறது.

இதற்கான காரணங்கள்

1. மரணம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் இன்றி வாழ்வது

தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்து உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து குழந்தைகளை காத்தன.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பெரிய மகா யுத்தங்கள் நடக்கவில்லை. அதனால் மக்கள் கொத்து கொத்தாக சாவது மற்றும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு அகதிகளாக ஓடுவது நின்றது ( ஒரு சில நாடுகள் தவிர)

இயந்திரப்புரட்சி
பசுமைப்புரட்சி
வெண்மைப்புரட்சி
என்று விவசாய முறைகளில் கண்ட அசுர வளர்ச்சி காரணமாக

செயற்கை மற்றும் இயற்கை பஞ்சங்கள் ஒழிக்கப்பட்டன.
பட்டினியால் செத்த மக்களைப் பார்த்த
19 ஆம் நூற்றாண்டு எங்கே..
தின்றே சாகும் மக்களைப்பார்க்கும்
21 ஆம் நூற்றாண்டு வந்தது.

ஒட்டுமொத்தமாக உலகில் மக்களின் வருமானம் உயர்ந்துள்ளது. அவர்கள் உணவுக்கு செலவழிக்கும் தொகை அதிகரித்துள்ளது.
இதனால் ஊட்டச்சத்துள்ள உணவுகள் வாங்கி உண்ணும் நிலை வந்துள்ளது.

ஒரு காலத்தில்
கால் வயிறு கூட நிரப்பாத சோழக்கூழு தின்று வளர்ந்த பிள்ளைகள்
கலோரி பார்த்து சாப்பிட ஆரம்பித்த காலம் தொடங்கியதும் இப்போது தான்.

படிப்பறிவு பெண்களையும் அடைந்த போது
சூரியனிடம் இருந்து உடைந்த போது முதல் முறை பிறந்த உலகம் ..
மற்றொரு  முறை மீண்டும் பிறந்தது..

 எட்டுக்கு முன்னாடியும் (Precocious puberty)
பதினாறு பின்னுக்கும் ( delayed puberty)  வயதுக்கு வந்தால் தான் பிரச்சனை.

இதற்கு நடுவே எப்போது வயதுக்கு வந்தாலும் பிரச்சனை இல்லை.

நான் மேலே சொன்ன இத்தனை காரணங்களும்
பூப்பெய்துதல் வயது குறைவதற்கு காரணமாக முன்மொழியப்பட்டிருக்கும் தியரிகள்.

ப்ராய்லர் கோழியை நாம் சாப்பிட ஆரம்பித்து
முப்பது வருடம் இருக்குமா?

அதற்கு முன்னாலும் பெண்கள் வயதுக்கு வந்து கொண்டு தான் இருந்தார்கள்.
ஆனால் அப்போது அதைப்பற்றி நாம் பேசவே இல்லை .

என்ன காரணம் ?

அப்போது நமக்கு இதைப்பற்றி பேசவெல்லாம் நேரமே இல்லை.
வயசுக்கு வந்தால் உடனே பள்ளி படிப்பை விட்டு பெண்களை நிறுத்தி விட்டு
அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் பிசியாக இருந்தோம்.

இப்போது காலம் மாறி விட்டது.
எதைப்பற்றி பேச வேண்டுமோ அதை விட்டுவிட்டு வேறதைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் பெண்கள் மீது அக்கறை கொண்ட சமூகம் எப்படி சிந்திக்க வேண்டும் தெரியுமா?

1. பேருந்து நிறுத்தம் , பெட்ரோல் பங்க் போன்ற அனைத்து பொது இடங்களிலும் பெண்களுக்கு சுத்தமான இலவசமான கழிவறைகள் கிடைக்க வழி வகை செய்ய யோசிக்க வேண்டும்.

2. மாதவிடாய் எனும் இயற்கை நிகழ்வை போனர் போஸ்ட்டர் அடித்து பெரிது படுத்தி அந்த பெண்ணை கூனிக்குருகச்செய்வது குறித்து யோசிக்க வேண்டும்.

3. இந்தியாவில் மாதவிடாய் அனுபவிக்கும் பெண்கள் 38 கோடி பேர். இவர்களுள் 88 சதவிகிதம் பேருக்கு சுகாதாரமான சேனிட்டரி நாப்கின் கிடைப்பதில்லை. வெறும் 12% பேருக்கு மட்டும் தான் சானிட்டரி நாப்கின் கிடைக்கிறது. இதைப்பற்றி யோசிக்கலாம்

4.  தங்கள் முதல் மாதவிடாய் காலத்தை பூப்பெய்துதல் மூலம் அடையும் எதிர்கால கனவுகளை சுமக்கும் மாணவிகள் 38 லட்சம் பேர் வருடாவருடம் பள்ளிப்படிப்பில் இருந்து நிறுத்தப்படுகின்றனர். இதைப்பற்றி யோசிக்கலாம்.

5.  இந்தியாவில் மாதவிடாய் அனுபவிக்கும் பெண் குழந்தைகளில் பெரும்பான்மைக்கு மாதவிடாய் காலங்களில் தன்சுத்தம் பேணல் பற்றி தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் 2014 செய்த ஆராய்ச்சி கூறுகிறது.
இதை மாற்றி நல்லறிவு பகிர ஏதாவது யோசிக்கலாம்.

இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல்
ப்ராய்லர் கோழியால் தான் மாதவிடாய் சீக்கிரம் நேர்கிறது என்ற அறிவியலுக்கு புள்ளிக்கணக்குகளுக்கு சற்றும் ஒத்து வராத ஒரு உருட்டை உருட்டுவதால் என்ன பயன்?

இன்றும் Cheap and easily available அதாவது
விலை குறைவாகவும் எளிதாகவும் கிடைக்கும் புரதம் - ப்ராய்லர் கோழி தான் 

அனைவராலும் விலை அதிகமாக உள்ள நாட்டுக்கோழி மற்றும் மட்டன் வாங்கி சாப்பிட முடியாது.

ஒரு ஏழை சம்சாரி வீட்டில்
வாரம் ஒரு முறையேனும் 200 கிராம் கோழிக்கறியாவது ஒரு கிராமத்துப் பெண் பிள்ளைக்கு கிடைத்து வருகிறது. 

ப்ராய்லர் மேல் ஒரு கெட்ட பிம்பம் உருவாக்கி அதையும்  அவளுக்கு மறுப்பது சரியா?

சமூகத்திடமே இந்த கேள்வியை கேட்கிறேன்.

உங்கள் பெண் பிள்ளைக்கு

ஹெல்த் எனர்ஜி ட்ரிங்க்
வடை பஜ்ஜி சமோசா
பரோட்டா  பாவ் பஜ்ஜி
பக்கெட் கறி பானி பூரி
சாக்லேட் குர்குரே லேஸ்
சீனி கலந்த பானங்கள்
சோயா கலந்த பானங்கள்
இத்தனையும் எந்த கேள்வியும் கேட்காமல் கொடுத்து விட்டு

ப்ராய்லர் கோழி மீது பழி போடுகிறீர்களே..

நியாயமா????

பின்குறிப்பு - ஹிந்தி பேசுவதால் எல்லாம் பூப்பெய்துதுல் தள்ளி போகாது. ஹிந்தி பேசும் மாநிலங்களை விட ஹிந்தி பேசாத மாநிலங்கள் பொருளாதாரத்திலும் சுகாதாரத்திலும் படிப்பறிவிலும் முன்னேறி இருப்பதே முதல்  மாதவிடாய்  சீக்கிரம் நிகழ்வதற்கு காரணம்.

இப்படிக்கு,

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...