வணக்கம் நண்பர்களே..
ஹாப்பி தீபாவளி
கங்கா ஸ்னானம் ஆயிடுத்தா?
டுராங்கோ பற்றிய கேள்வி ஒன்றுக்கு நமது நண்பர் சுரேஷ் தனபால் திரட்டித் தந்த தகவல்கள் கீழே...
சத்தமின்றி யுத்தம் செய் - DURANGO
1-13 அத்தியாயங்கள்
கதை/ஓவியம் - YVES SWOLFS
மொழியாக்கம் - திரு.கருணையானந்தம்
14-16 அத்தியாயங்கள்
கதை- YVES SWOLFS
ஓவியம் -THIERRY GIROD
மொழியாக்கம் - திரு. விஜயன்
யாரிந்த மௌனப் புயல்? இந்தக் கேள்வி தான் இந்த கதை தொகுப்புகளின் TAG LINE. நம்ம கதாநாயகனும் ஊர் ஊராக சுற்றுகிறாரே தவிர, இவரைப் பற்றி ஒரே ஒரு தகவல் கூட சொல்லப்படாமல் கதையை நகர்த்திக் கொண்டு சென்றுள்ளனர். முதல் அத்தியாயத்தில் வியோமிங் பணிப்பரப்பில் 1896 ஆம் ஆண்டு இந்தக் கதை நிகழ ஆரம்பிப்பதாய் தொடங்குகிறார் கதாசிரியர். ஹாரி லாங் எனும் தன் சகோதரன் எழுதிய கடிதத்துக்கு மதிப்பளித்து, வெள்ளை பள்ளத்தாக்குக்கு வருகிறான் நம் கதாநாயகன்.
கடவுளுக்கு பயந்து, சமூகத்தின் கட்டுத்திட்டங்களுக்கு ஒடுங்கி, அமைதியாய் வாழ்ந்த ஒரு குடும்பத்தை சார்ந்த நம் கதாநாயகன், துப்பாக்கியுடன் தன் காதலை வளர்த்துக் கொண்ட நாள் முதல், அவன் குடும்பத்தாரால் துவேஷிக்கப் பட்டவன் டுரங்கோ என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஆனால் விடை தெரியாத பதில், அவன் தந்தை என்ன ஆனார், தாய் என்ன ஆனார், ஏன் டுரங்கோ ஒரு தொழில்முறை துப்பாக்கியாளன் ஆகிறான் என்பதே.
டெட்வுட் நகரத்தின் முதியவர் ஒருவர் நம் கதாநாயகனுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
மூன்றாவது கதையில் அவன் ஓய்வெடுக்கும் பொழுது அவனது கனவில் வரும் மரணதேவதை, டுரங்கோவின் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை கோடிட்டு காட்டுகிறது. அவனின் கடந்த காலம் எப்பேர்பட்டது எனும் கேள்விக்குறிக்கு மட்டும் பதிலளிக்காமல் கதையை நகர்த்திக் கொண்டே செல்கிறார் கதாசிரியர்.
13 ஆம் கதையில் லூயியை துரத்தி செல்லும் நம் கதாநாயகன், அவனிடம் இருக்கும் கொலை வேட்கைக்கு காரணியாக தன் நினைவுப் பேழைகளில் அமிழ்ந்து போன நினைவுகளை நினைத்து பார்க்கிறான். அந்தப் மூன்று பேனல்கள் சொல்லும் செய்திகள் ஏராளம். ஆனால் அதை பார்வையாளர்களின் புரிதலில் விட்டு செல்கிறார் கதாசிரியர்
எண்ணற்ற கதாபாத்திரங்கள், சுற்றி சுழல, ஒவ்வொரு கதையிலும் பெண்கள் தங்கள் பங்குக்கு டுரங்கோவை காப்பாற்றுவதும், இக்கட்டில் மாட்டி விடுவதும் என்று கதையை வித்தியாசமாக நகர்த்திக் கொண்டு சென்றுள்ளார்கள். பெரும்பாலான பெண்கள் மரணத்தை தழுவ, மரணத்தின் உடனே வாழ்க்கை நடத்தும் கதாநாயகன் யாரை நேசிக்கிறான் எனும் குழப்பத்தை அந்த பெண்களிடமும், வாசிக்கும் நம்மையும் குழப்பியபடி பயணிக்கிறான்.
விவேகமும் பொறுமையும் உன் பிஸ்டலின் தோட்டாக்களைப் போலவே விலைமதிப்பற்றவை என்று தனக்கு கூறப்பட்ட அறிவுரையை அவன் நடைமுறைக்கு கொண்டு வர கிட்டத்தட்ட 15 அத்தியாயங்கள் தேவைப்பட்டுள்ளது. கதாநாயகன் ஒரு முன்னெச்செரிக்கையாளன் என்று காட்டப்பட்டாலும், பல தருணங்களில் தன் அலட்சியத்தால் மாட்டிக் கொள்கிறான். ஆனால் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மரணம் தழுவாதா என்று ஏங்கும் ஒரு கேரக்டராகவே டுரங்கோவை பார்க்க நினைக்கிறது மனது. ஆனால் அவன் இறந்து விட்டால் கதை ஏது. மரணமும் அவனை காதலிக்கிறதோ என்னவோ, அவன் உயிர்வாழ எண்ணற்ற சந்தர்ப்பங்களை வாரி வழங்கிக் கொண்டே செல்கிறது.
15 வது அத்தியாயத்தில் தான் டுரங்கோ குறித்து கதாசிரியர் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்க்கிறார். மொத்தம்
கதையை முடித்த பிறகும் இந்தக் கதையின் TAGLINE மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. யாரிந்த மௌனப் புயல்?
SPOILERS ALERT
1. ரௌத்திரம் பழகு Les Chiens Meurent En Hiver
தன் சகோதரனை கொன்ற கயவர்களை வெள்ளை பள்ளத்தாக்கில் பழிவாங்குவது.
2. மனதில் உறுதி வேண்டும் Les forces de la colère
வெள்ளை பள்ளத்தாக்கில் அடிபட்ட ரணத்தை குணப்படுத்த ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பீஸ்புல் சர்ச் என்ற பாவப்பட்ட நகரத்தை ரணகலாமாகிய கல்லஹ்ன் எனும் கொள்ளையனையும் அவன் கூட்டத்தையும் வேரோடு அறுப்பது.
3. தடை பல தகர்த்தெழு Valstrik voor 'n "killer"
சில்வர் ப்ரிட்ஜில் தன்னை காப்பாற்றுமாறு வேலைக்கு அமர்த்திக் கொண்ட ஆலன், இறந்து போக, கொலைப்பழி டுரங்கோ மீது விழ, அதை ஆலனின் விதவையின் துணையுடன் சமாளித்து பயணத்தை தொடர்கிறான் டுரங்கோ. ஆனால் ஜென்கின்ஸ் எனும் சில்வர் ப்ரிட்ஜ் ஷெரிப் அவனை தேடப்படும் குற்றவாளி வரிசையில் சேர்க்கிறான்.
4. தீதும் நன்றும் பிறர் தர வாரா Amos
தேடப்படும் குற்றவாளி என்பதால் மெக்சிகோ எல்லைக்கு சென்று தப்பிக்க எத்தனிக்கும் நம் கதாநாயகன், அங்கு ஆமோஸ் ரொட்ரிகோஸ் உடன் நட்பை சம்பாதித்துக் கொள்கிறான். சில்வர் ப்ரிட்ஜில் நடந்த சொதப்பலுக்கு காரணமான கம்பெனி நிர்வாகம் அனுப்பிய வெகுமதி வேட்டையனாக லோகன் களமிறங்க, உடன் ஜென்கின்ஸ் கூட்டு சேர, பிங்கர்ட்டன் ஏஜென்சியின் சார்லி சிரிங்கோவும் சட்டத்தின் பக்கம் நிற்க டுரங்கோ என்ன ஆனான் என்பதே கதை.
5. மௌனமாயொரு இடிமுழக்கம் Sierra sauvage
நியூ மெக்சிகோ சிறையில் அடைபட்டிருந்த டுரங்கோவை, ஆமோஸ் ரொட்ரிகோசை பிடிக்க அனுப்புவது என்று முடிவெடுத்து டெக்சர்ஸ் கவர்னர் ஆணையிட, வழியில் ஆமோஸ் அவனது நண்பர்கள் ஒர்டேகா குழுவினரால் டுரங்கோ பெடரல் ஏஜெண்டுகளிடம் இருந்து தப்பிக்கிறான். ஆமோஸ் நடத்தும் புரட்சிப் படையின் தாக்குதலுக்கு துணை புரிந்து சாகசங்கள் செய்கிறான்.
6. நரகத்துக்கு நேர்பாதை Le destin d'un desperado
தடை பல தகர்த்தெழு எனும் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதி அத்தியாயம் இது. ஆமோஸ், லோகன் போன்றோர் இறந்து கதை முடிவடைகிறது.
7. ஒரு ராஜகுமாரனின் கதை Loneville
லோன்வில் நகரில் நுழையும் டுரங்கோ, அங்கே அந்த கிராம மக்கள் எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று குவித்து வரும் ஒருவனை நிர்மூலமாக்குகிறான். அந்த கிராமத்தில் நடந்த கொடூரங்களுக்கு பின்னணியில் இருந்தவனையும் வீழ்த்துகிறான் நம் கதாநாயகன்.
8. வேட்டையாடு விளையாடு Une raison pour mourir
ஹேய்ஸ் நகர் மேயரின் மனைவி லூசியின் பாதுகாவலனாக நியமிக்கப் படும் டுரங்கோ, தான் எந்த விதமான வில்லங்கத்தில் தலையிடுகிறோம் என்று தெரியாமலே சிக்கலில் சிக்குகிறான். அந்த வில்லங்கத்தில் இருந்து லூசியின் தந்தை டங்கனால் காப்பாற்றப் படுகிறான்.
9. ஒரு புதையலின் பாதையில் L'Or de duncan
லூசிக்கு டங்கன் விட்டு செல்லும் புதையலை தேடி டுரங்கோவும் லூசியும் ஷெரின் நகரத்துக்கு பயணிக்கிறார்கள். அங்கு டங்கனின் டெபுடி ரயனும் புதையலைத் தேடி வர, அந்த ஊர் தாதாவான வில்லியும் வேட்டையில் இறங்க டுரங்கோவின் அதகளம் தொடர்கிறது.
10. வதம் செய்ய விரும்பு La proie des chacals
ஹௌலாண்ட் நகருக்கு வரும் டுரங்கோ அங்கு பூர்வ குடி அமெரிக்க பெண்களை கடத்தி விற்கும் கும்பலை காலி செய்கிறான்.
11. அரக்கர் பூமி Colorado
நார்ட்டன் வில் நகரில் நடக்கும் அநியாயங்களை தடுக்க பணிக்கு அமர்த்தப்பட்ட நாயகன் சில பல சாகசங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பதுங்குகிறான்.
12. பனியில் ஒரு புரட்சி L'héritière
நார்ட்டன் வில் நகரில் புரட்சி வெடிக்க டுரங்கோவின் அதிரடி கதைக்கு சுபம் போட வைக்கிறது.
13. ஆறாது சினம் Sans Pitié
நார்ட்டன் வில் நகரில் புரட்சி ஓய்ந்து, நிம்மதி தலை தூக்கியிருந்த நேரத்தில் லூயி ஹோல்டிக்கர் எனும் மிருகம் நடத்திய கொலைவெறி தாண்டவத்துக்கு பழி தீர்க்க நாயகர் அவனைத் தேடி புறப்படுகிறார்
14. ரௌத்திரம் கைவிடேல் Un pas vers l'enfer
ஹார்லான் என்பவனால் கொல்லப்பட்ட தன் காதலிக்காகவும், தன் குழந்தைக்காகவும், ரௌத்திரத்துடன் ஆனால் மதியூகத்துடன் களமிறங்குகிறான் டுரங்கோ
15.எல் கோப்ரா El Cobra
ஆதி முதல் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமான மைனிங் கம்பெனிகளின் கூட்டமைப்பில் ஒன்றான லாரன்ஸ் மைனிங் கம்பெனி குறித்து தெரிந்துக் கொண்ட டுரங்கோ, அதை தேடி செல்கிறான். ஆனால் மைனிங் கம்பெனிகளின் கூட்டமைப்பின் சூத்திரதாரி ஸ்டெய்ன்னர் தன்னை ஏமாற்றிய லாரன்ஸை போட்டுத் தள்ள எல் கோப்ரா என்பவனை அனுப்புகிறான். இரண்டு தொழில்முறை துப்பாக்கி வீரர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்களா? என்ன நடந்தது?
16.நரகத்திற்கு நெருக்கத்தில் Le Crépuscule Du Vautour
லாரன்ஸ் மூலமாக ஸ்டெய்ன்னர் குறித்து அறிந்துக் கொண்ட டுரங்கோ, ஸ்டெய்ன்னர்ரை பழிவாங்க களமிறங்குகிறான். ஸ்டெய்ன்னர் வீழ்த்தப்பட்டானா? அடுத்த குறி யார்? எங்கு செல்லப் போகிறான் டுரங்கோ
17. Jessie
18 L'Otage
19 Oro Maldito
கடைசி மூன்று தொகுப்புகளை சீக்கிரமாக வெளியிட ஆவண செய்யுங்கள் எடிட்டர் சார். மௌனப்புயலின் புதிர் வரலாறை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் உள்ளோம்.
-கட்டுரையாளர் திரு. சுரேஷ் தனபால் அவர்களுக்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக